SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

X க்ளினிக்... சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

2022-07-29@ 17:25:45

நன்றி குங்குமம் டாக்டர்

சென்ற இதழில் ப்ரவீனின் மனதில் ஆண் உறுப்பு சிறிதாய் இருப்பது தொடர்பாய் உருவான சந்தேகம் பற்றிப் பேசத் தொடங்கியிருந்தோம். அதாவது, ஆண் உறுப்பு பெரிதாக இருந்தால்தான் படுக்கையில் தனது இணையரை அதிகமாக சந்தோஷப்படுத்த முடியும் என்ற வதந்தி ஒன்று நம் சமூகத்தில்உள்ளது. உண்மையில் இன்று நேற்றல்ல பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தில் நிலவி வரும் மூடநம்பிக்கைதான் இது. ஆனால், இதில் துளியும் மருத்துவ உண்மையில்லை. இந்த உலகில் மிகச் சிறந்த சமத்துவவாதி யார் என்று கேட்டால் நான் இயற்கை என்றுதான் சொல்வேன். இயற்கை போல் சமத்துவத்தைக் கடைப்பிடிக்கும் இன்னொருவர் யாருமே இல்லை.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் உலகில் உள்ள ஆணுறுப்புகள் அனைத்துமே கிட்டதட்ட சமம்தான். உதாரணமாக ஒருவருக்கு இயற்கையாகவே சற்று பெரிய ஆணுறுப்பு இருக்கிறதென வைத்துக் கொள்வோம். அவருக்கு விரைப்புத்தன்மை உருவாகும்போது பெரிதாகும் விகிதம், இயற்கையாகவே சிறிய ஆணுறுப்பு உள்ள ஒருவருக்கு விரைப்புத்தன்மை வரும்போது பெரிதாகும் விகிதத்தைவிடக் குறைவாகவே இருக்கும். அதாவது, சிறிய ஆணுறுப்போ பெரிய ஆணுறுப்போ விரைப்புத் தன்மையின்போது கிட்டதட்ட ஒரே அளவுக்கு வந்துவிடும். இதுதான் இயற்கையின் அற்புதமான ஏற்பாடு.

 பொதுவாக, ஓர் ஆணுறுப்பின் வளர்ச்சியானது, குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை சிறிதளவே இருக்கும். ஐந்து முதல் பதிமூன்று வயது வரை இயல்பான வளர்ச்சி இருக்கும். பதிமூன்று முதல் பத்தொன்பது வரை நல்ல வளர்ச்சி இருக்கும். பத்தொன்பது வயதுக்குப் பிறகு ஒருவரின் ஆணுறுப்பு என்ன வளர்ச்சி நிலையில் இருக்கிறதோ அதுதான் ஒருவரின் இயல்பான வளர்ச்சி நிலை என எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வுலகில் எந்த மருத்துவராலும் ஒருவரின் இயல்பான ஆணுறுப்பைப் பெரிதாக்க இயலவே இயலாது. யாராவது உங்களிடம் வந்து உங்கள் உயரத்தை அதிகமாக்கிக்காட்டுகிறேன். உங்கள் கைகளின் நீளத்தைப் பெரிதாக்கிக்காட்டுகிறேன் என்றால் நம்புவீர்களா? அதுபோலத்தான் ஆணுறுப்பும் இயற்கையான அளவுக்கு மீறி மானுட முயற்சியால் வளரச் செய்யவியலாதது.

பொதுவாகவே ஆணுறுப்பு என்பது எல்லா காலத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்காது. வெயில், மழை, அறையின் சீதோஷ்ணம், உடல்நிலை, மனநிலை ஆகியவற்றுக்குத் தகுந்ததுபோல ஒவ்வொரு தருணத்தில் ஒவ்வொரு அளவில் இருப்பது இயல்புதான். தூங்கி எழும்போது சிலருக்கு ஆணுறுப்பு விரைப்புத்தன்மையுற்று பெரிதாகி இருப்பதைக் கவனித்திருக்கலாம். அதன் பெயர் எதிர்விளைவு விரைப்புத்தன்மை (Reflex Erection) சிறுநீர்ப்பையில் சிறுநீர் சேர்ந்து அது பெரிதாவதால் அதன் உபவிளைவாக ஆணுறுப்புக்கும் அதிக ரத்த ஓட்டம் பாய்ந்து அது பெரிதாகிறது.

