நடத்தை கோளாறு Conduct Disorder
2015-06-17@ 16:29:13

மனசே... மனசே... டாக்டர் சித்ரா அரவிந்த்
குழந்தைகள்/டீன்ஏஜ் பருவத்தினரை பாதிக்கும் உணா்ச்சி மற்றும் நடத்தை பிரச்னையில் முக்கியமான பிரிவுதான் நடத்தை கோளாறு. இவர்கள் வாய்ப்பேச்சோடு நிறுத்திக் கொள்வார்கள். அதே நேரம், நடத்தை கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றவர்களின் உரிமைகளை மீறுகின்ற வகையிலும் மற்றும் சமுதாய விதிமுறை/வரைமுறையை மீறும் வகையிலும் தொடர்ந்து நடந்து கொள்வார்கள். அதுமட்டுமின்றி, பல நேரங்களில், இதனால் பிறருக்கு காயமோ, மரணமோ, பொருட்சேதமோ ஏற்படவும் கூடும். இதில் 2 வகைகள் உள்ளன.
நடத்தை கோளாறு வகைகள்
1. குழந்தை பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் 10 வயதிற்கு முன்னரே ஆரம்பித்துவிடும்.
2. டீன்ஏஜ் பருவ நடத்தை கோளாறு அறிகுறிகள் டீன்ஏஜ் பருவத்தின் போது ஆரம்பிக்கும்.
சில நேரங்களில், எப்போது முதலில் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கின்றன என தெரியாமல் கூட போய் விடக் கூடும். ஆண் பிள்ளைகளிடம் தான் இந்த கோளாறு அதிகம் காணப்படுகிறது. மேலும், ஆண்களுக்கு 10 வயதிலும் பெண்களுக்கு 13-18 வயதிலும் உச்சத்தில் காணப்படும். குழந்தைப் பருவத்திலேயே ஆரம்பிக்கும் நடத்தை கோளாறுதான், டீன்ஏஜ் பருவத்தில் ஆரம்பிப்பதைக் காட்டிலும் அபாயமானது. இவர்கள் பெரியவர் ஆனதும், போதை/மது அடிமைத்தனம் போன்ற பல மனநலப் பிரச்னைகளுக்கும் சமூக விரோத வன்முறை செயல்களிலும் ஈடுபடும் அபாயமும் அதிகப்படுகிறது.
அறிகுறிகள்
பெரும்பாலான அறிகுறிகள் 1 வருடத்துக்கு மேல் காணப்படும், குழந்தையின் சமூக, வேலை மற்றும் பள்ளி வாழ்க்கையை கடுமையாக பாதித்தால் அது, நடத்தை கோளாறாக இருக்கலாம்.
1. முரட்டுத்தனமான நடத்தை
மற்றவரை மிரட்டுதல், கொடுமைப்படுத்துதல், உடல்ரீதியான/பாலியல் வன்முறை செயல்களில் ஈடுபடுதல், திருடுதல், வழிப்பறி செய்தல் மற்றும் மிருகங்களைத் துன்புறுத்துதல்.
2. பொருட் சேதம் செய்தல்
தீ வைத்தல் மற்றும் வேண்டுமென்றே மற்றவருக்கு சொந்தமான பொருட்களை / சொத்தை அழித்தல்.
3. ஏமாற்றுதல் / திருட்டு
வீடு புகுந்து திருடுவது, பிறரை பொய் சொல்லி ஏமாற்றுவது, கார் திருட்டு.
4. தீவிரமான விதி / கட்டுப்பாட்டை மீறுதல்
13 வயதுக்கு முன்னரே வீட்டை விட்டு ஓடிப் போவது, பள்ளிக்கு செல்லாதிருத்தல், குடி, போதை பழக்கம், சிறு வயதிலேயே பாலியலில் ஈடுபடுதல். ஆண்கள் பெரும்பாலும் முரட்டுத்தன்மை மற்றும் அழிக்கும் விஷயத்தில் ஈடுபடுவார்கள். பெண்கள் ஏமாற்றுவது மற்றும் கட்டுப்பாட்டை மீறும் செயல்பாடுகளில் ஈடுபடலாம்.
யாருக்கு நடத்தை கோளாறு வரலாம்?
பின்வரும் காரணிகள் ஒரு குடும்பத்தில் காணப்பட்டால், அங்கிருக்கும் குழந்தைக்கு இவ்வகை கோளாறு ஏற்படுவதுக்கான சாத்தியம் அதிகம். இதை முதலிலேயே தெரிந்து கொள்வது மூலம், குழந்தைக்கு நடத்தை கோளாறு வராமல் தடுக்கவும் அல்லது அறிகுறிகளின் தீவிரத்தை குறைக்கவும் முடியும்.
1. குடும்பத்தில் ஏற்கெனவே யாருக்காவது நடத்தை கோளாறு இருத்தல்.
