SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளின் விநோத நடவடிக்கைகள்... விளக்கும் இயன்முறை மருத்துவம்!

2022-07-14@ 17:43:59

நன்றி குங்குமம் தோழி

உங்கள் குழந்தை நடக்கும்போது குதிகால்களைத் தூக்கி விரல்களில் நடக்கிறார்களா? குழகுழப்பான சாதம் அதாவது சாம்பார், தயிர் போன்ற உணவுகளை தவிர்க்கிறார்களா? குக்கர் விசிலுக்கு காதுகளை மூடிக்கொள்கிறார்களா? வீட்டின் உயரமான இடத்திற்கு சற்றும் யோசிக்காமல், பயப்படாமல் ஏறித்தொங்குவது, விளையாடுவது போல நடந்துகொள்கிறார்களா? இப்படியான கேள்விகளுக்கு உங்களின் பதில் ‘ஆம்’ என்றால், பெற்றோர்களே அதற்கான விடை மற்றும் விளக்கங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். கூடவே, ‘Sensory Processing Disorders’ என்று மருத்துவத்தில் சொல்லக்கூடிய இக்கோளாறின் அறிகுறிகள் என்ன? அதை தீர்ப்பது எப்படி? தவிர்ப்பது எப்படி போன்ற பல விஷயங்களையும் தெரிந்துகொள்வோம்.

SENSORY PROCESSING DISORDERS...

*நம்மைச் சுற்றியுள்ளவை (Environment)  தரும் உணர்வுகள் (Senses) நம் ஐந்து புலன்கள் வழியாக நமது மூளையை சென்றடையும். மூளை திரும்ப தன்னிடம் வந்த வினைக்கு எதிர்வினை செய்யும். இது இயல்பான இயற்கை அமைப்பு.

*உதாரணமாக, நம் வீட்டில் பிரியாணி செய்தால் நாம் வீட்டினுள் நுழையும்போதே நுகர்வு உணர்ச்சிகள் தூண்டப்பட்டு மூளைக்கு சிக்னல் அனுப்பும். அது பிரியாணி வாசனை என மூளை உணரும். பின் எதிர்வினை உணர்ச்சியாக நமக்கு சாப்பிடத் தோன்றும் அல்லது அதைச் சென்று பார்ப்பது, அதனை செய்பவர்களிடம் மகிழ்ச்சியாய் பேசுவது போன்ற எது வேண்டுமானாலும் நிகழலாம்.

*ஆனால் இந்த (Sensory Processing Disorders) SPDல்  மூளை எதிர்வினை புரிவதில் மாற்றங்கள் (கோளாறுகள்) இருக்கும். உதாரணமாக, SPD-யால் பாதித்த ஒரு சில குழந்தைகளுக்கு குழகுழப்பான வகை உணவு பிடிக்காது. எனவே அவ்வுணவை நாம் வற்புறுத்தி ஊட்டினால் அழுவது, கோபப்படுவது போன்று எதிர்வினை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவர்.

*பார்ப்பது, கேட்பது, நுகர்வது (Smell), சுவைத்தல், தொடுதல் ஆகிய ஐந்தும்தான் உணர்வுகள் அல்லவா. இதில் SPD-யால் பாதித்த குழந்தைக்கு இந்த ஐந்து உணர்ச்சி மண்டலமும் பாதிக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஒன்று இரண்டு மட்டும் பாதித்திருக்கலாம்.

*பாதித்த குழந்தை மற்றவர்களை விட அதிகமாக ஒரு உணர்ச்சிக்கு எதிர் உணர்ச்சியை வெளிப்படுத்தும். உதாரணமாக, குழந்தைகள் முதல் ஒன்று, இரண்டு தடவை குக்கர் விசிலுக்கு பயப்படும். பின் அதற்கு பழகிடும். ஆனால் இவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சத்தம் அச்சுறுத்தும் வகையில் இருப்பதால் இரண்டு மாதம் ஆகியும் பயப்படுவார்கள்.

*அப்படி இல்லையெனில் எவ்வளவு பெரிய உணர்ச்சி என்றாலும் எதிர் உணர்ச்சியை  வெளிப்படுத்தவே மாட்டார்கள். உதாரணமாக, அதிக வெப்பமான பாத்திரத்தை தெரியாமல் லேசாக தொட்டுவிட்டால் கூட குழந்தைகள் அழத் தொடங்கும். ஆனால், SPD-யால் பாதித்த குழந்தைகள் அதை ஒரு பொருட்டாக நினைக்காமல் விளையாடச் சென்றுவிடுவர். பின் நாமாக கவனிக்கும் போதுதான் தெரியும் லேசான தீக்காயம் ஏற்பட்டிருப்பது.

