SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவே மருந்து - உடல் செல்களை புதுப்பிக்கும் வெள்ளைச் சோளம்

2021-01-06@ 17:41:00

நன்றி குங்குமம் தோழி

வெள்ளைச் சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். பெயருக்கேற்றபடியே சிறுதானியங்களில் சிறப்பான இடம் உண்டு இதற்கு. இதன் இன்னொரு பெயர் சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்றாலும் வெள்ளைச் சோளத்தைத்தான் குறிக்கும். இதை தெலுங்கில் - ஜொன்னலு, இந்தியில் - ஜோவர், கன்னடத்தில் - ஜுலா என்றும் அழைப்பார்கள்.

வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளைச் சோளம், பழுப்புநிற சோளம் என பலவகை சோளங்கள் உள்ளன. சோளத்தில் சில வகைகள் தானியங்களுக்காகவும் வேறு சில வகைகள் கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. இன்னும் சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன. ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் சோளம் ஒரு உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

சோளம் உலகம் முழுவதும் மிதமான தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மனிதர்களுக்குப் பரிச்சயமானவை. சோளம் வடகிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றியது. சோளம் பற்றிய ஆரம்பகால பதிவு கிமு 8000 ஆம் ஆண்டிலிருந்து ஒரு தொல்பொருள் தோண்டலில் இருந்து வந்தது. இந்த பயிர் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பரவி இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. யுனைடெட் ஸ்டேட்ஸில், சோளம் பற்றிய முதல் பதிவு பெஞ்சமின் பிராங்க்ளின் என்பவரிடமிருந்து வந்தது.

அவர் 1757 ஆம் ஆண்டில் விளக்குமாறு தயாரிப்பதில் அதன் பயன்பாடு பற்றி எழுதினார். இன்று, இது தெற்கு டகோட்டாவிலிருந்து தெற்கு டெக்சாஸ் வரை பயிராகும்  “சோர்கம் பெல்ட்” என அழைக்கப்படுகிறது. சர்வதேச இதழான வோக் (Vogue magazine) இதழில் 2016ம் ஆண்டு வெளிவந்த ஒரு மருத்துவக்கட்டுரையில் க்யுனா (Quinoa)க்கு அடுத்தபடியானதாக வெள்ளைச்சோளத்தை மிகவும் சிறப்பித்து எழுதப்பட்டுள்ளது.

சிறுதானியங்கள் மட்டுமே மிகவும் சுலபமாக வளரக்கூடியவை. 1966ம் ஆண்டுதான் ‘பசுமைப் புரட்சி’ என்ற பெயரில் அரிசி, கோதுமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். உலக உற்பத்தியில் 42 சதவிகித சிறுதானியங்கள் இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றன. இந்த சிறுதானியங்களை பயிரிடும்போது அரிசி, கோதுமையைப்போல அதிக தண்ணீர் பாய்ச்சத் தேவையில்லை. வாழை, கரும்பு பயிரிடும்போது உபயோகப்படுத்தும் தண்ணீரில் கால் பங்கு இருந்தாலே போதும். அதிக ஆழம் உழத் தேவையில்லை. அதிக உரமும் போட வேண்டிய அவசியமில்லை.

இதற்கு ரசாயன உரம் போடாமல் இயற்கை உரத்தை மட்டுமே போட்டால் போதும். ஊடு பயிராக பயிரிட இயலும். இதற்கு புழு, பூச்சி, வண்டுகள் வராது. பாசனத்துக்காக மற்ற வேலைகள் செய்ய ஆட்களை கூலிக்கு அமர்த்த வேண்டியதில்லை. மணற்பாங்கான இடத்திலும் வளரும். மற்ற தானியங்களுக்கு அரசாங்கம் உரத்துக்காக மானியம் தருகிறார்கள். அதற்குப் பதில் சிறுதானியங்களை அதிகம் சாப்பிடும்போது, விவசாயிகள் அதிகம் பயிரிடுவார்கள். அரசாங்கம் மானியம் தருவதையும் வெகுவாக குறைக்க இயலும். நம்நாட்டில் பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வறண்ட இடங்களில் வெள்ளைச்சோளத்தை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இங்கு கோதுமையைவிட சோளத்தை அதிகம் பயிரிடுகிறார்கள்.

அரிசி, கோதுமையைவிட மூன்றிலிருந்து ஐந்து மடங்கு புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் அதிகம் உள்ளவை சிறுதானியங்கள். நம் நாட்டில் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் இறக்கும்  சிறு குழந்தைகள் மிகவும் அதிகம். இவர்களுக்காக உலக சுகாதார நிறுவனம் பலவித உதவிகள் செய்கிறது. இவர்களுக்கு அளிக்கப்படும் சத்துமாவுக் கஞ்சியில் முக்கியமான இடம் வெள்ளைச் சோளத்துக்குத் தரப்படுகிறது. இதைக் கொண்டு உணவு தயாரிக்கும்போது, இதோடு கூட வைட்டமின் ‘சி’, ‘ஏ’ இருக்கும்படி தேர்ந்தெடுத்தாலே போதும். மற்ற சிறுதானியங்களைவிட சோளத்தில் தோல் அதிக கடினமாக இருக்காது. பலவிதமான உணவுகளை சுலபமாக சமைக்க இயலும். இது முழு சோளமாகவும், உடைத்த ரவை போலவும், மாவாகவும் கிடைக்கிறது.

ஆங்கிலத்தில் ‘Corn’ என்று சொல்லப்படும் மக்காச்சோளம் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் சாப்பிட்டிருப்போம். ஆனால் வெள்ளைச் சோளம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரியாது. வெள்ளைச் சோளத்தில் என்னென்ன சத்துக்கள் நிறைந்திருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

100 கிராம் வெள்ளைச் சோளத்தில் இருக்கும் சத்துகள்:

இதில் இருக்கும் புரதம் முழுமையானது. 12 முக்கிய அமினோ அமிலங்களும் வெள்ளைச் சோளத்தில் உள்ளன.  இதை தினமும் உண்ணும்போது நல்ல செல்கள் உற்பத்தியாகும். மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும். உடலில் உள்ள எலும்புகள் நல்ல பலத்துடன் இருக்கும். எடை போடாது. ரத்த அணுக்கள் உற்பத்தி சரிவர இருக்கும். சீக்கிரம் சோர்வடையாமல் இருக்கும் அளவுக்கு நல்ல மாவுச்சத்தும் நார்ச்சத்தும் கொண்டது. கர்ப்பிணிகளுக்கு மிக முக்கியத் தேவையான ஃபோலிக் அமிலம், புரதம், இரும்புச்சத்து என அனைத்துச் சத்துக்களும் வெள்ளைச்சோளம் ஒன்றிலேயே
உள்ளது.

அந்தோசயின்கள் (Anthocyanins), ஃபிளாவோன்கள் (Flavones), டானின்கள் (Tannins) மற்றும் பினோல்கள் (Phenols) உள்ளிட்ட பைட்டோ கெமிக்கல்களும் (Phytochemicals) சோளத்தில்  நிறைந்துள்ளது, ‘‘சோளத்தை மாவாக்கினாலும், குறுனையாக்கினாலும் சரி எஞ்சியுள்ள தவிட்டில் கூட பைட்டோ கெமிக்கல்கள் குவிந்துள்ளன. முழுமையான சோளத்தில் உள்ள  அசல் ஊட்டச்சத்துக்கள் இழக்காமல் அப்படியே இருக்கும். இந்தவகையில், தானிய வகைகளிலேயே விதிவிலக்கானது சோளம்.

சப்பாத்தி, பரோட்டா போன்றவை மிருதுவாக இருக்க வேண்டும் என்பதற்காக சுத்திகரிக்கப்பட்ட கோதுமையை மைதாவாக கலக்கிறார்கள். இதனால் பல ஆரோக்கிய கேடுகள் விளைகின்றன. அதற்கு பதில் சோளமாவினால் செய்த ரொட்டி சாப்பிடுவது ஆரோக்கியமானது. மேலும் சைவ உணவுக்காரர்கள் மற்றும் வீகன் எனப்படும் முற்றிலும் விலங்குகளிடமிருந்து தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களை தவிர்ப்பவர்களுக்கு புரதச்சத்து குறைவு இருக்கும். இவர்கள் வெள்ளைச்சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புரதச்சத்தினை சமநிலையில் பெறமுடியும்.