பெரிய ஆணுறுப்பு இருந்தால்தான் இணையைத் திருப்தி செய்யவியலும் என்பது ஒரு மூட நம்பிக்கை. ஓர் ஆணுக்கு விரைப்புத்தன்மை வந்த பிறகு ஆணுறுப்பு இரண்டு அங்குலம் அல்லது ஐந்து செ.மீ நீளம் இருந்தாலே போதுமானது. ஏனெனில் பெண்ணுறுப்பு கிட்டதட்ட ஆறு அங்குலம் இருந்தாலும் முதல் இரண்டு அங்குலத்தில்தான் அவர்களின் உணர்ச்சி நரம்பு அதிகமாக இருக்கிறது. எனவே, அதனைத் தூண்டு விடும்படியாக ஆணுக்கு இரண்டு அங்குலம் நீளம் கொண்ட ஆணுறுப்பு இருந்தாலே போதுமானது பெண்ணை முழுமையாகத் திருப்திபடுத்த இயலும்.
 
மூக்குப் பெரிதாக இருப்பதால் எப்படி ஒருவரால் அதிகமாக சுவாசிக்க இயலாதோ அப்படித்தான் ஆண்குறி பெரிதாக இருப்பதாலேயே அவரால் ஒரு பெண்ணை முழுமையாகத் திருப்தி செய்ய இயலும் என்று சொல்லவியலாது. படுக்கையறையில் இணையுடன் எப்படி ரொமான்ஸாக நடந்து கொள்கிறோம். எவ்வளவு அன்னியோன்யத்தை வெளிப்படுத்துகிறோம். எவ்வளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதைப் பொருத்துதான் படுக்கையறை திருப்தியும் நிறைவும் இருக்கும்.

பெண்ணுடலை கிளர்ச்சியடையச் செய்யும் பாலின்பம் வெறுமனே பெண்ணுறுப்பிலும் உடலுறவில் இயங்குவதிலும் மட்டும் இல்லை. பெண்ணுறுப் பிலேயே கிளிட்டோரியஸ் என்றொரு பகுதி உண்டு. அதனைச் சரியாகத் தூண்டிவிட்டாலும் பெண்களுக்கு மிக நல்ல கிளர்ச்சி கிடைக்கும். மேலும் பெண்களின் உச்சி முதல் உள்ளங்கால் வரை கிளர்ச்சி மண்டலங்கள் (Erogenous zones) ஆங்காங்கே உள்ளன. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். உதாரணமாக சிலருக்கு கழுத்தில் முத்தமிடுவது பிடிக்கும். சிலருக்கு பாத விரல்களை தொடுவது கிளர்ச்சி தரும். இப்படி தங்கள் இணைக்கான கிளர்ச்சி மண்டலம் எதுவெனத் தெரிந்து அதனைத் தொட்டும் வருடியும் நிமிண்டியும் விளையாடி பாலியல் கிளர்ச்சியைத் தர வேண்டியது ஓர் இணையின் கடமை. எனவே, படுக்கை இன்பம் என்பது வெறுமனே புணர்தலில் மட்டும் இல்லை.

