SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோய்களின் தலைவன்

2020-09-30@ 17:18:04

நன்றி குங்குமம் டாக்டர்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பைவிடக் குடிநோயால் பாதிக்கப்பட்டவர்கள்தான் அதிகம். ஊரடங்கில்கூட மது விற்பனை அமோகமாக நடக்கிறது என்பதே இதற்கு சான்று. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 6 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் குடிநோயால் கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். குடியினால் ஏற்படும் உடல்ரீதியிலான நோய்களில் கொடுமையானது கல்லீரல் இறுக்கம் அல்லது கல்லீரல் சுருக்கம் எனப்படும் லிவர் சிரோசிஸ்(Liver Cirrhosis). இதைக் குடிநோய்களின் தலைவன் என்று சொல்லலாம். சுமார் 10 வருடங்களுக்குத் தொடர்ந்து மது குடித்தால் இந்த நோயிலிருந்து தப்ப முடியாது என்கிறது மருத்துவ அறிவியல். கல்லீரல் செல்களில் நார்கள் உருவாகி கொஞ்சம் கொஞ்சமாக கல்லீரலை சுருங்கச் செய்து அதன் இயக்கத்தையே முடக்கிவிடும் நிலைமை இது.

நமது உடலில் மேல் வயிற்றில் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரை கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் உட்கார்ந்திருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு ஈடாக முக்கியத்துவம் பெற்றுள்ள உறுப்பு இது. உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச் சிறப்பு கல்லீரலுக்கு உண்டு. கல்லீரலை எந்த நோய் பாதித்தாலும் அதன் செல்கள் முழுவதுமாக அழிவதில்லை. அவை மீண்டும் மீண்டும் வளர்ந்து பெருகி கல்லீரலைக் காப்பாற்றிவிடும். அப்படிப்பட்ட கல்லீரலையும் பாதித்து மனிதனை மரணத்தின் வாசலுக்கே அழைத்துச் செல்கிறதென்றால், அது லிவர் சிரோசிஸ் நோயாகத்தான் இருக்க முடியும். இது இரண்டு வழிகளில் மரணத்துக்கு வாசல் அமைக்கிறது. ஒன்று, ‘லிவர் சிரோசிஸ்’ நேரடியாகவே கல்லீரலை சிதைத்து ஆபத்தைத் தருகிறது.

அடுத்ததாக, இது நாட்பட நாட்பட்ட கல்லீரலில் புற்றுநோயை உண்டாக்கி மனித உயிருக்கு ஆபத்தைக் கொண்டு வருகிறது. கல்லீரலில் உருவாகும் நார்கள் அங்கே இயல்பாக இருக்கும் செல்களை உறுத்திக்கொண்டே இருப்பதால் நாளடைவில் அவை புற்றுசெல்களாக மாறிவிடுகின்றன.
உலக அளவில் புற்றுநோய் பாதிப்பில் 5-வது இடத்தைப் பெற்றுள்ளது கல்லீரல் புற்றுநோய். இந்த நோய்க்கான அறிகுறிகள் ஆரம்பத்தில் தெரிவதில்லை; 70% கல்லீரல் பாதிக்கப்பட்ட பிறகே தெரிய வருகிறது. வெளிநாடுகளில் உள்ளதுபோல் வயதுக்கு ஏற்ப முழு உடல் பரிசோதனைகள் செய்துகொள்ளும் ஆர்வம் நம்மிடம் குறைவு ஆகிய காரணங்களால் இந்தியாவில் இந்த நோயைத் தொடக்க நிலையில் கண்டறிவது கடினம். ஆகவே, இதை குணப்படுத்துவதும் கடினமாக இருக்கிறது.

யாருக்கு வருகிறது?

