ADHD சிறப்புக் குழந்தைகளுக்கான பிசியோதெரப்பி!
2022-07-29@ 17:12:44

நன்றி குங்குமம் டாக்டர்
பிசியோதெரப்பியைப் பொருத்தவரை மூட்டுகளில் பிரச்னை உள்ளவர்கள், முதியவர்களுக்கானது என்ற பொதுவான கருத்து உள்ளது. ஆனால், பிசியோ தெரபியிலேயே பலவகையான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. அதில் குழந்தைகளுக்கான பிசியோதெரப்பியும் ஒன்று. குறிப்பாக, சிறப்புக் குழந்தைகளுக்கு எனப் பிரத்யேக பிசியோதெரப்பிப் பயிற்சிகள் உள்ளன. அதில், ஏடிஹெச்டி எனும் கவனக் குறைபாடு மற்றும் அதீத துறுதுறுப்புத்தன்மை நிறைந்த குழந்தைகளுக்கான பயிற்சிகள் என்னென்ன? சிறப்புக் குழந்தைகளுக்கான பிசியோதெரப்பி பயிற்சிகள் என்னென்ன என விளக்குகிறார் பிசியோதெரப்பிஸ்ட் புண்ணியகோடி.
ADHD என்பது என்ன?
கவனக்குறைபாடு மற்றும் அதீத துறுதுறுப்புத்தன்மைகொண்ட மாறுபாடு என்பதையே ஏடிஹெச்டி (Attention deficit hyperactivity disorder ADHD) என்கிறோம். இந்தக் குழந்தைகள் இரண்டு வகையில் இருப்பார்கள். முதல் வகை சிறிது நேரம்கூட ஓர் இடத்தில் நிற்காமல் துறுதுறுவென்று இருப்பார்கள்.
இன்னொரு வகை மிகவும் அமைதியாக எங்கேயோ பார்த்தபடி எதிலும் கவனமில்லாமல் ஒரே இடத்தில் இருப்பார்கள். இதில் துறு துறு குழந்தைகளுக்கு எனர்ஜி லெவல் கூடுதலாக இருக்கும். எனவே, இவர்களுக்கான சிகிச்சை முறை, ரன்னிங் போன்ற அதிகப்படியான உடல் உழைப்புக்கான பயிற்சிகளை அளித்து அவர்களது எனர்ஜி லெவலை குறைப்பதுதான். பின்னர், அவர்களை ஓர் இடத்தில் உட்கார வைத்து, அவர்களிடம் படிப்பு சம்பந்தப்பட்டோ அல்லது மற்ற விஷயங்களையோ கற்றுத்தர வேண்டும்.
அடுத்தவகையான குழந்தைகள் பெரும்பாலும் அமைதியைதான் விரும்புவார்கள். மேலும், இவர்கள் தொடு உணர்வை விரும்புபவர்களாகவும் இருப்பார்கள். இதனால், அவர்களது கையைப் பிடித்து வருடிவிடுவது, நட்டைவிடுவது போன்ற தொடுதல் பயிற்சிகளின் மூலமும் சிகிச்சை அளிக்கலாம்.சில குழந்தைகள் பார்ப்பதற்கு நார்மல் குழந்தைகளைப் போன்றுதான் இருப்பார்கள். ஆனால், பள்ளியில் இவர்களால் போர்டில் எழுதிப் போடுவதை சரியாக எழுதவோ, படிக்கவோ முடியாது. வகுப்பறையில் ஆசிரியர் சொல்வதைக் கவனிக்காமல் வேறு ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள். இதுவும் ஒரு வகையான பாதிப்புதான் என்பதை உணர்ந்து, மருத்துவரை அணுகினால் அந்தக் குழந்தைகளையும் சென்சரி இன்டகிரேஷன் தெரப்பி மூலம் சரி செய்துவிடலாம்.
பொதுவாக எந்தவொரு பிசியோதெரபி பயிற்சியும் இவ்வளவு நாளில் சரியாகிவிடும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. அது அந்த குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பொருத்தது. பயிற்சியை விட்டுவிட்டு செய்யாமல் தொடர்ந்து முறையாக எடுத்துக் கொள்ளும்போது விரைவில் குணமடைவார்கள்.
தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்
சிறப்பு குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்
சிறப்புப் குழந்தைகளின் பயிற்சிக்கும் சிகிச்சைக்குமாகவே தேசிய திறந்தவெளிப் பள்ளி (National Institute of Open School) மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிறப்புக் குழந்தைகளைச் சேர்க்கலாம். அவர்கள் இந்தக் குழந்தைகளுக்கு தகுந்தவாறு பிரத்யேகமான பாடத்திட்டங்களைக் கொண்டு பள்ளிப் பாடங்களைச் சொல்லிக் கொடுப்பார்கள். இது தவிர அரசு சார்ந்து இந்தக் குழந்தைகளுக்கு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும் மத்திய அரசு சார்பில் இவர்களுக்காக ‘நேஷனல் டிரஸ்ட்‘ இருக்கிறது. இதன் மூலம் ‘நிரமயா கார்ட்’ என்ற காப்பீட்டு அட்டை போன்ற ஓர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
இதைக்கொண்டு சிறப்புக் குழந்தைகளுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள், சிகிச்சைகள் ஆகியவற்றுக்கு நிதி வழங்கப்படுகிறது. மேலும் குழந்தைக்கான படிப்புச் செலவு, பிசியோதெரப்பி, ஆக்குபெஷனல் தெரப்பி, ஸ்பீச் தெரப்பி என்று எந்தவகை சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அதற்கான கட்டணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான தொகையை அரசு திரும்பத் தருகிறது.
சென்னையில் கே.கே.நகரில் உள்ள இ எஸ்.ஐ மருத்துவமனையில் இதற்கான அமைப்பு ஒன்று இருக்கிறது. அங்கே குழந்தையை அழைத்துச் சென்றால் அவர்கள் குழந்தை எந்த பிரிவில் வருகிறது என்பதை ஆராய்ந்த பின் தேவையான உதவிகளைச் செய்து தருவார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் சமீபத்தில் தசை சிதைவு நோய் உள்ள குழந்தைகளுக்கு கூடுதல் நிதி கிடைக்கும்படியான திட்டங்களும் அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. அதேபோன்று காது கேளாத குழந்தைகளுக்குக் காது கேட்க பொருத்தும் கருவிகள் வாங்குவதற்கான செலவு அதிகமாக இருக்கும். இதனை எளிய மக்கள் வாங்குவது கடினம். எனவே, முதல்வர் பாதுகாப்பு இன்ஸ்சூரன்ஸில் பதிவு செய்துகொண்டால் தேவையான உதவிகள் பெறலாம்.
மேலும் செய்திகள்
குழந்தைகளுக்கான புற்றுநோய்… தடுக்க… தவிர்க்க!
பவுண்டரிகளை குழந்தைகள் உருவாக்குவதில்லை!
ஞானப்பல்… ஒரு பார்வை!
காற்று மாசால் ஏற்படும் மூளைப் பாதிப்பு!
குழந்தைகளுக்கான புற்றுநோய்…
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு... காரணங்களும் தீர்வுகளும்!
ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி