SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடியோ கேம் விபரீதம்… வேண்டாமே Virtual World!

2022-07-07@ 15:40:36

நன்றி குங்குமம் டாக்டர்

விதவிதமான வீடியோகேம்கள் நம் சட்டைப் பையில் வந்து அமர்ந்துகொண்டு நம்மை விளையாடச் சொல்லி நச்சரிக்கும் டெக் யுகம் இது. நாளொரு கேமும் பொழுதொரு க்ரைமுமாய் வீடியோ கேம் எனும் விபரீதம் உலகையே மிரட்டிக்கொண்டிருக்கிறது. இப்போது பப்ஜியின் பின்னால் எல்லோரும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

வீடியோ கேம்கள் பலவிதம்

வீடியோ கேம் என்று பொதுவாக சொன்னாலும் இதில் பலவகை உள்ளன. அடிப்படையாக வீடியோ கேம்களை இரண்டு வகையாகப் பிரிக்க முடியும். முதல்வகை கேம்கள் தனி நபராக விளையாடக்கூடியவை. இவற்றில் எதிரில் விளையாடுபவர் என்று யாரும் இருக்க மாட்டார். பெரும்பாலும் இந்த விளையாட்டுகள் முன்பே முற்றிலுமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். கொடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒவ்வொன்றாய் முடிக்கும்போது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அடுத்த லெவல் விளையாட அனுமதிக்கப்படுவீர்கள்.

இன்னொருவகை விளையாட்டுகள் விர்ச்சுவல் ரியாலிட்டி பண்பு கொண்டவை. பலர் சேர்ந்து விளையாடும்படியாக இருக்கும். இதை ஆன்லைனில்தான் விளையாட முடியும். இதை  Massively Multiplayer Online Role-playing Games (MMORG)  என்பார்கள். இதில் உங்களுக்கு என ரோல், கேரக்டர், செய்ய வேண்டிய வேலை, செய்ய வேண்டிய முறை ஆகியவை சொல்லப்படும். நீங்கள் உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். சிறப்பாக செய்தால் அடுத்த லெவல். ஒவ்வொரு லெவலிலும் முன்பைவிட கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கும்.

போரை அடிப்படையாகக் கொண்ட வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள், கராத்தே, குங்ஃபூ போன்ற மார்ஷியல் ஆர்ட் விளையாட்டுகள், விண்வெளிப் பயணம் செய்யும் ஸ்பேல் ட்ராவல் விளையாட்டுகள், டேரட் கார்டுகளைக் கொண்டு விளையாடப்படும் விளையாட்டுகள், சினிமா நாயகர்கள், கார்ட்டுகளை மையமாகக் கொண்ட விளையாட்டுகள், சூதாட்ட விடுதிகளின் பிங் பாங், பம்பர் விளையாட்டுகள், நகையைத் தேடுதல், இளவரசியை மீட்டுக்கொண்டு வருதல், கொடூர மிருகங்களுடன் போரிடுதல் போன்ற சாகச விளையாட்டுகள், கார் ரேஸ், பைக் ரேஸ், சைக்கிள் ரேஸ், சுடோகு போன்ற எண் விளையாட்டுகள் என ஆயிரக்கணக்கான விளையாட்டுகள் இன்று இணையத்தில் கிடைக்கின்றன.

இதில், சில விளையாட்டுகள் ஆபத்தற்றவை. இன்னும் சொல்லப்போனால் எப்போதாவது மனம் சோர்ந்திருக்கும் நேரத்தில் விளையாடினால் நம்மை உற்சாகப்படுத்துபவை. நமது மூளையின் செயல்திறனை மேம்படுத்துபவை. சுடோகு, செஸ் போன்றவற்றைச் சொல்லலாம். ஆனால், பெரும்பாலான விளையாட்டுகள் வெறும் நேரங்கடத்திகள் மட்டுமே. மேலும், இவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது நாம் அந்த விளையாட்டுக்கு அடிமையாகிறோம்.