கல்லீரல் புற்றுநோய் பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் வருகிறது. அதிலும் ஆண்களுக்குத்தான் அதிகமாக வருகிறது. அடுத்ததாக ஏற்கெனவே சொன்ன குடி நோயாளிகள், ஹெபடைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி வைரஸ் கிருமிகள் பாதிப்பு உள்ளவர்கள், நாட்பட்ட புகைப்பழக்கம் உள்ளவர்கள், நாட்பட்ட கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், ஆண்மை ஊக்க மருந்துகளை அடிக்கடி பயன்படுத்துபவர்கள், நீண்ட காலம் கருத்தடை மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைச் சாப்பிட்டு வருபவர்கள், ரசாயனங்கள் (உ-ம்: நைட்ரைட்டுகள், ஹைட்ரோ கார்பன்கள்) மற்றும் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிலாளிகள் ஆகியோர் கல்லீரல் புற்றுநோய் வர அதிக வாய்ப்பு உள்ளவர்கள். இந்த நோய் குடும்ப வழியிலும் வருகிறது.

அடிப்படை காரணம் என்ன?

லிவர் சிரோசிஸ் தவிர ஹெப்படைட்டிஸ்-பி, ஹெப்படைட்டிஸ்-சி வைரஸ் கிருமிகள் கல்லீரலைத் தாக்கும்போது அதன் செல்கள் அழிந்துபோகும். அழிந்து போன இடத்தில் மீண்டும் செல்கள் உருவாகும். இப்படி அழிந்து உருவாகும் செல்களில் சில செல்கள் புற்றுசெல்களாக மாறிவிடும். அப்போது கல்லீரல் புற்றுநோய் வரும். திசுக்களில் இரும்புச்சத்து அதிகமாவது சிலருக்குப் பிறவியிலேயே ஏற்படும் அரிதான கோளாறு. இதற்கு ஹீமோகுரோமோடோசிஸ்(Haemochromatosis) என்று பெயர். இந்த நோயின்போது இரும்புச்சத்து உடலிலிருந்து வெளியேறாமல் கல்லீரலைத் தாக்குவதால் கல்லீரலில் புற்றுநோய் உருவாகிறது. இதுபோல் தாமிரச் சத்து அதிகமாக உள்ளவர்களுக்கு அது கல்லீரலில் தங்கி வில்சன்நோய்(Wilson disease) எனும் புற்றுநோயை உண்டாக்கும். இதுவும் முக்கியம்… வேர்க்கடலையை உடனடியாக சாப்பிடாமல் சில மாதங்கள் பாதுகாக்கும்போது, ஆஸ்பர்ஜிலஸ் ஃபிளேவஸ்(Aspergillus flavus) எனும் பூஞ்சனம் உருவாகும். இது அஃப்ளாடாக்சின்(Aflatoxin) எனும் நச்சுப்பொருளை உற்பத்தி செய்யும். இது கல்லீரலுக்கு ஆகாது. புற்றுநோயை ஏற்படுத்தும்.

கல்லீரல் புற்றுநோய் - இரண்டு வகை...

1. கல்லீரலிலேயே தோன்றுகிற முதல்நிலைப் புற்று (Primary liver cancer).
2. உடலில் மற்ற இடங்களிலிருந்து கல்லீரலுக்குப் பரவுகின்ற இரண்டாம் நிலைப் புற்று அல்லது பரவிய நிலை புற்று (Secondary liver cancer).