செரிமானத்திற்கு ஏற்றது

சோளத்தில் நார்ச்சத்து (Fiber) மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. செல்களை புத்துணர்ச்சி அடைய செய்து தசை வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். இதிலிருக்கும் நார் சத்து உணவு மண்டலத்தை சுத்தம் செய்வதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதய ஆரோக்கியத்திற்கு வெள்ளைச் சோளத்தில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்து ரத்தத்தை சுத்தப்படுத்தி நல்ல ஆரோக்கியத்தை இதயத்திற்கு தருகின்றது. இதனால் இதயத்தில் இருக்கும் ரத்தம் சுத்தமாகவும் கொழுப்பின்றியும் ஆரோக்கியமாக இருக்கும். மாரடைப்பு அபாயத்திலிருந்து நம்மை வெள்ளைச் சோளம் பாதுகாக்கின்றது.

சர்க்கரை நோயாளிக்கு ஏற்றது

சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் வெள்ளைச் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தத்தின் சர்க்கரை அளவை அதிகரிக்கவிடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது.

குளுட்டன் ஒவ்வாமை (Relieving Gluten Allergy)

கோதுமை உணவுகள் உண்பதாலும், நீண்ட தூரம் பயணம் செய்பவர்களுக்கும் இது போன்ற அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேர்வை அதிகம் தங்குவதால் சருமம் பாதிப்புக்குள்ளாவதாலும் இது போன்ற அலர்ஜி அதிகம் ஏற்படுகின்றது. எரிச்சலுடன் கூடிய அரிப்பு மற்றும் தோல் குறிப்பிட்ட இடத்தில் உரிந்து சிவப்பு நிறமாக காணப்படும். இது பெரும்பாலும் கால் முட்டி, எல்போ  உடலின் பின்புறத்தில் போன்ற இடங்களில் ஏற்படும். வெள்ளை சோளத்தை தினமும் உணவில் எடுத்துக்கொள்வதால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுவது தானாகவே தடுக்கப்படுகின்றது.

எலும்பை பலப்படுத்துகின்றது

வெள்ளை சோளத்தில் இருக்கும் மாவு சத்து மற்றும் புரதம் எலும்புகளை வலுவடைய செய்கின்றது. வெள்ளை சோளம் வயது முதிர்வால் ஏற்படும் நாட்பட்ட மூட்டு வலி மற்றும் எலும்பு தேய்மானம் உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. எலும்பு வலு பெறுவதுடன் தேய்மானம் சரி செய்யப்படுகின்றது.

ஆற்றலை அதிகரிக்கின்றது

உடல் அதிகம் சோர்வடைவதிலிருந்து காக்கின்றது. உடலுக்கு தேவையான சக்தியை தந்து பலப்படுத்துகின்றது. உடலின் எனர்ஜி குறையாமல் பாதுகாக்கின்றது. காலை உணவாக வெள்ளை சோளத்தை எடுத்துக்கொள்வது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

உடல் சுழற்சிக்கு உதவுகின்றது

வெள்ளை சோளத்தில் தேவையான தாதுச்சத்துக்கள், இரும்பு சத்து, மெக்னீசியம், கால்சியம் மற்றும் காப்பர் சத்துக்கள் நிறைந்திருப்பதால் உடல் செல்களில் சுழற்சி முறையில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை தானாக சரிசெய்கின்றது. உடலுக்கு புத்துணர்ச்சியை தந்து வலு பெற செய்கின்றது. ரத்த சோகை ஏற்படுவது முற்றிலுமாக தடுக்கப்படுகின்றது.

குறைந்த ரத்த அழுத்தம்

குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படாமல் வெள்ளை சோளம் தடுக்கின்றது. மேலும், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தவும் செய்கிறது. இதிலிருக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கான செல்கள் வெள்ளை அணுக்களை எதிர்த்து போராடும் திறனை தருகின்றது. இதனால் குறைந்த ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்டு மயக்கம், ஒவ்வாமை போன்றவை சரி செய்யப்படுகின்றது.