வீடியோ கேம் அடிக்‌ஷன்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். மனித மனம் ஒரு குறிப்பிட்ட சூழலில் தொடர்ந்து இருக்கும்போது எளிதாக அதற்குப் பழக்கப்படும் குணம் உடையது. அதனால்தான் மனிதனால் அதிகப் பனி பொழியும் ஆர்ட்டிக் பகுதியிலும் வசிக்க முடிகிறது. வெயில் கொடூரமாய் கொல்லும் பாலைவனங்களிலும் வசிக்க முடிகிறது. MMORG போன்ற விர்ச்சுவல் ரியாலிட்டி விளையாட்டுகளை தொடர்ந்து விளையாடும்போது ஒருகட்டத்தில் நம் மூளை அதற்கு அடிமையாகிவிடுகிறது.

அந்த விளையாட்டின் நிபந்தனைகள் எதுவாக இருந்தாலும் செய்ய தயாராகிறோம். கொலை முதல் தற்கொலை வரை சகல பாதகங்களுக்கும் வழிவகுக்கும் மிக மோசமான மனநிலை இது. வீடியோ கேம் விளையாடாமல் இருக்க முடியாது என்கிற நிலைக்குச் செல்லும்போது அதை வீடியோ கேம் அடிக்‌ஷன் என்கிறோம். இது ஒரு தீவிரமான உளவியல் சிக்கல். முறையான சிகிச்சை மூலமே இந்தப் பழக்கத்திலிருந்து ஒருவரால் விடுபட முடியும். போதை அடிமைகள், மது அடிமைகள் போல சப்ஸ்டென்ஸ் அடிக்‌ஷன். இது இல்லை என்றாலும் மூளையில் சுரக்கும் ரசாயன மாற்றங்கள் பிற அடிக்‌ஷன்கள் போலவே இருக்கும்.

வீடியோகேம் விளையாடும் போது நமக்குள் என்ன நிகழ்கிறது?


நாம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு சில ஹார்மோன் சுரப்புகளே காரணம். அதாவது நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது டோபமைன் போன்ற ஹார்மோன்கள் நம் உடலில் சுரக்கின்றன. நமது மூளையையும் உடலையும் சோர்வு நீங்கி உற்சாகமாக வைத்திருக்க டோபமைன் ஹார்மோன் மிகவும் அவசியம். வீடியோ கேம் விளையாடும்போது ஒவ்வொரு லெவலின் வெற்றியின்போதும் நாம் உற்சாகமாகிறோம். உடலில் தன்னியல்பாக டோபமைன் சுரக்கிறது.

இந்த டோபமைன் சுரக்க சுரக்க மூளை அந்த சுரப்புக்காக அதை மீண்டும் மீண்டும் விளையாடச் செய்யும். இப்படி தொடர்ந்து விளையாண்டுகொண்டே இருக்கும்போது ஒருகட்டத்தில் அது விளையாண்டால்தான் டோபமைன் சுரப்பே சிறப்பாக நிகழும் என்கிற நிலைக்குச் சென்றுவிடுவோம்.

இது வீடியோகேம் அடிக்‌ஷனின் உச்சகட்ட நிலை. பொதுவாக, இளம் வயதினர் உடலில் முதிராத டெஸ்டோஸ்டீரான் உற்பத்தி அதிகமாக இருக்கும். வீடியோ கேம் விளையாட்டுகள் இந்த டெஸ்டோஸ்டீரான் உற்பத்தியை வெகுவாகத் தூண்டிவிடுவதாக சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. ஆணின் உடலில் இனப்பெருக்க உற்பத்தியைப் பெருகச்செய்வது மட்டும் அல்ல; மனித உடலுக்கான மூர்க்கத்தைத் தூண்டுவதும் டெஸ்டோஸ்‌டீரானின் வேலையே. எனவே, தொடர்ந்து வீடியோ கேம் விளையாடும்போது மூர்கம் அதிகரிப்பதும் தடுக்க முடியாததாகிறது.

