SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

O2 நமக்கு மட்டுமல்ல... நம் குழந்தைக்கும் தேவை!

2022-10-07@ 14:43:48

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் நம் ‘சுட்டி ஸ்டார்’ ரித்விக் நடித்த O2 திரைப்படத்தை அனைவரும் பார்த்திருப்போம். அதற்கு முன்னரும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஆக்சிஜன் அவசியத்தை நன்றாகவே அறிந்திருப்போம். நாம் உயிர் வாழ முதல் முக்கியமான ஒன்று பிராண வாயு. இது பெரியவர்களுக்கு மட்டுமில்லை, வயிற்றில் வளரும் சிசுவுக்கும் மிக அவசியமானது. பிரசவ நேரத்திற்கு முன்பும் சரி, பிரசவத்தின் போதும் சரி, குழந்தைக்கு ஆக்சிஜன் இல்லையெனில் பெரும் ஆபத்துகள் விளையும். அவ்வாறு விளையக்கூடிய ஆபத்துகள் என்னென்ன? அதில் இயன்முறை மருத்துவரின் பங்கு என்ன? என்பது பற்றிய அனைத்தையும் இங்கே பார்க்கலாம்.

கருப்பையில் பிராண வாயு...

நாம் சுவாசிக்க நுரையீரல் இருப்பது போல, கருவில் இருக்கும் சிசுவிற்கு இருக்காது. அதாவது, நுரையீரல் இருக்கும். ஆனால், அது பிறந்து வெளியே வந்தவுடன்தான் தன்னுடைய நுரையீரலை கொண்டு சுவாசிக்க முடியும். ஆகையால், கருவில் இருக்கும்போது தாயிடமிருந்து தாயின் கருப்பையில் உருவாகும் நஞ்சுக்கொடி குழந்தையோடு தொப்புள்கொடி உதவியுடன் தொடர்பில் இருக்கும். அதனால், இதன் வழியாகத்தான் சுவாசிக்கத் தேவையான பிராண வாயு (O2) மற்றும் இதர சத்துகள் ரத்த நாளங்கள் வழியாக குழந்தைக்கு போகும்.

நஞ்சுக்கொடி...

நமக்கு நுரையீரல் போல குழந்தைக்கு நஞ்சுக்கொடி தேவை. நஞ்சுக்கொடியில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் உருவாகும் பாதிப்பு குழந்தைக்கான பிராண வாயு குறைவது. எனவே கர்ப்பக் காலத்திலும் சரி, பிரசவ வலியின்போதும், குழந்தை பிறக்கும் தருணத்திலும் சரி, நஞ்சுக்கொடியின் நலன் மிக அவசியம். நஞ்சுக்கொடிக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் பிராண வாயு குறையும், இதனால் குழந்தையின் இதயத்துடிப்பு குறையும் பாதிப்பு உள்ளது.

காரணங்கள் மற்றும் காரணிகள்...

*தாய்க்கு சர்க்கரை நோய் இருப்பது.

*தாய்க்கு நீண்டகால சிறுநீரக பாதிப்பு இருப்பது.

*தாய் அதிக உடல் பருமனுடன் இருப்பது மற்றும் புகை பிடிக்கும் பழக்கம் இருப்பது.

*மேலும், கர்ப்பக்காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம்,

*இதற்குமுன் அதிக பிரசவம் நடந்திருக்கும் தாய்மார்கள்,

*பிரசவ தேதிக்கு முன்னரே நஞ்சுக்கொடி தாயின் கருப்பையில் இருந்து பிரிவது,

*வேறு ஏதேனும் நஞ்சுக்கொடி சார்ந்த பாதிப்புகள் ஏற்படுவது... போன்றவற்றால் குழந்தைக்கு ஆபத்து நிகழும்.

அறிகுறிகள்...

*கருப்பை வலி (Cramps) அதிகமாக இருப்பது.

*தாய்மார்களுக்கு தண்ணீர் குடம் உடைந்து, அது பச்சை மற்றும் பழுப்பு நிறத்தில் இருப்பது. (ஏனெனில் அந்த நிறமாற்றம் குழந்தையின் கழிவுகள்.)

*குழந்தையின் இதயத் துடிப்பு சீராய் இல்லாமல் இருப்பது.

*உதிரப்போக்கு.

*இருவத்தியெட்டு வாரங்களுக்குப் பின் குழந்தையின் அசைவுகள் குறைவாகவோ அல்லது அசைவுகள் இல்லாமலோ இருப்பது. (அவ்வாறு இருந்தால் உடனே தாய் மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.)

குறிப்பு: மேல் உள்ள அறிகுறிகளை நினைத்து பயப்பட வேண்டாம். மேலும் தகவல்களுக்கு உங்கள் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை மூலம் தெளிவு பெறலாம். ஏனெனில், மேலே சொன்ன அறிகுறிகள் ஒவ்வொரு உடலைப் பொருத்தும் மாறுபடும். உதாரணமாக, வலி (cramps) பிரசவ நாள் நெருங்க நெருங்க அவ்வப்போது வரும். அது இயல்பு.
என்ன செய்வார்கள்...?

மேலே இருக்கும் அறிகுறிகளை உறுதி செய்து, ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனைகள் செய்து உடனே குழந்தையின் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிப்பார்கள். முடிந்தவரை குழந்தையை சீக்கிரம் அதாவது, சிசேரியன் மூலம் வெளியே கொண்டுவர வழி செய்வார்கள்.

விளையும் விளைவுகள்...

