மூளைக்கட்டி
2015-06-16@ 14:23:07

அறிந்ததும் அறியாததும்
Glioblastoma multiformae... இந்தப் பெயரை எங்கேயோ கேட்டது போலிருக்கிறதா? ஆம்... உத்தமவில்லன்’ படத்தில் மனோரஞ்சனாக நடித்திருக்கும் கமல்ஹாசனுக்கு இருப்பதாக காண்பிக்கப்பட்ட மூளைக்கட்டியின் பெயர்தான் இது. மரணம் உறுதி எனத் தீர்மானிக்கப்பட்டு விட்ட சூழலில், மரித்துப் போவதற்குள் மனிதனாகவும் கலைஞனாகவும் தான் செய்ய மறந்ததை எல்லாம் செய்கிற முன்னெடுப்புகள்தான் படத்தின் மையம். சாமானிய மக்களிடத்திலும் கூட பல்வேறு நோய்கள் பற்றிய தெளிவை ஏற்படுத்தியிருப்பதும் கூட திரைப்படங்களின் வெற்றிதான். சரி இப்போது கட்டுரைக்குள் நுழைவோம்...
Brain tumor எனப்படும் மூளைக்கட்டி என்றாலே அஞ்சி நடுங்கக்கூடிய அளவில்தான் நமக்கு அது குறித்தான விழிப்புணர்வு இருக்கிறது. மூளையில் வரும் எல்லாக் கட்டிகளும் உயிரைப் பறிக்கக்கூடியவை அல்ல. பல்வேறு காரணங்களால் மூளையில் கட்டிகள் வருகின்றன. அவற்றுள் சில கட்டிகள் புற்றுநோய் கட்டிகளாக இருக்கும். Glioblastoma multi formae என்பது குணப்படுத்த முடியாத புற்றுநோய்க்கட்டியாகும். இது குறித்து விளக்குகிறார் நரம்பியல் அறுவை சிகிச்சைநிபுணர் திருமாறன்...‘‘மூளைக்கட்டி ஏற்படுவதற்கான காரணம் இன்றளவிலும் முழுமையாக கண்டறியப்படவில்லை. மூளையில் வரக்கூடிய எல்லா கட்டிகளும் ஒரே தன்மையுைடயவை என்று நினைத்துக் கொள்ளக்கூடாது.
கட்டிகளைப் பொறுத்து அதன் தன்மை... அது ஏற்படுத்தும் விளைவுகள் மாறுபடும். நியூரோம், மெனிஞ்சியோமா, சுவானோமா போன்ற கட்டிகளால் உயிருக்கு ஆபத்து இல்லை. அறுவை சிகிச்சை மூலம் அகற்றி விட்டால் திரும்பவும் வராது. ஆனால், மூளைக்கட்டிகளில் சில புற்றுநோய்க்கட்டிகளாக இருக்கின்றன. மூளைக்கட்டி உள்ளவர்களில் நூற்றுக்கு பதினைந்து பேருக்கு Astrocytoma எனும் புற்றுநோய்க்கட்டி வருகிறது.
ஆஸ்ட்ரோசைட்டோமா நான்கு நிலைகளாக பிரிக்கப்படுகிறது. அதனுள் முதல் மற்றும் இரண்டாம் நிலை கட்டி உள்ளவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கட்டியை அப்புறப்படுத்தி விட முடியும். அதன் மூலம் முற்றிலுமாக குணமடைந்து விடுவார்கள். மூன்றாம் நிலை கட்டி கொஞ்சம் அபாயகரமானது. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மேற்கொள்ளும்போது80 சதவிகிதம் காப்பாற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அடுத்த நான்காம் நிலைதான் Glioblastoma multiformae. ஒருவருக்கு இந்நிலை கட்டி இருப்பதாக தீர்மானிக்கப்பட்டு விட்டால் மரணம் நிச்சயம்.
சிகிச்சை எடுத்துக் கொள்ளாதிருந்தால் நான்கு மாதங்களும் சிகிச்சை எடுத்துக்கொண்டால் இரண்டு ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன.Glioblastoma multi formae எதன் காரணமாக ஏற்படு கிறது என்பதும் புரியாத புதிராகவேதான் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் இது குறித்தான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரபு ரீதியில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக கதிர்வீச்சு பாதிப்பின் காரணமாக ஏற்படுமோ? என்கிற தொணியிலான சோதனைகள் நடந்து வருகின்றன.
பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இந்த புற்றுநோய் கட்டிக்கு ஆளாகிறார்கள். பெரும்பாலும் ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்கே இக்கட்டி ஏற்படுகிறது. மூளைக்கட்டிக்கென தனித்துவமான அறிகுறிகள் கிடையாது. தாங்க முடியாத தலைவலி, அடிக்கடி மயக்கமடைதல், தலை சுற்றல், வாந்தி, வலிப்பு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இப்படியான பிரச்னைகள் வரும்போது அதை சாதாரண பிரச்னைதான் என்று அலட்சியப்படுத்தாமல் மருத்துவ ஆலோசனையை நாடுவது நல்லது.
சிறு பிரச்னையாக இருந்தாலும் ஸ்கேன் எடுத்துப் பார்த்து விடலாம் என்று நினைக்கக் கூடிய ஆரோக்கியமான சூழல் இங்கு நிலவுகிறது. எந்த ஒரு பிரச்னைக்கும் அத்துறை சார்ந்த மருத்துவர்களை அணுகுவதுதான் சரியாக இருக்கும். உதாரணத்துக்கு வலது கை செயலிழந்து விட்டதென்றால் ஸ்கேன் எடுக்க வேண்டியது கைக்கு மட்டுமல்ல. மூளையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் கூட கை செயலிழந்து போகலாம். நரம்பியல் மருத்துவர்களால்தான் அதற்கான காரணத்தை அறுதியிட்டு சொல்ல முடியும். வாழ்கிற குறுகிய நாட்களுக்குள் அவஸ்தையில்லாமல் வாழ சிகிச்சை மேற்கொள்வது அவசியமாகிறது.
முதல் கட்டமாக அறுவை சிகிச்சை மூலம் கட்டியை வெட்டி அகற்றி விடுவோம். மூளையில் நரம்புத் திசு, இணைப்புத் திசு என இருவகையான திசுக்கள் இருக்கின்றன. இணைப்புத் திசுக்களில் புற்றுநோய் வருவதால் அது மூளையின் மற்ற பகுதிகளுக்கு அதைக் கடத்திச் சென்று விடும். ஆகவே, கட்டியை அகற்றினாலும் உள்ளே புற்றுநோய் ஊடுருவியிருக்கும். கதிரியக்க சிகிச்சை மூலம் புற்றுநோயை வளரவிடாமல் தடுக்கலாம். தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் வாழ்நாளை இரண்டு ஆண்டு காலம் வரையிலும் நீட்டிக்க முடியும்.
Glioblastoma multiformae அதிவேகமாக வளரக்கூடியது என்பதால் அதற்கான சிறிய அறிகுறி தெரிந்தாலும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். உடலிலுள்ள ஏதேனுமொரு மரபணு காரணமாக புற்றுநோய் வளர்கிறதுஎன்றால் அந்த மரபணுவை அழிக்க அதற்கு எதிரான மரபணுவை உடலுக்குள் செலுத்தும்படியான ஆராய்ச்சிகள் விலங்குகள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘வருமுன் காப்போம்' என்கிற கூற்றுக்கு இது பொருந்தவே பொருந்தாது.
இது போன்ற நோய்களெல்லாம் புதிதாகத் தோன்றிவிடவில்லை. காலம் காலமாக இருந்து வருகின்றன. அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்டதால் என்ன நோய் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இதற்கு முன்னர் எதுவென்றே தெரியாமல் இறந்து விடுவார்கள். பொதுவாக சொல்வதானால் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளும்படியாக உணவுப் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.’’
மேலும் செய்திகள்
நுரையீரலின் தசை அழற்சி
முடி உதிர்வுக்கு பிஆர்பி சிகிச்சை...
வெயில் பாதி... மழை பாதி...
கொரோனாபோபியா
பற்களை பாதுகாக்கும் ஃப்ளாஸிங்
கொரோனாவை கட்டுப்படுத்த மூலக்கூறு ஆய்வு
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!