SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுநீரகத்தில் புற்றுநோய் சிகிச்சை என்ன?

2022-10-06@ 17:46:07

நன்றி குங்குமம் டாக்டர்

பொதுநல மருத்துவர் கு.கணேசன்

அன்றைய தினம் என் மருத்துவமனையில் வெளிநோயாளியாகக் காத்திருந்த பெரியவருக்கு வயது 50-ஐத் தாண்டும். இடதுபுற விலாவில் தாங்க முடியாத வலியோடு போராடிக் கொண்டிருந்தார். செவிலியர்கள் அவரின் நிலைமையைச் சொன்னதும் உடனே என் அறைக்கு அழைத்து வரச் சொன்னேன்.

அவருக்கு இந்த வலி பல மாதங்களாக இருந்திருக்கிறது. சிறுநீரகத்தில் கல் இருக்கிறது என்ற பார்வையில் பல மருத்துவர்களிடம் அவர் சிகிச்சை பெற்றிருக்கிறார், ஒரு பேருந்துப் பயணத்தில் உறவினர் ஒருவர் என்னைப் பரிந்துரை செய்ய, அந்த முறை என்னிடம் சிகிச்சை பெற வந்திருக்கிறார்.நான் அவரைத் தீவிரமாகப் பரிசோதித்துப் பார்த்தபோது அவருக்கு இடது சிறுநீரகத்தில் கற்கள் மட்டுமல்ல, புற்றுக்கட்டியும் இருப்பது உறுதியானது. அது ஆரம்பநிலையில்தான் இருந்தது. எனவே, சென்னையில் உள்ள பிரபல புற்றுநோய் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். அங்கு அவருக்கு முறையாகச் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அவர் புற்றுநோயிலிருந்து விடுதலை ஆனார்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால், விலா வலியோடு வருகிறவர்களுக்குப் பெரும்பாலும் சிறுநீரகத்தில் கல் இருக்கவே வாய்ப்பிருக்கிறது. ஆனாலும், மிக அரிதாக ஒரு சிலருக்குப் புற்றுநோய் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. சிறுநீரகத்தில் கல் இருந்தாலும் அல்லது புற்றுநோய் இருந்தாலும் ஆரம்பத்தில் அறிகுறிகள் ஒன்றுபோலவே இருக்கும். போகப்போகத்தான் அறிகுறிகள் மாறும். ஆகவே, விலா வலிக்கு என்ன காரணம் என்பதை அறிந்து முறையாகச் சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போதுதான் புற்றுநோயின் பிடியில் சிக்குவதைத் தடுக்க முடியும்.

சிறுநீரகப் புற்றுநோய் நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய புற்றுநோய்களில் மிக முக்கியமானது, சிறுநீரக செல் புற்றுநோய் (Renal cell carcinoma- RCC). இது பெண்களைவிட ஆண்களுக்கு ஒரு மடங்கு அதிகமாக வருகிறது. பொதுவாக, இது ‘அடினோ கார்சினோமா’ (Adeno carcinoma) எனும் பிரிவைச் சார்ந்த புற்றுநோயாக இருக்கிறது.

பெரும்பாலும், மரபணு பிழை காரணமாக, பரம்பரையில் ஏற்படும் ஒரு குறைபாடாகத் தோன்றும் புற்றுநோய் இது. புகைபிடிப்பதும் மது அருந்துவதும் இந்தப் புற்றுநோய் ஏற்படுவதைத் தூண்டுகின்றன. உடற்பருமன் இருந்தாலும் இதே நிலைமைதான். ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்சாலை, காட்மியம் (Cadmium) தொழிற்சாலை, வண்ணச் சாயம் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் பணிபுரிவோருக்கு இந்தப் புற்றுநோய் வர வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

தேவையில்லாமல் வலி மாத்திரைகளைச் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்குச் சிறுநீரக செல் புற்றுநோய் வரலாம் என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஹெப்படைடிஸ் சி (Hepatitis - C) வைரஸ் பாதிப்பினாலும் இது வரலாம். நீண்ட காலம் டயலிசிஸ் சிகிச்சையில் உள்ளவர்களும் இந்த நோய்க்கு உள்ளாகலாம்.

அறிகுறிகள் என்ன?


சிறுநீரகப் புற்றுநோயின் ஆரம்ப கட்டத்தில் தெளிவான அறிகுறிகள் எதுவும் தெரியாது. லேசாக காய்ச்சல் வரும். காரணம் இல்லாமல் இரவில் வியர்க்கும். பசி குறையும், எப்போதும் உடல் சோர்வாக இருக்கும், இவை எல்லாமே வேறு நோய்களிலும் காணப்படும் என்பதால், பயனாளிக்குப் புற்றுநோய் குறித்த சந்தேகம் ஏற்படாது.

போகப் போக ஒரு பக்க இடுப்பு வலிக்கும். விலாவில் வலி எடுக்கும். அடிவயிற்றிலும் வலி வரலாம். சிறுநீரில் ரத்தம் போகும். இந்த அறிகுறிகளும் சிறுநீரகத்தில் கல் இருப்பதுபோலவே ஒரு மாயத்தோற்றத்தைக் காண்பிக்கும். பலரும் இதற்கு இயற்கை வைத்தியம் பார்க்கச் சென்று விடுவார்கள்.பின்னர், உடல் எடை குறையத் தொடங்கும். ரத்தம் குறையும், ரத்தசோகை வரும். என்னதான் மாத்திரை சாப்பிட்டாலும் ரத்த அழுத்தம் கட்டுப்படாமல் அதிகரிக்கும். மேல் வயிற்றில் கட்டி இருப்பது தெரியும். இவைதான்புற்றுநோய் சந்தேகத்தைக் கொண்டு வரும்.
பரிசோதனைகள் என்னென்ன?