*இவ்வகையான உணர்ச்சி குறைந்த குழந்தைகளிடம் நாம் அதிகமான உணர்ச்சியைத் தூண்ட வேண்டியிருக்கும். அதாவது, உரத்த குரலில் அழைப்பது, ஒரு விஷயத்தை இரண்டு மூன்று முறை சொல்வது.

காரணங்கள்...

இதுதான் காரணம் என இன்னும் முழுமையான காரணம் எதுவும் கண்டறியப்படவில்லை. எனினும் குழந்தைகள் கருவில் இருப்பது முதல் ஐந்து வயதாகும் வரை உள்ள வாழ்வியல்  மாற்றங்கள் இதற்கான ஆபத்துக் காரணியாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பெரியவர்களுக்கு...

*இது குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் இருக்கும். உன்னித்து கவனித்தால் நம்மிடமும் அறிகுறிகளை காணலாம். ஆனால் இவ்வகையான ‘உணர்ச்சி மாறுபாடுகளை’ கையாளும் முறையை நாம் சிறு வயது முதலே கற்றிருப்போம் அல்லது இதனை மற்றவர்களிடமிருந்து மறைக்க முயற்சிப்போம்.

*உதாரணமாக, சிலருக்கு துணி ஈரமாவது பிடிக்காது. வீட்டில் இருந்தாலும் சமைத்து முடித்ததும், துணி துவைத்து முடித்ததும், பாத்திரம் கழுவி முடித்ததும் என அவ்வப்போது துணி மாற்றுவர்.

*சிலர் தனக்கு பிடிக்கவில்லையெனினும் சொரசொரப்பான / இறுக்கமான துணிகளை விழாக்களுக்கு போட்டுக்கொண்டு, எப்போது வீடு வந்து சேர்வோம் என தவித்துக் கொண்டு இருப்பார்கள்.

*சிலருக்கு தங்களை மற்றவர் தெரியாமல் தொடுவது பிடிக்காது. அதாவது, ரயிலில் மூன்று பேர் உட்காரும் இருக்கையில் நால்வர் அமர்வது இயல்பு. ஆனால் இவர்களுக்கு இது பிடிக்காது என்பதால் பொது போக்குவரத்தை விரும்பமாட்டார்கள்.

*ஆனால் நமக்கு சிறுவயதில் இருந்த அறிகுறிகள் பெரும்பாலும் ஒரு பிரச்சினை அளவிற்கு மாறியிருக்காது. கூடவே நம் வாழ்க்கை முறையும் நம்மை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆகையால் நாம் ஓரளவு இவ்வாறான அறிகுறிகளை சமாளித்திருப்போம், சமாளிக்கின்றோம்.

தனியொரு கோளாறாக...

*ஆட்டிசம், துறுதுறு குழந்தைகள் (Hyper active), டவுன்ஸ் சின்ட்ரோம், மூளை வாதம், தாமத வளர்ச்சிப்படிகள் என மற்ற குழந்தைகளுக்கும் இந்த பாதிப்பு இருப்பதற்கு சாத்தியங்கள் அதிகம்.

*மேல் சொன்ன எந்த கோளாறும் இல்லாமலும் தனியாகவும் இந்த SPD வரக்கூடும்.

அறிகுறிகள்...

இவை மிகை உணர்ச்சியாய் வெளிப்படுத்துவது, குறை உணர்ச்சியாய் வெளிப்படுத்துவது இரண்டையும் சேர்த்து குறிப்பிடுகிறேன்.

*ஆடைகள் ரொம்ப சொரசொரப்பான, அரிப்பு எடுக்கும் வகையில் இருப்பதாய் உணர்வர். குறிப்பாக, கழுத்துப் பகுதியில் வரும் சிறு துணியால் ஆன tag கூட இவர்களுக்கு பெரும் எரிச்சலை விளைவிக்கும்.

*சாதாரண வெளிச்சம் கூட அதிக பளிச்சென்று இருப்பதாய் தோன்றும். இதனால் கண்களை அடிக்கடி சுறுக்கிப் பார்ப்பார்கள்.

