SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சர்க்கரையை வெல்ல புதிய சிகிச்சை!

2022-12-15@ 15:23:59

நன்றி குங்குமம் டாக்டர்

ரீவர்ஸல் ட்ரீட்மெண்ட்


முந்தைய காலங்களில்  சர்க்கரைநோய்  என்பது பணக்காரர்களின் நோயாக கருதப்பட்டது.  ஆனால், காலசூழலும் உணவுப் பழக்கங்களும் மாறச் மாற வீட்டுக்கு ஒருவருக்கு  சர்க்கரை நோய் வரத் தொடங்கியது. அதிலும், தற்போது வீட்டு வாசலுக்கே உணவுகள் வரத் தொடங்கியதிலிருந்து 20 வயதுக்கு  குறைவானவர்களும் சர்க்கரை நோயால் பாதிக்கத் தொடங்கிவிட்டனர். இப்படி வீட்டுக்குவீடு சர்க்கரைநோய் வந்துவிட்டாலும், அந்நோயின் பாதிப்பு  குறித்த விழிப்புணர்வு இன்று வரை மக்களுக்கு ஏற்படவில்லை என்பதுதான் நிதர்சனம்.

கலிபோர்னியா மற்றும் சென்னையை அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும்  நிறுவனமான ட்வின் ஹெல்த், ’Whole Body Twin’ என்னும் டயாபடீஸ் ரீவர்ஸ் என்ற  தொழில்நுட்பத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளனர். இந்தத்  தொழில்நுட்பத்தின் மூலம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் (Type 2 diabetes), உயர் ரத்த அழுத்தம் போன்ற உடல் பிரச்னைகள் பலவற்றைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட  முடியும் என்று கூறுகின்றனர்.  இதுகுறித்து,  இதன் இயக்குநர், டாக்டர் மாலுக் மொஹமெத்  நம்முடன்  பகிர்ந்து கொண்டவை:

ரீவர்ஸல் சிகிச்சை  என்பது என்ன?


சர்க்கரை  நோயில் எச். பி.ஏ.ஒன்.சி. என்று இருக்கிறது. இது என்ன வென்றால்,  மூன்று மாத ரத்த சர்க்கரையின் பாதியளவைக் குறிப்பது.  இந்த எச்.பி.ஏ.ஒன்.சி. என்பது இது 6.4க்கு மேல் இருந்தால்  சர்க்கரை  இருப்பதாகக்  கருதப்படும். கண்டிப்பாக  மாத்திரை  எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவே, 5.7 இலிருந்து  6.4 க்குள் இருந்தால்,  இதனை ப்ரீ டயாபடீஸ் என்று கூறப்படும். இந்த ப்ரீ டயாபடீஸ்  என்பது சர்க்கரை நோய்க்கான முந்தைய கட்டமாகும். இந்தக் கட்டத்தில் சற்று கவனமாக  இருந்து, உடற்பயிற்சியெல்லாம்  செய்து வந்தால் சர்க்கரை நோய்க்குள் போகமாட்டார்கள்.

ஆனால், அந்த நிலையில்  இருக்கும்போது  யாரும் அதில் பெரிதாகக்  கவனம்  செலுத்தாமல், டயாப்ூஸுக்குள் போய் விடுகிறார்கள். அப்படி சர்க்கரை வந்துவிட்டால் மாத்திரை எடுத்தாக வேண்டும்.  ஒருமுறை மாத்திரை எடுக்கத் தொடங்கிவிட்டால்,  அதன்பிறகு ஒருவரது  வாழ்நாள்  வரை  அவர்  மாத்திரையுடன் தான்  வாழ்ந்தாக வேண்டும்.   அதுமட்டுமில்லாமல்  அவர்கள்  அடுத்தகட்டமாக  இன்சுலின்  வரை  போக நேரிடுகிறது. இதுதான் இன்றைய நிலை.ஆனால், நாங்கள்  ரீவர்ஸல்  மூலம் என்ன செய்கிறோம் என்றால்,  சர்க்கரையின் எச்.பி.ஏ.ஒன்.சியின் அளவை  மாத்திரை,  மருந்து  எதுவும் இல்லாமல் 6க்கு மேல்  அதிகரிக்க விடாமல்  பார்த்துக்கொள்கிறோம். இதுதான்  ரீவர்ஸல்.  
பொதுவாக,  நோயைக்  குணப்படுத்தாமல்,  அறிகுறிகளை மட்டும்  சரி செய்தால்  அது முறையான  தீர்வாகாது.  ஆனால், இன்று  பெரும்பாலானோர்  அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இதில்  எங்களுடைய பங்கு  என்னவென்றால்,  நாங்கள்  நோயைச்  சரி செய்யப் பார்க்கிறோம். அதற்கு அடிப்படையாக,  பழுதுபட்ட மெட்டபாலிஸத்தை  சரி செய்கிறோம். ஒருவருக்கு உடலில் உள்ள மெட்டபாலிசம்  சீராகிவிட்டாலே, சர்க்கரை நார்மல் ஆகிவிடும். மாத்திரை மருந்துகள் தேவைப்படாது.  