ஒருவேளை மேல் சொன்ன சூழலில் ஏதேனும் ஒரு காரணத்தால், குழந்தைக்குப் பிராண வாயு குறைய நேர்ந்தால், குழந்தையின் இதயத் துடிப்பு குறையும். இதனால் குழந்தையின் மூளைக்கு போகும் ரத்தம் குறையத் தொடங்கி, மூளை செல்கள் ரத்த ஓட்டம் இல்லாமல் இறந்துபோகும். எந்த பகுதியில் மூளை செல்கள் பாதிப்பு அடைகிறதோ, அந்தப் பகுதிக்கான செயல்கள் குழந்தைக்கு பாதிக்கப்படும். உதாரணமாக, மூளையின் பேசும் பகுதி திசுக்கள் பாதிக்கப்பட்டால், குழந்தையால் பேச முடியாது. இதனால் வளர்ச்சி படிநிலைகளில் தாமதம், பக்க வாதம், மூளை வாதம் (Cerebral Palsy), கண், காது, பேச்சுத் திறன்களில் சிக்கல், அறிவுத் திறன் குறைவது, ஆட்டிசம் பாதிப்பு, சிந்திக்கும் திறன் குறைவது போன்ற பல பாதிப்புகள் ஏற்படலாம். அதிகபட்சமாக, குழந்தை இறந்தும் பிறக்கலாம்.

இயன்முறை மருத்துவம்...

மூளை வாதம், பக்க வாதம், சிந்திக்கும் திறன் குறைவது போன்ற பாதிப்புகளை இயன்முறை மருத்துவர்கள் பிரத்யேகமாக பயிற்சிகள் மூலம் சரி செய்வார்கள். இந்த சிகிச்சை நிறைவு பெற குறைந்தது இரண்டு மூன்று வருடங்களாவது ஆகும். ஏனெனில் குழந்தை உட்கார, நிற்க, நடக்க என ஒவ்வொரு வளர்ச்சி படிநிலைகளை அடைந்து, அடுத்த படிநிலைக்குப் போகவேண்டும்.

மற்ற மருத்துவம்...

கண், காது மருத்துவர்கள் பரிசோதனை செய்து, கண்ணாடி போட வேண்டுமா என்பது போன்றவற்றை விளக்குவர். பேச்சுத் திறன் அதிகரிக்க பேச்சுப் பயிற்சி வழங்கப் பட வேண்டும். மற்ற பிரச்சினைகள் (உதாரணமாக, வலிப்பு) ஏதேனும் இருப்பின் அதனை குழந்தை நல மருத்துவர் ஆராய்ந்து அதற்கான மருந்துகளை பரிந்துரைப்பர்.எனவே, இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா? என எண்ணி அஞ்சவேண்டாம். கருத்தரித்தப்பின் தொடர் மருத்துவக் கண்காணிப்பும், போதிய உடல்நல பயிற்சிகளும், பாசிட்டிவிட்டியும் இருந்தாலே போதும், நிச்சயம் பாதிப்புகளை தவிர்த்து, மழலை முத்துக்களை இனிதே பெற்றெடுக்கலாம்.

கோமதி இசைக்கர்

இயன்முறை மருத்துவர்


அதிக நேரம் உட்காருவது ஆபத்து


ஒரே இடத்தில் ஆறு மணி நேரத்திற்கு மேலாக உட்கார்ந்து இருப்பது ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கிறது மருத்துவ ஆய்வு. இதனால் உடலில் கொழுப்பு சத்து அதிகமாகி, நோய்கள் பெருகி, ஆயுட்காலம் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கிறது அந்த ஆய்வு. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உடற்பயிற்சி குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் இருவர் தங்களது அலுவலக நேரத்தில் அங்கிருக்கும் ட்ரெட் மில்லில் ஓடிக் கொண்டும், அலுவலகத்தைச் சுற்றியிருக்கும் பகுதிகளில் நடந்து கொண்டும் போனில்
பேசுவார்களாம்.

உட்கார்ந்திருக்கும் இடத்தை விட்டு, அடிக்கடி எழுந்து நடக்க ஆரம்பித்தாலே உடல் எடை அதிகரிக்காது. ஜிம்முக்கு போக வேண்டும் என்ற அவசியமில்லை. அடிக்கடி எழுந்திருந்து நடந்தாலே போதும். உட்கார்ந்திருக்கும் நேரத்தை குறைத்து, அடிக்கடி நடப்பதன் அவசியத்தை உணர்ந்தாக வேண்டிய நேரமிது.எழுந்து செயல்படாமல் இருப்பது அதிலும் அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது பின்னர் ஆபத்தை விளைவிப்பதோடல்லாமல் மனதையும் பாதிக்கிறது என்றும் எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஆஸ்திரேலியாவில் நடந்த ஆய்வில் ஒரு நாளைக்கு ஆறு மணி நேரத்திற்கு மேல் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமுள்ள 8,500 பேர்களை பற்றி ஆய்வு செய்தபோது, அவர்களில் பலருக்கு சராசரி ஆயுட்காலத்தை விட ஐந்து ஆண்டுகள் முன்னதாகவே இறப்பு நிகழ்ந்துள்ளதாம்.

ஒரு நாளைக்கு 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள் வரை உடற் பயிற்சிக்கு நேரம் ஒதுக்குபவர்களுக்கும் கூட தொடர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேல் உட்கார்ந்திருப்பது பல நோய்கள் வருவதற்கான வரவேற்பே என்பதை விளக்குகின்றன ஆய்வு முடிவுகள்.டி.வி. பார்த்தாலும் சரி, எழுத்து வேலை செய்வதானாலும் சரி, கம்ப்யூட்டர் வேலையானாலும் சரி ஒரு போதும் அதிக நேரம் உட்கார்ந்து இருக்காமல், சிறிது நேரம் நடக்கவும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பயணளிக்கும்.நடப்போம்; நீண்ட நாள் வாழ்வோம்.

தொகுப்பு : திவ்யா, காஞ்சிபுரம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்