SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜீரோ சைஸ் ஆரோக்கியமானதில்லை!

2020-12-15@ 16:31:02

உடற்பயிற்சி நிபுணர் யாஸ்மின் கராச்சிவாலா

‘‘நம் தாத்தா பாட்டி எல்லாரும் வீட்டு வேலை மட்டும் இல்லாமல் வயல் வேலை என அனைத்தும் செய்து வந்தார்கள். ஆனால் இன்றைய தலைமுறை
பெண்கள் எந்த வேலையும் செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. வீடு பெருக்குவது முதல் பாத்திரம் துலக்குவது, துணி துவைப்பது என அனைத்து வேலைகளையும் மெஷின்தான் செய்கிறது. இதனால் உடல் பருமன், மூட்டு வலி போன்ற பிரச்னைகளால் இளம் வயதிலேயே பெண்கள் அவதிப்படுகிறார்கள்.

அதற்காகவே உடற்பயிற்சி கூடம் சென்று பயிற்சி எடுக்கிறார்கள். எதுவாக இருந்தாலும், பெண்கள் கண்டிப்பாக தங்களை பிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம்’’ என்கிறார் யாஸ்மின் கராச்சிவாலா. இவர் கடந்த 26 வருடமாக பிட்னெஸ் துறையில் இருந்து வருகிறார். பாலிவுட்டின் பல முன்னணி நடிகைகளான கேத்ரீனா கைப், பிபாஷா பாசு, வாணி கபூர், ஆலியா பட், ப்ரீத்தி ஜிந்தா. தீபிகா படுகோன்... மற்றும் பலருக்கு உடற்பயிற்சி ஆலோசகராக உள்ளார். பாலிவுட்டின் மோஸ்ட் வாண்டெட் உடற்பயிற்சி ஆலோசகரான இவர் வேக் பேஷன் விருது, எல் ப்யூட்டி விருது, ஜயன்ட்ஸ் விருது, ரோட்டரி விருது, வேர்ல்ட் லீடர்ஷிப் விருது, சூப்பர் வுமன் விருது மற்றும் கடந்த ஆண்டின் பிட்னெஸ் இன்னோவேட்டர் போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

மேற்கு மும்பையில் ‘யாஸ்மின் பாடி இமேஜ்’ என்ற உடற்பயிற்சி மையத்தை நிர்வகித்து வரும் இவர் பான்த்ரா, அந்தேரி, துபாய், தாகா மற்றும் தில்லியிலும் இவரின் உடற்பயிற்சி மையத்தின் பிராஞ்ச் செயல்பட்டு வருகிறது. ‘‘ஆரம்பத்தில் எனக்கும் பிட்னெஸ் மேல் கொஞ்சம் வெறுப்பு இருந்தது உண்மைதான். அப்ப எனக்கு வயசு 21. என்னுடைய தோழி தான் என்னை வற்புறுத்தி ஜிம்மில் சேரச் சென்னாள். ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும். போகப் போக என்னை அறியாமலே அதன்மேல் ஈடுபாடு ஏற்பட ஆரம்பிச்சது. அப்படி ஆரம்பிச்சது தான் என்னுடைய பிட்னெஸ் மோகம். நான் ஒரு பயிற்சியாளராக மாறக் காரணம் எனக்கு பயிற்சி அளித்தவர் தான்.

அவர் தான் எனக்குள் ஒளிந்து இருந்த பயிற்சியாளரை கண்டறிந்து, என்னை மோட்டிவேட் செய்தார். அவர் அளித்த ஊக்கம் தான் அதற்கான பயிற்சி எடுக்க வைத்தது. எல்லா விதமான உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொண்டேன். அதில் பாசி சான்றிதழ் பெற்ற இந்தியாவின் முதல் பிலேட்ஸ் என்று சொல்லப்படும் ஒரு வகையான பிட்னெஸ் பயிற்சியாளர் என்ற பெருமை எனக்குண்டு. இது உடல் மற்றும் மனதை இணைக்கக் கூடிய ஸ்ட்ரெச்சிங் உடற்பயிற்சி. அதனால் உடல் வலுவாகும் மற்றும் தசைகள் இறுக்கமாகும்’’ என்றவர் பிரபலங்களுக்கு பயிற்சி அளிப்பார் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லையாம்.