உடல் எடையை குறைக்கின்றது

வெள்ளை சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றது. உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கின்றது. வெள்ளை சோளத்தை உணவாக உட்கொள்பவர்கள் அதிகம் பழத்தை எடுத்துக்கொண்டால் சருமம் நல்ல பளபளப்பை பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி

வெள்ளை சோளத்தில் நோயை எதிர்த்து போராடும் ஆன்டி ஆக்ஸிடன்டுகள் (Antioxidants)போதுமான அளவு இருக்கின்றது. தொடர்ந்து வாரம் இரண்டு முறை இதை எடுத்து வந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வயிற்று வலி, உடல் சோர்வால் பாதிக்கப்படுபவர்களுக்கு மிகச்சிறந்த
நிவாரணியாக இருக்கின்றது.

இதுமட்டுமல்லாமல், வெள்ளைச் சோளத்தில் உள்ள சேர்மங்களில் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகள் மிகப் பெரிய அளவில் உள்ளதாகவும், பெருங்குடல் புற்றுநோய் செல்கள் பெருக்கப்படுவதைத் தடுக்கும் திறனை கொண்டுள்ளதாகவும் ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் சோளத்தில் உள்ள எதிர்ப்பு ஸ்டார்ச் எடை அதிகரிப்பதைத் தடுக்க உதவியதும் தெரியவந்துள்ளது.

சமையல்கலை நிபுணர் நித்யா

நடராஜன் வெள்ளைச்சோளம் பயன்படுத்தி கார சோள பணியாரம் செய்யும் முறையை  இங்கே விவரிக்கிறார்.

கார சோள பணியாரம்

பணியார மாவு அரைக்க தேவையான பொருட்கள்

வெள்ளைச் சோளம்  - 1 ½ கப்,
இட்லி அரிசி - 2 கப்,
உளுந்து - ½ கப்,
அவல் (வெள்ளை) - ¼ கப்,
உப்பு - தேவைக்கேற்ப,

பணியாரத்தில் கலப்பதற்குத் தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம் - 1 கப், (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (அ) 4, (பொடியாக நறுக்கியது)
மல்லித்தழை - 1 கைப்பிடி, உளுந்து - 1 டேபிள் ஸ்பூன், கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன், கேரட் துருவியது - 1 கப் (தேவையெனில்), தேங்காய்த்துருவல் 2 டேபிள் ஸ்பூன்), கருவேப்பிலை - 1 கைப்பிடி (பொடியாக நறுக்கியது).

செய்முறை

அரிசி, வெள்ளைச் சோளம், உளுந்து ஆகியவற்றை நன்கு கழுவி 3 மணிநேரம் ஊற வைக்கவும். அவலை தனியாக ஊறவைத்து, இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து 6 முதல் 8 மணி நேரம் கழித்து பணியாரம் செய்ய எடுத்துக் கொள்ளலாம். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு, கருவேப்பிலை, உளுந்து, கடலைபருப்பு தாளித்து, பின்னர் நறுக்கி வைத்துள்ள பச்சைமிளகாய், வெங்காயம், கேரட் சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி அதை மாவில் சேர்க்கவும். மேலும் மல்லித்தழை, தேங்காய்த்துருவல் சேர்த்து கலந்து உப்பு தேவைக்கேற்ப சேர்த்து குழிப்பணியாரக்கல்லில் எண்ணெய் ஊற்றி பணியாரம் செய்யலாம். இதில் தேங்காய்த்துருவல் சேர்ப்பதால் பணியாரம் சூடு குறைந்தாலும் சாஃப்டாகவே இருக்கும். அப்படியேவும் சாப்பிடலாம். தேவையெனில், தேங்காய் சட்னியுடன் சேர்த்தும் சாப்பிடலாம். சுவையான கார சோள பணியாரம் ரெடி.

தொகுப்பு: மகாலட்சுமி

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 25-02-2021

  25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • jayyaaaa_bdaayy

  73 கிலோ கேக் வெட்டுதல்.. 73 லட்சம் மரக்கன்றுகள் நடுதல்.. மெழுகுசிலை அருங்காட்சியகம் : ஜெயலலிதா பிறந்த நாள் தடபுடலாக கொண்டாட்டம்!!

 • golfer-woods

  அமெரிக்காவில் பிரபல கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் சென்ற கார் விபத்தில் சிக்கியது..!!

 • penguin24

  உலகிலேயே முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள மஞ்சள் நிற பென்குயின்!: புகைப்படங்கள்

 • 24-02-2021

  24-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்