SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதுமையை தள்ளிப்போடும் கொய்யா

2020-10-05@ 16:58:28

நன்றி குங்குமம் தோழி

ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் கொய்யாப்பழ சீசன். அங்கங்கே சாலையோர வண்டிகளில் மலைபோல் குவித்து விற்பதைப் பார்க்கலாம். கொய்யாப் பழம் சுவை மிக்கதாகவும், சத்து நிரம்பியதாகவும், வாங்குவதற்கு எளிதானது  என்பதால் நடுத்தர வர்க்கத்தினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆப்பிளைப் போன்று விட்டமின் ‘சி’ நிறைந்ததாகவும், தாதுப்பொருட்கள் செறிந்ததாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் எளிய மக்களுக்கும் ஏற்ற பழமாக இருக்கிறது. மேலும், இது ஆப்பிளைப் போல் காஷ்மீரிலிருந்தோ, இமாச்சல பிரதேசத்திலிருந்தோ வர வேண்டிய கட்டாயம் எதுவுமில்லை. உள்ளூரிலேயே கிடைக்கிறது.  ஏறக்குறைய ஆண்டு முழுவதுமே கிடைக்கக் கூடியது கொய்யாப்பழம்.

கொய்யாவின் தாயகம் தென்அமெரிக்கா. அது தென் அமெரிக்காவிலிருந்து, மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து பிலிப்பைன்ஸ்க்கு சென்று, அங்கிருந்து போர்த்து கீசியரால் இந்தியாவிற்குக் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்தியா முழுதும் சுமார் 5 லட்சம் ஏக்கரில் ஆண்டுக்கு 15 லட்சம் டன் கொய்யா பழங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. நம் நாட்டில் விளைவிக்கப்படும் பழ வகைகளில், மொத்த எடையில் 9 சதவிகிதம் கொய்யப்பழம் தான் விளைகிறது. இவற்றில் பல வகைகள் இருந்தாலும் பழத்தின் உட்புற நிறத்தைக் கொண்டு, சிவப்புக் கொய்யா, வெள்ளைக் கொய்யா என்று இரண்டு வகையாகப் பிரிக்கின்றனர். ஆனால், உட்புறம் சிவப்பாக இருந்தாலும் வெள்ளையாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை இரண்டுமே ஒன்று தான்.

100 கிராம் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ள சத்துக்கள்

ஈரப்பதம்-81.7%, புரதம்-0.9%., கொழுப்பு-0.3%., மணிச்சத்து-0.7%., நார்ச்சத்து-5.2%., மாவுச்சத்து-11.2%., கலோரி அளவு-51., கால்சியம்-10மி.கி., பாஸ்பரஸ்-28மி.கி., இரும்புச்சத்து-0.27மி.கி., வைட்டமின்’சி’-210மி.கி., வைட்டமின் ‘பி காம்ப்ளெக்ஸ்-சிறிதளவு. கொய்யாப் பழம் மற்றும் அதன்கொட்டையில் புரோட்டீன், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் சிறிதளவே கிடைக்கிறது என்பது மட்டுமே குறை. இருந்தாலும் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற கனிமங்களும் நிறைவான அளவிற்கு தன்னுள் அடக்கியுள்ளது. 100 கிராம் கொய்யாப்பழத்தில் சுமார் 210 மில்லி கிராம் விட்டமின் ‘சி’ இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், நன்கு பழுத்த பழத்தைக் காட்டிலும் முக்கால் பழமாக உள்ள பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தியைமேம்படுத்துகிறது

கொய்யாவில், ஆரஞ்சில் உள்ள வைட்டமின் ‘சி’ உள்ளடக்கத்தைக்காட்டிலும், நான்கு மடங்கு அதிகம் உள்ளது. வைட்டமின் ‘சி’, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் நோய்க்கிருமிகளிலிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

ஹார்மோன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது

கொய்யாவில் உள்ள தாமிரம், ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இதனால் எண்டோகிரைன் அமைப்பின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது, குறிப்பாக தைராய்டு சுரப்பிகள், சாப்பிட்ட உணவை வளர்சிதையாக்குவதற்கும் (Metabolize), ஆற்றலைப் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது

வைட்டமின் ‘சி’ மற்றும் லைகோபீன் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் (Antioxidants) நிறைந்திருப்பதால், கொய்யா சாப்பிடுவதால் உடலின் செல்கள் சேதமடையாமல் பாதுகாக்கும் மற்றும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். கூடுதலாக, இதில் இருக்கும், வைட்டமின் ‘சி’ உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், இது புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நீரிழிவு நோயை மட்டுப்படுத்துகிறது

நீரிழிவு நோயாளிகள் ஒரு நாளைக்கு ஒரு முறை உணவுக்குப்பின் அல்லது உடற்பயிற்சிகள் மேற்கொண்ட பின் கொய்யாபழத்தை சாப்பிடலாம். நார்ச்சத்து நிறைந்த மற்றும் கிளைசெமிக் குறியீடு குறைவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கொய்யாப் பழங்களை தாராளமாக உட்கொள்ளலாம்.

சருமத்தின் மூப்பிற்கு எதிரான பண்புகள் உள்ளன

கொய்யாவில் வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘ஏ’ மற்றும் லைகோபீன் மற்றும் கரோட்டின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் (Antioxidants) உள்ளன. இதனால் சருமம் வறட்சி அடையாமல், ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், புறஊதாக்கதிர்களால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாப்பதோடு, அவை,  வயதாவதால் சருமத்தில் வரக்கூடிய சுருக்கங்கள் மற்றும் கோடுகளிலிருந்தும் பாதுகாக்கின்றன, இதனால் நீங்கள் நீண்ட காலம் இளமையாக இருப்பீர்கள். ஒவ்வொரு நாளும் ஒரு கொய்யா சாப்பிடுவது முதுமையை தள்ளிப்போட உதவும். சிவப்பு கொய்யாக்களில், தக்காளியில் உள்ளதைவிட, லைகோபீனின் அளவு இரு மடங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. ‘லைகோபீன்’ புற ஊதா கதிர்களால் சருமம் சேதமடையாமல் பாதுகாப்பதோடு, ஆண்களுக்கு வரக்கூடிய புரோஸ்டேட் புற்றுநோயையும் தடுக்கும். ‘கொய்யா’ ஒரு நோயெதிர்ப்பு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இதில் பாலிபினால்கள் அதிகம் இருப்பதால் சிறப்பான நுரையீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது

இயற்கையிலேயே கொய்யாப்பழம் ஒரு சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. நாள்தோறும் ஒரு நடுத்தர அளவுள்ள கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் குணமாகும்.

பார்வையை மேம்படுத்த உதவுகிறது

கொய்யா, வைட்டமின் ‘ஏ’  ஊட்டச்சத்தின் மிகச் சிறந்த ஆதாரமாக இருக்கின்றன. வைட்டமின் ‘ஏ’ குறைபாட்டால் வரக்கூடிய மாலைக்கண் நோய் வராமலும், எல்லோருக்குமே கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு வராமலும், பார்வையை மேம்படுத்தவும் கண்களை நல்ல நிலையில் வைத்திருக்கவும் உதவுகிறது.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல்லது

கொய்யாவில். ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ‘பி -9’ உள்ளது, இது கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது, ஏனெனில், இது கருவில் உள்ள குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்க்கவும், புதிதாகப் பிறந்த குழந்தையை நரம்பியல் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்ல, கருவுறுதல் பிரச்சினைகள் உள்ள பெண்கள் கொய்யா மிகுதியான அளவு ஃபோலேட் (Folate) கொண்டிருப்பதால் கொய்யாவை தாராளமாக சாப்பிடலாம். இதில் கருவுறுதலை ஊக்குவிக்கும் பண்புகள் உள்ளன.

