SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டேஸ்ட்டி ரெசிப்பிகள்… ஹெல்த்தி பலன்கள்!

2022-07-07@ 15:31:48

நன்றி குங்குமம் டாக்டர்

‘உணவே மருந்து’ என வாழ்ந்த பாரம்பரியம் நமது. ஒரு ரசம் வைத்தால்கூட அதில் நான்கு குருமிளகையும் பூண்டையும் தட்டிப் போட்டு ஆரோக்கியத்துக்கு அடித்தளமிடுவார்கள் நம் முன்னோர். ஆனால், இன்று நாம் இதை எல்லாம் மறந்துவிட்டு நாவுக்கு அடிமையான சமூகமாய் மாறி நிற்கிறோம். நம் பாரம்பரியமான ரெசிப்பிகளை புதிய சுவையில் நாவுக்கும் ருசியாய் செய்தால் எப்படி இருக்கும் என ஆசைப்படுவர்களுக்கான அசத்தல் ரெசிப்பிகள் இவை.

ஸ்பெஷல்  கொள்ளு ரசம்


தேவை:

கொள்ளு பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்(வறுத்தது)
தக்காளி - 1,
சீரகம் - ஒரு ஸ்பூன்,
மிளகு - அரை ஸ்பூன்,
தனியா - கால் ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 2.
பூண்டு - 2 பற்கள்,
உப்பு - தேவையான அளவு,
கடுகு,
எண்ணெய் - தாளிக்க

பக்குவம்:

எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் கொள்ளினை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு கொள்ளுப் பருப்புடன் சீரகம், மிளகு, வெங்காயம், பூண்டு மற்றும் தனியாவையும் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு தாளித்து அத்துடன் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள விழுது மற்றும் உப்பு சேர்த்து, தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு இறக்கினால் கொள்ளு ரசம் ரெடி. இந்த கொள்ளு ரசத்தை சாதத்துக்கும் பயன்படுத்தலாம் அல்லது மிதமான சூட்டில் சூப் போலவும் குடிக்கலாம்.

பலன்கள்: கொள்ளுப் பருப்பில் புரதச்சத்து நிறைந்துள்ளது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் இயல்புடையது. மேலும், உடல் சூட்டினை சமன்படுத்தி, கபத்தை அறுக்கும். இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடெண்ட் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.

ஹெல்த்தி உளுந்தங்களி

தேவை:

வறுத்து அரைத்த கறுப்பு உளுந்து மாவு - 100 கிராம்,
பச்சரிசி மாவு - ஒரு சிட்டிகை,
கருப்பட்டி - 100 கிராம்,
நெய் அல்லது நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்,
சுக்கு,
ஏலக்காய் - சிறிதளவு,
தேங்காய்த் துருவல் - ஒரு கப்

பக்குவம்:

உளுந்து மாவு, அரிசி மாவு இரண்டையும் சேர்த்து, இரண்டு கப் தண்ணீரில் கரைக்கவும். கருப்பட்டியைக் கரைத்து, வடிகட்டி, அடி  கனமான கடாயில் கரைத்து வைத்துள்ள அரிசி, உளுந்து கலவையை சேர்த்துக் கிளறவும். பாதி வெந்ததும் கருப்பட்டிக் கரைசலை  வடிகட்டிச் சேர்க்கவும். நன்றாகச் சேர்ந்து வரும்போது நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்து, கிளறி இறக்கவும். குறைவான அனலில்  நீண்ட நேரம் கிண்ட வேண்டும். இறுதியாக சுக்கு, ஏலக்காய் பொடி, தேங்காய்த்துருவல் தூவி இறக்கவும்.

பலன்கள்: உளுந்தில் உள்ள கால்சியம் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்கள் பெண்களுக்கு எலும்புகளை வலுவாக்குகிறது. இதில் உள்ள ஒலியிக் அமிலம் கர்ப்பப்பையை வலுவாக்குகிறது. உடலில் தேவையற்ற நச்சை நீக்குகிறது.

வரகு புளியோதரை சோறு


தேவை:

வரகரிசி - ஒரு கப் முழு மல்லி (தனியா),
எள் - தலா ஒரு டீ ஸ்பூன்,
வெந்தயம் - கால் சிட்டிகை,
காய்ந்த மிளகாய் - 10,
புளி -  எலுமிச்சை அளவு,
வேர்க்கடலை - 5 டீஸ்பூன்,
கடலைப்பருப்பு,
உளுத்தம்பருப்பு,
கடுகு,
கறிவேப்பிலை,
பெருங்காயத்தூள் - தாளிக்கத் தேவையான அளவு,
பொடித்த கருப்பட்டி வெல்லம் - சிறிதளவு,
மஞ்சள்தூள்,
மிளகு - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

பக்குவம்:


வரகரிசியை 10 நிமிடங்கள் ஊறவைத்து, களைந்து, இரண்டு கப் தண்ணீர் விட்டு வேகவிடவும். புளியை ஊற வைக்கவும். வெறும்  வாணலியில் மல்லி (தனியா), எள், வெந்தயம், காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றைத் தனித்தனியே வறுத்து ஆறவைத்து, மிக்ஸியில்  அரைத்து பொடிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலை,  கறிவேப்பிலை தாளித்து; புளியைக் கரைத்து ஊற்றி மஞ்சள்தூள், உப்பு, வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும். பிறகு, அரைத்து  வைத்திருக்கும் பொடியைச் சேர்த்துக் கிளறி, இறுக வற்றி எண்ணெய் நன்கு பிரிந்துவரும்போது இறக்கினால் புளிக்காய்ச்சல் தயார்.  தேவையான அளவு புளிக்காய்ச்சலை வரகரிசி சாதத்துடன் கலந்து பரிமாறவும்.

பலன்கள்: வரகில் இரும்புச்சத்தும் கார்போஹைட்ரேட்டும் நிறைந்திருக்கின்றன. மேலும் இதில் உள்ள நுண்ணூட்டச்சத்துக்கள் உடலை வலுவாக்குவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, ரத்த அணுக்களை செழிக்கச் செய்கின்றன.

- புகழ்

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

 • south korea

  தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..

 • birds-flu-10

  பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!

 • raksha-rakhi-8

  ரக்‌ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்