SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

X க்ளினிக்... சொல்லித் தெரிவதுதான் மன்மதக் கலை!

2022-07-22@ 17:41:10

நன்றி குங்குமம் டாக்டர்

செக்ஸாலஜி மருத்துவர் ராயண ரெட்டி

செக்ஸ்… இந்த வார்த்தையைப் பொதுவெளியில் கேட்டாலோ படித்தாலோ பலருக்கும் ஒருவித அசெளகர்ய உணர்வு உருவாகிறது. சிலருக்கு உள்ளுக்குள் குறுகுறுப்பு இருந்தாலும் இதெல்லாம் வெளிப்படையாகப் பேச வேண்டிய விஷயமா என்ற தயக்கமும் குழப்பமும் இருக்கும்.நம் இந்தியப் பண்பாட்டுக்கே உரிய அடிப்படையான மனத் தடை இது. உண்மையில் காமசூத்ராவும் கொக்கோகமும் எழுதி உலகுக்கே காமத்தின் விஞ்ஞானத்தை வழிகாட்டிய மரபு நம்முடையது.

ஆனால், இடையில் உருவான சில பண்பாட்டு மனத்தடைகளால் காமம் என்பதை நாம் ஏதோ விலக்கப்பட்ட கனி போல் பாவிக்கத் தொடங்கிவிட்டோம். இதன் மோசமான விளைவுகளை நம் சமூகம் அன்றாடம் எதிர்கொண்டு வருகிறது. சின்ன... சிறிய சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்படுவது முதல் பாலியல் இச்சைகளுக்காக விலங்குகளைத் துன்புறுத்துவது வரை வக்கிரங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.

பாலியல் என்றால் என்ன?

செக்ஸின் அடிப்படைகள் எவை என்பதைப் பற்றிய மருத்துவ விஞ்ஞான அடிப்படையிலான புரிதல்கள் இல்லாததன் விளைவே இது போன்ற துர்சம்பவங்கள். செக்ஸ் தொடர்பான சில தவறான கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக நம் சமூகத்தில் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தி ஒருபுறம் போலி டாக்டர்களும் போலி லேகிய வியாபாரிகளும் மக்களின் அறியாமையைச் சுரண்டி கல்லாகட்டி வருகிறார்கள். இவர்களை நம்பி ஏமாறும் கூட்டமோ நாள்தோறும் அதிகரித்துவருகிறது.

இது, நவீன டெக்னாலஜி யுகம், விரல் சொடுக்கினால் கையில் உள்ள அலைப்பேசியிலேயே தகவல்கள் கொட்டும். எந்த ஒரு விஷயத்தையும் எவரின் உதவியும் இன்றி இணையத்தில் தேடித் தெரிந்துகொள்ளலாம் என்றாகிவிட்டது. முன்பு எல்லாம் பாலியல் சார்ந்த விஷயங்களைப் படிக்க மஞ்சள் புத்தகங்கள் முதல் பாலியல் திரைப்படங்கள் வரை பலவற்றையும் நம்பியிருந்தது ஒருதலைமுறை.

தப்பும் தவறுமாய் அதில் காமம் பற்றி சொல்லப்பட்ட கதைகளை நம்பிப் படித்தே பிற்பாடு அனுபவம் வேறாய் இருப்பதைக் கண்டுகொண்டார்கள். இன்றோ போர்னோ வெப்சைட்கள் உடல்களாய் கொட்டுகின்றன. அடல்ஸ் வயதை நெருங்கும் முன்பே இளசுகள் பாலியல் மீதான நாட்டத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். ஆனால், என்னதான் தகவல் பெருக்க யுகமாய் இருந்தாலும் அறியாமை என்னவோ அப்படியேதான் உள்ளது. சொல்லப் போனால் முன்பைவிட அது அதிகரிக்கவே செய்திருக்கிறது.

யூட்யூப்பை திறந்தால் பாலியல் அறிவுரைகள், செக்ஸ் பற்றிய விளக்கங்கள் என்ற பெயரில் போலி டாக்டர்களும் போலி நிபுணர்களும்தான் வியாக்கானம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில் பாலியல் கல்வியை முறையாக மக்களிடம் சொல்ல வேண்டிய தேவை இன்னமும் இருக்கிறது. அதற்காகத்தான் இந்தத் தொடர். செக்ஸ் என்பது என்ன? அதன் அடிப்படைகள் என்னென்ன என வரும் வாரங்களில் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம். இந்தியாவின் தலைசிறந்த செக்ஸாலஜிஸ்ட் மருத்துவர் நாராயண ரெட்டி நம்மிடம் இது குறித்து உரையாடவிருக்கிறார்.

