SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கண்ணைக் கட்டிக்கொள்ளாதே

2022-08-24@ 17:46:40

நன்றி குங்குமம் டாக்டர்

மாறுகண் அலட்சியம் வேண்டாம்!


உங்கள் உறவினருக்கு திடீரென்று ஒரு கை செயலிழந்து விடுகிறது. தெரிந்தவர் ஒருவருக்கு விபத்தில் கால் அகற்றப்படுகிறது. குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஒருவர் ஒற்றைக் காது சரியாகக் கேட்கவில்லை என்கிறார். இவர்களுக்கு என்னென்ன ஆலோசனைகள் கொடுப்பீர்கள்? கை பலவீனம் உடையவருக்கு பிசியோதெரபி சிகிச்சை. காலை இழந்தவருக்கு செயற்கைக்கால் பொருத்துதல், அடுத்தவருக்கு காது கேட்கும் கருவி என்று தான் பெரும்பாலானோரின் பதில் இருக்கும்.

இன்னொரு கேள்வி கேட்கிறேன், உங்கள் குழந்தைக்கு ஒரு கண் மட்டும் மாறு கண்ணாக இருக்கிறது. என்ன செய்வீர்கள்ஒ? இதற்கான பதில் முந்தையவற்றில் இருந்து பெருமளவில் மாறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் வளர வளர சரியாகிவிடுமா என்று பார்க்கிறேன் என்பார்கள். சிலர் இப்பவே ஹாஸ்பிடல் போனா கண்ணாடி, ஆபரேஷன்னு சொல்ல மாட்டாங்களா அதான் ஒன்னும் பண்ணல என்பார்கள். இன்னும் சிலர் மாறுகண் அதிர்ஷ்டம், அதனால் மகிழ்ச்சி அடைகிறேன் என்பார்கள். வெகு சிலரே சந்தேகம்

தோன்றியவுடன் மருத்துவமனைக்குச் சென்று அங்கு கூறப்படும் அறிவுரையைச் சரியாக கடைப்பிடிக்கவும் செய்திருப்பார்கள்.மாறுகண் பிரச்சனை உலகில் பல பகுதிகளிலும் பொதுவாக மக்களால் அலட்சியப்படுத்தப் படும் ஒன்று. ஒரு கை, ஒரு கால், ஒரு காது சரியாக செயல்பட இயலாத நபர் எவ்வளவு சிரமப்படுவாரோ அதைப்போன்ற சிரமம், சொல்லப்போனால் அதைவிட அதிக சிரமம் மாறுகண் உள்ள நோயாளிக்கும் இருக்கும். சிறுவயதிலிருந்தே மாறுகண்ணுடன் வளர்ந்திருப்பதால் அவ்வளவாக கஷ்டத்தை உணர மாட்டாரே தவிர, இரண்டு கண்களும் நேராகப் பார்க்கும் சீரான பார்வை உடைய நபரை விட நிச்சயம் அவர் பல வசதிக்குறைவுகளை  சந்திக்கிறார்.

மாறுகண்ணில் பல வகைகள் உள்ளன. குழந்தைகள் பார்க்கும்பொழுது கண்கள் நேராக இல்லாதது போல தோற்றம் தோன்றி நீங்கள் உங்கள் மருத்துவரை அணுகினால், சில சமயங்களில் பரிசோதனை செய்துவிட்டு, ‘வளர வளர சரியாகிவிடும். இது மாறுகண் இல்லை. பொய் மாறுகண் (Pseudo Squint)’ என்று கூறுவர். குழந்தையின் முக அமைப்பு சற்று அகலமாக இருத்தல், அல்லது மேல் கீழ் இமைகள் இணையும் பகுதியில் வித்தியாசமான அமைப்பு, சப்பையான மூக்கு போன்றவை காரணமாக இருக்கலாம்.

*சிலரைப் பார்க்கும் போது, அவர் வலது புறத்திலுள்ள காட்சிகளைக் காண்பதற்கு வலது கண்ணை மட்டும் பயன்படுத்துவது போலவும், இடது புறம் பார்க்கையில் இடது கண் மட்டும் நன்றாகப் பார்ப்பது போலவும் தெரியும். இப்படி மாறி மாறி இரண்டு கண்களும் செயல்படும் வகையை மாற்று மாறுகண் (Alternate (divergent/ convergent) Squint என்கிறோம்.