2. குடும்பத்தில் எவருக்கேனும் மன நலப் பிரச்னை இருத்தல்.
3. பெற்றோரின் தவறான வளர்ப்பு முறை.
4. பெற்றோர் குடி/போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருத்தல்.
5. புறக்கணிக்கப்பட்ட குழந்தை மற்றும் பாலியல்/பிற கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்ட குழந்தை.
6. மோசமான/ஆரோக்கியமற்ற குடும்ப சூழ்நிலை (பெற்றோரின் சண்டை, தகாத உறவு, விடாத தகராறு)
7. பல அதிர்ச்சிகரமான வாழ்க்கை நிகழ்வுகள் குடும்பத்தில் பணக்கஷ்டம், வேலையின்மை.
8. வறுமை மற்றும் நகர்ப்புற வாழ்க்கை.
9. கல்வி மற்றும் சமூகத் திறன் குறைபாடுகள்.
வெளித்தோற்றத்துக்கு இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தன்னம்பிக்கையுள்ளவராகவும் வலிமையாகவும் காட்சியளிப்பார்கள். ஆனால், உண்மையில் இவர்கள்பாதுகாப்பு உணர்வற்றவர்களாகவும் மற்றும் பிறர் தம்மை துன்புறுத்தவோ/பயமுறுத்துவதாகவோ தவறாக நம்பிக் கொண்டிருப்பார்கள்.
காரணி மற்றும் சிகிச்சை மரபணு மற்றும் சுற்றுச்சூழல்
காரணிகள் சேர்ந்து நடத்தை கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. மூளையில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் பாகங்கள் சரியாக வேலை செய்யாததால், ஒருவரால் செய்யவேண்டிய செயலை சரியாக திட்டமிட முடியாமை, தூண்டுதலைக் கட்டுப்படுத்த இயலாமை மற்றும் முந்தைய எதிர்மறை அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்ளும் திறன் ஆகியவை வலுவிழந்து விடுகின்றதால், இக்கோளாறு ஏற்படலாம்.
மூளையில் ஏதேனும் சேதம் ஏற்படுவதாலோ அல்லது மரபணு ரீதியாகவோ இந்த மாறுதல்கள் ஏற்படலாம். மேலும், பெற்றோரிடமிருந்தும் பிள்ளைகளுக்கு வரலாம். சுற்றுச்சுழல் காரணத்தால் ஏற்படும் நடத்தை கோளாறுகள் டீன்ஏஜ் பருவம் முடியும் தருணத்தில் தானே வீரியம் குறைந்து விடும். ஏ.டி.எச்.டி.(ADHD), இணக்கமற்ற நடத்தை கோளாறு (ODD) மற்றும் போதை அடிமை நோய் போன்ற பிற பிரச்னைகளுடன் சேர்ந்து காணப்படும் நடத்தை கோளாறுக்கு, பெரும்பாலும் மரபணு காரணமாக இருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. அங்ஙனம் காணப்படும் கோளாறின் தன்மை, பெரியவர் ஆன பின்பும் மாறாதிருக்கலாம்.
சிகிச்சை
நடத்தை கோளாறை முதலிலேயே கண்டறிந்து சரிசெய்யாவிட்டால், அறிகுறிகள் தீவிரமடைந்து, அடிக்கடி தோன்ற ஆரம்பித்துவிடும். மேலும், பிற பிரச்னைகளும் தோன்றிவிட்டால், இதை சரிசெய்வது சற்று கடினமாகிவிடும். பெரும்பாலும், இவ்விதப் பிரச்னைகளுக்கு குடும்ப சூழ்நிலை ஒரு முக்கிய காரணமாக இருப்பதால், குடும்பத்தில் உள்ளவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். ஆகையால், குழந்தையின் மன நிலையில் மாற்றத்தைக் கொண்டு வருவது சிரமம்தான். மேலும் குழந்தைகள் வளர்ந்த பின்னர், இவர்களுக்கு சமூகவிரோத ஆளுமை கோளாறு (Antisocial Personality Disorder) ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் வளரும் குழந்தைகளை, முதலில் வேறு இடத்தில் தங்க வைப்பதே, சிகிச்சையின் முதல்படி. பின்னர், குழந்தையின் உணர்ச்சியை சமாளிக்கும் திறன்கள் மற்றும் நடத்தையை மாற்றும் வழிமுறைகள் போன்றவை ஆலோசனையின் போது சொல்லிக் கொடுக்கப்படும். மேலும், அக்குழந்தைக்கு மனச்சோர்வோ (depression) அல்லது ஏ.டி.எச்.டி.யோ (ADHD) இருந்தால், அதற்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும்.மேலும், முக்கியமாக பெற்றோர் பொறுமையாக ஆலோசகரின் வழிகாட்டல்படி நடந்து கொண்டால், குழந்தையின் நடவடிக்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அடுத்த இதழில் குழந்தைக்கு ஏற்படும் பதற்றக் கோளாறுகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
மோகனின் முரட்டுத்தனம் ஏன்?