வீடியோகேமும் குழந்தைகளும்


குழந்தைகளும் வளரிளம் பருவத்தினரும்  வீடியோகேமால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு,  சிறுவர்களுக்கு என உடற்பயிற்சிகளை எந்த மருத்துவரும் பரிந்துரைக்க  மாட்டார். ஏனெனில், ஓடியாடி விளையாடும் விளையாட்டுதான் குழந்தைகளுக்கான  உடற்பயிற்சி. அவர்களின் உடல் விளையாடுவதன் மூலமே வளர்கிறது. அந்த வயதில்  தனக்குத் தேவையான வளர்சிதை மாற்றத்தைப் பெறுகிறது. குழந்தைகளிடமும்  சிறுவர்களிடமும் வீடியோகேம் பழக்கம் ஏற்படும்போது அவர்கள் ஓடியாடி  விளையாடுவதற்கான நேரம் இல்லாமலாகிறது. இதனால், அவர்களின் உடலின் இயல்பான  வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கப்படுகின்றன. மேலும், தொடர்ந்து வீடியோகேம்  விளையாடுவதால் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களும் அவர்களின் வளர்ச்சியைத்  தடுக்கிறது.

மேலும், ஓடியாடி விளையாடாததால் உடல் உழைப்பு இல்லாமல்  ஒபிஸிட்டி எனும் உடற்பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. நமது நாட்டில் முன்  எப்போதும்இல்லாத அளவுக்கு குழந்தைகளுக்கான ஒபிஸிட்டி விகிதம் கடந்த இரு  தசமங்களில் அதிகரித்திருக்கிறது என்கிறார்கள். உயர் ரத்த அழுத்தம்,  சர்க்கரை நோய், மாரடைப்பு வரை பல்வேறு உயிர் பறிக்கும் பிரச்சனைகளுக்கு  உடல் பருமந்தான் தலைவாசல் என்பதை மறந்துவிட வேண்டாம்.  

குழந்தைகளிடம்  வீடியோகேம் விளையாடும் பழக்கம் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்வதுதான் நல்லது.  ஏற்கெனவே விளையாடும் பழக்கம் உள்ள குழந்தைகளின் விளையாடும் நேரத்தைக்  கட்டுப்படுத்தலாம். தினசரி ஒரு மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம்  விளையாடும் குழந்தைகள் அதற்கு அடிமையாவதற்கான வாய்ப்பு அதிகம்.

சிகிச்சை என்ன?

பிற  அடிக்‌ஷன்களுக்குத் தருவதைப் போன்ற Cognitive Behavioral Therapy தான்  இதற்கும் தீர்வு. மனநல மருத்துவரிடம் சென்று கவுன்சலிங் செய்வது நல்ல  பலனைத் தரும். அவசியம் எனில் தேவை கருதி சிலருக்கு மூட் ஸ்டெப்லைஸர்கள்  போன்ற மாத்திரைகள் தரப்படும். இதைத் தவிர வீடியோகேம் அடிக்‌ஷனுக்கு என 12  ஸ்டெப் புரோகிராம் ஒன்று உள்ளது. தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை  பெறும்போது இதில் இருந்து மெல்ல விடுபடலாம்.               
             
-  இளங்கோ

ரெட் அலெர்ட்

*உங்கள் குழந்தை முன்பைப் போல் உங்களிடம் பேசுவது இல்லையா?

*அதிக நேரம் இன்டர்நெட், மொபைல் போனை நோண்டிக்கொண்டிருக்கிறாரா?

*செல்போனைப் பிடுங்கினாலோ, வீடியோகேம் விளையாடக் கூடாது என்றாலோ கோபம் வருகிறதா?

*படிப்பில் ஆர்வம் குறைந்துபோதல், மற்ற விளையாட்டுகளில் ஆர்வம் குறைந்துபோதல் போன்ற அறிகுறிகள் இருக்கிறதா?

*எப்போதும் தனிமையில் இருக்க விரும்புகிறாரா?

*டீன் வயதில் எதிர்பால் மேல் அதிக ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறாரா?

மேற்கண்ட பிரச்சனைகள் வீடியோகேம் அடிக்‌ஷன் எனும் உளவியல் பிரச்சனையாகவும் இருக்கக்கூடும். தயங்காமல் மனநல மருத்துவரிடம் ஒரு கவுன்சிலிங் அழைத்துச் செல்லுங்கள்.