*ஒரு கண் நேரே பார்க்க, மற்றொரு கண் நிரந்தரமாக வெளிப்புறமாக ஒதுங்கி நின்றால் அதற்கு எக்ஸோட்ரோபியா(Exotropia or divergent squint) என்று பெயர். அதே சமயம் ஒரு கண் நேரான பார்வை பார்க்க மற்றொரு கண் மூக்குப் பகுதியை நோக்கித் திரும்பியிருந்தால் அதற்கு எஸோட்ரோபியா (Eotropia or convergent squint) என்று பெயர்.

*ஒரு கண் மட்டும் சற்று மேலாக விலகியிருக்கும் நிலைக்கு ஹைப்பர்போரியா (Hyperphoria) என்று பெயர். லேசாகக் கீழே விலகியிருக்கும் நிலைக்கு ஹைப்போபோ ரியா (Hypophoria) என்று பெயர்.

வகைகள் என்னவாக இருந்தாலும் மாறுகண் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள் இரண்டு. இரண்டு கண்களுக்கும் இடையிலான சமச்சீரின்மை மிகமுக்கியக் காரணம். உதாரணமாக, வலது கண்ணில் கண்ணாடி ஏதுமின்றி நன்கு படிப்பவர் ஒருவருக்கு, இடது கண்ணில் இரண்டு வரிகளை மட்டுமே படிக்க முடிகிறது என்று வைத்துக் கொள்வோம் .அதனால் வலது கண் மட்டுமே சரியாகப் பார்க்க, நாளடைவில் இடது கண் செயலிழந்து ஓரமாகவிடும். வீட்டில் பலனற்ற பொருட்களை நாம் தூக்கி ஓரமாக வைத்து விடுகிறோம் அல்லவா, அதைப்போல இடது கண்ணிலிருந்து வரும் உருவம் தெளிவானதாக இல்லை எனும் பொழுது நம் மூளை அந்தக் கண்ணைத் தள்ளி வைக்கவே முயல்கிறது.

அடுத்த பொதுவான காரணம் கண்ணை இயக்கும் தசைகளுக்கிடையே இருக்கும் சமச்சீரின்மை. நம் கண்ணை வலது புறம் இடது புறம் மேலே கீழே என்று சுழற்ற உதவியாக ஆறு தசைகள் (extraocular muscles) இருக்கின்றன. வலது புறம் பார்க்க வேண்டும் என்றால் வலது கண்ணின் வெளிப்புறத் தசையும் (lateral rectus) இடது கண்ணின் உட்புறத் தசையும் (medial rectus) சுருங்க வேண்டும். அதற்கு எதிர்வினை ஆற்றும் தசைகள் விரிவடைய வேண்டும். மாறுகண் இருக்கும் நபர்களுக்கு இந்த தசைகளின் நீளம் பிறவியிலேயே  மாறுபட்டிருக்கும்.

மாறு கண்ணிற்கான சிகிச்சை பல படிநிலைகளைக் கொண்டது. முதலில் விரிவான பரிசோதனை செய்யப்படும். அதன்பின் ஆரம்ப நிலை என்றால் கண்ணாடி பரிந்துரைக்கப்படும். கண்ணாடி அணிவது என்பது தூரப் பார்வை, கிட்டப் பார்வைக்காரர்களைப் போல சாதாரண கண்ணாடியை மட்டும் இல்லை. சோம்பலாக இருக்கும் கண்ணினை நன்றாகப் பார்க்கச் செய்து நன்றாக இருக்கும் கண்ணை மறைத்து விடுவார்கள் (Occlusion therapy). இதுவே மாறுகண் சிகிச்சையின் முதல் படி. சில லேசான அளவு பார்வை குறைபாடுகள் இந்த சிகிச்சையிலேயே சரியாகிவிடக் கூடும். Alternate squint போன்ற குறைபாடுகளுக்கு வலது கண்ணை ஒரு நாளும், இடது கண்ணை மறுநாளும் மறைத்துப் பார்க்கும் படி அறிவுரைகள் கொடுப்பார்கள்.

இளம் வயதில் மூளையில் வளர்ச்சி முடிவடைவதற்கு முன்பாக இந்த சிகிச்சையை தொடங்கி விட்டால், சராசரியாக மூன்று மாதங்கள் முதல் ஒரு வருடத்திற்குள் மாறுகண் குணமாகும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. அதன் பின்பும் கண்ணாடிகளைத் தொடர்ந்து அணிந்திருக்க வேண்டும். சரியாகி விட்டது, கண்ணாடி அணிவதை விட்டு விட்டேன் என்பவர்களுக்கு நேராக ஆன கண், மறுபடியும் நேர்கோட்டில் இருந்து விலகி விடும் வாய்ப்பும் உள்ளது.

சில குழந்தைகளுக்கு பயிற்சிகள் செய்து பார்வை குறைபாடு ஓரளவுக்கு சீர் செய்த பின் தசைகளின் நீளத்தில் இருக்கும் மாற்றங்களை சிறிய அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்படும். இந்த அறுவை சிகிச்சைகள் மிக எளிதானவையே.‘எங்க தாத்தாவுக்கு மாறுகண் இருந்தது, எனக்கும் உண்டு, இப்போ என் பையனுக்கும் இருக்குது. எங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை, இவனுக்கு மட்டும் ஏன் செக்கப் பண்ண சொல்றீங்க’ என்று சில பெற்றோர் கேட்டிருக்கிறார்கள்.

‘அந்தக் காலத்தைய சூழலும் புரிந்துணர்வும் வேறு. இன்றைய சூழலில் உங்கள் மகனுக்கு எட்டு மணி நேரம் பள்ளி இருக்கிறது, அதன் பின் நான்கு மணி நேரம் லேப்டாப், மொபைல் மற்றும் புத்தகங்கள் வாயிலாகக் கற்க வேண்டியிருக்கிறது. கூடவே இன்றைய துரித உலகில் ஒவ்வொரு தனி மனிதனும் வாகனம் ஓட்டுவது மிக அவசியம். இரண்டு கைகளும், கால்களும் மனிதனின் இயக்கத்திற்கு எப்படி முக்கியமானவையோ அதைப் போன்று இரண்டு கண்களும் நேராக இருப்பதும் முக்கியம்’ என்பேன் நான்.

இரண்டு கண்களும் நேராக உள்ள நபருக்கு நீளஅகலம், மேடு பள்ளம் இவை நன்றாகத் தெரியும். வாகனத்தின் பக்கவாட்டு கண்ணாடியில் பார்த்தால் பின்னால் இருந்து வரும் வாகனத்தின் தூரத்தை ஓரளவு சரியாகக் கணிக்க முடியும். மாறுகண்ணுடன் வாகனம் ஓட்டும் ஒருவருக்கு விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் மற்ற நபர்களை விட மிக அதிகம். இவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதில்லை.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் மாறுகண்ணின் காரணமாக பின்னடைவை சந்தித்தவர்கள் பலர். நன்கு படித்து முதல் மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்ற ஒரு இளைஞனுக்கு பெரிய நிறுவனம் ஒன்றில் கிடைத்த வேலை கைநழுவிப் போனது. மிக லேசான மாறு கண் குறைபாடுடைய ஒரு தோழி, அந்த மாறு கண்ணை சரி செய்வதற்காக சிறுவயதிலிருந்தே தலையை ஒரு புறமாக சாய்த்து (face tilt), கழுத்தைத் தூக்கிப் பார்ப்பாள் (chin lift). அவள் தற்போது நடுத்தர வயதைக் கடந்திருக்கும் நிலையில் கழுத்து எலும்புத் தேய்மானம் மற்றும் தலை சுற்றல் பிரச்சனையால் மிகுந்த அவதிப்படுகிறாள்.

சமீபமாக மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்பாக மாறுகண் மற்றும் பார்வைக் குறைபாட்டுக்காக நாற்பது சதவீத ஊனம் என்று சான்றிதழ் வாங்கியிருந்த மூன்று குழந்தைகள் முறையாக கண்ணாடி அணிந்து, அறுவை சிகிச்சையும் செய்துகொண்டு இப்போது முற்றிலும் குணமான நிலையில் வந்திருந்தனர். ‘‘இனி உங்களுக்கு ஊனமில்லை.

நீங்கள் மற்ற குழந்தைகளைப் போல் இயல்பானவர்களாகிவிட்டீர்கள். கண்ணாடியை மட்டும் தொடர்ந்து அணியுங்கள்” என்ற போது பெற்றோர்களும் குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். பள்ளியில் நடந்த உடற்பரிசோதனை மூலமாகவே இந்த விழிப்புணர்வு கிடைத்தது. எங்களை அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள் என்று தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள். விழிப்புணர்வும் தன் முனைப்பும் மட்டுமே போதும்; மாறுகண்ணை எளிதில் சரிசெய்து விடலாம் என்பதற்கு இந்த நிகழ்வே சிறந்த எடுத்துக்காட்டு.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்