வணக்கம் வாசகர்களே!

செக்ஸ் என்றதும் மனதுக்குள் மின்னல் வெட்ட ஆர்வமும் குறுகுறுப்புமாய் வாசிக்கத் தயாராகிவிட்டிருப்பீர்கள்தானே… யெஸ்! இந்தப் பகுதியில் செக்ஸ் என்பதை மருத்துவ விஞ்ஞானத்தின் அடிப்படையில் முழுமையாக நாம் உரையாடப் போகிறோம். ஏனெனில் நம் சமூகத்தில் செக்ஸ் அல்லது காமம் பற்றி இருக்கும் கருத்துகள் பெரும்பாலும் விஞ்ஞானப்பூர்வமானவை அல்ல. அவை செவி வழிச் செய்தியாகப் பரப்பப்படுபவை. பெரும்பாலும் தவறானவை. மனித உடல் பற்றிய போதிய புரிதலின்மையிலிருந்து உருவாகுபவை. ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு புதிய உயிரை உருவாக்கும் அற்புத வைபவமே செக்ஸ். மற்ற எல்லா உயிரினங்களுக்கும் செக்ஸ் என்பது இனப்பெருக்கத்துக்கான செயல்பாடு மட்டும்தான்.

ஆனால், மனிதனுக்கு மட்டுமே அது உடலின்பம் தரும் போகமாகவும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ அது குறித்து இத்தனை தவறான புரிதல்கள் சமூகத்திலிருக்கின்றன. இதோ இங்கொரு சம்பவம் சொல்கிறேன்.ப்ரவின் இருபத்தெட்டு வயது இளைஞர். வங்கியில் வேலை செய்கிறார். கை நிறைய சம்பளம். வீட்டில் பெண் பார்க்க அழைத்துச் சென்றார்கள். புகைப்படத்தில் பார்த்தபோதே பெண்ணின் அழகில் மெர்சலாகிவிட்டான் ப்ரவின்.

நேரிலோ அதைவிட அழகாக இருந்தாள் அவன் மனைவியாக வரப் போகும் அஞ்சலி. அவள் கையில் காபி டம்ளரோடு பட்டுப்புடவை சரசரக்க, மல்லிகைப் பூ மணக்க இவனை நோக்கி வரும்போதே மனதுக்குள் அனிருத் இசையில் அழகான டூயட் ஒன்றைப் பாடத் தொடங்கிவிட்டான். ’இப்படி ஒரு தேவதையா நமக்கு மனைவி’ என்ற எண்ணத்தில் சந்தோஷம் தாங்க முடியவில்லை. தன் நண்பர்களிடம் எல்லாம் சொல்லிச் சொல்லி பூரித்தான். நெருக்கமான ஓரிரு நண்பர்களுக்கு மணப்பெண்ணின் புகைப்படத்தையும் காட்டினான். அவர்களுக்கு மனதுக்குள் பொறாமை எட்டிப் பார்த்தாலும் அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் அவனை வாழ்த்தினார்கள். ‘இந்த சந்தோஷத்தைக் கொண்டாட பார்ட்டி வேண்டும்?’ என்றான் ஒருவன்.

ஒரு உயர்தர பாரில் ப்ரவினும் அவனது நண்பர்கள் இருவரும் அமர்ந்திருந்தார்கள். அதில் ஒருவன் அப்போதுதான் திருமணமானவன். மிதமான போதையில் பேச்சு செக்ஸ் பற்றி திரும்பியது. திருமணமான நண்பன் சொன்னான்.  ‘டேய் பிரவின் உனக்கு ஒண்ணு தெரியுமா? பொண்டாட்டி அழகா இருந்தா புருஷன் கவனமா இருக்கணும்டா’ என்றான்.

‘என்னடா சொல்றே…’ என்றான் பிரவின்.‘ஆமாடா… பொண்ணுங்களை படுக்கையில் திருப்திபடுத்தறது ரொம்ப முக்கியம். இல்லாட்டி பட்சி பறந்துபோயிடும்’ என்றான். ‘டேய்! ஒரு யூட்யூப்பில் பார்த்தேன்டா… ஆண் குறி பெருசா இருந்தால்தான் பொண்ணுங்களை நல்லா திருப்தி செய்ய முடியுமாம்’ ஒரு வைத்தியரு சொல்லிட்டு இருந்தாருடா’ என்றுவிட்டு இன்னொரு நண்பன் சிரித்தான்.

ப்ரவினுக்கு பகீரென்று இருந்தது. அவன் தலையில் இடியே இறங்கியது போலானது. சிறு வயதிலிருந்தே தன்னுடைய ஆண்குறி சிறியதோ என்ற எண்ணம் ப்ரவினுக்கு இருந்தது. பள்ளி நாட்களில் கழிவறையில் சிறுநீர் கழிக்கும்போது சக நண்பர்களுடையதைப் பார்த்திருக்கிறான். மற்றவர்களோடு ஒப்பிடும்போது தன்னுடையது ஏன் சிறிதாக இருக்கிறது என்று தோன்றும். முன்பும் ஒரு சமயம் யாரோ ஒருவர், ‘ஆண் குறி பெரிதாக இருந்தால்தான் பெண்களைப் படுக்கையில் திருப்தி செய்ய முடியும்’ என்று சொன்னதைக் கேட்டிருக்கிறான். அதுவும் இப்போது நினைவுக்கு வந்து தொலைத்தது. அதன் பிறகு பார்ட்டியில் நடந்தது, பேசியது எதுவுமே நினைவில்லை. மனம் முழுக்க இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது.

மறுநாள் அலுவலகம் செல்லும் வழியில் இதே யோசனையாய் சென்றுகொண்டிருந்தபோது சிக்னலில் வண்டியை நிறுத்தினான். சாலையின் ஓரத்தில் இருந்த மின்சார கம்பத்தில் ஒரு மஞ்சள் நோட்டிஸ் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்தான்.‘பாலியல் பிரச்சனையிலிருந்து விடுதலை’ என்றிருந்தது. மனம் பரபரக்க அதனை தனது செல்போனில் போட்டோ எடுத்துக்கொண்டான். அலுவலகத்துக்குப் போய் விடுமுறை சொல்லிவிட்டு, நேராக அந்த முகவரியிலிருந்த செக்ஸ் டாக்டரைப் போய்ப் பார்த்தான். அங்கு அவனுக்கு முன்பு இருவர் இருந்தனர். பதட்டமாய் காத்திருந்தவன் டாக்டரைச் சந்தித்ததும், படபடவென நடந்ததை எல்லாம் சொன்னான்.

டாக்டர் ஒருவித ஆமோதிப்போடு அவன் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தவர் பிறகு சொன்னார்… ‘உங்களுக்கு இருப்பது போல பலருக்கு ஆண் குறி சிறு வயதிலிருந்தே சின்னதா இருக்கும் பிரச்சனை இருக்கு தம்பி. கவலைப்படாதீங்க எங்கிட்ட வந்திட்டீங்க இல்லை. சரி செய்திடலாம். நம்மோட மருந்தை நாற்பத்திரண்டு நாட்கள் தினமும் ராத்திரி சாப்பிட்டு வந்தா உங்களோடது பெருசாகிடும். பிறகு நீங்க ஈசியா உங்க துணையை திருப்திப்படுத்தலாம்’ என்றார்.

ப்ரவினுக்கு உயிரே வந்தது போலிருந்தது. அப்பாடா என நிம்மதியானான். டாக்டரிடம் மருந்தை வாங்கிக்கொண்டு கேட்ட பீஸைக் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தான். ஒரு பிரச்சனையை சமாளித்துவிட்டோம் எனக் கருதிக்கொண்டான். இப்போது வாசகர்களிடம் சில கேள்விகள். ப்ரவினின் ஆண் குறி சிறிதாக இருப்பது உண்மையிலேயே சிக்கலானதுதானா? சிறிய ஆண் குறியால் பெண்களைத் திருப்தி செய்யவியலாதா? மருத்துவ விஞ்ஞானம் என்ன சொல்கிறது? அடுத்த இதழில் பேசுவோம்.

(கலை வளரும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

 • cherry-blossom-tokyo

  டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!

 • baaagh11

  பாக்தாத் சர்வதேச மலர் திருவிழாவின் மனதை கொள்ளை கொள்ளும் படங்கள்!!

 • somaliya-dead-2

  சோமாலியாவில் நிலவும் பஞ்சம்: கடந்த ஆண்டு மட்டுமே 43,000 பேர் உயிரிழப்பு

 • aus-fish-21

  ஆஸ்திரேலியாவின் டார்லிங் ஆற்றில் திடீர் வெப்பநிலை மாற்றத்தால் லட்சக்கணக்கான மீன்கள் உயிரிழப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்