SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் எனும் மாயலோகம்!

2022-10-06@ 17:40:09

நன்றி குங்குமம் டாக்டர்

மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி   

உடல்பருமனும் மனநலக் குறைபாடுகளும்


விபா - முப்பதுகளின் பிற்பகுதியில் இருந்தாள். அவளுக்கு முதல் குழந்தை பிறந்த பின் கூடிய எடை இறங்கவே இல்லை.

இரண்டாவது பிரசவத்துக்குப் பின் அளவில்லாமல் உடல் பெருத்துக் கொண்டே போனது. டயட், எக்ஸர்ஸைஸ் என கடினமாக முயற்சித்தால் பழைய உருவத்துக்கு வந்துவிடுவோம் என்று ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கை பிறகு, தகர்ந்து போனது. உணவுக் கட்டுபாடு, உடல் இளைப்பதற்கு வீட்டு வைத்தியம், வாக்கிங் என எதையும் தொடர்ந்து செய்ய முடியவில்லை. வீட்டு வேலை, ஆபீஸ் வேலை, குழந்தைகள் வளர்ப்பு என்ற அன்றாட கடமைகளில் அவள் நேரம் அவளது கைக்கெட்டா தூரத்தில் தொலைந்து போனது. அவள் எப்பவும் டல்லாக இருப்பதாகவும், காரணமே இல்லாமல் எரிந்து விழுவதாகவும் கணவன் அவள் மனிதர்களிடம் புகார் பட்டியல் வாசித்தான். அவள் தான் கடும் மனச்சோர்வில் இருப்பதை உணர்ந்தாள்.

உலகெங்கும் அதிக எடை (Over Weight) மற்றும் உடல் பருமன் (Obesity) அதிகரித்தபடி இருக்கிறது. சமீபத்திய அறிக்கை ஒன்றில் உலக சுகாதார நிறுவனம் (WHO) 1975ம் ஆண்டு முதல் உலகெங்கும் உடல் பருமன் மூன்று மடங்காகி இருப்பதாக பகிர்ந்துள்ளது. இந்திய சமூகவியல் மருத்துவம் என்ற அமைப்பின் பத்திரிகை ஒன்று (Indian journal of community medicine) இந்தியாவில் தற்போது 135 மில்லியன் மக்கள் உடல் பருமன் கொண்டவர்கள் என சொல்கிறது.

அதுவும் கடந்த கொரோனா காலகட்டத்தில் இது மிக அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வளரும் பிள்ளைகளின் உடல்பருமன் அதிகரித்துள்ளதாகவும் இது நீண்டகால அடிப்படையில் பிரச்சனைகளை உருவாக்கும் எனவும் மருத்துவ உலகம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.உடல் பருமன் என்பது உயர் ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, சர்க்கரை நோய் போன்ற உடல்நலப் பிரச்சனைகளுடன் மனநலப் பிரச்சனைகளுக்கும் வழி வகுக்கும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படக்கூடும்.

அதிக எடைக்குப் பொதுவான சில காரணங்கள்

*கட்டுப்பாடற்ற உணவுப் பழக்கம், உடல் உழைப்பில்லாமை, உடற்பயிற்சிகள் இல்லாமை போன்ற வாழ்வியல் பழக்கங்கள்.
*ஹார்மோன் சார்ந்த பிரச்சனைகள், உதாரணத்துக்கு ஹைப்போ தைராய்டு போன்ற குறைபாடுகள் உடல்எடை கூட்டும்.
*பிற நோய்களுக்காக உட்கொள்ளும் மருந்துகள்.
*புகை பிடிக்கும் பழக்கத்தை விடும் போது அதற்கு மாற்றாக அதிகமாக உண்ணும் பழக்கம்.
*பிற காரணங்களால் ஏற்படும் மன உளைச்சலை அதிகப்படியான உணவு உண்ணுவதன் மூலம் தணிக்க முயல்வது.
*பெண்களுக்கு பிரசவத்திற்கு பின் அதிக கலோரிகள் கொண்ட ஃபாஸ்ட் ஃபுட், கோலா எடுத்துக்கொள்வது.
*மதுபானம் அருந்துவது.

இங்கே நாம் பேச இருப்பது மனநலமும் உடல் பருமனும் ஒன்றுடன் ஒன்று இணைப்பு கொண்டுள்ளது என்பதைக் குறித்துதான். உடல்பருமனாக இருப்பது மனச்சோர்வு, மனப்பதட்டம் போன்ற மனநலக் குறைபாடுகளை உருவாக்கக்கூடும். இவ்வகை மனக் குறைபாடுகள் உடல்பருமனை ஏற்படுத்தக்கூடும். இதனை நிறைய ஆராய்ச்சிகள் நிரூபணம் செய்கின்றன.

உடல்பருமன் கொண்டவர்களில் 55 சதவீனருக்கு மனச்சோர்வு ஏற்படக்கூடும் எனவும், மனச்சோர்வு கொண்டவர்களில் 58 சதவீனருக்கு உடல்பருமன் ஏற்படக்கூடும் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மரபியல், மூளை அமைப்பு, ஹார்மோன் செயல்பாடு, குடல் நுண்ணுயிரிகள் போன்ற உயிரியல் கூறுகளில் உடல் பருமனையும் மனச்சோர்வையும் ஒருங்கே உண்டாக்கும் பொதுவான காரணிகள் இருக்கக்கூடும் என சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மனச்சோர்வும் மனப்பதட்டமும் தவறான உணவுப்பழக்கத்தையும் உடல் உழைப்பற்ற வாழ்வியல் முறையையும் ஏற்படுத்தும்.

இதனால் உடல் எடை கூடி பிறகு அது உடல்பருமனில்தானே முடியும்?!

உடல்பருமனாக இருப்பவர்களுக்கு தங்கள் உடல் தோற்றம் குறித்த தாழ்வு மனப்பான்மை இருக்கும். பாகுபாடுடன் (Discrimination) நடத்தப்படும் போது அவர்களின் மனநிலையில் சமன்குலைவுகள் ஏற்படும். மனச்சோர்வுக்குப் பரிந்துரைக்கப்படும் சில மருந்துகளின் பக்கவிளைவாக உடல் எடை கூடும். அதே போன்று உடல்எடைக் குறைப்பில் பரிந்துரைக்கப்படும் உணவுக் கட்டுப்பாடுகள் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி டிப்ரஷனை அதிகரிக்கக்கூடும்.

ஒருவருக்கு உடல்பருமனும் மனச்சோர்வும் இருந்தால் உடலில் தொடர் வலி, தூக்கக் கோளாறுகள், உயர் ரத்தஅழுத்தம், இருதயக் கோளாறுகள், நீரிழிவு நோய் போன்றவை ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவ உலகம் எச்சரிக்கை விடுக்கிறது.உடல்பருமன் மற்றும் மனநலக்குறைபாடுகள் - இவற்றுக்குத் தொடர் சிகிச்சையும் கவனிப்பும் தேவை.  தற்காப்பு நடவடிக்கைகள் மற்றும் எவ்வகையான சிகிச்சைகள் என அடுத்த இதழில் பேசுவோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்