SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லீரல் காப்போம்... லிவர் சிரோசிஸ் தடுப்போம்!

2022-09-19@ 17:18:45

நன்றி குங்குமம் டாக்டர்

கல்லீரலை மனித உடலின் சுத்திகரிப்புத் தொழிற்சாலை என்பார்கள். நமது உடலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உறுப்புகளில் ஒன்று கல்லீரல். மனித உடலில் மிகப் பெரிய உறுப்பும் கல்லீரல்தான். கல்லீரலுக்கு வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும் ஆற்றல் கொண்டது. மேலும், ஜீரணத்தில் உதவி, உடற்கழிவுகள் மற்றும் நச்சுக்களை நீக்குவது, ஹார்மோன்களைச் சீர் செய்வது போன்ற பணிகளையும் கல்லீரலே செய்கிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த கல்லீரலை பாதிக்கக்கூடிய நோய் என்றால் அது லிவர் சிரோசிஸ் எனும் கல்லீரல் வீக்கம். இது குறித்து மருத்துவர் தினேஷ் ஜோதிமணி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

கல்லீரல் வீக்கம் என்பது என்ன?

கல்லீரலில் தேவையற்ற ஏதாவது ஒன்று சேரும்போது உதாரணமாக, கொழுப்பு அதிக அளவில் சேர்வது, அதிகளவில் மது அருந்துவது, க்ரோனிக் வைரல் என்று சொல்லப்படும் ஹெபடைடீஸ் பி, ஹெபடைடீஸ் தொற்று போன்றவை ஏற்படும்போது கல்லீரல் பெரிதாக விரிவடைகிறது. இதைத்தான்  கல்லீரல் வீக்கம் என்கிறோம்.

ஆனால், இந்த கல்லீரல் வீக்கம் என்பது ஓரிரு நாளில் நடைபெறுவது அல்ல. கல்லீரலில் பல நாட்களாகப் பிரச்சனைகள்  இருந்து வந்து ஒரு கட்டத்தில் இது அதிகப்படியாகி, கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிடும். இந்த நிலையைத்தான் லிவர் சிரோசிஸ் என்கிறோம். கல்லீரல் சுருங்குவது எப்போது நடக்கும் என்றால் கல்லீரலில்  உள்ள செல்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க ஆரம்பிக்கும்போது ஸ்கார் டிஷ்யூ எனும் பைரோஸஸ் உருவாக ஆரம்பிக்கும். அந்த பைரோஸஸ்தான் கல்லீரலை சுருக்க ஆரம்பிக்கும்.

கல்லீரல் மிகவும் அழகான உறுப்பு. அது தன்னைத்தானே புதுப்பித்து வளர்த்துக் கொள்ளும் தன்மை உடையது. கல்லீரல் தனக்கு ஏற்படும் பாதிப்புகளை தாங்கிக் கொண்டு தானே சரிசெய்து புதுபித்துக்கொள்ளும். அதே சமயம் அது தாங்கிக் கொள்ளும் அளவையும் தாண்டிப் போகும்போதுதான் கல்லீரல் வீக்கம் அடைந்து பெரிதளவு பாதிக்கப்படுகிறது. இந்தநிலையில்தான் கல்லீரலில் பைரோஸ் உருவாக ஆரம்பிக்கும். மற்றொருபுறம் கல்லீரல் வளர முயற்சிக்கும். இதனால், கல்லீரலில் உள்ள மென்மை தன்மை கெட்டு அங்கங்கே கட்டிகள் போல் ஆகிவிடும். இதைத்தான்  ‘லிவர் சிரோஸிஸ்‘ என்கிறோம். பொதுவாக, கல்லீரல் வீக்கம் ஏற்படுவதற்கு பல ஆண்டுகளாகும். நோய் முற்றும் வரை அறிகுறிகள் எதுவும் தெரியாது.

கல்லீரல் வீக்கம் எதனால் ஏற்படுகிறது?

கல்லீரல் வீக்கம் பல காரணங்களால் ஏற்படுகிறது. முதலாவது காரணம், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதாலும், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாலும் கல்லீரலில் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் வீக்கம் அடைகிறது. பொதுவாக,  உடலில் ஏற்படும் கொழுப்பை கட்டுப்படுத்துவது கல்லீரல்தான்.

அப்படியிருக்க கல்லீரலிலேயே கொழுப்பு சேரும்போது பிரச்சனையாகிறது. இந்த வகை கொழுப்பு உணவினால் ஏற்படுவதில்லை. மாறாக உடலில்  அதிகளவில் கார்போஹைட்ரேட் சேரும்போது  அது கல்லீரலில் கொழுப்பாக மாறிவிடுகிறது. இது நாள்பட நாள்பட சேரும்போது ஒரு கட்டத்தில் வீக்கம் ஆகிறது. இந்த நிலையை ஃபேட்டி லிவர் என்றும் கூறுகிறோம். சர்க்கரை நோய் இருப்பவர்கள், உடல் பருமனாக இருப்பவர்களை இந்த ஃபேட்டி லிவர் அதிகளவில் பாதிக்க வாய்ப்புண்டு.

அதிக மது ஆபத்து!

அதுபோல், அதிகளவில் மது அருந்திக்கொண்டே இருப்பதும் கல்லீரல் வீக்கம் அடைய ஒரு காரணமாகும். கல்லீரலில் பாதிப்பு இருப்பது தெரிந்தால் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிட வேண்டும். அப்படி நிறுத்தி விட்டால், கல்லீரல் மீண்டும் தன்னை புதுப்பிக்கத் தொடங்கிவிடும். இதனால், கல்லீரலில் பிரச்னைகள் குறைந்து நார்மலாகிவிடும். அப்படியில்லாமல் மேலும் மேலும் மது அருந்திக்கொண்டே இருந்தால்  கல்லீரல் அதிகளவு பாதிக்கப்பட்டு ஒரு கட்டத்தில் கல்லீரல் செயலிழந்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

ஹெபடைடிஸ் வைரஸ்

அடுத்த காரணம், வைரஸ் ஹெபடைடிஸ். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெபடைடிஸ் சி பொதுவாக கல்லீரலை பாதிக்கக்கூடியவை. ஹெபடைடிஸ் பி என்பது ரத்தத்தில் வரக்கூடிய வைரஸ். இது சிறு வயது முதலேகூட இருந்து வரலாம். இது இருப்பதே தெரியாது. வளர்ந்த பின்புதான் நமக்கு தெரியவரும். அதற்குள் கல்லீரல் வீங்க தொடங்கிவிடும்.

ஹெபடைடிஸ் சி வைரஸ். இதுவும் ரத்தத்தில் வரக் கூடியதுதான். பிளட் டிரான்ஸ்யூஷன் செய்யும்போது சில நேரம் ஸ்கீரினிங் செய்யாமல் இருந்தால் அதனால் வரும்.  இதுவும் இருப்பதற்கான  அறிகுறிகள் எளிதில் தெரியாது. அதேபோல் நூற்றுக்கு ஒருவரையே பாதிக்கக்கூடும். இது எதர்ச்சையாகதான் தெரியவரும். அதாவது வேறு ஏதாவது நோய்க்காக ஸ்கேன் போன்ற டெஸ்ட் எடுக்கும்போதுதான் இது இருப்பதே தெரியவரும்.

இந்த ஹெபடைடிஸ் பி மற்றும் சி இரண்டுமே லிவர் ஃபெயிலியர், லிவர் கேன்சரை உருவாக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே சமயம் இந்த ஹெபடைடிஸ் வைரஸை முற்றிலுமாக  குணப்படுத்தக்கூடிய  நவீன சிகிச்சைமுறைகள் தற்போது நிறையவே வந்துவிட்டன. அவற்றை முறையாக எடுத்துக்கொண்டால், லிவர் ஃபெயிலியர், கல்லீரல் புற்றுநோய்  போன்றவை வராமல் தடுத்துக்கொள்ளலாம்.

மரபணுவும் ஒரு காரணம்

இதைத் தவிர, கல்லீரல் வீக்கத்துக்கு வேறு காரணங்களும் உள்ளன. அதில் முக்கியமானது மரபணு. சிலருக்கு வழிவழியாக வரும் பரம்பரை நோயாகவும் கல்லீரல் வீக்கம் இருக்கிறது. மேலும், முறையாக அங்கீகரிக்கப்படாத மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும், கல்லீரல் வீக்கம், லிவர் ஃபெயிலிர் வர காரணமாகிறது.

அறிகுறிகள்

கல்லீரல் வீக்கத்துக்கான ஆரம்பகட்ட அறிகுறிகள் என்று பெரியளவில் எதுவும் இல்லை. ஏனென்றால், கல்லீரல் ஆரம்பகட்ட பாதிப்புகளைத்தானே சரி செய்துகொள்ள முயற்சிதனால் அறிகுறிகள் தென்படுவதில்லை. வேறு ஏதாவது ஒரு பிரச்சனைக்காக சோதனை செய்யும்போதுதான் கல்லீரல் வீக்கம் இருப்பதே தெரிய வரும். அது ஃபேட்டி லிவரா அல்லது ஹெபடைடிஸ் வைரஸா என்று கண்டுபிடித்து தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதைத் தவிர, தொடர்ந்து அதிகளவில் மது அருந்துபவர்களுக்கு நிச்சயமாக லிவர் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு ஒரு கட்டத்தில் மஞ்சள் காமாலை நோய் வரும். இதனை ஆல்கஹால் ஹெபடைடிஸ் என்று கூறுகிறோம். இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக மது அருந்துவதை நிறுத்திவிட்டால் கல்லீரல் தன்னை தானே சரி செய்து கொண்டுவிடும். அப்படியில்லாமல்,  மஞ்சள் காமாலை சரியாகிவிட்டதே என்று மீண்டும் மது அருந்த தொடங்கினால்,  அது பெரிய பாதிப்புகளை உருவாக்கி, உயிருக்கே ஆபத்தாகிவிடக் கூடும்.

ஃபேட்டி லிவரால் ஏற்படுகிற கல்லீரல் வீக்கத்துக்கு அறிகுறியே  இருக்காது. பாதிப்பு அதிகமாகும்போது தான் அறிகுறிகள் தென்படும். கால் வீங்கும், வயிறு வீங்கும், பசியின்மை, உடல் மெலிதல், ரத்த வாந்தி எடுப்பது, ஞாபகசக்தி குறைவது போன்ற பிரச்னைகள் தோன்றும்.

பரிசோதனைகள் என்னென்ன?

கல்லீரல் வீக்கத்துக்கான பரிசோதனைகள் என்றால் முதல் பாதி, இரண்டாவது பாதி என்று இரண்டு வகையாக இந்த நோயைப் பிரிக்கலாம்.அதில் முதல்பாதியில், அறிகுறிகள்  எதுவும் இருக்காது. அதனால், நாமே  அல்ட்ரா சவுண்ட் டெஸ்ட் மூலம், கல்லீரல் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். கல்லீரல் செயல்பாட்டுக்கான ரத்தப் பரிசோதனை இருக்கிறது. இதில், ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், பிறகு இது தொடர்பான விரிவான பரிசோதனைகள் செய்து கண்டுபிடிக்கலாம்.

இரண்டாம் பாதி நமக்கு ஏதாவது அறிகுறிகள் தென்பட்டு சோதனை மேற்கொள்வது அல்லது வேறு ஏதாவது நோய்க்கு சோதிக்கும்போது கண்டுபிடிப்பது. அப்படி கல்லீரல் வீக்கம் இருப்பது தெரியவந்தால், உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்வதோடு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இதுதொடர்பான பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. ஏனென்றால், லிவர் சிரோசிஸைப் பொருத்தவரை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபடித்து என்னவகை என்று ஆராய்ந்து  சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரி செய்துவிடலாம். இல்லை என்றால் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்படும்.

தீர்வு என்ன?

கல்லீரல் பாதிப்பை பொருத்தவரை ஆரம்ப காலகட்டங்களில் ஹெபடைடிஸ் வைரஸ்தான் அதிகளவில் இருந்தது. அப்போது அதற்கு சரியான சிகிசைகள் இல்லாமல் இருந்தது. ஆனால், இப்போது நிறைய நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால் வைரல் ஹெபடைடிஸ் எல்லாம் குறைந்துவிட்டது. தற்போது அதிகளவில் பார்ப்பது லைப் ஸ்டைல் டிஸ்ஸாடர்ஸ் தான். அதாவது, ஃபேட்டி லிவர் நோய்கள்தான், இதற்கு தீர்வு என்றால், உணவு கட்டுப்பாடு, தினசரி உடற்பயிற்சி செய்வது, சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பது. கொழுப்பு அளவு அதிகம் இருப்பவர்கள் அதைக் கட்டுப்படுத்துவது, உடல் எடையைக் கட்டுக்குள் வைப்பது, எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது போன்றவை கல்லீரலைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளாகும்.  

தொகுப்பு : ஸ்ரீ தேவி குமரேசன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kujarat-election

    குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

  • vinayagar-puduchery-30

    புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

  • sirpi-30

    சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

  • mauna-loa

    உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

  • london-vertical-farm-29

    நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்