SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முடக்கும் மூட்டுவலி... முடங்காமல் இருக்க எளிய வழி!

2020-10-20@ 16:59:30

நன்றி குங்குமம் தோழி

வயதில் அரை சதம் கடந்த நபர்களில் பாதிக்கும் அதிகமானோர் அவர்களின் கால் மூட்டு வலியைப் (knee pain) பற்றி சொல்வதை கேட்டிருப்போம். ‘கீழ உட்கார்ந்து எழுந்திரிக்க முடில’, ‘இந்தியன் டாய்லட்ல ஒக்காந்து எழுந்திரிக்க முடில’, ‘சம்மணம் போட்டு உட்கார்ந்தா கால் மூட்டுலாம் வலிக்குது’, ‘மாடிப்படி ஏறும்போது மூட்டு வலி தாங்கமுடில’, ‘நடக்கும்போது கால் முட்டில கடக்கடக்’னு சத்தம் வருது’ என அவர்கள் புலம்பக் கண்டிருப்போம்.

இவ்வாறு முதியவர்கள் பலரை கால் மூட்டு வலியானது முடக்குகிறது. இந்த மூட்டு வலி ஏன் ஏற்படுகிறது, வந்தால் என்ன செய்வது, முதுமையில் வரும் மூட்டு வலியை இளமையிலேயே  வராமல் தடுப்பதற்கு என்ன செய்யலாம் என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.நம் உடலில் உள்ள மூட்டுகளிலேயே கால் மூட்டுதான் மிகப்பெரிய மூட்டு. இதில் அதிக எண்ணிக்கையில் ஜவ்வுகள் (ligament), ஜெல்லி போன்ற திரவப் பைகள் என மெந்திசுக்கள் மற்ற மூட்டுகளை விட அதிகம் உள்ளது. நம் உடலின் முழு எடையும் இரு கால் மூட்டிலும் சமமாக பகிரப்படும். இதனால் அதிக எடை தாங்குவதற்கு கால்கள் திடத்தன்மையுடன் இருக்க ஜவ்வுகள் (ligament) உதவும். முன் தொடையிலும், பின் தொடையிலும் உள்ள குழுவான தசைகள் கால் மூட்டுகளுக்கு மேலும் பலத்தை ஏற்படுத்தும்.

இவ்வாறு நீண்ட வருடங்களுக்கு உறுதியாக உழைப்பதற்கு என இயற்கையிலேயே வடிவமைக்கப்பட்டது தான் எனினும், இன்று இந்தியாவில் மட்டும் மூட்டுப் பிரச்சனைகளின் தரவரிசைப் பட்டியலில் முதுகு வலிக்கு அடுத்தபடியாக கால் மூட்டு வலியானது இரண்டாவது இடத்தில் உள்ளது. அதிலும் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் மூட்டு வலியால் முடங்கிப் போகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணங்கள்..?

*இயல்பிலேயே வளைந்த மூட்டுகள்.

*வயது முதிர்வதால் ஏற்படும் மூட்டு தேய்மானம்.

*நம்மை அறியாமல் நாம் ஒரு பக்கமாக சாய்ந்து நிற்போம். அவ்வாறு நீண்ட நாட்களுக்கு நீண்டநேரம் நின்றால் நம் உடல் எடை முழுவதும் அந்த ஒரு பக்கத்தின் கால் மூட்டில் தான் விழும். அதனால் அதிக அழுத்தம் உண்டாகி, வலி ஏற்படுவது, தசைகளில் அயர்ச்சி ஏற்படுவது என பின்னாளில் சிரமம் உண்டாகும்.

*தொடையின் முன்னும் பின்னும் உள்ள தசைகளில் சமச்சீரின்மை (அதாவது ஒரு பக்க தசையானது இறுக்கமாகவும், மறுபக்கம் பலவீனமாகவும்) இருந்தால்.

* தினமும் கால் தசைகளின் இறுக்கம் தளர, வலுப்பெற உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

* நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்தபடி வேலை செய்வது (உலக மக்கள் தொகையில் 40 சதவிகித மக்கள் அமர்ந்தபடி வேலை பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது) மற்றும் வாகனம் ஓட்டுவது.

*எலும்புகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து போதுமான அளவில் இல்லாமல் இருப்பது.

*சிறுவயது முதல் உடற்பருமன் இருப்பவர்களுக்கு எளிதில் நாட்பட்ட மூட்டு வலி வருவதற்கு வாய்ப்புள்ளது.

*முடக்குவாதம் போன்ற ‘தன்னுடல் தாக்கு நோய்’ இருப்பவர்களுக்கு இருபக்க மூட்டிலும் ஒரே சமயத்தில் வலி ஏற்படும்.

*மூட்டு ஜவ்வு கிழிந்தால் காலின் திடத்தன்மை இழந்து, நடக்கும்போது தடுமாறி விழுவது போன்ற அசௌகரியம் உருவாகும்.

*மூட்டுக்கு இடையில் உள்ள வழுவழுப்பு தன்மையானது வயது ஏற ஏற குறைவது இயல்பு. அதனால் இரு எலும்புகளுக்கும் இடையே உராய்தல் ஏற்பட்டு வலி உண்டாகும்.

*உடல் உழைப்பு குறைவாக இருக்கும் வாழ்க்கை முறை.

*மெனோபாஸ் காலத்தை தாண்டிய பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் மூட்டுகள் வறண்டு போவதற்கும், எலும்புகள் அடர் தன்மையை இழப்பதற்கும் வாய்ப்புள்ளதால் மூட்டு வலி வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.

*பொருத்தமில்லாத உடற்பயிற்சி அல்லது தவறாக உடற்பயிற்சி செய்வதனால் கூட வலி உண்டாகும்.

சில அறிகுறிகள்...

முதலில் எப்போதேனும் வரும் வலியாக இருந்து, பின் அடுத்தக்கட்டமாக நாட்பட்ட வலியாக மாறி நடந்து முடித்ததும் வலி ஏற்படுவது, கீழே உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படுவது, மூட்டில் வீக்கம் உருவாவது. இந்திய முறை கழிப்பறை உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுவது. சம்மணம் போட்டு உட்காரும்போதும், மாடிப்படி ஏறும்போதும் முட்டி அதிகமாய் வலிப்பது. நடக்கும்போது கடக்கடக் என சத்தம் வருவது என இன்னும் பல.

பரிசோதனைகள் என்னென்ன..?

* முதலிலேயே எக்ஸ்-ரே, ஸ்கேன் என வீண் விரயம் செய்யாமல், ஆரம்ப நிலை மருத்துவத்தை தாண்டியும் வலி இருந்தால் பின் பரிசோதனைகள் செய்யலாம்.

* எக்ஸ்-ரே மூலம் தேய்மானம், கால்சியம் படிமானம் போன்றவைகளை தெரிந்து கொள்ளலாம்.

* ஸ்கேன் மூலம் தசைக்காயம், ஜவ்வு கிழிந்தது, எலும்பு புற்றுநோய் போன்றவற்றை அறிய முடியும்.

* முடக்குவாதம், கிருமி சார்ந்த மூட்டு வலி போன்ற நோய்களுக்கு ரத்த பரிசோதனையை பரிந்துரைப்பார்கள்.

என்ன தீர்வுகள்..?

* வலி ஏற்பட்டால் இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் கால்களின் இயக்கம் (movement) சார்ந்த பரிசோதனைகள் செய்வர்.

* பின் அதற்கு ஏற்றார் போல் சிகிச்சை அளித்து வலியை குறைப்பர். அடுத்தக் கட்டமாக வலி வராமல் இருப்பதற்கு பயிற்சிகள் வழங்குவர்.

* வலி மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் வலி தற்காலிகமாக மட்டுமே குறையும். ஆனால் பிரச்சனைக்கான காரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்காது. மேலும் வலி நிவாரணிகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சிறுநீரகம் போன்ற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் மாத்திரைகளை 95 சதவிகிதம் தவிர்ப்பது நல்லது.

* மிகவும் தேய்ந்த மூட்டுகளுக்கு ‘மூட்டு மாற்று அறுவை சிகிச்சை’ எலும்பு மூட்டு மருத்துவர்கள் பரிந்துரைப்பர்.

* மூட்டு ஜவ்வு கிழிந்தாலும், அதன் கிழிந்த அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்வர். அப்படி அறுவை சிகிச்சை தேவை இல்லையெனில் இயன்முறை மருத்துவம் மூலம் தீர்வு காணலாம்.

வராமல் தடுக்க...

* தினமும் கால்களுக்கான பயிற்சிகள் செய்வதன் மூலம் மூட்டினைச் சுற்றியுள்ள தசைகளின் பலம் பெருகும்.

*நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் அவ்வப்போது கால்களின் தசைகளை stretch செய்வதனால் தசைகளின் இறுக்கத்தை தவிர்க்கலாம்.

* ஒரே காலில் உடல் எடையை தாங்கி நில்லாமல் இரு கால்களிலும் சரிசமமாக நிற்கவேண்டும்.

*எலும்புகளுக்கும், தசைகளுக்கும்  தேவையான ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளை சரிவர எடுத்துக்கொள்ள வேண்டும்.

இளம் வயது முதலே சரிவர அனைத்தையும் பின்பற்றி வந்தால் முதுமையில் மூட்டு வலியின் முடக்கத்தில் சிக்காமல் இன்பமாய் வாழலாம்.

கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்