மோகன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். டீன்ஏஜ் பருவத்தை நெருங்கி கொண்டிருந்த மோகனை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனா். அவனை வெளியில் காத்திருக்கச் சொல்லி அவன் பெற்றோரிடம் அவனைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்டேன். அப்போது அவன் தாய் மகனின் போக்கால் தனக்கு மன நிம்மதியே இல்லையென சொல்லி அழுதார். மோகனின் அப்பா மோகனின் சிறு வயது முதலே பிரிந்து தனித்து வாழ்ந்து வருவதாக கூறினார். சிறுவயதிலிருந்தே முரட்டுத்தனமாக நடந்து கொண்டதையும் நினைவு கூ்ர்ந்தார். வயதாக ஆக, அவனின் இக்குணம் மேலும் மேலும் அதிகமானதே தவிர குறையவில்லை.
பல பாடங்களில் ஃபெயில் ஆனதால் என்னிடம் அழைத்து வந்தார். இது் குறித்து பள்ளி நிர்வாகம் அவனைக் கண்டித்த போது, மோகன், அவன் வகுப்பாசிரியரைத் தாக்கியதாகவும் கூறி அழுதார். பள்ளிக்கு சென்ற அவன் தாய்க்கு அங்கே, அவன் மீது பல்வேறு புகார்கள் (சக மாணவிகளை கிண்டல், கேலி செய்தது, பலமுறை பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் ஊா் சுற்றியது, பள்ளிக்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது, ஆசிரியர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்து கொண்டது) காத்திருந்தன. இதுபோன்ற புகார்களினால் 3-4 பள்ளியை மாற்றி விட்டார் மோகனின் அம்மா.
பொதுவாகவே, பேசி பிரச்னையைத் தீர்ப்பதைக் காட்டிலும் அடிதடி, தகராறில்தான் இறங்குவதாக அவன் தாய் கூறினார். வீட்டுக்குச் சென்று பலமுறை அறிவுறுத்தியும் கண்டித்தும் தண்டித்தும் பார்த்திருக்கிறார்; எவ்வித முன்னேற்றமும் அவன் நடத்தையில் இல்லை. தனக்கு விலையுயர்ந்த அலைபேசி வாங்கித்தரச் சொல்லி அடம் பிடித்திருக்கின்றான் மோகன். அதை வாங்கித்தர மறுத்ததைத் தொடா்ந்து பலமுறை வீட்டில் பொருட்களும் பணமும் தொலைவதை உணா்ந்த அவன் தாய், அவனை விசாரித்துள்ளார்.
அதன் பின்னரே, அவன் பல நாட்களாகவே பொருட்களைத் திருடி தன் நண்பர்கள் மூலம் விற்றது தெரிய வந்தது. புகைப் பழக்கம் இருப்பதாகவும் இத்தனை நாள் அதை மறைக்க, பல பொய்களை அவன் கையாண்டதும் தெரிய வந்தது. இதைப் பற்றி கண்டித்ததற்கு எந்தவித உணா்ச்சியும் சலனமும் இல்லாமலிருந்த மோகனைப் பார்த்து மிகுந்த அதிர்ச்சியும், கவலையுமுற்றார் அவன் தாய். மோகனுக்கு தன்னுடைய உணர்ச்சியை சரிவர வெளிப்படுத்தவும், மற்றவர்களைக் குறித்த வன்ம எண்ணத்தை மாற்றுவதற்கும், அறிவாற்றல் நடத்தை சிகிச்சை (Cognitive Behavior Therapy) அளிக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமின்றி, அவன் குடும்ப சூழலையும் ஆரோக்கியமாக்க, அவன் தாய்க்கும் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. அவன் பள்ளி மற்றும் நண்பர் வட்டாரத்தை மாற்றவும் ஆலோசனை வழங்கப்பட்டது. அவனுக்கு, சிறு வயதில் ஏ.டி.எச்.டி. இருந்ததால் அதற்கு மருந்து உட்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவன் நடத்தையில் மாறுதல் தெரிவதாக கூறி அவன் தாய் ஓரளவு நிம்மதியடைந்தார்.
(மனம் மலரட்டும்)
மேலும் செய்திகள்
நவீன குழந்தை வளர்ப்பும்... நச்சரிக்கும் பிரச்சனைகளும்!
டிஜிட்டல் நன்மையை நோக்கி குழந்தைகளை வழிநடத்த வேண்டும்!
குழந்தைகளை ஆக்டிவாக்கும் கலர்ஃபுல் ஆக்டிவிட்டிஸ்!
பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்...
சிசுவின் சீரற்ற பாதம்...பெற்றோர்களே கவனியுங்கள்!
குழந்தைகளின் பேச்சு குறைபாடு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!