SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருப்பை தசை நார்க் கட்டிகள்

2021-10-06@ 17:02:00

நன்றி குங்குமம் தோழி

மாறிவரும் உணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை காரணங்களால் பெண்களுக்கு இக்காலத்தில் கருப்பை சார்ந்த உபாதைகள் அதிகமாக  வருகின்றன. கட்டி வளர்தல் என்றாலே நாம் உடனடியாக பயப்படுவது அது புற்று நோயாக  (Cancer) இருக்குமோ என்றுதான். எந்தவொரு சந்தேகமான கட்டிகளையும் சோதித்து அவை புற்று நோயல்ல என்று உறுதிப்படுத்திக்
கொள்வது அவசியம். கருப்பையில் புற்று நோய் கட்டிகளும் வளரலாம். ஆனால் அதைவிட மிகவும் பொதுவாக ஏற்படும் புற்று நோயல்லாத ஃபைப்ராயிட் (Fibroid) எனப்படும் தசைநார்க்கட்டிகள் பற்றி தான் நாம் இங்கு பார்க்கஇருக்கிறோம்.

இந்த வகை கட்டிகள் பிற்காலத்தில் புற்று நோயாக மாறுவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவானது. இது கிட்டத்தட்ட 40% பெண்களிடையே எந்த ஒரு அறிகுறிகளும் இல்லாமல் உருவாகிறது. நார்த்திசுக்கட்டிகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்காது என்றாலும் கூட, அவை சில நேரங்களில்  மிகுந்த தொல்லைகளை ஏற்படுத்தலாம். இதனால் Fibroid கட்டிகள் உள்ளது என்றால் பயப்பட வேண்டியதில்லை என்றாலும் தக்க சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
    
கருப்பை நார்த்தசைக் கட்டிகள்  

ஃபைப்ரோமையோமஸ்(Fibromyomas), லியோமையோமஸ்( Leiomyomas) அல்லது மையோமஸ்( Myomas) என்று அழைக்கப்படுகின்றன. இவை கருப்பையின் சுவற்றிலிருக்கும் தசையில் இருந்து உருவாகும் கட்டிகளாகும். இவை கடுகு அளவில் இருந்து நான்கு, ஐந்து கிலோ எடை அளவுள்ள கட்டியாகக்கூட இருக்கலாம். சில நேரங்களில் ஒன்று மற்றும் இரண்டு அல்லது பல கட்டிகளாகவும் வளரலாம்.

கருப்பையின் வெளிப்புறச் சுவரில் வளரக்கூடிய கட்டிகளால் பிரச்சினை குறைவு. ஆனால், கட்டி பெரிய அளவில் வளர்ந்தால் பிரச்சினை ஏற்படலாம். பொதுவாக 30 வயதிலிருந்து 50 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டாலும் இளம் பெண்களுக்கும் வரலாம். இவை மெதுவாக வளரும். மாதவிடாய்க்கு பிறகு கரு உற்பத்தி ஹார்மோன்களின் அளவுகள் குறைந்ததும் தானாகவே கட்டிகள் சுருங்கிவிட வாய்ப்புண்டு.

காரணங்கள்

*உடல் பருமன்
*பரம்பரையாக வருதல்
*மது, புகைபிடித்தல்
*தைராய்டு பிரச்சனைகள்
*போதிய உடற்பயிற்சியின்மை
*ஹார்மோன் மாறுபாடு அல்லது ஹார்மோன் சிகிச்சை
*குழந்தையின்மை சிகிச்சை
*காரணமின்றி அடிக்கடி நிகழும் கருச்சிதைவு
*உணவு சத்து குறைபாடு
*பெண்கள் கருத்தடைசாதனங்கள் பயன்படுத்துவதால் சில நேரங்களில் கருப்பை சதை சிதைவு ஏற்பட்டு அதனால் கருப்பை கட்டிகள் ஏற்படலாம், இதை 6 மாதங்களுக்கு ஒரு முறையாவது மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
*பொதுவாக 20 முதல் 40 வயது வரை உள்ள பெண்களுக்குத்தான் அதிகமாக வருகின்றது. குறிப்பாக, குழந்தைப்பேற்றுக்குத் தயாராக உள்ள காலகட்டத்தில் ஏற்படும். மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்களுக்கு இக்கட்டிகள் வருவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. அதேபோல, குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு இக்
கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்

*மாதவிடாய் நேரத்தில் வலி மற்றும் அதிகமான உதிரப்போக்கு.  

*அடிவயிற்றிலே ஏதோ இருப்பது போன்ற உணர்வு, அடி வயிறு கனத்தல்

*அடிவயிறு வீங்குதல் மற்றும் வலி

*அதிக உதிரப்போக்கு மற்றும் ஒழுங்கற்ற  மாதவிடாய்

*ரத்தசோகை

*உடல் எடை அதிகரித்தல்

*இனச்சேர்க்கையின் போது வலி (Dyspareunia)

*வெள்ளைப்படுதல்

*சாதாரணமாக  ஒரு பெண்ணிற்கு அவள் கருப்பை என்பது அவளுடைய மூடிய கை அளவில் இருக்கும். அதில் கட்டி வளர்ந்து மிகப் பெரிதாகும்போது அது சிறுநீரகத்தில் இருந்து வரக்கூடிய சிறுநீர்த்தாரையை அழுத்தி சிறுநீர் வெளியேற தடை செய்யும். அதனால் சிறுநீரகத்திலேயே தங்க ஆரம்பித்து பல பிரச்சினைகள் ஏற்படும்.

