SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மனம் எனும் மாயலோகம்!

2022-08-15@ 16:08:52

நன்றி குங்குமம் டாக்டர்

சோகத்தைக் கடப்போம்!

சோக உணர்வு பற்றியும் மனச்சோர்வுக்கும் அதற்குமான வித்தியாசங்களைப் பற்றியும் அறிந்துகொண்டோம். நம் அன்றாட வாழ்வில் அனைவருக்குமே சில சூழல்களில் இத்தகைய சோக உணர்வு உண்டாவது வழக்கமானதுதான். இதை அறிந்துகொண்டு, அதனைச் சரியாக எதிர்கொண்டாலே சோகவுணர்விலிருந்து நம்பிக்கையுடன் மீண்டுவிடலாம்.

*துக்கத்தை மனதுக்குள் அழுத்திக்கொள்ளாமல், மறைத்துக்கொள்ளாமல், அதனை ஏற்றுக்கொள்வது நன்மை பயக்கும். அப்போதுதான் அதை ஆற்ற முடியும்.

*மனம் விட்டு அழுதுவிடுதல் நல்ல பலன் அளிக்கும். கண்ணீரில் லூசைன் என்கெப்பலின் (Leucine - Enkephalin) என்ற எண்டார்ஃபின் இருக்கிறது. இது, வலியைக் குறைத்து மனதை இலகுவாக்குகிறது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அழும்போது மற்றவர்கள் அளிக்கும் ஆறுதல்கள் மனதுக்கு இதமளிப்பதாக இருப்பதால் நெருங்கிய நண்பர்களிடம்/ குடும்பத்தினரிடம் ஆறுதல் தேடுவது சிறந்தது.

*உங்கள் மனதில் உள்ளதை விவரித்து எழுதுவதும் பலன் அளிக்கும். தீர்வுகள் உடனடியாக தோன்றாவிட்டாலும்கூட சொற்கள் வழியே சுமை இறக்கிய ஆசுவாசம் கிடைக்கும். எழுதிய பின் அதை கிழித்துப் போட வேண்டும்/அப்புறப்படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள்.

*மனதுக்குப் பிடித்த இசையில் மூழ்குவதும் நல்ல நேர்மறையான உத்தி.

*சோக எண்ணங்களுக்கு வண்ணங்கள் கொடுக்கலாம், அதாவது மனதில் இருக்கும் உணர்வுகளை ஓவியமாக வரைவதின் மூலம் மனதை அமைதி கொள்ள செய்யலாம்.

*தனிமை உணர்வு துக்கத்தை மிகையாக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குடும்ப நபர்கள்/நண்பர்கள் ஆகியோருடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்.

*கடற்கரை, தோட்டம் என இயற்கை சூழலில் நேரத்தை கழிப்பதும் மனதை இலகுவாக்கும். குறைந்தபட்சம் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நின்று நிலாவை ரசிப்பதாகக் கூட
இருக்கலாம்.

*நல்ல உணவும் தூக்கமும் துக்க உணர்வை சமன்படுத்த மிகவும் உதவும்.

இது சோகமான உணர்வு மட்டுமா அல்லது டிப்ரஷனா என்ற குழப்பம் வந்தால் நீங்கள் மனநல ஆலோசகரிடம் ஒரு ‘கவுன்சலிங்’ போகலாம். சரியான நேரத்தில் மனநல ஆலோசனைகள் கிடைக்கும் போது, தேவையற்ற மன உளைச்சல் தடுக்கப்படும். பயமும் குழப்பமும் நீங்கும். அத்துடன் இது ஒரு தற்காப்பு நடவடிக்கையாக இருப்பதுடன், எதிர்மறை உணர்வுகளை கையாளும் திறனையும் உங்களுக்கு அளிக்கும். மனநல நிபுணரிடம் மனம் திறந்து உரையாடுவது நலம் பயக்கும்.

நமக்கு நெருக்கமானவர்கள் என்றும் நம்பகமானவர்கள் என்றும் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்கூட இல்லாதபோது, நம்மை வழிநடத்த மனநல ஆலோசகரை நாடுவது சிறந்தது. உறவினர்கள்/ நண்பர்களுக்கு நம்மைப் பற்றி ஒரு முற்சாய்வு (Prejudice) இருக்கும். உங்களின் பிரச்சனைகளை அவர்கள் புரிந்துகொள்வதில் அது சிக்கலை உண்டாக்கும்.

நண்பர்களிடம் பகிர்ந்தால் அது மற்றவர்கள் இடையே பரவும் அல்லது நம் ‘இமேஜ்’ உடையும் என்ற அச்சம் இருக்கும் இன்றைய காலகட்டத்தில், மனநல ஆலோசகர் என்பவர் நீங்கள் எவ்வித ஒளிவு மறைவின்றி பேசுவதற்கு ஒரு நம்பகமான நபராக இருப்பார். முக்கியமாக உங்களை ‘‘ஜட்ஜ்” செய்பவராக இருக்க மாட்டார்.

ஒருவேளை அது துக்க உணர்வாக மட்டும் இல்லாமல் மனச்சோர்வாக இருந்தால் அதன் சிகிச்சைக்கு உங்களை சரியாக வழி நடத்துவார். மனநல மருத்துவரை நாட வேண்டுமா அல்லது ஆலோசனைகள் போதுமா என்பதை கண்டறிவார். பொதுவாக உடல்நலனில் குறைபாடு என்றால் அது நம் அன்றாட வாழ்வியலில், நம் செயல்பாடுகளை முடக்கும் என்பதால் உடனடியாக மருத்துவரை நாடுகிறோம். இதுவே மனநலம் எனும் போது அது பெரிய சுணக்கங்களை ஏற்படுத்தும் வரையிலும் சிகிச்சைக்கு போவதில்லை.

‘‘நீதான் மனசைப் போட்டுக் குழப்பிக்கிறே, வீணாக கவலைப்படுற, நீ முடிவு செய்யணும், நீதான் மனசை சரி செஞ்சுக்கணும்”. இப்படி வேறு வேறு சொற்களில் சுற்றியுள்ளவர்கள் ‘அட்வைஸ் மழை’ பொழிவதைக் கேட்டிருப்பீர்கள். உடலுக்கு ஒரு நோய் என்றால் இப்படி அறிவுரை சொல்ல முடியுமா?! என நாம் சிந்திக்க வேண்டும். மனம் என்பதும் உடலின் பாகமே, அது மூளையின் மென்பொருள் (Software) என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எவை எல்லாம் மனநல குறைபாடு என்பதைப் பற்றிய விழிப்புணர்வு உண்டாகும் போதும், மனநல சிகிச்சைகள் பற்றிய சமூகக் களங்கம் நீங்கும் போதும் ஒட்டு மொத்த சமூகநலன் மேம்படும்.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • field-paint-former-27

  விநாயகர், புறா, கருஞ்சிறுத்தை!: வயலில் ஓவிய சிற்பம்... பல்வேறு வடிவங்களில் அசத்தும் பொறியாளர்..!!

 • Tirupati

  திருப்பதி கோயில் பிரம்மோற்சவத்திற்கான அங்குரார்பணத்தில் விஷ்வ சேனாதிபதி ஊர்வலம்

 • nepal_snowfall

  நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 2 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு; பலர் காயம்

 • italy-first-female

  இத்தாலியில் முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி

 • shooting-russia-school-26

  ரஷ்யாவில் பள்ளி வளாகத்தில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்