SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கல்லீரல் அழற்சியை வெல்வோம்!

2022-07-29@ 16:47:59

நன்றி குங்குமம் டாக்டர்

மனிதன் உடலில் மூளையை போல சமஅளவு எடைகொண்ட உறுப்பு கல்லீரல். இது, மூளைக்கும் இருதயத்துக்கும் இணையான முக்கிய உடல் உறுப்பும் கூடத்தான். நாம் உட்கொள்ளும் உணவுகளை ஆற்றலாக மாற்றி தேவையான சத்துக்களைப் பிரித்துக் கொடுப்பதுடன், தேவையற்றதை வெளியேற்றவும் செய்கிறது. இத்தகைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்பு ‘ஹெபடைடிஸ்’ எனப்படுகிறது. இந்த ஹெபடைடிஸ் நோயால் உலகம் முழுவதும் 30 கோடிக்கும் அதிகமான மக்களும், இந்திய அளவில் சுமார் 4 கோடி முதல் 7 கோடி வரையிலான மக்களும் பாதிக்கப்பட்டிருப்பது கணக்கிடப்பட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரைப்பை மற்றும் குடல் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஜி.ஆழ்வார் ராமானுஜம் அவர்களிடம் ஹெபடைட்டிஸ் பற்றிக் கேட்டோம்.

கல்லீரல் அழற்சி

ஹெபடைடிஸ், கல்லீரலில் ஏற்படும் ஒருவித பாதிப்பாகும். ‘கல்லீரல் அழற்சி நோய்’ என்று இதைக் குறிப்பிடலாம். இந்த பாதிப்பு பொதுவாக மதுப்பழக்கம், கொழுப்பு உணவுகளை அதிக அளவில் உணவாக உட்கொள்வது, வைரஸ்கள் ஆகியவற்றால் உருவாகிறது. மேலும், இந்நோய் உடையவரின் ரத்தத்தை மற்றவர்களுக்கு செலுத்துதல் மற்றும் இந்த நோய் உடையவர்களுடன் உடலுறவு கொள்வது போன்றவற்றாலும் பரவும் தன்மையுடையது.

ஹெபடைட்டிஸ் வகைகள்

இந்த ஹெபடைடிஸ் நோயில் ஏ, பி, சி டி, இ என 5 வகைகள் உள்ளன. இதில் ‘ஏ’ வகையின் அறிகுறிகள் பெரும்பாலானோருக்கு தென்படும். ஆனால், இந்த வகையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இந்த வகை நோய் ஏற்பட அசுத்தமான உணவுகள், மது போன்றவை காரணமாகும். ‘பி’ மற்றும் ‘சி’ ஆகிய வகையான ஹெபடைடிஸ் நோய்கள், பாதிக்கப்பட்டோரிடம் இருந்து ரத்தம் பெறுதல், விந்து போன்றவற்றாலும் தொற்றுகிறது. இந்த வகை தொற்று ஏற்பட்டு முறையாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ‘டி’ மற்றும் ‘இ’ ஆகிய இரண்டு வகை ஹெபடைடிஸ் அரிதானது. இதில் ‘இ’ வகை பெரும்பாலும் மகப்பேறு பெண்களையே அதிகம் தாக்கும் தன்மையுடையது.

அறிகுறிகள்

உடல் சோர்வு, பசியின்மை, அடிக்கடி குமட்டல் மற்றும் வாந்தி, வயிறு வீக்கம், காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற அறிகுறிகள் முக்கியமானவை. இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனை மூலம் கல்லீரல் செயல்பாட்டைக் கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி நோயின் தன்மையைப் பொறுத்து மருந்து எடுத்துக்கொள்ளலாம்.

ஹெபடைட்டிஸ் உஷார்!

மதுப் பழக்கம் உள்ளவர்கள், கொழுப்பு உணவுகளை அதிகம் உட்கொள்பவர்கள், சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்பவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள் ஆகியோரை இந்த நோய் எளிதில் தொற்றிக்கொள்ளும் அபாயம் உள்ளது. ஆகவே, இந்தப் பழக்கங்கள் உடையவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஒருவேளை நோய்த் தொற்று ஏற்பட்டால் உடனடியாக பரிசோதனை மூலம் கண்டறிந்து ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்க துவங்கி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து மற்றும் உணவுகளை உட்கொண்டால் எளிதில் குணப்படுத்த முடியும். மேலும் ‘பி’ வகை நோய்த்தொற்றுக்குத் தடுப்பூசி உள்ளது. இந்தத் தடுப்பூசி அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் எளிதில் கிடைக்கக்கூடிய வகையில் உள்ளது. தடுப்பூசி மூலம் இந்த வகைத் தொற்றைத் தடுக்கலாம்.

இந்தத் தொற்று பரவாமல் காக்க பிறருக்கு ரத்ததானம் செய்பவர்கள் ஹெபடைடிஸ் பரிசோதனையை செய்துகொள்வது நல்லது. இத்தகைய தொற்று உள்ள நபர்கள் உடலுறவின் போது உரிய தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுதல், சுகாதாரமான உணவுகள், கொழுப்பு குறைவான உணவுகள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுதல் கட்டாயம். மதுப்பழக்கத்தை முற்றிலும் கைவிடுதலும் வரும்முன் காக்கும் வழிகளாகும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களில் பத்து சதவீதம் பேர் மரணமடைந்து வருவது இதன் ஆபத்தை உணர்த்தும். இந்த நிலையைப் போக்க இந்த நோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 28ம் தேதியை உலக ஹெபடைட்டிஸ் தினமாக கடைபிடிக்கிறது.

தொகுப்பு:  முத்துசெல்வக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • America_electric plane

  முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

 • chennai-heavy-rain

  சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

 • tirupati-brahmotsavam-28

  கோவிந்தா! கோவிந்தா!: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2ம் நாள் பிரமோற்சவம் கோலாகலம்.. சின்ன சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா..!!

 • turist_world

  தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்ட உலக சுற்றுலா தினம்... சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்..!!

 • noru-philippines

  பிலிப்பைன்ஸ் நாட்டை புரட்டிப்போட்ட நோரு புயல்!: வெள்ளக்காடான குடியிருப்பு பகுதிகள்.. 52 ஆயிரம் பேர் பாதிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்