‘‘என்னுடைய பயிற்சி கூடத்தைப் பற்றி கேள்விப்பட்டு முதலில் கரீனா கபூர்தான் வந்தார். அவருக்கு நான் பயிற்சி அளித்த விதம் பிடித்து இருந்தது. அவர் மூலம் தான் மற்ற பிரபலங்கள் எனக்கு அறிமுகமானாங்க. தற்போது பாலிவுடின் பல முன்னணி நடிகைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். பொதுவாகவே சினிமா, மாடலிங் போன்ற துறையில் இருப்பவர்கள்தான் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் தங்களின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவேண்டும்.

இதனால் உடல் ரீதியாக மட்டுமில்லாமல் மன ரீதியாக ஏற்படும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். உடல் பருமன் குறைவது மட்டுமல்லாமல், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், வயதான தோற்றம் ஏற்படாது. உடற்பயிற்சிகள் ஒரு பக்கம் என்றால், நாம் சாப்பிடும் உணவிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரிவிகித உணவினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். சிலர் வியர்வை சொட்ட சொட்ட உடற்பயிற்சி செய்வார்கள். அதன் பிறகு எல்லா விதமான ஜங்க் உணவுகளை சாப்பிடுவார்கள். அப்படி இருந்தால் உடற்பயிற்சி செய்ததற்கான பலனை அடைய முடியாது.

எப்போதும் கையில் ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை வைத்துக் கொள்ளுங்கள். பசிக்கும் போது நான்கு பாதாம் பருப்பை சாப்பிட்டால்போதும். வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும். இன்ஸ்டன்ட் எனர்ஜி தரக்கூடியது. சரும சுருக்கத்தை கட்டுப்படுத்தி சருமம் எப்போதும் இளமையாக இருக்க உதவும். நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை அகற்றி உடல் பருமனை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். அடுத்து பச்சைக்காய்கறிகள். எல்லாவிதமான காய்கறி பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். சர்க்கரை, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் கலோரிகள் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது போன்ற உணவுகள் சாப்பிடுவதால் சுறுசுறுப்பின்மை ஏற்பட்டு எப்போதும் அசதியாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

நானும் ஒரு காலக்கட்டத்தில் துரித உணவினை விரும்பி சாப்பிட்டு வந்தேன். ஆனால் பிட்னெஸ் துறைக்குள் காலடி எடுத்து வைத்த அடுத்த நிமிடம் உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பற்றி தெரிந்து கொண்டேன். இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் உடனே ஒரு சிறு துண்டு வெல்லத்தை வாயில் போட்டுக் கொள்வேன்’’ என்றவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி குறித்து ஆலோசனை வழங்கி வருகிறார். ‘‘இன்றைய தலைமுறையினருக்கு எல்லாமே சமூக வலைத்தளங்களாக மாறி வருகிறது. அவர்களுக்கு ஏற்ப நம்மை அப்கிரேட் செய்துகொள்ள வேண்டும். என்னுடைய வலைத்
தளங்களில் உள்ள பயிற்சியினை ஐந்து நிமிடம் தினமும் செய்தாலே போதும்.

அவ்வாறு முடியாத பட்சத்தில் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது அவசியம். அதுவே சிறந்த உடற்பயிற்சி. தினமும் ஒரு 20 நிமிடம் கண்டிப்பாக நடை பயில வேண்டும்’’ என்றார். ஜீரோ சைஸ் ஆரோக்கியமானது இல்லை என்று கூறும் யாஸ்மின், ‘‘ஒவ்வொருவரின் உடலுக்கு ஏற்ற எடை மற்றும் பிட்டாக இருக்க வேண்டும்’’ என்று வலியுறுத்துகிறார். ‘‘எதிர்கால திட்டம் நிறைய இருக்கு. உலகம் முழுதும் பிராஞ்ச் திறக்க வேண்டும். அதுவரை உலகம் முழுக்க இருக்கும் என் வாடிக்கையாளர்கள் எப்போதும் பிட்டாக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி வருவேன்.

எல்லா பெண்களுக்கும் நான் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான், உடற்பயிற்சி ஆலோசகரின் உதவியில்லாமல் பயிற்சியினை எடுக்காதீர்கள். காரணம் நீங்களாகவே பயிற்சி மேற்கொள்ளும் போது விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான முறையில் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் அதற்கான பலனை அனுபவிக்க முடியாது’’ என்றார் யாஸ்மின் கராச்சிவாலா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • nasaaa_mmm

  செவ்வாய் கிரகத்தில் உள்ள மலைகள், பாறைகளுடன் கூடிய புதிய புகைப்படங்ளை பூமிக்கு அனுப்பியது பெர்சிவரன்ஸ் ஆய்வூர்தி!!

 • 08-03-2021

  08-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  07-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 07-03-2021

  22-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 06-03-2021

  06-03-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்