மூலம் எதனால் வருகிறது... என்ன தீர்வு?
2023-01-31@ 17:42:27

நன்றி குங்குமம் தோழி
பொதுவாக 45-65 வயதிற்குட்பட்டோர் அதிகம் பாதிக்கப்படும் நோய்களில் மூல நோயும் ஒன்று. தற்போதுள்ள உணவு பழக்கவழக்கங்களால், இந்நோயினால் பல இளம் வயதினரும் கூட பாதிக்கப்படுகின்றனர். மூலம் ஏன் ஏற்படுகிறது. அதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று பார்ப்போம்:ஹெமராய்ட்ஸ் (Hemorrhoids) அல்லது பைல்ஸ் (piles) என்று ஆங்கிலத்திலும் மூலம் என்று தமிழிலும் சொல்லக்கூடிய வார்த்தையானது உண்மையில் ஒரு நோயைக் குறிப்பிடுவது அல்ல.
பெருங்குடலின் அடிப்பகுதி மற்றும் மலப்புழையைச் சுற்றியுள்ள சுவர்களின் மென்மையான தசைகளுக்குள் பதிந்துள்ள ரத்த நாளங்களே மூலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலங்களில், நாட்பட்ட உராய்வு, சீராய்ப்பு, அழற்சி ஏற்படுவதால், அவை வீக்கமடைந்து, ரத்தக்கசிவுடன் பெரியதாகும்போதுதான் மென்மையான தசைபோன்ற ஒன்று மலத்துவாரத்தின் உள்ளும் வெளியிலும் உருவாகி பிரச்னையை ஏற்படுத்துகின்றது. பெருங்குடலின் கடைசி பாகத்தில் (Rectum) இந்த அழுத்தம் அதிகமானால், ரத்தக் கசிவுடன் அழற்சி ஏற்படுகிறது. இந்த நிலை வந்த பின்புதான் அதை மூலநோய் (மூலத்தில் ஏற்பட்ட நோய்) என்று நாம் கூறுகிறோம்.
மூலநோய் வருவதற்கான காரணங்கள்
பெருங்குடலில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்திற்கும், அழற்சிக்கும். நாட்பட்ட மலச்சிக்கல், நாட்பட்ட வயிற்றுப்போக்கு, அதிக எடை தூக்கும் வேலை செய்தல், கர்ப்பகாலம், மிகுந்த சிரமத்துடனும், அழுத்தத்துடனும் மலத்தை வெளியேற்றும் பழக்கம் போன்றவை காரணங்களாகின்றன. எந்த வயதிலும் வரக்கூடிய மூலநோய், வயதானவர்களைத்தான் அதிகம் பாதிக்கிறது.
முதுமைப் பருவத்தில் உள்ளவர்களின் ரத்த நாளங்களில் ஏற்படும் பலவீனம், அதிக நேரம் உட்கார்ந்தே இருப்பது, மலம் கழிப்பதைத் தள்ளிப் போடுவது, உடல் பருமன், கல்லீரல் அழற்சி, நார்ச்சத்து குறைவான உணவு, அதிக கொழுப்புள்ள உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, உடலில் நீர் பற்றாக்குறை, குடல் சம்பந்தமான பிற நோய்கள், அதிக மன அழுத்தம், பொதுவாகவே குறைந்த நோய் எதிர்ப்புச் சக்தியுடன் உடல் மெலிந்து இருத்தல், மது அதிகம் அருந்துதல், புகைப்பழக்கம், நேரம் தவறி உணவு உண்பது போன்றவை மூலத்தை ஏற்படுத்தி அன்றாட வாழ்க்கையையும் சிக்கலாக்கி விடுகின்றது.
சாப்பிட வேண்டிய உணவு முறைகள்
ஓட்ஸ், பார்லி, உளுந்து போன்ற குழைவுத் தன்மை அதிகமுள்ள உணவில் ஏதேனும் ஒன்றை தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும். பழங்களில், கொய்யா, ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆப்பிள் என பெக்டின் அதிகமுள்ள பழங்களை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், தவிடு நீக்காத கோதுமை, அரிசி தவிடு, பேரிக்காய், தோல் நீக்கப்படாத பருப்பு வகைகள், காய்கறிகளில், வெண்டை, தக்காளி, கேரட் , சேனைக்கிழங்கு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, மலத்தை இளக்கி, பெருங்குடலிலும், மலக்குடலிலும், கழிவுகள் தேங்காமல் இருப்பதற்கு உதவி புரிகிறது.
சர்க்கரை வள்ளி, சோளக்குருத்து, எள், பாதாம், கேழ்வரகு போன்ற உணவுகள் எரிச்சலையும், புண்ணையும் குணப்படுத்தி வேதனையை குறைக்கவல்லவை.
மூல நோய் ஆரம்பநிலையில் இருக்கும்போது, பப்பாளிப்பழம், அத்திப்பழம், வாழைப்பழம் போன்றவற்றை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆரம்பநிலையிலேயே குணப்படுத்தலாம்.
அதுபோன்று, தினசரி 6 முதல் 7 தம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும். கொத்துமல்லி நீர் அருந்தலாம். இஞ்சி, புதினா, நார்த்தை, எலுமிச்சையுடன் தேன் சேர்த்து அருந்தலாம்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
மாவுச்சத்து நிறைந்த பொருட்களான மைதா, சோளமாவு போன்றவற்றையும் அவற்றில் செய்த உணவுப்பொருட்களையும் தவிர்க்கவேண்டும். சோடா மாவு மற்றும் ஈஸ்ட் சேர்த்து செய்யப்பட்ட பேக்கரி பொருட்களான பிரெட், பிஸ்கட், கேக் வகைகளையும் பிற இனிப்பு வகைகளையும் தவிர்த்தால், பெருங்குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்கிருமிகள் காப்பாற்றப்படும். அதிக உப்பு சேர்த்த ஊறுகாய் வகைகள், வற்றல் மற்றும் இறைச்சி உணவுகளை உண்ணக்கூடாது.
வினிகர், சோடியம் பென்சோயேட், அஜினோ மோட்டோ, சிட்ரிக் அமிலம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்த்து பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட வற்றல் வகைகள், சாஸ் மற்றும் ஊறுகாய்களை அறவே தவிர்க்கவேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் சீராய்ப்புகளை ஏற்படுத்தி, மலச்சிக்கலுடன் மூலநோயை ஏற்படுத்திவிடும்.
தொகுப்பு : சுவாதி சாய்
மேலும் செய்திகள்
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள்
வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை!
கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!
எலும்பு முறிவு எப்படிக் கண்டறியலாம்... என்ன செய்யலாம்?
மகளிர் மனநலம் காப்போம்!
எலும்பு மஜ்ஜை தானம் யார் யாருக்கு வழங்கலாம்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி