SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தோலை தூக்கி எறியாதீங்க

2021-07-28@ 16:54:37

இயற்கையின் படைப்பில் எதுவும் வீண் இல்லை என்றுதான் தோன்றுகிறது. உதாரணமாக கனிகளைப் பாதுகாப்பதற்காகவே அதன் மேல் இயற்கை தோலை அமைத்திருக்கிறது என்பது ஒருபுறம் உண்மைதான். ஆனாலும், நாம் தூக்கி எறிந்துவிடும் தோலிலும் பல மருத்துவ விஷயங்கள் இருப்பதை நவீன ஆய்வாளர்கள் கண்டு வியந்துள்ளனர்.

ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்த வாழைப்பழத் தோல்

குறைந்த விலையில் எங்கேயும் எப்போதும் எளிதாக கிடைக்கக்கூடியது வாழைப்பழம். எளியவர்களுக்கான பழம் என்று கூட சொல்லலாம். எனவே வாழைப்பழத்தின் தோலும் நமக்கு சுலபமாக கிடைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால் அதன் பலன்களோ மிக அதிகம்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை (வெள்ளைப்பகுதி) முகத்தில் தேய்த்து வைத்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ முகம் பளபளப்பாக இருக்கும். முகச்சுருக்கங்களும் குறையும். சருமத்தின் வறட்சியை நீக்க வாழைப்பழத்தோலின் வெள்ளை நிறப்பகுதியை உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் கழித்து
கழுவலாம்.

வாழைப்பழத்தோலில் ஆன்டி ஆக்ஸிடென்ட் அதிகமாக இருப்பதால், தலையில் வாழைப் பழத்தோலின் வெள்ளை நிறப்பகுதியை தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்துப் பின் தலைக்குளித்து வர தலைமுடி பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். அத்துடன் தலைமுடி நல்ல ஆரோக்கியத்துடன் வலிமையாகவும் இருக்கும்.

கண்வீக்கத்தைக் குறைக்க கண்களை மூடி அதன் மேல் தோலை சிறிது நேரம் வைத்திருக்க கண் வீக்கம் குறையும்.

வாழைப்பழத்தோலின் உட்பகுதியை பற்களில் தேய்த்த பின் இரண்டு நிமிடங்களுக்கு பல்லில் வைத்துத் தேய்த்து பின் வாய்க் கொப்பளித்து சுத்தம் செய்ய வேண்டும், இவ்வாறு தொடர்ந்து செய்து வர பற்களில் படிந்துள்ள மஞ்சள் கறை போகும். பற்களும், ஈறுகளும் வலிமை பெறும். வாழைப்பழத்தோலில் உள்ள பொட்டாசியம் சத்தே இதற்கு காரணம்.

பூச்சிக்கடியினால் உடலில் தடிப்புகள் ஏற்பட்டால் அந்த இடத்தில் வாழைப்பழத்தோலின் உட்பகுதியை வைத்து மிருதுவாகத் தேய்த்து, பின் அரைமணி நேரம் கழித்து, அந்த இடத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். தேவைப்பட்டால் மறுபடி அதே போல செய்ய தடிப்பு சரியாகிவிடும்.

சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகளுக்கும் கூட மேலே சொன்ன வழிமுறையைப் பின்பற்றலாம். முகப்பரு தழும்புகளுக்கு அடிக்கடி இவ்வாறு செய்து வர கொஞ்சம் கொஞ்சமாக தழும்பு மறையும்.

மருவினை நீக்க வாழைப்பழத்தோலின் ஒரு சிறுபகுதியை எடுத்து, அதன் உட்பக்கம் மருவின் மேல் படுமாறு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும்.
சிறிய அளவிலான நெருப்புக் காயங்கள் பட்டால் அந்த இடத்தில் வாழைப்பழத்தோலின் உட்பகுதியினை வைக்கலாம். எரிச்சல் கட்டுப்படும்.   

ஒற்றைத் தலைவலியின்போது ஃப்ரிட்ஜில் வைத்து நன்கு குளிரூட்டப்பட்ட வாழைப்பழத்தோலை கழுத்தின் பின்பக்கம் ஒன்றும், நெற்றியில் ஒன்றுமாக சிறிதுநேரம் வைத்துக்கொண்டு படுத்திருக்க தலைவலி குறையும்.
 
சருமம் காக்கும் ஆரஞ்சு

ஆரஞ்சுத்தோலை காயவைத்து பொடியாக்கி, அதனை  உடலில் நன்கு தேய்த்து குளித்துவர, சருமம் மென்மையாகும். ஆரஞ்சுத்தோலை நெய்யில் புரட்டி, குளிக்கும் போது அதனை பாடி ஸ்க்ரப்பர் போல உடலில் தடவி தேய்த்து குளிக்க சருமம் பளபளப்பாகும்.