சராசரியாக ஓர் ஆணுறுப்பு சாதாரண நிலையில் 3.6 இஞ்ச் அல்லது 9.1 செ.மீ நீளம் இருக்கும். விரைப்புத் தன்மையடையும்போது 5.2 இஞ்ச் அல்லது 13.1 செ.மீ நீளம் இருக்கும். ஒருவருக்கு விரைப்பான நிலையிலேயே 7 செ.மீக்கும் குறைவாக இருக்கும் என்றால் அதனை சிறிய ஆணுறுப்பு (Micor Penis) என்கிறோம். இதற்கு டெஸ்டோஸ்ட்ரான் ஹார்மோன் குறைபாடுகள் முதல் பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இதனை மருத்துவரீதியாகப் பரிசோதித்து அந்தக் காரணத்துக்கான சிகிச்சை கொடுத்தால் ஆணுறுப்பு முழு விரைப்படைய வாய்ப்புள்ளது. உதாரணமாக டெஸ்டோஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பில் குறைபாடு இருந்தால் அதற்கான ஹார்மோன் மாத்திரைகள் உள்ளன. அதனைச் சாப்பிட்டால் ஆணுறுப்புக்கு சராசரி விரைப்பு நிலை கிடைக்கும்.

ஆணுறுப்புப் பெரிதாக இருந்தால்தான் ஒரு பெண்ணைத் தாயாக்க முடியும் என்ற கருத்தும் தவறானதுதான். ஆணின் விதைப்பைகளில்தான் விந்தணுக்கள் தயாராகின்றன. எனவே, ஆணுறுப்பின் அளவுக்கும் குழந்தைப் பேறுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.ஆணுறுப்பு சிலருக்கு பார்வைக்கு சிறிதாகத் தோன்றவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக சற்று உடல் பருமனாக உள்ளவர்களுக்கு அடிவயிற்றுக் கொழுப்பு அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் ஆணுறுப்பை மேலிருந்து நோக்கும்போது சிறிதாக இருப்பது போல் அவர்களுக்குத் தோன்றும். இதனை புதையுண்ட ஆணுறுப்பு (Buried Penis) என்பார்கள். அடிவயிற்றுக் கொழுப்பை நீக்கினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சனை சரியாகும்.

சமீபத்தில் நடந்த ஒரு கணக்கெடுப்பில் எழுபத்தெட்டு சதவீதம் பெண்கள் எங்களுக்கு ஆணுறுப்பின் அளவைப் பற்றிக் கவலை இல்லை. படுக்கையில் தங்கள் இணை நடந்துகொள்ளும் விதம் வெளிப்படுத்தும் காதல் இவைதான் முக்கியம் என்று தெரிவித்திருக்கிறார்கள் என்பதையும் இங்கு நாம் நோக்க வேண்டும். சிலர் ஆணுறுப்பு மெலிதாக உள்ளதென்றும் தடிமனாக உள்ளதென்றும் கவலைப்படுவார்கள். இதுவும் தேவையற்ற கவலைதான். தடிமனோ மெலிதோ ஆணுறுப்புக்கு விரைப்புத்தன்மைதான் அவசியம். பெண்ணின் பிறப்புறுப்பில் ஓர் ஆணுறுப்பு நன்றாகச் சென்றுவர விரைப்புத்தன்மைதான் அவசியம்.

சிலர் பெரிய ஆணுறுப்பால் பெண் உறுப்புக்குள் நுழைக்க முடியுமா என்று கவலைப்படுவார்கள். இதுவும் தவறான புரிதல்தான். பெண்ணுறுப்பு இயற்கையின் மாபெரும் படைப்பு. ஒரு குழந்தையின் தலை வெளியே வருமளவுக்கு சுருங்கி விரியும் தன்மையுடையது அது. அதனால் இந்தக் கவலைகளும் தேவையில்லை. நமக்கு என்ன இருக்கிறது எப்படி இருக்கிறது என்பதில் விஷயமே இல்லை. இருப்பதை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம்.

தொகுப்பு: கலை வளரும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • eartheyaa

  ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

 • kerala-fest-beauty-28

  அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

 • isreal-22

  இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

 • ADMK-edappadi-palanisamy

  அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

 • germanysstt1

  ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்