SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டச்சத்து மூலம் சரும வயதினை கட்டுப்படுத்தலாம்!

2021-07-26@ 17:26:33

நன்றி குங்குமம் தோழி

சருமம்தான் ஆரோக்கியத்தின் கண்ணாடி. நம்முடைய சருமம் பொலிவாக இருந்தால் அது நம் உடல் ஆரோக்கியமாக இருக்கவும் அதே சமயம் முதிர்ந்த தோற்றத்தையும் கட்டுப்படுத்தும். தலை முதல் கால் வரை ஒரு போர்வையாக நம் உடலை பாதுகாக்கும் கவசம் தான் சருமம். இதுதான் நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு என்பது பலர் அறியப்படாத உண்மை. பொதுவாகவே பெண்கள் தங்களின் சரும பராமரிப்புக்கு அதிக கவனம் செலுத்துவது வழக்கம்.

அவர்களின் சரும பொலிவிற்காக சோப்புகளில் ஆரம்பித்து எண்ணில் அடங்கா அழகு சாதன பொருட்கள் மார்க்கெட்டில் உள்ளன. அதில் பெரும்பாலும் பெண்களுக்கான சரும பராமரிப்புக்கான பொருட்கள் என்று சொல்லலாம். இவைகளால் அவர்கள் விரும்பும் சரும பளபளப்பு, பிரகாசம், சரும மென்மை கிடைக்கும் என சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் இந்த தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்தினால்? என்ற கேள்விக்கான ஒரே பதில் நாம் உண்ணும் உணவில் அதிக கவனம் செலுத்துவது அவசியம் என்கிறார் அழகுசாதன நிபுணர் டாக்டர் கீதிகா மிட்டல்.

‘‘நம்மில் அனைவருக்கும் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். ஒருவரின் சருமம் அவர்கள் பிறக்கும் போதே நிர்ணயிக்கப்படுகிறது. அதனால்தான் சருமத்தை எண்ணை பசை, சாதாரண மற்றும் வறண்ட சருமம் என்று மூன்று வகையாக பிரிக்கிறோம். இதில் எண்ணை பசை சருமம் உள்ளவர்களுக்கு முகத்தில் அதிக அளவு எண்ணை பிசுக்கு இருக்கும், முகப்பரு பிரச்னை ஏற்படும். வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு சருமம் வறண்டு போய் சில சமயம் தோல் உரியவும் வாய்ப்புள்ளது. மேலும் வயதாகும் போது சருமம் மேலும் பாதிக்கப்படும். அந்த நேரத்தில் சருமத்திற்கு இது போன்ற அழகு சாதன பொருட்கள் பெரிய அளவில் பலனை தராது. மேலும் அவர்கள் சின்ன வயதில் இருந்தே ஆரோக்கியமான உணவினை உட்கொண்டு வந்தால், சருமமும் இளமையாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

நம் சருமத்தை இளமையாகவும் அதே சமயம் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் பல சவால்கள் உள்ளன. சிறிய வயதில் நாம் எந்த வகையான உணவுகளையும் சாப்பிடலாம். அதே சமயம் வயதான பிறகு எந்த உணவினை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். மேலும் ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதற்கும் சருமத்தின் முதிர்வை தாமதப்படுத்துவதற்கும் என்ன வழி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஒரு ஆய்வின்படி, சர்க்கரைக்கும் சில உணவுகளை தயாரிக்கும் முறைகளுக்கும் (கிரில், எண்ணையில் பொரிப்பது மற்றும் பேக்கிங் முறைகள்) சரும முதிர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. சருமம் ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து நிறைந்த உணவு அவசியம். இது சருமத்தில் உள்ள அனைத்து உயிரியல் செயல்முறைகளுக்கும் தேவைப்படுகிறது, இளைஞர்கள் முதல் வயதானவர்கள் அல்லது நோயுற்றவர்கள் அனைவருக்கும் நாம் சாப்பிடும் உணவுகள் அவர்களின் சருமத்தை பாதுகாக்கவும் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் உதவும்.

