SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் எனும் மாயலோகம்-பைபோலார் டிஸ்ஆர்டர் ஒரு பார்வை!

2023-02-08@ 15:38:15

நன்றி குங்குமம் டாக்டர்

பைபோலார் டிஸார்டர் (Bipolar disorder) என்பதை இருமுனை கோளாறு என்று அழைக்கலாம். சில காலத்துக்கு அதீத மகிழ்ச்சியும் சில காலத்துக்கு அதீத மனச்சோர்வுமாக இரு துருவங்களில் இருக்கும் மனநிலை. இந்த பைபோலார் சைகிளில் மகிழ்வான மனநிலை அதிக நாட்களுக்கு நீடிக்காது. இந்த மனநிலை ஏற்றத் தாழ்வுகள் ஒருவரின் அன்றாட வேலைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும். குடும்ப உறவுகளிலும் அலுவலகத்திலும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.

இதனை பைபோலார் டிஸ்ஆர்டர் 1 மற்றும் பைபோலார் டிஸ்ஆர்டர் II எனப் பொதுவாக இருவகைப்படுத்தலாம். ஆண்களையும் பெண்களையும் தாக்கக்கூடும் என்றாலும் ஆண்களைவிட பெண்களுக்கு அதீத மனச்சோர்வுடன் ஆன பைலார் சைக்கிள்ஸ் (Bipolar cycles) அடிக்கடி ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எந்த வயதிலும் ஏற்படக்கூடும் எனினும் 20 முதல் 25 வயதில் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

காரணங்கள் என்னென்ன?

இது எதனால் ஏற்படுகிறது என காரணங்களைக் கணிக்க முடியவில்லை என்றாலும் சில ரிஸ்க் ஃபேக்டர்ஸ் (Risk factors) இருதுருவ நோய்க்கு வழிவகுக்
கின்றன என சொல்லலாம்.

* மரபணு வழியாகவோ அல்லதுபெற்றவர்கள் உடன்பிறந்தவர் என குடும்பத்தில் யாரும் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஒருவர் பாதிக்கப்படுவதற்கான ரிஸ்க் அதிகம்.

* சிறு வயதில் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்கள் ( Child Abuse), பெற்றோரை இழந்தவர்கள், அதிர்ச்சியான நிகழ்வுகளை எதிர்கொண்டவர்கள், அன்பும் ஆதரவுமின்றி புறக்கணிக்கப்பட்டவர்கள் - இவர்களுக்கு உணர்வுகளை கையாள்வதில் சிக்கல்கள் இருக்கும் என்பதால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளது.

* நெருங்கிய உறவினர் இறப்பது, தீவிர நோய்க்கு ஆளாவது போன்ற மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் போகும் போது, திருமணம் போன்ற முக்கியமான நிகழ்வுகள், ஏழ்மை, இனவெறி தாக்குதல்களுக்கு ஆளாதல், தனிமையுணர்வுக்கு ஆட்படுவது, எதிர்காலத்தைப் பற்றிய நிச்சயமின்மை, வேலைப் பளு, போன்ற காரணங்களால் ஒருவருக்கு இருதுருவ கோளாறு trigger ஆகக்கூடும்.

* மூளையில் இருக்கும் நியூரோட்ரான்ஸ்மீட்டர்களின் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடும். இதனால் நோய் ஏற்படுகிறதா அல்லது நோய் ஏற்பட்டுள்ளதால் இந்த ஏற்றத்தாழ்வுகள் உண்டாகியுள்ளதா என தெளிவாக அறிய மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும்.

* இருதுருவ நோய் கொண்டவர்கள் 60% போதைப்பொருள் பயன்படுத்துபவர்களாக உள்ளனர் என ஆய்வுகள் பகிர்கின்றன. குடிப் பழக்கம் மற்றும் போதை மருந்துகள் பயன்படுத்துவர்களுக்கு இருதுருவ நோயின் போது ஏற்படும் மேனியா டிப்ரஷன் மனநிலைகள் இருக்கும். எனவே இவை நோயின் அறிகுறிகளா அல்லது இந்தப் பழக்கங்களின் விளைவால் உண்டான மனநிலையா என அறிந்து கொள்வது கடினமானது.

சிகிச்சைகள்

மனநல மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், மனநல ஆலோசகரின் தெரபி முறைகள் ஆகிய ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை மேற்கொள்ளுதல் நலம். மருந்துகளுடன் காக்னடிவ் பிஹேவியரல் தெரப்பி (Cognitive behavioural therapy - CBT) என்ற சைக்கோதெரப்பி அளிக்கப்படும் போதுநோயை சமாளிக்கும் சாத்தியங்கள் அதிகம்.மிகவும் தீவிர நிலையில் உள்ள நோயாளிகளுக்கு எலெக்ட்ரோகன்வல்சிவ் தெரப்பி (Electroconvulsive Therapy) யை மருத்துவர் பரிந்துரைப்பார்.

உடலுக்கு ஒரு நோய் வந்தால் நாம் எப்படி மருத்துவரை சென்று பார்த்து அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டு உடல்நிலையை சரிப்படுத்துகிறோமோ, அவ்வாறே நம் மனதிற்கு ஏதாவது நோய்கள் /அசௌகரியங்கள் ஏற்பட்டால் ஒரு மனநல ஆலோசகரை அல்லது மனநல மருத்துவரை சென்று சந்திப்பது மிகவும் அவசியமாகும்.

நம் எண்ணங்கள் மனதிலிருந்து பிறக்கின்றன என நம்புகிறோம். எனவேதான் மனசு சரியில்லை எனும்போது உடனிருக்கும் நண்பர்களோ உறவினர்களோ ‘‘எல்லாம் உன் மனசுலதான் இருக்கு, நீதான் சரிபடுத்திக்கணும்” என்று ஆலோசனை செய்கின்றனர். இதுவே உடலில் ஒரு நோய் ஏற்படும் போது அப்படி யாரும் சொல்வதில்லை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் என்பதை வெளிப்படையாக சொல்லிக்கொள்வதையும் பார்க்கிறோம்.

கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் நம் மனம் என்பது நம் உடலைப் போலவே ஒரு பாகம், மூளையின் ஒரு அங்கம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நம் genes, உணவுமுறை, வாழ்க்கை முறை, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், மூளையின் ரசாயனங்களின் செயல்பாடுகள் போன்ற காரணிகளால் பாதிக்கப்படக்கூடிய ஒன்றுதான் நம் மனம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

பொதுவாக சமூகத்தில் மனம் சார்ந்த விஷயங்களுக்கு ஒரு stigma உள்ளது. மனநலம் சார்ந்து நிறைய விழிப்புணர்வுகள் ஏற்படுத்துவதும் தொடர்ந்து உரையாடுவதும் நம் சமூகக் கடமை என எண்ண வேண்டும். மன நோய்களுக்கான அறிகுறிகள் தோன்றும்பொழுதே, மூடநம்பிக்கைகளிலும் மதநம்பிக்கைகளிலும் நாட்களை வீணடிக்காமல் உடனடியாக சிகிச்சைக்கு செல்லும்போது அதனை சரி செய்வது எளிது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்