SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புற்றிலிருந்து உயிர்த்தல்

2022-08-22@ 17:59:33

நன்றி குங்குமம் தோழி

கு ழந்தைகள் செயல்பாட்டாளரும், பெண்ணிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான ‘சாலை செல்வத்திற்கு’ அறிமுகம் தேவை இல்லை. தனக்கு ஏற்பட்ட மார்பக புற்றுநோய் குறித்து, தன்னுடலை நோயிலிருந்து மீட்டது குறித்து, தனது சிகிச்சை அனுபவங்களைப் பகிர்ந்து “புற்றிலிருந்து உயிர்த்தல்” என்ற இப்புத்தகத்தை எழுதியுள்ளார். வெளியீடு கருப்பு பிரதிகள் பதிப்பகம். நமக்குள்ள பிரச்சனையே கேன்சரை மரணத்திலிருந்து விலக்கிப் பார்க்க நாம் பழக்கப்படாததுதான் எனும் செல்வம், மிக யதார்த்தமாக, பயமுறுத்தல் இன்றி, இந்நோயினை எப்படி எதிர்கொள்ள வேண்டும், பெண்கள் தன்னுடல் மீது எத்தனை விழிப்போடு இருக்க வேண்டும் என்பதை விவரித்து, நோயின் நிலை?  சிகிச்சையின்போது என்ன மாதிரியான மருத்துவம் வழங்கப்படுகிறது, அதனால் உண்டாகும் உடல் மாற்றங்கள் என நூலின் வழியே தெளிவுபடுத்துகிறார்.

தனது எழுத்தின் ஊடே, “நமது சமுதாயத்தில் நோயுற்ற ஆண்கள் பராமரிக்கப்படுவதுபோல், பெண்களுக்கு வாய்ப்பதில்லை” என்பவர், கேன்சர் என சந்தேகம் வந்தாலே பரிசோதனைக்குச் செல்வது, மருத்துவ ஆலோசனைகளைக் கேட்பது, மருத்துவரிடம் ஒளிவுமறைவற்று பேசுவது, நம்மை பராமரிப்பவருடன் ஒத்துழைப்பது போன்ற தனது அனுபவங்களை எளிமையாக, அதே நேரம் விரிவாகவே விவரிக்கிறார்.

முதன்முதலில் தான் பயாப்சி(Biopsy) செய்த போது ரிப்போர்ட்டில் கார்சினோமா(Carcinoma) என்று இருந்த புதிய சொல், கேன்சருக்கான மற்றொரு சொல் என்பதைக் கூட அறியாத நிலையில், நல்ல ஹோட்டல் எங்கிருக்கு என விசாரிப்பதுபோல், நல்ல மருத்துவமனை குறித்து விசாரித்ததைக் குறிப்பிடுபவர், மார்பகப் புற்று நோயில் 400 வகையான செல்கள் உள்ளன. என் கேன்சருக்கு ஸ்ப்லிட்டெட் டக்டல் (Splitted ductal Carcinoma) என்று பெயர் எழுதப்பட்டு இருந்தது. மேலும் எனக்கு நடந்தது மார்பகம் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை (Breast conservation surgery) என்கிறார்.

ஆரம்பத்திலே சுலபமாக கண்டுபிடிக்க முடிந்தது மார்பக புற்றுநோய் மட்டுமே. இதில் தொடக்க நிலை மிகமிக முக்கியம். அந்த நிலையில் மருத்துவரை அணுகினால் சரிப்படுத்துவது சாத்தியம். ஆனால் பெரும்பாலான பெண்கள் மூன்றாவது, நான்காவது நிலையிலே மருத்துவரை அணுகுகிறார்கள். காரணம் கேன்சரை பொறுத்தவரை துவக்கத்தில் வலி கொடுக்காமல், கடைசி நிலையே வலியாக மாறும்.ஒரு மாதத்திற்கு முன்பு அந்த இடத்தில் நரம்பு தடித்திருந்ததை கவனித்தபோதே மருத்துவரை அணுகியிருந்தால் எனக்கு அறுவை சிகிச்சை, கீமோ, ரேடியேஷன் போன்ற விஷயங்கள் தேவைப்பட்டு இருக்காது. கட்டியான பின்பு கவனித்து நான்காவது நாளில் மருத்துவரை அணுகியது சீக்கிரம் என்றாலும், அதற்காக பட்ட அவஸ்தைகளைக்கூட அடைந்திருக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டு, கேன்சர் குறித்து தகவல்களாக இருந்தவை அனுபவமாக மாறும் போதுதான் அதன் மதிப்பை நம்மால் உணர முடிகிறது என்கிறார்.

ஜிப்மர் மருத்துவமனையில் செல்வத்தின் மார்பகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் மார்பகத்தை படமாக வரைந்து, அதில் கட்டி இருந்த இடத்தை குறித்து, ஐந்து மணி காட்டுவதாக எழுதியிருந்ததை, தாய்மையின், காதலின், அழகின் அடையாளமாக அறியப்படும் மார்பகம் கடிகாரம் ஆனதையும், அதில் ஐந்து மணிக்கான இடம் கட்டியாகி உயிரை சுமந்து நிற்பதையும் யோசிக்காமல் இருக்க முடியவில்லை என நகைப்போடு குறிப்பிடுகிறார்.

மருத்துவரைச் சந்தித்தல், மருத்துவப் பரிசோதனைகள், மருத்துவக்குழு உரையாடல், அறுவை சிகிச்சை, கீமோதெரபி, ரேடியேஷன், ஹார்மோனல் தெரபி, தொடர் பரிசோதனை என சிகிச்சைகளை வரிசைப்படுத்தும் செல்வம், தேவையை பொறுத்து சிகிச்சையில் மாற்றங்கள் நேரலாம். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படாமலும் இருக்கும். சிலருக்கு முதல் கட்டமாக கீமோ தெரபி இருந்தால் இன்னொருவருக்கு ரேடியேஷன் இருக்கலாம்.

இதில் அறுவை சிகிச்சை செய்த பகுதியில் கேன்சர் செல் இருந்தால் அதை அழிக்கவும், பரவாமலும் தடுக்க ரேடியேஷன் செய்யப்படுகிறது. உடலில் இருந்த செல் அழிந்து மறு உருவாக்கமாக கீமோதெரபி மருந்து நரம்பு வழியே செலுத்தப்படுகிறது என்றவர், கேன்சர் நோய் நம்மை சாகடிக்கிறதா? மருத்துவ சிகிச்சை சாகடிக்கிறதா? என்ற கேள்வி எழுமளவுக்கு சிகிச்சை வேதனைதான் என்றாலும், நமக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் கேன்சர் செல்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை தெரிந்து கொள்வது அவசியம் என்கிறார்.

கேன்சரால் நம் உடலில் ஏற்படும் மாற்றத்தை ஏற்றுக் கொள்வதில் சிக்கல்கள் இருக்கும். மார்பகத்தை மய்யப்படுத்தி ஆடைகள் அணிவது பழக்கமாகிவிட்ட நிலையில், உள்ளாடையை தவிர்த்தபோது பலர் என்னை உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது. சிலர் வெளிப்படையாகக் கேட்டார்கள். முறையான, பெண்மையான உடையணியும் பழக்கம் எனக்கு இல்லை, என்றாலும் பழக்கப்பட்ட ஒரு விஷயத்தில் விடுபடுதல் எளிதல்ல என புரிந்தது. முதல் கீமோ கொடுத்த இரண்டாம் வாரம் முடி கொத்துக் கொத்தாய் கொட்டியதையும், சலூனுக்குச் சென்று மொட்டையடித்ததையும் குறிப்பிட்டு, மருத்துவமனையில் எண்ணற்ற மொட்டை மண்டைகளுக்கு இடையில் நானும் ஒரு மொட்டையாக அடையாளமற்று போனவள் என எழுதி, நிஜத்தை சுலபமாக எதிர்கொள்ள முடிந்தது பற்றி எனக்கே பெருமையாக இருந்தது என்கிறார்.

