ங போல் வளை
2023-01-27@ 16:10:23

நன்றி குங்குமம் தோழி
யோகம் அறிவோம்!
இனிமை நிறைந்த உலகம் இருக்கு இதிலே உனக்கு கவலை எதற்கு?
நீண்ட நேர இரயில் பயணங்களில், நாம் அனைவருமே குறுகிய காலநட்பு ஒன்றை அடைவோம், அவ்வகை நட்பில் நடுவயதை தாண்டியவர்கள், ஒருவருக்கொருவர் சிறுபுன்னகையுடன் தொடங்கி நேரடியாக மூன்று விசயத்தை வழிநெடுக, பயணம் முடியும் வரை பேசிக் கொண்டே வருவதை கவனிக்கமுடியும், தங்களை பற்றிய அறிமுகங்கள், சினிமா அல்லது
அரசியல் , மற்றும் உடல்நலம்.
இப்படி ஒரு காட்சியை பயணங்களில் அடிக்கடி பார்த்திருப்போம். முறையே 45, 50, 60 வயதை ஒட்டிய மூவர் பேசத் தொடங்குகின்றனர், முதலாமவர்தான் கொண்டு வந்த உணவை திறந்து உண்டபடியே மற்றவர்களிடம், ‘ சுகர் லெவல் பார்டர்ல இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டார், இப்பல்லாம் இயற்கை விவசாய உணவுதான் எடுத்துக்குறேன், சீனியை தொடவே மாட்டேன், வாட்டர் தெரபி, வேகன்டயட், பேலியோ உணவுதிட்டம், இதுபோக, சித்த மருத்துவலேகியம் , கஷாயம், குளிகை, பத்தியம்ன்னு, ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை எதையாவது ஒன்றை எடுத்துக்கறேன். அறுபது எழுபது வயசுல வரவேண்டியது இப்பவே வந்துடுமோன்னு கவலை. அதனாலதான் ஒரு எச்சரிக்கை உணர்வு,’ ’என்று பரிதாபம் கலந்த தொனியில் சிரிக்கிறார்.
நடுவயது தாண்டிய இரண்டாமவர்,‘’ எனக்கும் அதே பிரச்னைதான்சார், இனிப்பு எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். ஆனால் ஆசைப்படி சாப்பிட்டு பத்து வருஷம் ஆச்சு, ஆனா இதுல ஒரு ஏமாற்று வேலை இருக்கு சார். நான் வாட்சப்பில் படிச்சேன். நவீன மருத்துவர்கள் பணம் காசுக்காக இப்படி சுகருன்னு சொல்லி நம்மள எல்லாம் பயமுறுத்துறாங்க, நம்பாதீங்கன்னு ஒரு ஹீலர்கூட சொன்னாரு. அவரு சொல்றதெல்லாம் சரியாதான் இருக்கு. ஆகவே நான் மருந்து மாத்திரை சாப்பிடறத போனவாரம் நிறுத்திட்டேன். இனி வீட்லயே குணப்படுத்திக்க சொல்லி குறிப்புகள் இருக்கற ஒரு புக் குடுத்துருக்காரு , அத தொடர்ந்து செஞ்ச மூணுமாசத்துல சுகர் குறைஞ்சுடுமாம்’’. என்று நவீன மருத்துவத்தின் குறைகளை பட்டியலிட ஆரம்பிப்பார்.
