ப்ரீ-டயாபடீஸ்... தடுக்க... தவிர்க்க!
2023-01-27@ 15:50:32

நன்றி குங்குமம் தோழி
இந்திய மக்கள் தொகையில் 14% பேருக்கு ப்ரீ-டயாபடீஸ் இருப்பதாக தேசிய நகர்ப்புற சர்க்கரை நோய் அமைப்பின் ஆய்வு எச்சரித்துள்ளது. மேலும், உலகளவில் 88 மில்லியன் ப்ரீ-டயாபடீஸ் நோயாளிகளில், 77 மில்லியன் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். ப்ரீ-டயாபடீஸ் நோய் என்பது தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் 8.9% மிகவும் பரவலான நோயாக இருக்கிறது. ப்ரீ-டயாபடீஸ் உள்ள நோயாளிகள் மற்றவர்களை விட முன்கூட்டியே நோயினால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் ஏற்படும் மொத்த இறப்புகளில் சுமார் 2% ப்ரீ-டயாபடீஸ் காரணமாக ஏற்படுகிறது என்று உலக சுகாதார மையம் (WHO) தெரிவித்துள்ளது என்கிறார் மருத்துவர் சந்தன் செளத்ரி. ப்ரீ - டயாபடீஸ் குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:
“ப்ரீ-டயாபடீஸ் என்பது சர்க்கரை நோயின் ஆரம்ப நிலையாகும். அதாவது, ஒருவருக்கு இயல்பைவிட ரத்த சர்க்கரை அளவு சற்று அதிகமாக இருப்பது. ஆனால் டைப் 2 சர்க்கரை நோயின் அளவைவிட ரத்த சர்க்கரை அளவு சற்று குறைவாக இருக்கும். இதைத்தான் ப்ரீ - டயாபடீஸ் என்று சொல்கிறோம். விரிவாக சொல்ல வேண்டும் என்றால் நமது உடல் சீராக இயங்குவதற்கு, நமது உடலில் உள்ள கணையம் தேவையான இன்சுலினை சுரக்கிறது.
இது அனைத்து உடல் செல்களிலும் சர்க்கரையை விநியோகிக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் போது, இன்சுலின் சுரப்பு குறைந்துவிடுகிறது. இது இறுதியில் கணையத்தின் செயல்பாட்டைக் குறைத்து, சர்க்கரை நோயை உருவாக்குகிறது. இது ஒருவரின் வாழ்க்கைமுறையைப் பொருத்தே ஏற்படுகிறது. உதாரணமாக, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபணு இயல்புகள் சர்க்கரை நோய்க்கான முக்கியக் காரணிகளாக இருக்கிறது. ஆனால், ப்ரீ-டயாபடீஸ்க்கான முதன்மைக் காரணம் இன்னும் அறியப்படவில்லை.
சர்க்கரை நோய் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களையும், நடுத்தர வயதினரையுமே பாதித்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, இந்திய மக்கள்தொகையில் 14 % ப்ரீ-டயாபடீஸ் மொத்த பரவல் விகிதத்தில், சுமார் 8.4% இளம் பருவத்தினர் மற்றும் முதியவர்களிடையே உள்ளது. இதற்கு காரணம், உடல் பருமன், மரபணு மற்றும் வளர்சிதை மாற்றங்களாகும். ஏனென்றால், குறைந்த உடல் உழைப்பு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், ஜங்க் ஃபுட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வது, இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவது மற்றும் போதைப்பொருட்களின் துஷ்பிரயோகம் ஆகியவையே இளைஞர்களுக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீ- டயாபடீஸ் ஏற்பட காரணமாகும்.
ப்ரீ-டயாபடீஸ், சர்க்கரை நோயாக மாறுவது தவிர்க்க முடியாதது என்பதால், ப்ரீ- டயாபடீஸின் அறிகுறிகள் தென்பட்டதுமே, முறையான சிகிச்சை எடுத்துக் கொண்டால், இந்நோயை போக்கவும் தடுக்கவும் உதவும். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் அறிகுறியற்றதாகவே உள்ளது. அதுதான் இங்கு பெரும் சாவாலாகவும் உள்ளது. எனவே, ஆரம்ப அறிகுறிகளான, அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வது, குறிப்பாக இரவில்; சோர்வு, திடீர் எடை இழப்பு, பிறப்புறுப்பு அரிப்பு, வெட்டுக்கள் மற்றும் காயங்கள் குணமடைய அதிக நாட்கள் எடுத்துக் கொள்வது, மங்கலான பார்வை, மிகவும் தாகமாக உணர்தல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் கவனித்தால் அல்லது ப்ரீ-டயாபடீஸாக இருக்குமோ என்று தோன்றினால், உடனே உங்கள் மருத்துவரை அணுகி ரத்த பரிசோதனையை மேற்கொள்ளவும்.