*கருப்பையின் பின்பகுதியில் கட்டி ஏற்பட்டால் பெருங்குடலை அழுத்தி மலச் சிக்கலை ஏற்படுத்தும். இது முதுகுத் தண்டு நரம்புகளை அழுத்தும்போது முதுகு வலி வரலாம். தசைநார்க் கட்டிகளும் கருவுறுதலும் கர்ப்பிணிப் பெண்களில் 2% முதல் 12% வரை இக்கட்டிகள்  காணப்படுகின்றன, ஆனால் எல்லா நார்த்திசுக்கட்டிகளும் பெரிதாக கர்ப்பகாலத்தில் உபாதைகளை ஏற்படுத்தாது, மேலும் குழந்தை பெற்று எடுப்பதில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படுத்தாமலும் இருக்கும். 5% - 10% மலட்டுத்தன்மையுள்ள பெண்களுக்கு இக்கட்டிகள் காரணமாக இருக்கிறது. இக்கட்டிகள்  குழந்தையின்மை ஏற்படுத்துகின்றதா என்பதை அவற்றின் அளவும் இருப்பிடமுமே தீர்மானிக்கின்றன.கருப்பை தசைநார்க் கட்டிகளால் கருவுறுதலைக் குறைக்க பல வழிகள் உள்ளன

*கருப்பைவாயின் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்களால் கருப்பையில் நுழையக்கூடிய விந்தணுக்களின் எண்ணிக்கையை பாதிக்கும்.

*கருப்பையின் வடிவத்தில் ஏற்படும் மாற்றங்கள் விந்து அல்லது கருவின் இயக்கத்திற்கு இடையூறாக இருக்கும்.

*ஃபாலோபியன் (Fallopian ) குழாய்களை நார்த்திசுக்கட்டிகளின் வளர்ச்சி தடுக்கலாம்.

*அவை கருப்பை குழியின் அளவை பாதிக்கலாம்.

*கருப்பை குழிக்கு ரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இது கருவின் சுவரில் ஒட்டிக்கொள்ளும் (உள்வைப்பு) கரு வளர்ச்சியின் திறனைக் குறைக்கும்.

*சில நேரங்களில் முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு, ரத்தப் போக்கு, வயிறு வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

*சிலருக்கு பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில் நஞ்சுக்கொடி முறிவு (placental abruption), முன்கூட்டிய பிரசவம் (preterm delivery) போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

*சிலருக்கு பிரசவத்தின் பிறகு இக்கட்டி 20% தன்னளவிலிருந்து குறைவதாக ஆராய்ச்சி கூறுகிறது.

*இது கருவுறுதலையும் தடுக்கக் கூடியது. ஆகவே இதை கண்டறிந்தவுடன் மருத்துவம் மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கருப்பை தசைநார்க் கட்டிகளும் ஆயுர்வேதமும்

கருப்பையை அகற்றுவது போன்ற சிகிச்சை முறைகள் பல்வேறு பக்க விளைவுகளை உருவாக்கலாம் என்பதால் நவீன மருத்துவர்களே வேறு வழியே இல்லாத பட்சத்தில்தான் இதற்கு அறுவை சிகிச்சை பரிந்துரை செய்கிறார்கள். ஆயுர்வேதத்தில் கருப்பை கட்டியைக் கரைக்க சிறப்பான  சிகிச்சை முறைகள் உள்ளன.

ஆயுர்வேத அணுகு முறை

கட்டிகளை ஆயுர்வேதம் ‘அர்புதம்’ (திடமான வீக்கம்), கிரந்தி மற்றும் குல்மம்  என விவரிக்கின்றது. மூன்று தோஷங்களின் சீர்கேட்டினால் அர்புதம், கிரந்தி மற்றும் குல்மம் உண்டாகும். ஆயுர்வேதத்தில் கர்ப்பப்பை தசைநார் கட்டிகள் அபான ஸ்தானத்தில் கப விருத்தியால் உண்டாகும் வியாதியாக பார்க்கப்படுகிறது.  குளிர்ச்சி, மந்தம்,  கனம் ஆகிய குணங்கள் அதிகரிப்பதால் கர்ப்பப்பையில் கட்டி வளர்கிறது. ஆகவே இங்கு உஷ்ணம் அனுலோமம் லேகனம் குணமுள்ள மருந்துகளை ஆரம்ப நிலையில் கொடுத்து பிறகு ரத்தத்தை சுத்திகரிப்பு செய்யக்கூடிய மருத்துவத்தை செய்து கடைசியில் பீச்சு என்னும் வஸ்தி சிகிச்சை செய்யும்போது இந்த வியாதியை முற்றிலுமாக குணப்படுத்தலாம்.