அறிகுறிகள்

இந்த நோயின் ஆரம்பநிலையில் அவ்வளவாக அறிகுறிகள் தெரிவதில்லை. வேறு நோய்களுக்கு பரிசோதிக்கப்படும்போதும் வழக்கமான மாஸ்டர் ஹெல்த் செக்-அப்பின்போதும் கல்லீரலில் புற்றுநோய் இருப்பது தெரிய வரும். நோய் அதிகப்படும்போது கல்லீரல் வீங்கும். மேல் வயிற்றின் வலப்பக்கமாகத் தொட்டுப் பார்த்தால் கட்டி போல் ஒரு வீக்கத்தை உணரலாம். அங்கே வலி உண்டாகும். பசி குறையும். குமட்டல், வாந்தி இருக்கும். உடல் எடை குறையும். வயிற்றில் நீர்த்தேக்கம் உண்டாகும். எந்த நேரமும் வயிறு நிரம்பிய உணர்வு இருக்கும். அடிக்கடி காய்ச்சல் வருவது,உடல் களைப்பு ஏற்படுவது, மஞ்சள் காமாலை ஏற்படுவது, மலம் கறுப்பாக வெளியேறுவது, ரத்த வாந்தி ஏற்படுவது போன்றவை இந்த நோயின் மற்ற அறிகுறிகள். அத்தோடு ரத்தசோகையும் காணப்படும்.

பரிசோதனைகள் என்னென்ன?

உடல் தகுதியை அறியும் வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், கல்லீரல் செயல்பாட்டினை அறிய உதவும் ரத்தப் பரிசோதனைகள்(Liver function tests) மேற்கொள்ளப்படும். அடுத்ததாக ஹெப்படைட்டிஸ் பி வைரஸ் மற்றும் ஹெப்படைட்டிஸ் சி வைரஸ் தொற்று உள்ளதா என்பதை அறிய சிறப்பு ரத்தப் பரிசோதனைகள் தேவைப்படும். தொடர்ந்து மார்பு எக்ஸ்-ரே, வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். கல்லீரல் ரத்தக் குழாயில் வண்ணச்சாயத்தைச் செலுத்தி ஸ்கேன் செய்வதன் மூலமும் (Selective angiography) கல்லீரல் புற்றுநோயைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம். திசுப் பரிசோதனையும் செய்யப்படும். கல்லீரலில் ஏற்பட்டிருப்பது முதல்நிலை புற்றுநோயா, பரவிய நிலை புற்றுநோயா என்பதை அறியவும் புற்றுநோயின் நிலை என்ன என்பதை அறியவும் மேற்சொன்ன பரிசோதனைகள் உதவும். அதன் மூலம் சரியான சிகிச்சைமுறையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழி கிடைக்கும்.

முன்னெச்சரிக்கை பரிசோதனைகள்

கல்லீரல் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்புள்ளவர்கள் 6 மாதங்களுக்கு ஒருமுறை வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டியதும் ரத்தத்தில் ஆல்பா ஃபீட்டோ புரதம்(AFP - Alpha-fetoprotein) பரிசோதனை மற்றும் CEA பரிசோதனை(Carcinoembryonic antigen test) மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். இப்போது ஃபைப்ரோ ஸ்கேன்(Fibro scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இது கல்லீரலில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை முன்னரே காட்டிக் கொடுத்துவிடும் சிறப்பு பெற்றது.


கல்லீரல் புற்றுநோய் நிலைகள்

நிலை 1 : மிகச் சிறிய அளவில் உள்ள புற்றுக்கட்டி இது.
நிலை 2 : 5 செ.மீ. அளவுக்குள் உள்ள புற்றுக்கட்டி இது.
நிலை 3 : 5 செ.மீ. அளவுக்கும் அதிகமாக புற்றுக்கட்டி அல்லது கட்டிகள் உள்ள நிலை இது. அத்தோடு அருகில் உள்ள நெறிக்கட்டிகளுக்கும் பரவியுள்ள நிலை.
நிலை 4 : இது நெறிக்கட்டிகள், பித்தப்பை, நுரையீரல், மூளை, எலும்பு போன்றவற்றுக்கும் பரவியுள்ள நிலை.

என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

1. அறுவை சிகிச்சை : கல்லீரல் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சைதான் முக்கிய சிகிச்சையாக உள்ளது. புற்றுநோய் நிலை 1 மற்றும் 2க்கு புற்றுநோயுள்ள கல்லீரல் பகுதியை அகற்றிவிடுவது இதன் செயல்முறை. ஆனால், கல்லீரலின் பிற பகுதிகளின் செயல்பாடு இயல்பாக இருக்க வேண்டியது அவசியம்.

2. கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை (Liver transplantation): கல்லீரல் புற்றுநோய் நிலை 1 மற்றும் 2-ம் நிலையில் உள்ளவர்களுக்கு உடல் தகுதி இருக்குமானால், கல்லீரல் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு கல்லீரலின் பிற பகுதிகளின் செயல்பாடு இயல்பாக இருக்க வேண்டியது அவசியமில்லை. இதற்கு உறுப்பு தானம் கிடைக்க வேண்டும். உறவினர் வழியில் உறுப்பு தானம் கிடைத்தால் நல்லது. இதற்கு செலவு சற்றே அதிகம்.

3. அலைக்கதிர் சிகிச்சை (Ablation Techniques): அறுவை சிகிச்சை மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு அலைக்கதிர் வீச்சு சிகிச்சை மேற்கொள்வது நடைமுறை. இதில் எத்தனால் அலைக்கதிர் சிகிச்சை, லேசர் அலைக்கதிர் சிகிச்சை, ரேடியோ அலைக்கதிர் சிகிச்சை எனப் பல வழிகள் உள்ளன. நோயாளியின் தேவை மற்றும் உடல் தகுதியைப் பொறுத்து சிகிச்சை அமையும்.

4. மருந்து சிகிச்சை: கல்லீரலுக்குச் செல்லும் தமனி ரத்தக்குழாய் வழியாக மருந்து செலுத்தப்படும் சிகிச்சை இது (T.A.C.E - Trans arterial chemoembolization).

5. கதிர்வீச்சு சிகிச்சை: அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாத, சிறிய அளவில் உள்ள புற்றுக் கட்டிகளுக்கு இந்த சிகிச்சை பரிந்துரை செய்யப்படுகிறது. கல்லீரல் புற்றுநோயைப் பொறுத்தவரை நோயின் ஆரம்பநிலையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். புற்றுநோய் உடலில் பல பகுதிகளுக்குப் பரவியுள்ள நிலையில் சிகிச்சையின் பலன் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. ஆகவே இந்த நோய் வர வாய்ப்புள்ளவர்கள் 35 வயதுக்கு மேல் ஆண்டுதோறும் ஒருமுறை வயிற்றை அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்து கொண்டால் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த முடியும். இதைவிட முக்கியம் குடிப்பழக்கத்துக்கு விடை கொடுப்பதும் தடுப்பூசிகள் மூலம் வைரஸ் தொற்றுகளை வர விடாமல் தடுப்பதும்.

(படைப்போம்)

கல்லீரல் புற்றுநோயை தடுக்கும் தடுப்பூசி!

ஹெப்படைட்டிஸ் - பி தடுப்பூசி(HBV) கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கிறது. இது தனியாகப் போடப்படும் ஊசியாகவும் பென்டாவேலன்ட் என்னும் கூட்டுத் தடுப்பூசியாகவும் கிடைக்கிறது. குழந்தை பிறந்தவுடன் முதல் தவணை, ஒரு மாதத்திலிருந்து ஒன்றரை மாதத்திற்குள் இரண்டாம் தவணை, 6 மாதங்கள் முடிந்ததும் மூன்றாம் தவணை என மூன்று தவணைகள் இந்தத் தடுப்பூசி போடப்பட வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் ஊசியைப் போட்டுக் கொண்டு ஒரு மாதம் கழித்து இரண்டாவது தவணையையும் முதல் ஊசியிலிருந்து 6 மாதங்கள் கழித்து 3வது தவணையையும் போட்டுக்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbaitrain22

  7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

 • dinosauregg22

  பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

 • locusts22

  எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

 • rainbowtree22

  உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

 • vietnam22

  வியட்நாமை துவம்சம் செய்த கனமழை!: வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைபேரிடர்களில் சிக்கி 111 பேர் பலி.. பலர் மாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்