*குறைவான சத்தமும் அதிகமாக இருக்கும். மிக்ஸி, குக்கர் என்றால் வேறு அறைகளுக்கு ஓட முயல்வார்கள்.

*நாம் சாதாரணமாக அவர்களுக்கு வருடுவது கூட கடினமாய் தெரியும். சில குழந்தைகளுக்கு அம்மாக்கள் அடிக்கடி கொஞ்சினால் கூட பிடிக்காது.

*புதிய உணவுப் பொருட்களை முயற்சி செய்வதில் சிக்கல் இருக்கும். அதனால் தினமும் ஒரே உணவையே உண்பர். மாற்று முயற்சியை தடாலடியாய் பெற்றோர்கள் தெரியாமல் செய்துவிட்டால் அவ்வளவுதான். அன்று முழுவதும் அந்த உணர்வில் எதையும் சாப்பிட மாட்டார்கள்.

*அமைதியாய் ஓரிடத்தில் அமர்வதில் சிக்கல் ஏற்படும்.

*த்ரிலிங்காக விளையாடுவது (குதிப்பது, அதிக உயரம், சுற்றுவது) அனைத்தும் மிகப் பிடிக்கும்.

*எவ்வளவு சுற்றினாலும் தலை சுற்றாது அவர்களுக்கு.

*மற்றவர்களின் செயல்கள் மூலம் என்ன செய்கிறார்கள் என இவர்களால் புரிந்துகொள்ள முடியாது.

*மற்றவர்கள் மேல் விழுவது, அந்நியர்கள் எனினும் அவர்களை கொஞ்சுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

*எது கிடைத்தாலும் கடிப்பார்கள் (துணிகள், விளையாட்டு பொருட்கள்).

*பார்வை சார் தூண்டல்களை இவர்கள் அவ்வப்போது நாடுவர்.

*தூங்குவதில் சிக்கல்கள்.

*அவர்களின் முகமோ, கை கால்களோ அழுக்காய் இருந்தால் அவர்களுக்குத் தெரியாது. மூக்கு ஒழுகினாலும் அவர்களுக்கு தெரியாது.

*அதிகப்படியான குளிர், வெப்பம், வலி எதுவாயினும் அவர்கள் உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டார்கள்.

நாம் அவர்களை புரிந்துகொள்ளாமல் மேற் சொன்ன அறிகுறிகளுக்கு நேர்மாறாய் எதையாவது செய்தால் அதிகமாக தூண்டப்பட்டு எரிச்சலடைவர். அதனால் இவர்களை இவர்களே சாந்தப்படுத்திக் கொள்ள த்ரிலிங்கான முயற்சிகளில் ஈடுபடுவர். உதாரணமாக, உயரத்தில் இருந்து குதிப்பது, வேகமாக ஊஞ்சலில் விளையாடுவது, திரும்பத் திரும்ப உடலை சுற்றிக்கொண்டே இருப்பது. இவர்கள் மிகையாகவும் எதிர் உணர்ச்சியை வெளிப்படுத்துபவராக இருக்கலாம், இல்லை குறைவாகவும் வெளிப்படுத்தலாம். அல்லது இரண்டும் கலந்தும் இருக்கலாம்.

மன உளைச்சல்...

* இதனால் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியே கூட்டிச் செல்ல தயங்குவார்கள்.

*பாதித்த குழந்தைகள் மற்றவர்களுடன் பேசுவதிலும், விளையாடுவதிலும் சிரமமாய் தோன்றும் என்பதால் பெற்றோர்களுக்கு மிகுந்த மன உளைச்சலைக் கொடுக்கும்.

*சில பெற்றோர்களுக்கு இவை அனைத்தும் ஒரு வகை கோளாறு. இதற்கு மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கும். அத்தகையவர்களுக்கு புரிய வைப்பதிலும் சிக்கல் இருக்கிறது.

எப்படி கண்டறிவது...?

மேல் உள்ள அறிகுறிகள் உங்கள் குழந்தைகளுக்கு இருப்பதாய் நீங்கள் உணர்ந்தால் அருகில் உள்ள குழந்தைகளுக்கான இயன்முறை மருத்துவரை அணுகவும். அவர் நீங்கள் சொல்லும் தகவல்களை வைத்தும், அவர் கண் எதிரில் குழந்தையின் குணநலன் எப்படி இருக்கிறது எனப் பரிசோதித்து எவ்வகையான பாதிப்புகள் இருக்கிறது என்றும் கண்டறிவர்.

தீர்வுகள்...