பொதுவாக த்ராயந்தியாதி கஷாயம், நிக்ரோதாதி கஷாயத்துடன் புஷ்யானுக  சூரணம், சந்திரபிரபா வடி, வருணாதி கஷாயம், சப்தஸ்வர கஷாயம், சிறு வில்வாதி கஷாயம், ஹிங்குவசாதி சூரணம், குக்குலுபஞ்சபல சூரணம் ஆகியவை கொடுக்க நல்ல பலன் தரும்.சப்தசார கஷாயம் பொதுவாக கர்ப்பப்பை வியாதிகளில் ஏற்படும் வலிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது, இக்கஷாயத்திற்கு உஷ்ண வீரியம் மற்றும் அபான அனுலோமனம் என்ற குணங்கள் உண்டு. பெண்களுக்கு ஏற்படும் யோனி ரோகங்கள் மற்றும் அதன் நிமித்தம் வரும் இடுப்பு வலிகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கர்ப்பப்பை தசைநார் கட்டிகள் போன்ற நோய்களுக்கு பெருங்காயம், திரிகடுகு, ரஜபிரவர்தினி வடி, சிறுதேக்கு சூரணம், புரசின் க்ஷாரம், லக்ஷ்மன க்ஷாரம், கல்யாணக க்ஷாரம் போன்றவற்றை சேர்த்துக் கொடுக்க நல்ல பலனைத் தந்துள்ளது. வாதம் அதிகரித்த தன்மைகளில் இவற்றை நெய்யாக காய்ச்சி பானமாகவும் கொடுக்கலாம். நல்லெண்ணெயும் பயன்படுத்தலாம்.  

எள்ளு கஷாயத்தில் வெல்லம், திரிகடுகு, பெருங்காயம், கண்டுபாரங்கி நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட கர்ப்பப்பையில் உண்டாகின்ற கட்டிகளுக்கு நல்ல பலனை அளிக்கின்றது. சுக்கு சேர்த்து எள் உருண்டை செய்து ஏலக்காய் கஷாயத்தில் கொடுக்க கர்ப்பப்பையில் வரும் கட்டிகள் குணமாகும். எள்ளில் கால்சிய சத்தும் பெண் ஹார்மோன் ஆகிய ஈஸ்ட்ரோஜனும் அதிகமாக உள்ளன. கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு உறுதி அளிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் உள்ளதால் ஹார்மோன் குறைபாடுகள் ஏதேனும் இருந்தால் அதை சரி செய்கிறது.

குமட்டல் மற்றும் வாந்தி இருந்தால் மாதுளங்க ரசாயனம், முதுகு மற்றும் இடுப்பு வலிக்கு முறிவெண்ணெய் வெளியில் தடவ பயன்படுத்தலாம். ரத்தம் அதிகமாக வெளியேறும் பட்சத்தில் புஷ்யானுக சூரணம், அசோகப்பட்டை சூரணம் கொடுக்க நல்ல பலன் தரும். இவை தவிர கற்றாழை, அஸ்வகந்தா, காஞ்சனார குக்குலு, சுகுமார கஷாயம், போன்றவைகளை உட்கொள்ளும் மருந்தாக கொடுக்கலாம்.

பஞ்சகர்மா சிகிச்சை

இதற்கு பஞ்சகர்மா சிகிச்சையில் பேதி, உதிரவஸ்தி சிகிச்சை, ரத்த போக்கு இருந்தால் திரிபலா சூரணம் வைத்து vaginal douche போன்ற முறைகளை கையாளலாம். உதிரவஸ்தி சிகிச்சை: கரு உருவாகாமல் இருப்பது, கருக்குழாயில் அடைப்பு, கருப்பையில் நீர்கட்டிகள் ஆகியவற்றை இந்த உதிரவஸ்தி சிகிச்சை குணப்படுத்தும்.

உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்

கிழங்கு வகைகள் தவிர்த்து எளிதில் செரிக்கக் கூடிய உணவுகள், நீர்காய்கறிகள், பூண்டு, இஞ்சி, மஞ்சள், சீரகம், கீரைவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிசம், எண்ணெய் பலகாரம்,இனிப்பு பலகாரம், புளிப்பு வகை  கொண்ட உணவுகளை நீக்க வேண்டும். மருந்துகள் தவிர முறையாக உடற்பயிற்சி, மூச்சுப்பயிற்சி, சரியான உணவு முறை, நேரந்தவறா உணவு முறை போன்றவற்றையும் சேர்த்துக் கடைப்பிடித்தால் பெண்கள் தங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். நோய் வந்தபின் இவற்றையெல்லாம் யோசிக்காமல் குழந்தை பருவத்திலிருந்தே இவற்றை அனுசரிக்கும் பழக்கத்தை கொண்டு வருவது பெற்றோரது கடமையாகும். மருத்துவரின் அறிவுரைப்படி சில யோகா பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்