SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டயட்... நல்லதா? கெட்டதா?

2021-01-11@ 17:34:36

இன்றைய சூழலில் நாம் சந்திக்கும் பத்து பேரில் ஒருவராவது ‘டயட்டில் இருக்கிறேன்’ என்று சொல்வதை கேள்விப்படுகிறோம். உலக அளவில் உடல் எடையைக் குறைப்பதற்காகவும், கூட்டுவதற்காகவும் பின்பற்றப்படும் உணவுத் திட்டங்கள்தான் டயட் எனப்படுகிறது. இதில் வீகன், பேலியோ, கீட்டோ போன்ற டயட் வகைகள் அதிகம் பின்பற்றப்படுகிறது. அவ்வாறு எடுக்கப்படும் டயட்டுகளினால் சில விபரீதங்களும் ஏற்படதான் செய்கின்றன. அதற்கு உதாரணமாக பல காரணங்கள் சொன்னாலும் சமீபத்தில் உயிரிழந்த பாலிவுட் நடிகை மிஸ்டி முகர்ஜியின் மருத்துவ அறிக்கை சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதான மிஸ்டி முகர்ஜியின் மரணத்திற்கு அவர் பின்பற்றிய கீட்டோ டயட். இவர் இந்த டயட்டினை பின்பற்றியதால், சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டு இறந்தார் என்கிறது அந்த அறிக்கை. கீட்டோ டயட், Epilepsy என்று சொல்லக்கூடிய நரம்பு மண்டலப் பிரச்சினைக்கு ஆளாகிய குழந்தைகளுக்காக முதலில் உருவாக்கப்பட்டது. இதைப் பின்தொடரும் போது உடல் எடை குறைவதைக் கண்டறிந்ததும் உடல் எடை குறைவதற்காக இந்த டயட் பின்பற்றப்பட்டது.
கீட்டோ டயட்டில் 70-80 சதவீதக் கொழுப்பு, 20 சதவீதப் புரதம் மற்றும் 5 சதவீத மாவுச்சத்து என்ற விகிதத்தில் உணவு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதனால் புரத அளவு குறைவதற்கும், சிறுநீரில் புரதம் வெளியேறுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன. கீட்டோ டயட் நீண்ட நாட்கள் பின்பற்றுபவர்களுக்கு சிறுநீரகக் கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. காய்கறிகளையும் பழங்களையும் தவிர்ப்பதால் விட்டமின் - தாது அளவு மிகவும் குறையும். விட்டமின்-தாதுப் பற்றாக்குறை காரணமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாக நேரிடும். அடுத்ததாக பேலியோ டயட்.  கற்கால உணவு களை  அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்டது பேலியோ டயட். இதை ‘பேலியோலித்திக் டயட் ‘(Paleolithic diet) என்றும் ‘கற்கால டயட்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்த டயட்டில் காய்கறிகள், நட்ஸ், வேர்கள், இறைச்சி (ஈரல், மூளை) ஆகியவை அடங்கும். இதில் இடம்பெறாதவை பால் சார்ந்த உணவுகள், தானியங்கள், சர்க்கரை, பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், உப்பு, காபி, மது. 'பேலியோ டயட், உடல் சுகாதாரத்தை மேம்படுத்தும்’ என்று கூறப்படுகிறது.  
‘வீகன்’ என்று அழைக்கப்படும் நனி சைவ (சுத்த சைவம்) உணவுமுறையில் பிற விலங்கினங்களில் இருந்து பெறப்படும், தயிர், மோர், நெய், வெண்ணெய், பாலாடைக் கட்டி மற்றும் தேன் என எந்த உணவும் இடம்பெறுவது இல்லை.

தாவரங்களிலிருந்து பெறப்படும் பழங்கள், காய்கறிகள், கீரைகள், முழு தானியங்கள், பயறு வகைகள், பருப்பு வகைகள், கொட்டைகள், உலர் பழங்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதுதான் வீகன் டயட். இவ்வாறாக எடுக்கப்படும் டயட்கள் பெரும்பாலும் உடல் எடையினை விரைவாக குறைப்பதற்கும், அழகுக்காகவும் இன்றைய இளம் வயதினர் பின்பற்றுகின்றனர். அவ்வாறு எடுக்கப்படும் டயட் உணவு முறை தவறு இல்லை என்பது மருத்துவர்களின் கருத்து.

ஆனால், அதை தங்கள் உடல், வாழ்க்கை முறை போன்றவைகளின் நிலையை அறிந்து மருத்துவர்களின் ஆலோசனையோடு பின்பற்ற வேண்டும் என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். குறிப்பாக ஏற்கனவே உடலில் பிரச்சினை இருப்பவர்கள் இந்த டயட்டுகள் எல்லாம் தங்கள் உடலுக்கு தகுந்ததா? இதை எடுக்கும் போது ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது அவசியமாகிறது. பக்கத்து வீட்டுக்காரர்கள், நண்பர்கள் சொன்னது, யூ டியுபில் பார்த்து பின்பற்றுவது போன்ற செயல்களால் நாற்பது, ஐம்பது வயதில் வந்து கொண்டிருந்த நோய்கள் இன்று இருபது வயதில் வர ஆரம்பித்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையிலும், உணவு முறையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கியிருக்கிறோம். நம்மை சுற்றி இருக்க கூடிய சூழலில் என்ன உணவு இருக்கிறதோ அல்லது விலைகிறதோ அதை எடுத்து கொள்வதுதான் தீர்வு என்கிறார்கள் உலக சுகாதார போன்ற அமைப்புகள். குறிப்பாக இந்த டயட்டுகளில் இல்லாத கொழுப்பு, புரதம், மாவுச்சத்து மூன்றுமே சம அளவில் சமச்சீராக எடுத்துக் கொள்வது முக்கியம். ஒரு டயட்டினை ஆரம்பிக்க இருந்தால் அதை உடனடியாக செயல்படுத்தக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

தங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில் கொஞ்சம் கொஞ்சமாக தான் அந்த உணவு பழக்கத்திற்கு மாற வேண்டும். அதேபோல் ஒரு உணவு பழக்கத்தை விடும் போதும், படிப்படியாக தான் நிறுத்த வேண்டும். இந்த கொரோனா காலத்தில் ‘நோய் எதிர்ப்பு சக்தி’ என்கிற வார்த்தையின் பயன்பாடு அதிகமாக இருந்தது. அது நம் பாரம்பரிய  உணவுகளிலேயே இருக்கிறது என்கிற விழிப்புணர்வு இன்று எல்லோரிடமும் வந்திருக்கிறது. உடல் நம் சொத்து. அதை பாதுகாப்போடு வைத்திருக்க வேண்டும் என்கிற நோக்கில் பயணிப்போம்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 02-03-2021

  02-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • corona-modi1

  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி!: புகைப்படங்கள்

 • myan-firing1

  மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி!: போராட்டக்காரர்கள் மீதான துப்பாக்கி சூட்டில் 18 பேர் பலி...உச்சக்கட்ட பதற்றம்..!!

 • itaklyyychha

  இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் எரிமலை சாம்பலில் கிடைத்தது

 • 01-03-2021

  01-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்