வீடியோ கேம் அடிக்‌ஷன் அறிகுறிகள்

அதே சிந்தனையாய் இருப்பது: வீடியோ கேம் விளையாடும்போது மட்டும் அல்லாமல் விளையாடாத நேரத்திலும் விளையாட்டைப் பற்றிய சிந்தனையாகவே இருப்பது நாம் அதற்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதன் முக்கியமான அறிகுறி.

தவிப்பு: தொடர்ந்து குறிப்பிட்ட நேரம் விளையாடவில்லை எனில் பதற்றம், எரிச்சல், கோபம், வெறுப்பு, சோகம் ஆகிய உணர்வுகளுக்கு ஆளாவது.

தாங்கவியலாமை: ஒவ்வொரு முறை விளையாடும்போதும் விளையாடுவதற்கான நேரத்தை அதிகரித்துக்கொண்டே போவது. இன்னும் இன்னும் என அதில் சலிக்காமல் ஈடுபட்டுக் கொண்டேயிருப்பது.தவிர்க்கவியலாமை: விளையாடும் நேரத்தைக் குறைக்க வேண்டும் என்று மனதளவில் தோன்றினாலும் அதை செயல்படுத்த இயலாமல் தடுமாறுவது. தொடர்ந்து விளையாண்டுகொண்டே இருப்பது.

மற்ற செயல்பாடுகள் இல்லாமல் போவது: தினசரி செய்ய வேண்டிய வழக்கமான பணிகளைக் குறைத்துக்கொள்வது, செய்யாமல் இருப்பது, தள்ளிப்போடுவது அந்த நேரத்தில் வீடியோ கேம் விளையாண்டு கொண்டிருப்பது.

விளைவுகள் பற்றி கவலையற்று இருப்பது: தூக்கம் பாதித்தாலும், வேலை பாதித்தாலும், வருமானம் பாதித்தாலும், உறவுகள் பாதித்தாலும் இன்னமும் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டாலும் அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது. சிலர் அதை உணர்வார்கள். ஆனால், விடுபட முடியாமல் தவிர்ப்பார்கள்.

ஒளிப்பது, மறைப்பது: வீடியோ கேம் விளையாடுகிறீர்கள் என்பதை குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து மறைப்பது. அவர்கள் பார்க்காதபடி நடந்துகொள்வது. வீடியோகேம் பற்றி யாராவது உங்களிடம் பேசினால் அந்தப் பேச்சை தவிர்ப்பது; சண்டையிடுவது; கோபப்படுவது.

ஒளிவதற்கான இடமாக வீடியோ கேமைப் பயன்படுத்துவது: நடைமுறை வாழ்வில் எவ்வளவோ பிரச்சனைகள் வரும். வீடியோ கேம் அடிக்‌ஷன் இருப்பவர்கள் தங்கள் பிரச்சனையை வீடியோகேம் விளையாடுவதன் மூலம் போலியாய் மறக்க முயல்வார்கள். அந்தப் பிரச்சனையை கண்ணெடுத்தும் பாராமல் விளையாட்டில் மூழ்கிப்போக விரும்புவார்கள்.

வாய்ப்புகளைத் தவிர்ப்பது:
புதிய நண்பர்கள், புதிய மனிதர்களைச் சந்திப்பது, உரையாடுவது, புதிய வேலைகள், புதிய பொறுப்புகளை ஏற்க மறுப்பது என எல்லா வாய்ப்புகளையும் தவிர்ப்பது.

தனிமை:
யாரிடமும் பேசாமல் தனித்து ஒதுங்குவது, தனியாக இருப்பதை விரும்புவது, சிரிக்க மறந்துபோவது, எப்போதும் வருத்தமாக முகத்தை வைத்துக்கொண்டிருப்பது.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
  • inde-12

    நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

  • drugs-11

    போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

  • cuba-fire-accident

    கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

  • south korea

    தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

  • birds-flu-10

    பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்