முதலில், ஹீமோகுளோபின் உள்ளிட்ட பொதுவான ரத்தப் பரிசோதனைகளுடன் சிறுநீர்ப் பரிசோதனை செய்யப்படும். சிறுநீரில் ரத்த அணுக்கள் இருப்பதை உறுதி செய்த பிறகு, புற்று செல்கள் இருக்கின்றனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும். இதைத் தொடர்ந்து வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்தால், சிறுநீரகத்தில் கட்டி இருக்கிறதா, இருந்தால் அது எந்த இடத்தில் இருக்கிறது, அதன் அளவு என்ன என்பன போன்ற பல தடயங்களைக் காணலாம். புற்றுநோய் வேறு எங்காவது பரவி இருக்கிறதா என்பதைக் கணிக்க முதலில் மார்பு எக்ஸ்-ரே எடுக்கப்படும். இதன் பிறகு வயிற்றை சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும்.

சமயங்களில் எம்.ஆர்.ஐ. ஸ்கேனும் ‘ரீனல் ஆஞ்சியோகிராபி’ (Renal Angiography) பரிசோதனையும் தேவைப்படும். சிறுநீரகத்தில் புற்றுக்கட்டி இருப்பது உறுதியானால், அடுத்ததாக அந்தக் கட்டியில் இருந்து சிறிதளவு திசுவை வெட்டி எடுத்துத் ‘திசு ஆய்வுப் பரிசோதனை’ (Biopsy) மேற்கொள்ளப்படும். இதுதான் புற்றுநோயை 100 சதவீதம் உறுதி செய்யும் பரிசோதனை. அதோடு புற்றுநோய் வகையை அறியவும் இது உதவும்.

புற்றுநோய் நிலைகள்:

நிலை 1: புற்றுக்கட்டி 7 செ.மீ.க்கும் குறைவாக சிறுநீரகத்தில் மட்டுமே காணப்படும் ஆரம்ப நிலை இது.

நிலை 2: புற்றுநோய் அளவு 7 செ.மீ.க்கும் அதிகமாகக் காணப்படும் நிலை இது. அருகில் இருக்கும் அட்ரீனல் சுரப்பிக்கு இப்போது புற்றுநோய் பரவியிருக்கும்.

நிலை 3: புற்றுக்கட்டி இருப்பதுடன் அருகில் இருக்கும் பெரிய சிரைக் குழாய்கள் அல்லது நிணக்கணுக்களுக்கும் அது பரவி நெறிகட்டிகள் காணப்படும் நிலை இது.

நிலை 4:
சிறுநீரகப் புற்றுநோய் நுரையீரல், கல்லீரல், மூளை, எலும்பு எனப் பலஉறுப்புகளில் பரவியிருப்பது.

சிகிச்சை முறைகள் என்னென்ன?

முதல் இரண்டு நிலைகளுக்கு அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சையின்போது (Radical nephrectomy) சிறுநீரகம் மொத்தமும் அட்ரீனல் சுரப்பியும் அகற்றப்படும். சிறுநீரக ரத்தக் குழாய்களில் ரத்தம் உறைந்திருந்தால், அதை அகற்றவும் சிகிச்சை வழங்கப்படும். ‘டார்கெட்டட் தெரபி’ (Targeted therapy) எனும் சிகிச்சையில் பல வகை மருந்துகள் தரப்படும். மூன்றாம் நிலை மற்றும் நான்காம் நிலையில் உள்ள புற்றுநோய்க்குக் கதிர்வீச்சு சிகிச்சை தரப்படுகிறது.

சிறுநீரகப் புற்றுநோய்க்கு ‘இமுனோதெரபி’ (Immunotherapy) நல்ல பலன் தருகிறது. குறிப்பாக, இன்டெர்ஃபெரான் - ஆல்பா (Interferon - alpha), இன்டர்லுயூக்கின் - 2 (Interleukin - 2) எனும் மருந்துகள் சிறுநீரகப் புற்றுநோயைக் குணப்படுத்துவதோடு, நோயாளியின் வாழ்க்கைத் தரத்தையும் கூட்டுகிறது.

தடுப்பது எப்படி?

சிறுநீரகப் புற்றுநோயைத் தடுப்பதற்கு அது குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியம். புகைபிடிப்பது, மது அருந்துவது, உடற்பருமன் போன்ற சிறுநீரகப் புற்றுநோயை ஏற்படுத்தும் காரணிகளைக் களைந்தால் போதும் சிறுநீரகப் புற்றுநோய்க்கு அச்சப்படத் தேவையில்லை. அடுத்து, வம்சாவளியில் சிறுநீரகப் புற்றுநோய் வந்திருக்கும் குடும்பத்தில் பிறந்தவர்கள் 30 வயதுக்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை (Master Health Check - up) செய்து கொண்டால், இந்தப் புற்றுநோயை மிகவும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துக் ‘கடிவாளம்’ போட்டுவிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்