SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உடல் பருமனும் சர்க்கரை நோயும்!

2022-11-16@ 15:40:55

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபகாலமாக,  தலைவலி, காய்ச்சல் போன்று  பொதுவான நோயாக  சர்க்கரை நோயும் உருவாகிவிட்டது. அதிலும் குறிப்பாக, சமீபத்திய ஆய்வுகளின்படி குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய்  கண்டறியப்படுகிறது. இதற்கு உடல் பருமனும், உணவுமுறை மாற்றங்களுமே காரணமாக கூறப்படுகிறது. எனவே,  உடல்  பருமனுக்கும், சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள்  என்னவென்று விளக்குகிறார்  மருத்துவர் வி.அஸ்வின் கருப்பன்.

உடல் பருமனுக்கும் சர்க்கரை நோய்க்கும் உள்ள தொடர்பு என்ன?


சர்க்கரை நோயும் உடல் பருமனும் இரட்டையர் போன்றது. சர்க்கரை வந்தால் உடல் பருமன் வந்துவிடும். உடல் பருமன் வந்தால், சர்க்கரை வந்துவிடும். பொதுவாக, உடல் எடை அதிகரிக்கும்போது, சர்க்கரை நோய் மட்டுமில்லாமல், மற்ற உறுப்புகளும் பாதிக்கிறது. உதாரணமாக, இருதயம், கிட்னி, மூளை ஸ்ட்ரோக், கொழுப்பு, ரத்த கொதிப்பு போன்றவை எல்லாமே இலவச இணைப்பாக வந்துவிடுகிறது. இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணமாக அமைவது உடல் பருமன்தான்.

மற்றொருபுறம் இன்சுலின் உள்பட சர்க்கரை நோய்க்காக எடுத்துக் கொள்ளும் மருந்துகளாலும் உடல் பருமன் வருகிறது. அதிலும் சர்க்கரை நோய் இருப்பவர்கள் நடைப்பயிற்சி செய்யாமல் இருந்தால், உடல் பருமன் அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.  இதனை கருத்தில் கொண்டுதான் தற்போது புது வகையான மருந்து மாத்திரைகள் மற்றும் ஊசியை அறிமுகம் செய்துள்ளனர். இந்த மாத்திரைகளும் ஊசியும் சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதோடு, உடல் பருமனையும் தடுக்கிறது.

இவற்றில் தினசரி எடுத்துக் கொள்வதும் இருக்கிறது. வாரத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்வதும் இருக்கிறது. இந்தவகையான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது உடல் எடை 19- 22 கிலோ வரை குறைகிறது. இதன் மூலம் சர்க்கரையும் ரீவர்ஸாக வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் மற்ற நோய்களும் குறைய வாய்ப்பு இருக்கிறது. இதனால், சர்க்கரை நோயைப் பொருத்தவரை இன்றைய மருத்துவ உலகில் இந்த மருந்து வகைகளைப் பற்றிதான் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

பரம்பரையாக இருக்கும் எல்லா உடல்பருமனை குறைப்பது என்பது சற்று கடினம்தான். அதேசமயம், உடல் பருமனால் வரக்கூடிய சர்க்கரை நோய் அதாவது, இன்றைய சூழலில் ஜங்க் புட் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்யாதது, 8 மணி நேரம் சரியான தூக்கம் இல்லாமல் உழைப்பது போன்றவற்றினாலும் சர்க்கரை வருகிறது. இதுபோன்ற சர்க்கரையை முற்றிலும் நம்மால் தடுக்க முடியும். அதற்காகவே இன்றைய நவீன தொழில்நுட்பங்களும், மருந்து வகைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உடல் பருமனால் ஏற்படும் சர்க்கரை நோயிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?

சர்க்கரை நோயைப் பொருத்தவரை உடல் எடை அதிகமுள்ளவர்கள் தங்களது உடல் எடையை குறைத்தாலே சுகர் ரீவர்ஸ் ஆகிவிடும். இதை அடிப்படையாகக் கொண்டுதான் சமீபகாலமாக, ரீவர்ஸல் ஆஃப் டயபடீஸ் என்று சொல்லி, சர்க்கரையில் இருந்து நிரந்தரமாக வெளியே வந்துவிடலாம் என்று சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. பயிற்சிகள் நிறுத்தப்பட்டு மீண்டும் உடல் எடை கூடினால், மீண்டும் சர்க்கரை நோய் அதிகரித்துவிடும். எனவே, ரீவர்ஸ் வைத்தியம் என்பது தற்காலிக சிகிச்சைதான்.

ஏனென்றால், ஒருமுறை சர்க்கரை வந்துவிட்டால் அதனை முற்றிலும் குணமாக்கிவிடலாம் என்பது முடியாது. சரியான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் அவ்வளவு தான். எனவே, தொடர்ந்து முறையான சிகிச்சையும், உடற்பயிற்சியும் செய்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதே தற்காத்துக் கொள்ளும் வழிகளாகும்.
உடல் பருமனாக காணப்படும் குழந்தைகளுக்கும் சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உண்டா?