நாம் தொடர்ந்து பின்பற்றாத பல எளிய விஷயங்கள் வயது முதிர்வை ஏற்படுத்தும். போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது, வைட்டமின்கள், புரதங்கள் குறைபாடு மட்டுமில்லாமல் துத்தநாகம், தாமிரம், இரும்பு, அயோடின் போன்ற கூறுகள் குறைபாடும் சருமத்தை பாதிக்கும்.உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் சத்து இல்லாமல் இருந்தால் அது திசுக்களை பாதிப்பது மட்டுமில்லாமல், அதன் செயல்பாட்டிலும் சிக்கல்களை வழிவகுக்கும். நம்முடைய உடலில் தண்ணீரின் அளவு குறையும் போது அது முகத்தில் மட்டுமில்லாமல் உதடு, கை கால்கள் போன்றவற்றிலும் பிரதிபலிக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அது தண்ணீராக மட்டுமில்லாமல் இளநீர், சூப், பழச்சாறுகள் போன்ற வடிவிலும் இருக்கலாம். இதில் உள்ள நீர்சத்து மட்டுமில்லாமல், பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள விட்டமின்களும் சருமத்தில் கூடுதல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

வைட்டமின் ஈ, மெக்னீசியம், புரதம், தாமிரம், துத்தநாகம், அயோடின் போன்ற 15 ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாகும் பாதாம். தினமும் உங்கள் உணவில் பாதாம் சேர்த்துக் கொண்டால் அத சரும பராமரிப்புக்கு மிகவும் உகந்தது என்று ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமான கலோரி பொருந்திய தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் பாதாம் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் நின்ற பெண்களின் சருமம் சுருக்கத்தில் இருந்து பாதுகாக்கவும் அதே சமயம் அவர்களின் சருமத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும். பாதாமில் நம் சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடென்ட்  வைட்டமின் ஈ மற்றும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு அமிலங்கள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. பாதாமை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு கருவியாக அமைகிறது.

வைட்டமின் சி குறைபாடும் சரும பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். ஆரஞ்சு, எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, சாத்துக்குடி மற்றும் கொய்யாவில் விட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. நம்முடைய உடலில் திசுக்கள் அனைத்தும் புதுப்பிக்கவும் மேலும் ஆரோக்கியமாக செயல்படவும், பாதிப்படைந்த திசுக்கள் மேலும் வலுப்பெறவும், புரதம் மிகவும் அவசியம். அதனால் புரதம் நிறைந்த உணவுகளையும் நாம் உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.

நம்முடைய சருமம் மாதம் ஒரு முறை புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது. அதற்கு சக்கரம் எந்த பாதிப்பு இல்லாமல் சுழல்வதற்கு புரதம் முக்கியம். புரதச்சத்து நிறைந்த பாதாம் தவிர, ஆரோக்கியமான சருமத்திற்கான தயிர், பயறு வகைகள் மற்றும் ஓட்ஸ் போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் உணவில் சேர்த்துக் கொள்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று சருமம் இளைமையாக இருக்க ஆலோசனை வழங்கினார் அழகுசாதன நிபுணர் டாக்டர் கீதிகா மிட்டல்.

தொகுப்பு: ஷம்ரிதி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • saudi-camel-16

  சவுதி அரேபியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பிரம்மாண்டமான ஒட்டக சிற்பம்!: 7,000 ஆண்டுகளுக்கு முந்தையது என விஞ்ஞானிகள் தகவல்..!!

 • iceland-16

  ஐஸ்லாந்தில் இரவையே பகலாக மாற்றிய எரிமலை தீக்குழம்பு..!!

 • dolphins-15

  டென்மார்க்கின் ஃபாரோ தீவுகளில் ஒரேநாளில் கொன்று குவிக்கப்பட்ட 1,428 டால்பின்கள்!: செந்நிறமாக மாறிய கடற்கரை..!!

 • anna-15

  பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள்!: முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர் மலர்தூவி மரியாதை..!!

 • gujarat-14

  கொட்டி தீர்த்த கனமழையால் ஸ்தம்பிக்கும் குஜராத், ஒடிசா மாநிலங்கள்!: சாலைகள், தெருக்களை ஆக்கிரமித்த வெள்ளம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்