முதலில் நாம் உணர வேண்டியவை,

1.இது ஒரு நோய் அல்ல.

2.மற்ற குழந்தைகளுக்கு இவை பரவாது.

3.இதனை முழுமையாக சரி செய்யலாம்.

4.இதற்கு மருந்து மாத்திரைகள் எதுவும் உதவாது, கிடையாது.

5.இதை சரி செய்யாமல் விட்டால் குழந்தையின் வளர்ச்சியை எல்லா வகையிலும் பாதிக்கும். அதாவது, உடல், மூளை, குணம், யோசிக்கும் திறன், சமூகப் பழக்கம் என எல்லா வகையிலும் பாதிக்கும்.

தடுக்கும் வழிகள்...

இந்தக் கோளாறு எதனால் வருகிறது என முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை என்பதால், வாழ்க்கை முறையை சரியாய் குழந்தைகளுக்கு அமைத்துத் தருவதன் மூலம் வந்தாலும் நிலைமை மோசமாகாமல் தடுக்கலாம். மேலும் இவ்வழிகள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும் என்பதால் இதனைக் கடைப்பிடித்தல் அவசியம்.

*குழந்தைகளுக்கு எல்லா விதமான உணவுகளையும் சிறுவயது முதலே கொடுத்துப் பழக்கவேண்டும்.

* மணலில் விளையாட, மற்ற குழந்தைகளுடன் விளையாட, சாப்பிட என அனைத்து வகை முயற்சிகளையும் அடிக்கடி செய்யவேண்டும்.

* எல்லா விதமான தொடு உணர்வுகளுக்கும் குழந்தை பழக வேண்டும். அதனால் நீங்கள் வேலைகள் செய்யும்போது அவர்களையும் அதில் ஈடுபடுத்தலாம். உதாரணமாக, வெறும் காலில் மொட்டை மாடியில் நடப்பது, துணி துவைக்கும்போது விளையாடுவது, காய்கள், பழங்கள் நறுக்கும்போது அவர்களையும் அதில் ஈடுபடுத்துவது போன்றவற்றை சொல்லலாம்.

* குழந்தைகளை அவ்வப்போது உடல் சார்ந்தும், மூளை சார்ந்தும் சிறுசிறு வேலைகளை செய்யச் சொல்வது, கேள்விகள் கேட்டு பதில் சொல்ல வைப்பது, அவர்களாக எதையாவது உருவாக்கத் தூண்டுவது (வீடு கட்டுவது, படம் வரைவது போன்று) போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

* குழந்தைகள் செய்யும் தவறுகளை கோபப்பட்டு அடிக்காமலும், திட்டாமலும் பக்குவமாக எடுத்துச் சொல்லி சரிசெய்யலாம். அவர்கள் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்டி, பரிசுகள் வாங்கித்தந்து, அதைவிட பெரிய விஷயங்கள் செய்யச் சொல்லித் தூண்டலாம். செய்தால் இன்னின்ன பரிசுகள் வாங்கித்தருவோம் என ஊக்குவித்து உற்சாகப்படுத்தலாம்.

* குழந்தைகளின் நடவடிக்கைகளில் தெரியும் சிறுசிறு மாற்றங்களையும் மிக உன்னிப்பாக கவனித்து அதை அவ்வப்போதே சரிசெய்யலாம்.

இயன்முறை மருத்துவம்...

* தொடர்ந்து தெரபி எடுத்து வந்தால் எளிதில் குணமடையும்.

* கோளாறின் தாக்கம் பொருத்து தினமும் அல்லது வாரத்தில் மூன்று நாள் போல தெரபி அமையும்.

* ஒரு நாளைக்கு அரை மணி நேர தெரபியே போதுமானது.

* தெரபியின் மூலம் உணர்ச்சிகளை ஓர் ஒழுங்குக்கு கொண்டுவர முடியும்.

* குழந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பை பொருத்து விளையாட்டு வழியில் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துவர்.

* வீட்டில் என்னென்ன செய்ய வேண்டும் எனும் அறிவுரைகளையும் வழங்குவர்.

எனவே மூக்கும் முழியுமாக லட்சணமாக நம் குழந்தைகள் இருந்தாலும் இவ்வகை கோளாறு இருக்கிறது எனக் கலங்காமல் இயன்முறை மருத்துவத்தின் துணைகொண்டு நம் வீட்டு மலர்களை மீண்டும் புதிதாய் மலரவிடுவோம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்