இன்றைய குழந்தைகளில் பெரும்பாலும் உடல் பருமனாகத்தான் இருக்கிறார்கள். இதனால் மேலை நாடுகளைப் போல, நமது நாட்டிலும் தற்போது பல பள்ளிகளில் குழந்தைகளுக்கு சர்க்கரை இருக்கிறதா என்று ஸ்கீரினிங் செய்யப்படுகிறது. குழந்தைகளுக்கு உடல் பருமன் வருவதற்கு காரணம், அவர்கள் வெளியே சென்று விளையாடுவது கிடையாது. ஆன் லைன் வகுப்புகள், ஹோம் கிளாஸ் என்று குழந்தைகள் ஒருவித அழுத்தத்திற்கு ஆளாவது.

மேலும், ஜங்க் புட் எல்லாம் கைக்கு எட்டும் தொலைவில் வீட்டு வாசலுக்கே வந்துவிடுவது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, இன்றைய இளம் பெற்றோருக்கு குழந்தைகள் மீதான அக்கறையும், கவனமும் குறைந்து வருவது போன்றவற்றால்தான் குழந்தைகளுக்கு உடல் பருமன் வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரத்த கொதிப்பு, இருதய நோய் போன்றவையும் இந்த இளம் வயதிலேயே அதிகரித்து வருகிறது.

 இதிலிருந்து குழந்தைகளை காப்பதற்கு, நமது முன்னோர்கள் நமக்கு என்ன சொல்லி தந்தார்களோ, அதை நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லித் தர வேண்டும். அந்தவகையில், சத்தான உணவு எது நல்ல தூக்கம், உடல் உழைப்பு போன்றவற்றை கற்றுத் தர வேண்டும். மேலும், குழந்தைகளை வெளிப்புற விளையாட்டு பயிற்சிகளில் ஈடுபட செய்ய வேண்டும். ஆன் லைன் கிளாஸ், செல்போனில் வீடியோ பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றை தடுக்க வேண்டும்.

அதுபோன்று குழந்தைகள் கட்டாயமாக 6- 8 மணி நேரம் தூங்க வேண்டும். தூங்கினால்தான் அவர்கள் உடல் நார்மலாக இருக்கும். இதையெல்லாம் அவர்களுக்கு புரிய வைத்து, ஒழுங்குமுறையான வாழ்க்கை முறையை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அதற்கு தகுந்தபடி பழக்கப்படுத்த வேண்டும்.

டயபடீஸ் ரீவர்ஸல் சிகிச்சை


 சர்க்கரைக்கு ரீவர்ஸல் என்பது என்னைப் பொருத்தவரை ஒரு மாயைதான். உண்மையாக சொல்ல வேண்டும் என்றால், டயபடீஸை ரீவர்ஸ் பண்ண முடியாது. ரெமிஷன் தான் செய்ய முடியும். சிலர் ரீவர்ஸல் என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்கள். ரீவர்ஸல் என்றால் நிரந்தரமாக சர்க்கரை இனி வராது என்று. அது அப்படியில்லை. அது தற்காலிகம்தான்.

அதாவது ஒருவர், உட்கொள்ளும் உணவுகளாலும் உடல் உழைப்பினாலும் அவரது உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் போதுமான அளவில் இருக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. அதுவே, உடல் எடை கூடும்போது, இன்சுலின் சுரப்பு குறைகிறது. எனவே, ரீவர்ஸல் புரோகிராமின் அடிப்படை தத்துவமே, அதிகமாக இருக்கும் உடல் எடையை 15 கிலோ வரை முதலில் குறைப்பதுதான்.

பின்னர், டயட் சார்ட் கொடுத்துவிடுவார்கள். அதில் உள்ளதுபோன்று தினசரி மூன்றுவேளையும் டயட் மெயின்டன் பண்ண வேண்டும். பின்னர், உடற்பயிற்சிகளை வொர்கவுட் செய்ய வேண்டும். இவற்றை எல்லாம் செல்போன் ஆப் மூலம் பதிவேற்றி கண்காணிப்பார்கள். அதற்கு பயந்து சிலர் டயட் சார்ட்டை பின்பற்றுவார்கள் அவ்வளவுதான். இந்த வழிமுறையை ஒவ்வொருவரும் தானாகவே செய்து உடல் எடையை குறைத்தாலே, நிச்சயம் சர்க்கரை கட்டுக்குள் வந்துவிடும்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • erode-dmk-votes-2

  அனல் பறக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம்: திமுக அமைச்சர்கள் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு..!!

 • scotland-bonfire-festival

  ஸ்காட்லாந்தில் பாரம்பரிய நெருப்புத் திருவிழா கோலாகலம்: முதல் முறையாக தீப்பந்தம் ஏந்தியவாறு பேரணி

 • stalin-corp-31

  மழை, வெள்ள காலங்களில் சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

 • long-whale-newyork

  35 அடி நீளம்: நியூயார்க் ரிடோ கடற்கரையில் இறந்தநிலையில் கரை ஒதுங்கிய பிரமாண்ட திமிங்கலம்

 • pak-blast-30

  பாகிஸ்தான் மசூதியில் பயங்கர குண்டுவெடிப்பு!: 28 பேர் உடல் சிதறி பலி, 150 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்