SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகாலை முதுகுப் பிடிப்பு அலர்ட் ப்ளீஸ்!

2021-10-25@ 17:12:14

நன்றி குங்குமம் தோழி

நம்மில் பொதுவாக யார் வீட்டை எடுத்துக்கொண்டாலும் ஆண் - பெண், வயது வித்தியாசம் இல்லாமல் முதுகு வலியுடன் ஒருவராவது இருப்பார்கள். காரணம், இன்றைய சூழலில் முதுகு வலி என்பது இயல்பான ஒன்றாக மாறியிருப்பதை சொல்லலாம். இருந்தாலும் அவை வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் ‘அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்’ (Ankylosing Spondylitis) எனப்படும் ஒருவகை நோய். பெரும்பாலும் சாதாரண முதுகுவலி தான் என நாம் கண்டு கொள்ளாமல் இருப்பதால், ஏராளமான விளைவுகளை தரக்கூடிய இந்த வகை முதுகு வலியானது வரக்கூடும். அவ்வாறு வரக்கூடிய முதுகு வலியைப் பற்றி நாம் இங்கே விரிவாக அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் நோய் என்பது...

*இது ஒரு விதமான அழற்சியின் காரணமாக ஏற்படும் நோய்.

*நாள்பட்ட, வாழ்நாள் முழுதும் இருக்கக் கூடிய நோய் இது என்பதையும் நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

*நம் உடலிலுள்ள பல உறுப்புகளை இது பாதிக்கும் என்றாலும், முதலில் பாதிப்பது முதுகு மற்றும் இடுப்பு மூட்டாகத்தான் இருக்கும். எனவே முதல் அறிகுறியாக முதுகு வலி தோன்றும்.

*இதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை எனினும், மரபணு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.

அறிகுறிகள்...

*இதற்கான அறிகுறிகள் பொதுவாக 17 முதல் 45 வயதிற்குள் தெரியத் தொடங்கும்.

*பெண்களை விட ஆண்களே அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

*நாட்கள் ஆக ஆக முதுகுத் தண்டுவடத்தில் உள்ள மூட்டுகளில் சிறு எலும்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளும். இதன் காரணமாக முதுகை வளைப்பதில் சிரமம் ஏற்படும்.

*ஆரம்பகால அறிகுறிகளாக முதுகு மற்றும் இடுப்பில் வலி உண்டாகும்.

* குனியும் போதும், நிமிரும் போதும் முதுகுப் பகுதி இறுக்கமாக தோன்றும்.

*குறிப்பாக காலை நேரத்தில்தான் அதிகம் இறுக்கமும் வலியும் இருக்கும்.

*உடல் சோர்வு அதிகமாகக் காணப்படும்.

*முதுகில் உள்ள சிறுசிறு மூட்டுகள் ஒட்டிக் கொள்வதால் உடலின் தோற்றப்பாங்கு (posture) மாறுபடும். உதாரணமாக, மேல் முதுகு முன்புறமாக வளைய ஆரம்பிக்கும். அதாவது கூன் விழத் தொடங்கும்.

*சிலருக்கு விலா எலும்புகள் பாதிக்கப்படும். இதனால் மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும்.

*கண்களும் பாதிக்கப்படும்.

*முதுகு எலும்புகள் மட்டும் இல்லாமல் கழுத்து எலும்புகளும் நாட்கள் செல்ல செல்ல ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்வதால் கழுத்து வலி ஏற்படும்.

*கால வரையறையின்றி நோயின் அறிகுறிகள் மறையும், பின்  சில மாதம் கழித்து மீண்டும் தோன்றும். இவ்வாறு மாறி மாறி காணப்படும்.

*குதிகால், தோள்பட்டை மூட்டு, தசை நாண் எலும்புகளில் சேரும் இடம் என வலி உருவாகக் கூடிய  இடங்கள் அதிகரித்துக் கொண்டே போகும்.

*நோயின் வீரியம் அதிகரித்தவர்களுக்கு மூட்டுகள் பக்கத்தில் புது எலும்புகள் உருவாகுவது போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். இதனால் இது மற்ற உறுப்புகளை (தசை, நரம்பு, ரத்தக் குழாய்) அழுத்தும் என்பதால் அதற்கேற்ப மேலும் அறிகுறிகள் தெரியும்.

*மூட்டுகளில் வீக்கம் தெரியும்.

கண்டறியும் முறை...

*ரத்தப் பரிசோதனையில் HLA B27-னின் அளவை கண்டறிய வேண்டும்.

*மேலும் இயன்முறை மருத்துவர் சில அசைவுகளை செய்யச் சொல்லி

எந்தெந்த மூட்டுகள் எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதனை பரிசோதனை செய்து கண்டறிவார்கள்.

தீர்வுகள்...

*இதற்கான தீர்வுகள் இதுவரை கண்டறியப் படவில்லை என்பதால் அறிகுறிகளுக்கு ஏற்ப மருத்துவம் செய்துகொள்ள வேண்டும். இதனால் அறிகுறிகளின் அளவை குறைக்க முடியும். மேலும் நோயின் தீவிரம் அதிகரிக்காமல் தடுக்கலாம்.

*இயன்முறை மருத்துவத்தில் மூட்டுகளுக்கும், தசைகளுக்கும் பயிற்சிகள் பரிந்துரைத்து அதனைக் கற்றும் கொடுப்பார்கள்.

*வலி குறைவதற்கு இயன்முறை மருத்துவ உபகரணங்கள் மூலம் சிகிச்சை செய்வார்கள்.

மேலும் செய்ய வேண்டியவை...

*தினமும் லேசான உடற்பயிற்சிகள் செய்து வரவேண்டும்.

*உணவில் கட்டுப்பாடு அவசியம். அதிக உடல் எடை மேலும் மூட்டுகளுக்கு சிரமம் கொடுக்கும் என்பதால், தொடர்ந்து உயரத்துக்கேற்ற எடையை பராமரித்து வரவேண்டும்.

*புகைப் பிடித்தலை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அறிகுறிகளை மேலும் அது அதிகரிக்கும்.

*மூட்டு வலிகளுக்கு மாத்திரைகளை தவிர்ப்பது நல்லது.

எனவே தொடர்ந்து முதுகு வலி வந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே இயன்முறை மருத்துவரிடம் சென்று ஒருமுறை ஆலோசனை பெற்றுக்கொள்வது சிறந்தது. மேலும், அந்த முதுகு வலியானது ‘அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ் நோய்’தான் என உறுதி செய்யப்பட்டால் கவலை கொள்ளாமல் இயன்முறை மருத்துவரின் வழிகாட்டுதல் மூலம் அறிகுறிகளை கொஞ்ச கொஞ்சமாக குறைத்து வலியை கட்டுக்குள் கொண்டுவந்து மூட்டுகளை பராமரிக்கலாம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

 • nellai-16

  நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

 • nepallumbii

  நேபாளத்தில் பிரதமர் மோடி...லும்பினியில் புத்தர் பிறந்த இடத்தில் உள்ள மாயாதேவி கோவிலில் சிறப்பு வழிபாடு!! .

 • ooty-rose-exhi-14

  50,000 ரோஜாக்களால் உருவான மரவீடு, மஞ்சப்பை...!: துவங்கியது ஊட்டி ரோஜா மலர் கண்காட்சி..வியப்புடன் கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..!!

 • odisha_park

  இந்தியாவில் முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளுக்கான உணர்வு பூங்கா ஒடிசாவில் திறப்பு..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்