SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளுக்கும் Stroke வருமா? பெற்றோர்களே இது உங்களுக்காக!

2022-06-20@ 17:40:45

நன்றி குங்குமம் தோழி

‘பக்கவாதம்’ என்ற வார்த்தையை அறியாதவர் இன்றைய சூழலில் யாரும் இருக்க மாட்டோம். எப்படி ஹார்டில் அட்டாக் ஏற்படுகிறதோ அதுபோலத்தான் மூளையிலும் அட்டாக் ஏற்படும். இதனையே பக்கவாதம் (Stroke) என மருத்துவம் சொல்கிறது. இத்தகைய பக்கவாதம் நாற்பது வயதைக் கடந்தவர்களுக்குதான் வரும் என பலரும் நினைத்திருப்பர். ஆனால், இது வெகு சிலநேரம் குழந்தைகளையும் பாதிக்கக்கூடியது. அதுவும், பிறக்கும் அல்லது பிறந்த பச்சிளம் குழந்தைகளில் ஐந்தாயிரம் குழந்தைகளில் மூன்று குழந்தைகள் இன்றைக்கு இதனால் பாதிக்கப்படுகிறார்கள் எனினும், இத்தகைய நோய் பற்றிய சரியான தெரிதலும் புரிதலும் பெரியவர்களாகிய நம்மிடம் இல்லாமல் இருப்பது ஒருவகையில் குறையே. அத்தகைய குறையை போக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பக்கவாதம் என்பது...?

எந்த ஒரு உடல் உறுப்பும் உயிர்ப்புடன் இயங்க ரத்த ஓட்டம் தேவை. ரத்த ஓட்டம் எந்த வழியிலாவது பாதிக்கப்பட்டால் அந்த பகுதி செயலிழந்து, திசுகள் இறந்துவிடும். இவ்வாறு மூளைக்கு போகும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு (ஒரு நொடி ரத்த ஓட்டம் நின்றாலும், சேதம் உண்டாகும்) எந்த பகுதி செயலிழக்கிறதோ அந்த பகுதிக்கான உடல் உறுப்புகள் பாதிக்கப்படும். உதாரணமாக, நாம் நடக்கப் பயன்படும் மூளையின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டால் நம்மால் நடக்க முடியாமல் போகும்.

சிசு முதல் ஐந்து வயது வரை...

பிறக்காத கருவிலிருக்கும் சிசு முதல் பிறந்த ஐந்து வயது வரை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். எனினும் பிறந்த ஒரு மாதத்திற்குள் நிகழும் நிலைதான் அதிகம். அதிலும் குறிப்பாக பிறக்கும் (பிரசவத்தின்) போதும், பிறந்த பின்னும் நிகழ்வதே அதிகம். ஏனெனில் போதிய பிராணவாயு பிரசவத்தின் போது கிடைக்காததே காரணம்.

பல காரணங்கள்...

*போதுமான ரத்தம் மூளைக்கு சென்று சேராமல் இருப்பதால்.

*மூளையில் ரத்த கசிவு ஏற்படுவதால்.

*பிறந்த குழந்தைக்கு ஏதேனும் இருதயக் கோளாறு இருந்தால்.

*ரத்த செல்களை அழித்து ரத்த ஓட்டத்தை பாதிக்கும் வகையான  ரத்தம் சார்ந்த நோய்கள்.

*மூளைக்கு ரத்தம் எடுத்து செல்லும் குழாய்களில் ஏதேனும் சேதம் (injury) ஏற்பட்டால்.

*மூளைக் காய்ச்சல்.

*பிறக்கும் போதே மூளையில் கட்டி, புற்று நோய் கட்டி இருந்தால்.

*தாய் கருவுற்றிருக்கும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தம் (BP).

*கருவுற்றபின் வரும் நீரிழிவு நோய்.

*பனிக்குடம் உடைந்து அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால்.

*கருவுற்றிருக்கும் போது ஏதேனும் தொற்றுநோய் இருந்து, அதனை முறையே சிகிச்சை செய்யாமல் இருந்தால்.

*குழந்தை கருவாக இருக்கும் போது வீரியமான நச்சுவாயு ஏதேனும் தாக்கப்பட்டால்.

*மது, புகை மற்றும் போதைப் பொருட்களை கருவுற்றிருக்கும்போது எடுத்துக்கொண்டால்.

*நஞ்சு கொடியில் ஏதேனும் சிக்கல் இருந்தால்.

*மூளைக்கு செல்லும் ரத்த குழாய்கள் மூளையில் ஒன்றோடு ஒன்று தொடர்பில் (connected) இருக்கும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால்.

*குழந்தையின் மூளையில் வேறு கோளாறு, தொற்று நோய் இருந்தால்.

*மூளைக்கு செல்லும் ரத்த குழாய்கள் சரியாக வளர்ச்சி அடையவில்லை என்றால்.

சில அறிகுறிகள்...

*ஒரு பக்க உடல் முழுவதிலும் ஒருவகையான தளர்ச்சி உணர்வு, மருத்து போதல். இதனை பிறந்த குழந்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளால்  கூறமுடியும்.