ஒவ்வொரு முறையும் கற்றுக்கொள்ளவும், அதிர்ச்சியடையவும் ஏதாவது ஒன்று நமக்கு இருக்கவே செய்கிறது. இதில் அற்புத விளக்கை எடுக்கப் பயணிப்பது போன்றதுதான் கேன்சர் மருத்துவம் என்கிற செல்வம், அறுவை சிகிச்சை முடிந்தது.. கீமோ முடிந்தது.. ரேடியேஷன் முடிந்தது.. ஆனால் சிகிச்சை முடியவில்லை. என்னைப் பார்க்கும் ஒவ்வொருவரும் முழுமையாக குணம் அடைந்துவிட்டீர்களா? எனக் கேட்கும்போது, ‘ஆம்’ என்றோ ‘இல்லை’ என்றோ பதில் சொல்ல என்னால் முடிவதில்லை. ‘பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கேன்சர் செல்கள் மீண்டும் வளர வாய்ப்புள்ளது என்பதை ஆராய்ச்சிகள் அறிவுறுத்துகின்றன. எனக்கு சிகிச்சைகள் முடிந்து 6 ஆண்டுகள் நிறைவு பெற்றிருந்தாலும், பத்து பனிரெண்டு ஆண்டுகள்வரை திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்றே மருத்துவர்கள் சொல்கிறார்கள். அதுவரை தொடர்ந்து உடலை பரிசோதனைக்கு உட்படுத்திக்கொண்டே இருப்பதுடன், மீண்டும் வந்தால் உடன் மருத்துவரை அணுக வேண்டும் என்று புரிந்தது.

மாத்திரைகள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை என தெரிந்திருந்தும், தொடர்ந்து சாப்பிட ஒரே காரணம் கேன்சர் பற்றிய பயம்தான். கேன்சர் தீவிரமான நோயாக இருப்பதால் அதன் இயல்பை உள்வாங்கி ஏற்றுக்கொண்டு செயல்படுவது முக்கியம் என்கிறார் நிதர்சனத்தை உணர்ந்தவராய்.கற்பு என்கிற நிலையில் பெண்களுக்கு விதிக்கப்பட்ட சில விஷயங்களைத் தகர்த்து,  உடம்பு என்பதை பகுத்தறிவோடு பார்ப்பது, நோயை பற்றி, உடலைபற்றி படிப்பது பெண்களுக்கு முக்கியம் என்பவர், உடலைக் கூர்ந்து கவனிப்பது. உடல் பாகங்களைத் தொட்டுத் தடவிப் பார்ப்பது. மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில் உடன்  செயல்படுதல் என்கிற முன்னெடுப்பு இருந்தாலே பெண்கள் பல விஷயங்களைத் தாண்ட முடியும் என்கிறார் அழுத்தமாக.

*சிகிச்சைகள் முடிந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த புத்தகம் எழுதி வெளியிடும் எண்ணம் ஏன் வந்தது?

கொரோனா நோய் தொற்று முக்கிய காரணம். கேன்சர் நோயாளிகள் உடல் பலகீனமானவர்கள் என்பதால் பலர் இறப்புக்கு உள்ளானார்கள். 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கும் முன்னுரிமையில் தடுப்பூசிகள் போடப்பட்டாலும், மூவாயிரம் கேன்சர் நோயாளிகள் வந்து சென்ற ஜிப்மர் மருத்துவமனையின் கேன்சர் இன்ஸ்டியூட் இழுத்து மூடப்பட்டது. அந்த நிலையில், கேன்சர் நோயாளிகள் குறித்த கவலை எனக்கு வந்தது முதல் காரணம்.

இரண்டாவது, எனக்கு மிகப் பெரிய நட்பு வட்டம் இருக்கிறது. சமூகம் சார்ந்த பெரிய மனிதர்களின் தொடர்பும் இருக்கிறது. இதில் யாருக்கு கேன்சர் என்றாலும் என் தொடர்பு எண் பகிரப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் கேன்சர் குறித்து அவர்களிடம் நான் பேசுகிறேன். அவர்களை கவனித்துக் கொள்பவர்களுக்கும் வழிகாட்டல் தேவைப்படுகிறது. இதில் சில நேரம், சின்ன விஷயத்தைப் புரிய வைப்பதும் கடினமாய் இருந்தது. கடிதம் மூலமாகவும், வாட்ஸ்ஆப் வழியாகவும் அவர்களுக்கு எழுதினேன். அப்போது கைகளில் ஒரு குறிப்பு இருந்தால் மீண்டும் படிக்க பயனுள்ளதாய் இருக்கும் என்ற உந்துதல் இன்னுமொரு காரணம்.

மூன்றாவதாக அனுபவங்கள் மூலமாக வரும் எழுத்து எப்போதும் ஒரு முன்மாதிரி. ஒரு விஷயத்தை செய்தவர்கள் அல்லது முன்னெடுத்தவர்கள் சொல்லும்போது அதற்கு ஒரு தனி சிறப்பு உண்டுதானே. அதையும் தாண்டி நான் ஒரு எழுத்தாளர் என்பதும் இதற்கு முக்கியக் காரணம்.

*கேன்சர் நோயினை வெளிப்படையாக பேசாத மனநிலை ஏன் வருகிறது?