மனதை அமைதிப்படுத்துகிறது

கொய்யாவில் உள்ள மெக்னீசியம், உடலின் நரம்புகள் மற்றும் தசைகளை தளர்த்த உதவுகிறது. இன்றைய மன அழுத்த காலங்களில், மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், ஓய்வெடுக்கவும் ஒரு கொய்யாவை உட்கொள்வது நிச்சயமாக ஒரு நல்ல யோசனையாகும்.

மூளைக்கு நல்லது

மூளை என்பது நம் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும், நாம் எவ்வளவு புத்திசாலியாக இருப்பதாக நினைத்தாலும் அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது நமது முன்னுரிமை பட்டியலில் இருக்க வேண்டும். கொய்யாவில் உள்ள வைட்டமின் பி 3 மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை நியாசின் மற்றும் பைரிடாக்சின் என்றும் அழைக்கப்படுகின்றன, இது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூளை நரம்புகளை தளர்த்தவும் உதவுகிறது.   

ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது

கொய்யாவில், பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், உடலில் சேர்ந்துள்ள சோடியத்தின் விளைவுகளை மாற்றியமைக்கிறது. இதனால் ரத்த அழுத்தத்தின் சமநிலையை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது ரத்தம் உறைவதை தடுப்பதோடு, ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. கொய்யா மாங்கனீஸின் ஒரு நல்ல மூலமாகும். இதன் மூலம் தயாமின், பயோட்டின் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்ற நுண் ஊட்டச்சத்துக்களைப் பயன்படுத்தி ஒரு என்சைம் ஆக்டிவேட்டராக செயல்படுகிறது.

கொய்யாப்பழத்தின் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும். கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேரைக் கொண்டு தயாரிக்கப்படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையை மட்டும் கஷாயமாக செய்து அதை வாயிலிட்டுக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் கட்டுப்படும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் மலக்குடல் பிதுக்கத்திற்கு கொய்யா இலையை அரைத்துப் பற்றுப் போட நல்ல பலன் கிடைக்கும்.
இதில், கலோரிகள் குறைந்தும், நார்ச்சத்து அதிகமாகவும், சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும், வைட்டமின் சி அதிகமாகவும், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகள் அதிகம் இருப்பதாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருமே கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.

கொய்யா பழம் மட்டுமல்ல அதன் தோல் பகுதியிலுள்ள வைட்டமின் ‘சி’ பல் மற்றும் ஈறு தொடர்புடைய நோய்களைப் போக்க வல்லது. பழுக்காத கொய்யாக்காய் வயிற்றுக் கடுப்பையும், வயிற்றோட்டத்தையும் தடுக்கும். கொய்யா மரத்தின் பட்டை மற்றும் வேரைக் கொண்டு தயாரிக்கப்
படும் கஷாயம், சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் போக்கைத் தடை செய்யும். இலையை மட்டும் கஷாயமாக செய்து அதை வாயிலிட்டுக் கொப்பளித்தால் ஈறு வீக்கம் கட்டுப்படும்.  

சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன் கொய்யாப்பழத்தை வைத்து ஸ்மூத்தி செய்யும் முறையை விளக்குகிறார்.

கொய்யா ஸ்மூத்தி

தேவையான பொருட்கள்
   
பழுத்த கொய்யாப்பழம் - 2 (பெரியது)
பால் (கொழுப்பு
நிறைந்தது) - 1 கப்
மாதுளை முத்து - 1 கப் (விதை இல்லாதது)
ஏலக்காய்த்தூள் -
1 சிட்டிகை
தேன் -  2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

கொய்யாப்பழத்தை சிறுசிறு துண்டு களாக்கி மிக்ஸி ஜாரில் போடவும். பின்னர் அதில் மாதுளை முத்துக்களை சேர்த்து 2 நிமிடம் அரைக்கவும். பின், அதில் ஏலக்காய்த்தூள், தேன், பால் ஆகியவற்றைச்  சேர்த்து நன்கு அரைத்து ஃபிரிட்ஜில் வைத்து  பரிமாறினால் ருசியான, சத்தான கொய்யா ஸ்மூத்தி ரெடி. இதை குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் சாப்பிடலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்