*பேசுவதில் சிக்கல் மற்றும் தடுமாற்றம்.

*நடப்பதிலும், மாடிப்படி ஏறுவதிலும் வித்தியாசம் உண்டாதல்.

*சோர்ந்து போன அயர்ச்சியான உணர்வு.

*வலிப்பு ஏற்படுவது (வலிப்பின் விதங்கள் அதிகம் இருக்கின்றன. ஆனால் அதிக குழந்தைகளுக்கு கண்கள் அசையாமல் ஒரே இடத்தை பார்த்தும், கை கால்கள் அசையாமல் சில நொடிகள், நிமிடங்கள் நீடிக்கும் வலிப்பே அதிகம்).

*சாப்பிடுவதிலும், மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்படுதல்.

*எப்போதும் ஒரு பொருளை எடுக்கும்போது பாதிக்கப்பட்ட கையினை பயன்படுத்தாமல் மற்றொரு கையினை முதலில் அனிச்சையாய் பயன்படுத்துவது.

*வாந்தி, மயக்கம் ஏற்படுவது.

*பாதிக்கப்பட்ட கையினால் எளிதாக செய்ய முடியும் விளையாட்டுகளைக் கூட செய்ய முடியாமல் இருக்கும்.

என்னென்ன விளைவுகள்...?


*நிரந்தரமான சிந்தனைத் திறன் குறைவு.

*நிரந்தரமான உடல் அசைவுகளில் பாதிப்பு (அதாவது, சரியாக நடக்க முடியாமல், கைகளை பயன்படுத்த முடியாமல் போதல்). இது எந்த அளவு திசுக்கள் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொருத்து மாறுபடும். மேலும், இவ்வாறு சிலருக்கே நிகழும் என்பதால் பயம் கொள்ள வேண்டாம்.

*சில குழந்தைகளுக்கு பேச்சில் தாமதம் ஏற்படலாம்.

*கண் பார்வை கோளாறு சில குழந்தைகளுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னே சரியாகும்.

*உட்காருவது, நிற்பது, நடப்பது போன்றவற்றில் தாமதம் ஏற்படுவது.

*குழந்தைகள் உயிரிழப்பதற்கான பத்து காரணங்களில் ஒன்று பக்கவாதம் என உலக சுகாதார அமைப்பு சொல்கிறது.

கண்டறியும் முறைகள்...?

குழந்தை நல மருத்துவர்கள் குழந்தையை முழுவதும் முதலில் பரிசோதனை செய்வார்கள். பின் தேவைப்பட்டால் எம்.ஆர்.ஐ,  ரத்த குழாய்கள் பரிசோதனை போன்றவற்றை மேற்கொள்ள சொல்வார்கள்.

தீர்வுகள்...

* பக்கவாதம் எப்போதும் ஓர் அவசர கால சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய்.

* குழந்தையின் வயது, எந்த பகுதி மூளையில் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது, எந்த அளவு திசுகள் சேதம் அடைந்திருக்கிறது என்பது அனைத்தையும் பொருத்து சிகிச்சை அளிக்கப்படும்.

இயன்முறை மருத்துவம்...

* மருந்து, மாத்திரை என அவசர கால சிகிச்சை முடிந்த பின் இயன்முறை மருத்துவரின் பங்கு தொடங்கும்.

* குழந்தைகளுக்கு ஏற்றார்போல பிரத்யேக சிறப்பு (விளையாட்டு வழி) உடற்பயிற்சிகள் வழங்கப்படும்.

* தொடர் பயிற்சிகள் மூலம் உட்காருவது, நிற்பது, நடப்பது அனைத்தையும் செய்ய முடியும்.

* சில குழந்தைகளுக்கு மூன்று வருடம் வரை இயன்முறை மருத்துவ சிகிச்சை தேவைப்படும். இது முற்றிலும் திசுகள் சேதம் அடைந்த அளவு பொருத்தும், எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டது என்பதனை பொருத்து மாறுபடும்.

* வாரத்தில் ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை எடுப்பதினால் விரைவில் முழு பலன் கிட்டும்.

* மேலும் சில குழந்தைகளுக்கு பேச்சு பயிற்சியும், கற்றல் திறன் பயிற்சியும் தேவைப்பட்டால் அதற்கான நிபுணர்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்.

எனவே, வெகு சில குழந்தைகளை மட்டுமே பாதிக்கும் இந்த பக்கவாதத்தை இயன்முறை மருத்துவத்தின் துணைகொண்டு மிக எளிதில் தீர்வு காண்பதே சாலச் சிறந்தது என்பதை நாம் ஒவ்வொரு
வரும் புரிந்துகொண்டாலே போதும், குழந்தைகளை முத்தாய் வளர்த்துவிடலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • spain-trees-24

  ஸ்பெயினில் ராக்கெட் வேகத்தில் பரவி வரும் காட்டுத் தீ; சாம்பலாகும் அரிய பெரிய மரங்கள்..!!

 • gandhi-13

  ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்

 • taipei-fashion-week-taiwan

  தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!

 • kalifffo1

  தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!

 • pak-123

  பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்