டேஸ்டி அண்ட் ஹெல்தி சாலட்கள்!
2023-01-30@ 15:21:03

நன்றி குங்குமம் தோழி
ஸ்பெஷல் ஃப்ரூட் சாலட்
தேவையானவை
ஆப்பிள் - பாதியளவு
ஆரஞ்சு - பாதியளவு
புளிப்பில்லாத கறுப்புதிராட்சை - 100 கிராம்
வாழைப்பழம் - 1
தக்காளிப்பழம் - 2
சர்க்கரை - தேவைக்கேற்ப
தயிர் - 2 கிண்ணம்
ஏலத்தூள் - சிறிதளவு.
செய்முறை:
அனைத்துப் பழங்களையும் நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர், தோல் நீக்க வேண்டிய பழங்களை தோல் நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைப்பழத்தை தோலை நீக்கிவிட்டு சிறு சிறு வில்லைகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், அனைத்துப் பழங்களையும் ஒன்றாக கலந்து அதனுடன், சர்க்கரை, ஏலத்தூள் சேர்த்து கிளறவும். பின்னர், பரிமாறுவதற்கு முன்பு தயிர் சேர்த்து கலந்து பரிமாறவும். மிகவும் சுவையான மற்றும் டேஸ்டியான ப்ரூட் சால்ட் தயார்.
பலன்கள்: ஃபழங்களில் மிகக் குறைந்த அளவில் கொழுப்புச்சத்தும், அதிக அளவில் நார்ச்சத்தும் இருக்கிறது. இதனால் இதய நோய், உடல் பருமன், செரிமானக் குறைபாடு, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் நம் உடலுக்குள் அண்டவிடாது.
மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட்
தேவையானவை
கேரட் - சிறியது 1
தக்காளி - 1
பீட்ரூட் - சிறியது 1
பிஞ்சு வெள்ளரிக்காய் - 1
மாங்காய் - 1 துண்டு
பச்சை மிளகாய் - 3
தயிர் - 2 கிண்ணம்
உப்பு - தேவைக்கேற்ப
கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - சிறிதளவு.
தாளிக்க
கடுகு, உளுந்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - தேவைக்கேற்ப.
செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும் மிகப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, கடுகு, உளுந்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து நறுக்கி வைத்துள்ள காய்கறி கலவையில் அதை சேர்த்து, உப்பு சேர்த்து கிளறிவிடவும். இத்துடன் தயிர், மல்லித்தழை சேர்த்து சாப்பிட ஆரோக்கியமான மிக்ஸ்ட் வெஜிடபிள் சாலட் தயார்.
பலன்கள்: காய்கறிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.
இஞ்சி இனிப்பு சாலட்
தேவையானவை
இஞ்சி - 100 கிராம்
புளி - எலுமிச்சைப்பழ அளவு
வெல்லம் - அரை கிண்ணம்
காய்ந்த மிளகாய் - 8
நல்லெண்ணெய் - 75 மில்லிகிராம்
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி
செய்முறை:
இஞ்சியை தோல் சீவிவிட்டு நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தோல் சீவப்பட்ட இஞ்சியை மெல்லிய வட்ட வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்ததும், காய்ந்த மிளகாய், இஞ்சியை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் வதக்கிய கலவையுடன் புளி, உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
பின்னர், வாணலியில் மீதமுள்ள எண்ணெய்யை விட்டு கடுகு தாளித்து அதனுடன், அரைத்த இஞ்சி விழுதையும், வெல்லத்தையும் சேர்த்து கிளறி வெல்லம் கரைந்து பச்சை வாசனைப் போனதும் இறக்கிவிடவும். சுவையான இஞ்சி இனிப்பு சாலட் தயார்.பலன்கள்: இஞ்சியில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதை சாப்பிடுவதால் பல நோய்கள் குணமாகும். மறுபுறம், வைரஸ் தொற்றுகளையும் தடுக்கும்.
காலிஃப்ளவர் சாலட்
தேவையானவை:
காலிஃப்ளவர் - 1 கிண்ணம்
தயிர் - 1 கிண்ணம்
பச்சைமிளகாய் - 2
சீரகத்தூள் - சிறிதளவு
கடுகு - அரை தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவைக்கேற்ப
மல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
காலிஃப்ளவரை உதிர்த்து சிறிது சிறிதாக்கிக் கொண்டு, சுமார் பத்து நிமிடம் பூ முழ்கும் அளவு உப்பு கலந்த தண்ணீரில் வைத்திருந்து, பின்னர், வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து மிளகாயைவதக்கி வெந்த காலிஃப்ளவருடன் சேர்த்து உப்பு, சீரகத்தூள் கலக்கவும். இத்துடன் தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து பரிமாறலாம். வித்தியாசமான சுவையில் காலிஃப்ளவர் சாலட் தயார்.
பலன்கள்: காலிஃப்ளவர் கருவில் உள்ள குழந்தையின் மூளை, முதுகுத்தண்டு வளர்ச்சிக்கு உதவுகிறது. மூட்டு வலியை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் போன்றவை இருப்பதால் இதில் எதிர்ப்புசக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் இதயத்துக்கு பலம் கொடுக்கும்.
தொகுப்பு : மகாலட்சுமி சிவக்குமார், திருச்சி.
மேலும் செய்திகள்
சூட்டை தணிக்கும் நன்னாரி !
நலம் காக்கும் நவதானியங்கள்!
பலம் தரும் பண்ணைக் கீரை!
ஹெல்த்தி தோசைகள் 3
ஹெல்த்தி துவையல்கள் 5
மணக்கும் மஞ்சள் பூசணி சமையல்!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!
பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!
சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!