கேன்சரை நான் எதிர்கொண்டதையும், எனக்குத் தெரிந்தவர்கள் எதிர்கொண்டதையும் நான் இரண்டு விதமாக இங்கு பார்க்கிறேன். அதில் சின்ன வித்தியாசம் இருக்கிறது. சின்ன வயதில் இருந்தே நான் எதையும் வெளிப்படையாய் பேசிப் பழகியவள். முடிந்தவரை எதையும் மறைக்காமல் பொய் சொல்லாமல் இருப்பதே எனதியல்பு. எனக்கு வந்திருப்பதை நான் வெளிப்படையாய் சொன்னபோது எல்லோரும் எனக்கு ஆதரவாகவே இருந்தார்கள். அர்களால் நேரடியாக என்னிடமே பேசமுடிந்தது. சிலரால் என் வலியில் பங்கெடுக்கவும் முடிந்தது.

ஆனால் இந்த சமூகத்தில் நம் சந்தோஷம் என்பது மற்றவர்களையும் சார்ந்திருக்கிறது. சமூகத்தின் ஏச்சும் பேச்சும் நமது தின வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் ஏதோ ஒருவிதத்தில் பாதிக்
கிறது. இது காரணமாக இருக்கலாம்.

*கேன்சர் வருவதற்கான காரணம்?

தெளிவான காரணம் இன்னமும் கண்டுபிடிக்கப்பட வில்லை. இருந்தாலும் ஒரு நான்கு ஐந்து காரணங்களாக மருத்துவம் சொல்லுவது..

1. பரம்பரை

2.உடம்பில் உள்ள ஹார்மோனல் சார்ந்த விஷயம்.

3. நம்முடைய உணவுப் பழக்கம்.

4. சைக்கலாஜிக்கலான சில விஷயங்கள்.

உடல் சூட்டை தணிக்கும் பசலை!

பொதுவாக கீரை வகைகளை நாம் நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் அதே சமயம் நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும். கீரை வகையில் அதிக அளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பசலைக்கீரையினை நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலை நோய்கள் அண்டாமல் பாதுகாக்க முடியும். மேலும் உடலில் புதிய ரத்தத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றல் இந்த கீரைக்கு உண்டு. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடக்கூடிய இந்த கீரையில் உள்ள நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*பசலைக் கீரை இலையை அரைத்து மேல் நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி நீங்கும்.

*பசலைக் கீரை இலையை அரைத்து பற்றுப் போட்டால் வீக்கங்கள், கட்டிகள் குணமாகும்.

*பசலைக் கீரை வேரை எடுத்து அரைத்து நீர் விட்டுக் காய்ச்சி மிளகுத் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறைந்து, உடல் சூடு தணியும்.

*பசலைக் கீரையை பருப்புடன் வேகவைத்து சாப்பிட்டால் சிறுநீர் நன்றாகப் பிரியும். மலச்சிக்கல் தீரும்.

*பசலைக்கீரையோடு இஞ்சி, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி, கபம் நீங்கும்.

*பசலைக்கீரையின் தண்டின் சாற்றை குழந்தைகளுக்கு தந்தால் நன்றாக பசி எடுக்கும்.

*பசலைக் கீரை சாற்றுடன் கற்கண்டு சேர்த்து
குழந்தைகளுக்கு தந்தால் சளி, கபம் நீங்கும்.

*பசலைக் கீரை தாகத்தை தணிக்கும், சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலை தீர்க்கும்.

*பசலைக்கீரைச் சாற்றை அருந்தினால் தாய்ப்பால் அதிகம் சுரக்க செய்யும்.

- கீதா ரவி, சென்னை.

தொகுப்பு : மகேஸ்வரி நாகராஜன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

 • vinayagar-puduchery-30

  புதுச்சேரியை அதிரவைக்கும் மக்களின் அழுகுரல்.. மணக்குள விநாயகர் கோயில் யானை உயிரிழப்புக்காக கதறும் பக்தர்கள்..!!

 • sirpi-30

  சிற்பி திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கான தேசப்பற்று குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

 • mauna-loa

  உலகின் மிகப்பெரிய மவுனா லோவா எரிமலையில் வெடிப்பு: ஹவாய் தீவில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை..!

 • london-vertical-farm-29

  நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே விவசாயம்!: லண்டனில் பிரபலமாகி வரும் "வெர்டிக்கல் ஃபார்மிங்"

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்