இதற்கு, மிகவும் பொதுவான சோதனையானது ஒருவரது HbA1c அளவைச் சரிபார்ப்பதாகும். அதாவது கடந்த இரண்டு முதல் மூன்று மாதங்களில் ஒருவரது சராசரி ரத்த குளுக்கோஸ் (சர்க்கரை) அளவுகள் பரிசோதிக்கப்படும். இதில், ப்ரீ - டயாபடீஸ் இருப்பது உறுதியானால், உரிய சிகிச்சைகளுடன் ஆரோக்கியமானதாக வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டாலே, விரைவில் ப்ரீ - டயாபடீஸில் இருந்து விரைவில் விடுபட்டு விடலாம்.
அதே சமயம் இதனை அலட்சியப்படுத்தினால், ப்ரீ-டயாபடீஸின் அதிக சர்க்கரை அளவு மற்ற உறுப்புகளையும் சேதப்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒன்று சிறுநீரகம். ப்ரீ-டயாபடீஸ் தொடர்ந்து இருக்கும்போது, சிறுநீரக செயல்பாட்டை பாதிக்கலாம். இதனால் நாள்பட்ட சிறுநீரக நோய் (CKD) ஏற்படலாம். இதற்கு காரணம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால், இருதயம் சம்பந்தபட்ட நோய்கள், அதிக எடை மற்றும் நீண்ட நேரம் அமர்ந்தபடியே வேலைபார்ப்பது போன்றவைகளாகும்.
ப்ரீ-டயாபடீஸ் மற்றும் சிறுநீரக நோய் இரண்டும் சேர்த்து முதியவர்களுக்கே அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், சமீப காலமாக, இந்தியாவில் ப்ரீ-டயாபடீஸ் பாதிப்பின் அறிகுறிகளை உணராத இளம் வயதினரும் அதிகளவில் சிறுநீரக பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
ப்ரீ-டயாபட்டீஸிலிருந்து விடுபடும் வழிகள்…
மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் தென்பட்டால், முதலில், உயர் ரத்தஅழுத்தம் மற்றும் நீரிழிவு போன்றவற்றை பரிசோதித்துக் கொள்ளவும். பின்னர், சிறுநீரக பாதிப்பு ஏதேனும் இருக்கிறதா என்பதையும் கண்டறிந்து, ஏதேனும் சந்தேகமிருப்பின், சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். ஒருவேளை சிறுநீரகங்கள் செயலிழந்தால் டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான ஆலோசனைகளையும் எடுத்துக் கொள்வது அவசியமாகும்.
பொதுவாக, உலக மக்கள்தொகையில், சர்வதேச நீரிழிவு அறக்கட்டளை ஆய்வின்படி, 80 மில்லியன் பேர் நீரிழிவு நோயுடன் வாழ்கின்றனர். இது 2045ஆம் ஆண்டில் 130 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே, ப்ரீ- டயாபடீஸ் குறித்து மக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது நல்ல பலனைத் தரும். சர்க்கரையின் ஆரம்ப நிலையான ப்ரீ-டயாபடீஸ் நோய் மீளக்கூடியதுதான் என்றாலும், சிறுவயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தேர்வு செய்துகொள்வது அவசியம். அந்தவகையில், உணவில் - பீன்ஸ், பருப்பு வகைகள், முழு தானியங்கள் மற்றும் பருவகால பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும், அதிகளவில் கார்போஹைட்ரேட் மற்றும் இனிப்புகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும், ஒரே நேரத்தில் அதிகளவு சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, நாள் முழுவதும் குறிப்பிட்ட கால இடைவெளியில் கொஞ்சம், கொஞ்சமாக உணவுகளை பிரித்து உட்கொள்ளலாம். இது நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். மற்றும் நேரம் தவறி சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும், தினசரி வழக்கத்தில் 30-40 நிமிடங்கள் ஏதேனும் ஒரு உடற்பயிற்சியை மேற் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஸ்கிப்பிங், ஜூம்பா, ஓட்டம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது ப்ரீ- டயாபடீஸில் மட்டுமில்லாமல், சர்க்கரை நோயிலிருந்தும் மீள வழி வகுக்கும்” என்றார்.
தொகுப்பு : ஜாய் சங்கீதா
மேலும் செய்திகள்
ரிஸ்க் தரும் டிஸ்க் பல்ஜ்... எச்சரிக்கையாய் இருந்தால் எளிதில் வெல்லலாம்!
ங போல் வளை-யோகம் அறிவோம்!
கவுன்சலிங் ரூம்-மருத்துவப் பேராசிரியர் முத்தையா
கண்ணைக் கட்டிக்கொள்ளாதே-மூடிய இமைகள் சொல்லும் ரகசியங்கள்
வைட்டமின் குறைபாடுகள் ஒரு பார்வை!
கத்தியின்றி ரத்தமின்றி அசத்தும் இயன்முறை மருத்துவம்!
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!