மேலும், உடலில் உள்ள மற்ற  க்ரோனிக்கல்  நோய்களான  அதிகரித்த எடை, உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்பு போன்றவையும் நார்மலாகும். அடுத்தபடியாக  உடல் உறுப்புகள்  சீராகும். இதன்மூலம்  பீட்டா  செல்கள் புத்துயிர் பெறும். பீட்டா செல்கள்  புத்துயிர் பெற்று நார்மலாகிவிட்டாலே உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் சரியாகிவிடும். இதைத்தான்  நாங்கள் செய்கிறோம்.  இதற்கு  ஒரு  வருட கால அளவை  நாங்கள்  எடுத்துக் கொள்கிறோம்.  இதுதான்  ரீவர்ஸல்.

எந்தெந்த நோய்களுக்கு ரீவர்ஸல் செய்ய முடியும்?  


ப்ரீ டயாபடீஸ், டயாபடீஸ், உடல் பருமன், ஃபேட்டி லீவர்,  கொலஸ்ட்ரால், ஹைபர் டென்ஷன், பிசிஓஎஸ் போன்றவற்றினை ரீவர்ஸல் செய்ய முடியும்.   இதில் குறிப்பாக  சொல்ல வேண்டும்  என்றால்  இந்த  ரீவர்ஸல்  சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது,  குழந்தையின்மை  பிரச்னை சரியாவதையும், யானைக்கால்  நோய்  சரியாவதையும்கூட நாங்கள்  கண்கூடாகப் பார்க்கிறோம்.  

ரீவர்ஸலின் சிகிச்சை முறை என்ன?

ரீவர்ஸல்  சிகிச்சைக்காக ஒருவர் வரும்போது முதலில் அவருக்கு சென்ஸார்  மூலம்  அவருடைய நகலை (ட்வின்)  உருவாக்குகிறோம். பின்னர்  சென்சார் மூலம் அவரது  உடல்  தொடர்ந்து பரிசோதிக்கப்படும். உதாரணமாக,  உறக்கம், உடல் இயக்கம், உணவுப் பழக்கம் போன்றவை கண்காணிக்கப்படும். பின் அவரது உடலுக்கு ஏற்றவாறு  என்ன சாப்பிட வேண்டும்,  எந்த மாதிரியான உடற்பயிற்சி செய்யலாம், உறக்க நேரம் போன்றவற்றை Whole Body Twin பரிந்துரைக்கும். இதனோடு ஒவ்வொருவருக்கும்  உடற்பயிற்சிகளை பரிந்துரைக்க ஒரு கோச்சும், அவ்வப்போது ஆலோசனைகள் வழங்க ஒரு மருத்துவரும் உடன் இருப்பார்கள்.

உதாரணமாக, ஒரு வீட்டில்  அம்மா, அப்பா  இருவருக்கும் சர்க்கரை நோய் ஏற்பட்டால் அம்மாவுக்குச் சோறு சாப்பிட்டால் எதுவும் ஆகாது. ஆனால் அப்பாவுக்குச் சோறு சாப்பிட்டால் சர்க்கரை எகிரும். இது போன்ற பிரச்னைகளில், அவர் உணவுப் பழக்கம் கண்காணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப அவருக்கு உணவுப் பரிந்துரை வழங்கப்பட்டு, சர்க்கரை நோய் கட்டுக்குள் கொண்டு
வரப்படும்.