காய வைத்த ஆரஞ்சுத் தோலை டீயுடன் சேர்த்து பருக அந்த வித்தியாசமான சுவையும், நறுமணமும் உங்களை மறுபடி அந்த டீயை கட்டாயம் சாப்பிட வைக்கும். சீயக்காயுடன் காய்ந்த ஆரஞ்சுத்தோல் சேர்த்து அரைக்கலாம். தலைமுடிக்கு நல்லது.

செயற்கை ரசாயனம் நிறைந்த நறுமணமூட்டிகளை தற்போது அதிகம் பயன்படுத்தி வருகிறோம். அவற்றுக்கு பதிலாக ஆரஞ்சுத்தோலை நல்ல நறுமண மூட்டியாக பயன்படுத்தலாம். குப்பைகளைக் கொட்டிய பிறகும் குப்பை பக்கெட் ரொம்ப துர்நாற்றம் வீசினால், அதனுள் சில மணித்துளிகளுக்கு ஆரஞ்சுத்தோலை போட்டு வைத்தால் அந்த துர்நாற்றம் போய்விடும்.

இயற்கை சுவையூட்டி ஆப்பிள் தோல்

ஆப்பிள் தோலை காயவைத்துப் பொடி செய்து, அதனை கேக் மற்றும் பிரெட்களில் சிறிதளவு சேர்த்து செய்ய மணமாக இருக்கும். Infuser Water Bottles தெரியுமா? அதில் உள்ள சிறிய அறையில் பழங்களைப் போட்டு இன்னொரு பகுதியில் தண்ணீரை ஊற்றி வைத்தால் பழங்களின் மணத்துடன் தண்ணீர் குடிக்கலாம். வெய்யில் காலத்தில் சும்மா சும்மா தண்ணீர் குடிக்க வேண்டி வரும் போது, வெறும் தண்ணீர் குடிக்க போரடிக்கும்போது இப்படி செய்யலாம்.

ஆப்பிள் தோலைப் பயன்படுத்தி சிரப் தயாரிக்கலாம். அதனை பான் கேக்குகளின் மீது ஊற்றி பரிமாறலாம். ஆப்பிள் தோலைப் பயன்படுத்தி வீட்டிலே ஜாம் தயாரிக்கலாம். அதற்கான ரெசிபிக்கள் இணையத்தில் எளிதாக கிடைக்கின்றன. ஆப்பிள் தோலைப் பயன்படுத்தி ஆப்பிள் சிடர் வினிகர் (APPLE CIDER VINEGER) தயாரிக்கலாம்.

மேலும் ஆப்பிள் தோலில், ஜூஸ் தயாரித்தும் சாப்பிடுகிறார்கள்.

எடை குறைய உதவும் எலுமிச்சைத் தோல்

எலுமிச்சைத்தோலைக் காயவைத்துப் பொடியாக்கி வைத்துக்கொண்டு காலையில் எழுந்த உடன் வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சைத்தோல் பொடியுடன் சிறிதளவு தேன் கலந்து அருந்தி வர உடல் எடை குறையும்.

எலுமிச்சைத்தோல் பொடியுடன் தயிர் அல்லது பன்னீர் சேர்த்து முகத்தில் தடவி வர கருமையான திட்டுக்கள் நீங்கும். முகச்சுருக்கம் குறையும். எலுமிச்சைத்தோலை முகத்தில் வெறுமனே தேய்த்து வைத்து பின் கழுவ முகத்தில் எண்ணெய்ப்பசை குறையும். இவ்வாறு அடிக்கடி செய்து வர முகச்சுருக்கம், முகப்பரு, கரும்புள்ளிகள் ஆகியவை குறையும்.

வாய் துர்நாற்றம் இருந்தால் எலுமிச்சைத்தோல் பொடியினால் பல் துலக்க வாய் துர்நாற்றம் கட்டுப்படும்.  தேங்கி இருக்கும் நீரில் எலுமிச்சைத் தோலை போட்டு வைத்தால் கொசுக்கள் குறையும். எலுமிச்சைத்தோலை தண்ணீரில் கொதிக்க வைத்து டீ போல் அருந்தி வர நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.  எலுமிச்சைத்தோல் பொடி கொண்டும் டீ தயாரிக்கலாம்.

எலுமிச்சைத்தோலைக் காயவைத்துப் பொடியாக்கி அதனுடன் வினிகர் மற்றும் பச்சைக் கற்பூரம் சேர்த்து கிருமிநாசினியாக வீட்டை சுத்தமாக்க பயன்படுத்தலாம்.

எலுமிச்சைத்தோலானது புற்றுநோயை தடுக்கவும் எலும்புகளை பலமாக்கவும் உதவுவதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • haiti-refugees-21

  ஹைத்தியில் பாதுகாப்பில்லை, வேலையில்லை!: அமெரிக்காவில் தஞ்சமடைய எல்லையில் குவிந்த அகதிகள்..!!

 • drone-21

  புதுசு புதுசா கண்டுபிடிக்குறாங்கப்பா!: கம்போடியாவில் ஆள் ஏற்றி செல்லும் ட்ரோனை உருவாக்கி மாணவர்கள் அசத்தல்..!!

 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்