முதலாமவருக்கு அந்த குறிப்புகள் உள்ள புத்தகத்த பார்க்க வேண்டும் என மெல்லிய சபலம் தட்டியது. இப்போது அறுபது வயது மனிதர்‘’நம்ம கதையே வேற சார், அம்பது வயசுல சுகரு கூடிப் போய், ஒருநாள் கண்பார்வை மங்கி , மயக்கம் போட்டு விழுந்தேன். அன்றிலிருந்து இன்னைக்கு வரை இன்சுலின்ல தான் வண்டி ஓடுது. ஆனா நான் எதுக்கும் கவலைபடுறதில்ல. டயட்கோக் , கருப்பட்டி காபி ,சுகர் ப்ரீ மைசூர்பாக்குன்னு, ஒரு அயிட்டமும் விடறதில்ல, எக்ஸ்ட்ராவா ஒரு ஊசியை தொடைல குத்திக்கிட்டு, வேண்டியதை தின்னுடுவேன் என்று சிரித்தார். இந்த மூவரின் பேச்சு ஆரோக்யமான ஒருவருக்கு ஒருவகையில் அசூயையை உண்டாக்கும். சுகர் வந்து விட்டால் வாழ்க்கையே முடிந்துவிடும் போல என்கிற பயத்தை உருவாக்கும். ஆனால் நாம் இதுபோல பொதுவெளியில் பேசப்படுவதை கேட்டு , உடலும், மனதும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது நம் தனிப்பட்ட நலனுக்கு நல்லது.
இது போன்ற‘ரயில் பயண ஞானியரை,’வாட்சப் விஞ்ஞானிகளை’ , ‘கூகுள் அறிஞர்களை’கவனிப்பதற்கு பதிலாக இரண்டு விஷயங்களை கூர்ந்து நோக்கலாம். ஒன்று நம்முடைய உடலும் உள்ளமும் மூளையும் இணைந்து புரியும் சமரச உரையாடல். இந்த உடல் தொடர்ந்து நம்முடன் பேசிக் கொண்டேதான் இருக்கிறது. அதற்கு தேவையெல்லாம் குறைந்தபட்ச ஒழுக்கம் எனும் வாழ்க்கை முறை. அந்தந்த வயதிற்கு தகுந்த உடல் உழைப்பு, நல்ல தூக்கம் , சரியான செரிமானம். அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது மருத்துவ துறையின் { இந்திய / ஆங்கில } வல்லுநர்கள் சொல்லும் ஆதார பூர்வமான கருத்துக்கள்.
நவீன மருத்துவம் தான் நம்மை சர்க்கரை நோய் பற்றி பயமுறுத்துகிறது. என்று நினைக்க வேண்டாம். நமது ஆயுர்வேதமும் சர்க்கரை நோயை ‘பிரமேஹம்மஹாரோஹம் என்கிறது. அதாவது குணப்படுத்த முடியாத ஆபத்தான நோய்களில் ஒன்று என்கிறது. ஆகவே மருத்துவ துறையில் நடைபெறும் அன்றாட ஆய்வுகளையும் அவர்கள் சொல்வதையும் தான் நாம் கேட்க வேண்டும். நம்முடைய ஒவ்வொரு உடலுறுப்புக்கும் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது காலம் வரை ஆரோக்யத்துடன் செயல்படும் திறன் இருக்கிறது.
உதாரணமாக, மூட்டுப்பகுதி 65 வயது வரை ஆரோக்கியமாக இயங்க முடியும். ஆனால் மூட்டுப்பகுதியை சரியாக பயன்படுத்தாத ஒருவருக்கு அல்லது அதிகமாக பயன்படுத்திய ஒருவருக்கு 65 வயதில் வரவேண்டிய மூட்டுவலி 45 வயதில் வருமென்பதில் ஒரு சந்தேகமுமில்லை. அதுபோலவே , நமது கணையம் இன்சுலினை சரியாக சுரக்க இருபது வயதில் தொடங்கி படிப்படியாக மிகநல்ல ஆரோக்கியத்துடன் அறுபது வயது வரை முழுமையாக செயல்படும் திறனுடையது. ஆனால் மேலே சொன்ன உடற்பயிற்சி, உளச் சமநிலை, ஆரோக்யமான உணவுக் கொள்கை, இவற்றை சரியாக நிர்வகிக்க முடியாத ஒருவருக்கு நாற்பது வயதில் நீரிழிவு நோய் வருவதை தவிர்க்கவே முடியாது என்கிறது நவீன அறிவியலும் , நமது பாரம்பரிய மருத்துவமும்.