இந்த சிகிச்சை முறையை எவ்வளவுநாள்  மேற்கொள்ள வேண்டும்?


ஒருவரின் உடல்நிலையும், அவரது  நோயின்  தீவிரம் பொருத்தும் எவ்வளவு நாள் தேவைப்படும் என்பது  கணக்கிடப்படும்.  உதாரணமாக எங்களிடம் சிகிச்சை பெற்ற  70 சதவிதம்  பேருக்கு (இன்சுலின் எடுத்துவருபவர்கள் உள்பட) குறைந்தபட்சம் 45 நாளுக்குள்ளாகவே சர்க்கரை கட்டுக்குள் வந்துவிட்டது. 20 சதவிதம் பேருக்கு  90 -120 நாட்கள்  தேவைப்பட்டது. 10 சதவிதம் பேருக்கு  ஓர் ஆண்டை  கடந்தும்  சிகிச்சையில்  உள்ளனர். அதனால்,  அவரவர்  உடல் தன்மைக்கும், அவர்  சிகிச்சை முறையை கடைப்பிடிக்கும் விதம் பொருத்தும்தான் எவ்வளவு நாள் தேவைப்படுகிறது  என்று சொல்ல முடியும்.

ரீவர்ஸல் முறையில் சர்க்கரையை முற்றிலும்  குணப்படுத்திவிட முடியுமா?

5 வருடங்கள்  வரை  இந்த  ரீவர்ஸல் சிகிச்சை முறையைத்  தொடர்ந்து வந்தால், சர்க்கரையில் இருந்து நிச்சயம் விடுபட முடியும்.  அதற்கான  சோதனை முயற்சிகளில்தான்  நாங்களும்  தற்போது இருக்கிறோம். சர்க்கரை  ரீவர்ஸல் செய்துவிட முடியும் என்பதை நாங்கள்  உறுதி அளிக்கிறோம். அதேசமயம், முற்றிலும்  குணப்படுத்திவிட முடியுமா என்றால் இன்னும் சில ஆண்டுகள் கழித்துதான்  அதை உறுதியாக கூறமுடியும்.  

ஏனென்றால், எங்கள் சோதனையின் முடிவில்தான் அதை கூறமுடியும்.  மேலும், இதில்  ஒரு விஷயம் எடுத்துக்கொண்டால்  இது புதிய தொழில் நுட்பம் கிடையாது. நவீன மருத்துவமும் கிடையாது. உணவு முறை மாற்றமும் கிடையாது.  இது எல்லாம் கலந்த  கலவை அவ்வளவுதான்.  அதைத்தான் தற்போது மக்களுக்கு  புரிய வைக்கிறோம். உரிய முறையில்  பயிற்சியும் முயற்சியும்  எடுத்தால்  நிச்சயம்  சர்க்கரையை ரீவர்ஸ்  செய்துவிட முடியும் என்றார்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • freddie-cyclone

  மலாவி, மொசாம்பிக், மடகாஸ்கர் ஆகிய நாடுகளில் ஃப்ரெடி புயலால் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.!!

 • patrick-day-1

  அயர்லாந்தில் புனித பாட்ரிக் தினத்தை ஆடல், பாடலுடன் கொண்டாடிய மக்களின் புகைப்படங்கள்..!!

 • france-123

  பிரான்ஸில் ஓய்வூதிய சீர்திருத்தத் திட்டத்திற்கான போராட்டத்தில் வன்முறை: சாலைகளில் வாகனங்களை தீயிட்டு கொளுத்தியதால் பதற்றம்..!!

 • sydney-world-record

  புதிய உலக சாதனை: சிட்னியில் 40 மணி நேரத்திற்கு மேல் அலைச்சறுக்கு செய்து வீரர் அசத்தல்

 • padmavathi-kumbabhishekam-17

  சென்னை பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்.. .சாரல் மழையில் கண் குளிர தரிசனம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்