தேவை நியாயமான தேர்தல்
2015-01-21@ 00:52:15

பிப்ரவரி 13ல் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கிறது. இடைத்தேர்தலில் பலத்தை காட்ட வேண்டும் என்ற துடிப்போடு அனைத்துக் கட்சிகளும் ஈடுபட்ட காலம் எல்லாம் மலையேறிவிட்டது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் இடைத்தேர்தலின் தன்மை அடியோடு மாறிப்போனது. இடைத்தேர்தல் என்றாலே அது ஆளும்கட்சி வெற்றி பெறும் தேர்தல் என்றாகிவிட்டது. ஆளும் கட்சியின் நிர்வாகத் திறன், செயல்படும் முறை ஆகியவற்றை கணிக்கும் காரணியாக இருப்பதுதான் இடைத்தேர்தல் என்கிற கருத்தாக்கத்துக்கு எல்லாம் இப்போது அர்த்தமே இல்லை. தமிழக இடைத்தேர்தல் என்பது வாக்காளர்களை சந்திப்பது என்பதற்கு பதிலாக வாக்குகளுக்கு விலைபேசுவது என்ற வழிமுறையில் அரங்கேறி இருக்கிறது என்றே தமிழ் மாநில காங்கிரஸின் தலைவர் வர்ணித்திருக்கிறார்.
விலைபேசுவது என்பதோடு கள்ளத்தனமாக வாக்குகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை சாமர்த்தியமாக செய்வது என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தமிழகம் முழுவதும் புதிய வாக்காளர் பட்டியல் கடந்த 5ம் தேதி வெளியிடப்பட்டது. இப்பட்டியலின்படி ஸ்ரீரங்கம் தொகுதியில் மட்டும் 9 ஆயிரம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஆதாரபூர்வமாக திமுக புகார் கொடுத்துள்ளது. இதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் எப்படியெல்லாம் மோசடி செய்யப்பட்டிருக்கிறது என்பதை திமுக தலைவர் கருணாநிதி புள்ளிவிவரங்களோடு பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஒரே வாக்குச்சாவடியில் ஒரே பெயர் 2, 3 இடங்களில் இடம்பெற்றிருப்பது, மரணம் அடைந்தவர்கள், குடியிருக்கும் இடத்தை மாற்றிச் சென்றவர்களின் பட்டியலை சரிபார்த்து உரிய திருத்தம் செய்திருக்க வேண்டும். ஆனால் சேலம் உள்ளிட்ட பல இடங்களில் அப்படிச் செய்யப்படவில்லை.
இங்குள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் குறைந்தது 3 லட்சம் போலி வாக்காளர்கள் இருப்பார்கள் என சுட்டிக் காட்டியிருந்தார். தமிழகத்தில் மட்டும் இந்தியாவிலேயே மிக அதிகமாக 29.1 சதவீதமாக வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதிலிருந்தே, இங்கு எந்த அளவுக்கு போலி வாக்காளர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவித்திருந்தார். போலி வாக்காளர்கள் குறித்து துல்லியமான, வலுவான ஆதாரத்துடன் கூடிய புகார் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டதால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்குவது இயலாத காரியம் என்று தேர்தல் அதிகாரி சொல்லியிருக்கிறார்.
எனினும் போலி வாக்காளர்களின் பட்டியலை மட்டும் தனியாக தயாரிக்க உத்தரவிடுவதாகவும், அதன்மூலம் அவர்கள் வாக்களிக்க முடியாதபடி நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்திருக்கிறார். இந்த உத்தரவாதம் சற்று ஆறுதல் அளிக்கிறது என்றாலும், இந் நடவடிக்கை முழுமையாக செயல்படுத்தப்படுவதை கண்காணித்து, நியாயமான வகையில் தேர்தல் நடைபெற வழிவகை செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் தலையாய பணி இது. இதன் மூலம்தான், சமீபகாலங்களாக இடைத்தேர்தலின் மீது படிந்துள்ள மாசை துடைத்தெறிய முடியும்.
மேலும் செய்திகள்
திடீர் போர்க்கொடி
தாய்மொழியை நேசிப்போம்
ஆட்டம் காணும் சேனா
செவிசாய்க்க வேண்டும்
தேர்தல் சீர்திருத்தம்
அக்னியாய் சுடும் திட்டங்கள்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!