யோக மரபு இந்த மூன்று காரணிகளையும் கருத்தில் கொண்டே பெரும்பாலான பயிற்சிகளை வடிவமைத்துள்ளது. உடலுக்கும் உள்ளுறுப்புகளுக்கும் ஆசனப் பயிற்சிகள், உளச் சமநிலைக்கு தியானப் பயிற்சிகள், உணவுசார் ஆரோக்கியத்திற்கு ‘மிதஆகாரம் ‘எனும் கருத்து என ஒரு பரந்து பட்ட பாடத் திட்டத்தை கொண்டுள்ளது. ஒரு யோக சாதகனுக்கு இனிப்பு பண்டம் என்பது சத்வகுணத்தை மேம்படுத்தும் உணவாக, யோக பாடத்திட்டம் கருதுவதால், எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள் அதை செரிமானம் செய்து ஆற்றலாக மாற்றிக் கொள்ளக் கூடிய ஒரு சரியான பயிற்சி திட்டத்தை மேற்கொள்ளுங்கள், இனிப்பு என்பது தவிர்க்கப்பட வேண்டிய, பயப்பட வேண்டிய ஒன்றல்ல. இனிமை நிறைந்த ஒன்றில் வாழ்நாளெல்லாம் திளைக்க ஒருவர் அச்சப்படவோ, குற்ற உணர்வு கொள்ளவோ தேவையில்லை. சாதனாமார்க்கம் ஒருவரை அனைத்திற்கும் தயாராக்கும். இனிமை நிறைந்த உலகுக்கும் தான்.
ஒன்றுடன் வாழ்நாள் முழுவதும் போராடிக் கொண்டே இருப்பதைவிட, அதை ஆளும் ஒன்றை ஆற்றல்மிக்க ஒன்றாக மாற்றுவதையே யோக முறைமை முன் வைக்கிறது. இன்சுலின் சுரக்கவில்லையே என போராடிக் கொண்டிருப்பதை விட, கணையத்தை வலுப்பெற செய்யக்கூடிய ஒரு பயிற்சி திட்டத்தை மரபுவழி யோகம் மூன்று மாதத்திட்டம் ஒன்றை வைத்திருக்கிறது. அதிலிருந்து ஒரு பயிற்சியை இந்தப் பகுதியில் காணலாம்.
புஜங்காசனம்
புஜங்காசனம் எனும் இந்த பயிற்சி நேரடியாக வயிற்றுப்பகுதி மற்றும் கணையம் சார்ந்த பகுதிகளை வலுப்பெற செய்து, அவரவர் வயதிற்கு தகுந்த உடல் ஆரோக்கியம் மற்றும் சுரப்பிகளை தூண்ட வைப்பதில் முக்கியமான ஒன்று. இந்த பயிற்சிக்கு, தரையில் விரிப்பின் மீது குப்புறப்படுத்த நிலையில் இரு கைகளையும் தோள்பட்டை அல்லது நெஞ்சுப்பகுதியின் அருகில் வைத்து , நெற்றியை தரையில் தொடுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூச்சு உள்ளே வரும்பொழுது கைகளின் உதவியால் உடலை மேல்நோக்கி உந்தி தூக்க வேண்டும். மூச்சு வெளியே செல்லும்பொழுது நெற்றி மீண்டும் தரையை தொடுமாறு வைத்துவிட வேண்டும். பத்து முறை ஒருவர் முயற்சி செய்து பார்க்கலாம்.
Tags:
ங போல் வளைமேலும் செய்திகள்
வாய் துர்நாற்றம் போக்க எளிய வழிகள்!
நாவின் ஆரோக்கியம்!
60+ வயதினர்… ஹெல்த் கைடு
ங போல் வளை-யோகம் அறிவோம்!
பீட்ரூட் ஜூஸின் நன்மைகள்!
உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜப்பான் இளம் வீரர் ஹசேகாவா..!!
அமெரிக்காவில் சாக்லெட் தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து; 7 பேர் உயிரிழப்பு..!!
வேரோடு சாய்ந்த மரங்கள், தூக்கி வீசப்பட்ட கார்கள்... அமெரிக்காவை புரட்டிப் போட்ட சக்திவாய்ந்த சூறாவளி சூறாவளி... 25 பேர் பலி..!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்