SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காத்திருக்கும் இரண்டாம் அலை... இன்னும் கவனம் அவசியம்!

2020-09-16@ 15:52:28

நன்றி குங்குமம் டாக்டர்

லாக் டவுன் முடிந்தாலும் கொரோனாவின் வீரியம் குறைய பல மாதங்கள் ஆகும் என்று கணித்திருக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதைவிட சிக்கலாக கொரோனா தாக்கம் அப்படியே முடிவு பெற்றாலும் இரண்டாம் கட்டமாகத் தாக்கும் என்று Second Wave பற்றியும் எச்சரிக்கை விடுக்கிறார்கள். இதுபற்றி தொற்றுநோய் நிபுணர் சுப்ரமணியம் சுவாமிநாதனிடம் கேட்டோம்...

‘‘நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறேன், நான் இளவயது, அதனால் என்னையெல்லாம் எந்த தொற்றுநோயும்  தாக்காது என்று அசட்டு தைரியத்துடன் பொறுப்பில்லாமல் சிலர் வெளியே சுற்றுகிறார்கள். இதனால் இவர்களுக்கு வேண்டுமானால் பாதிப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால் இவர்கள் மூலம், வீட்டில் உள்ள வயதானவர்களுக்கும், ஏற்கனவே பிறநோய்களால் பாதிப்பில் இருப்பவர்களுக்கும் ஆபத்து அதிகம் என்பதை இவர்கள் உணர வேண்டும். தற்போது உலகளவில் பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் எண்ணிக்கையைக் காட்டிலும் பலமடங்கு மக்கள் நோய் இருப்பதற்கான அறிகுறியோ, நோய் வந்து சென்றதற்கான அறிகுறியோ இல்லாமலே இருக்கிறார்கள். இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுவதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவு. இந்த தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட வர்களிடமிருந்துதான் அதிகபட்சமாக மற்றவர்களுக்கு பரவக்கூடும்.

ஆனால், இருதரப்பிடமிருந்துமே அடுத்தவருக்கு கண்டிப்பாக பரவும் என்பது பொதுவானது என்பதால் எல்லோருமே அரசு வலியுறுத்தும் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிவது போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஏனெனில், ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா? இல்லையா என்பதை கண்டுபிடிக்க முடியாது.’’அதீத பயத்தில், மனஅழுத்தங்களுக்கு உள்ளாகும் நபர்களைப் பற்றி... ‘‘இவர்களின் பயத்திற்குக் காரணமே சமூக ஊடகங்களில் வரும் தவறான செய்திகளைப் படிப்பதுதான். இந்த கொரோனா தொற்று நோயைப்பற்றிய அறியாமையினால்தான் இவர்கள் அதிகமாக பயப்படுகிறார்கள். இந்த நோயைப்பற்றி முதலில் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட தொற்று, எப்படி பரவுகிறது? இதனால் யாருக்கு ஆபத்து? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்? என்பதை புரிந்து கொண்டால் பயப்படத் தேவையில்லை.

மொத்த பாதிப்பில் 50 சதவீதத்தினர் 25 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாகவே இருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதர நோய்கள் இருப்பவர்கள் குறைந்த சதவீதத்தில் இருப்பதும், இவர்களுக்கு நோயின் தீவிரம் குறைவாக இருப்பதும் ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயம். நம் நாட்டு மக்கள் தொகையில் முதியவர்களும் நோய்வாய்ப்பட்டவர்களும் 1 சதவீதம் என்று எடுத்துக்கொண்டால் கூட அது எண்ணிக்கையில் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதாலேயே அதிகம் பயப்பட வேண்டியிருக்கிறது. அதுவும் அரசாங்கத்துடைய கவலையே தவிர, நம்முடையது அல்ல. நாம் அரசு சொல்லும் நெறிமுறையைப் பின்பற்றினாலே போதும்.’’

2022-ம் வருடம் வரை கூட கொரோனோ நோய்த்தொற்று இருக்கும் என்று சொல்கிறார்களே... ‘‘இந்த தருணத்தில் உலகில் நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் அறிவியலாளர்களின கணிப்பு இது. இதுபோன்ற தொண்டை, சுவாசப்பாதை தொற்றுநோய் வைரஸ் கிருமிகளின் குணாதிசயங்கள் இப்படித்தான் இருக்கும் என்ற அடிப்படையிலும், உலக அளவில் இன்னும் தொற்று பரவிக்கொண்டுதான் இருக்கிறது என்ற அடிப்படையிலும் இந்த கால அளவு கணிக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் மந்தை நோய்த்தொற்று (Herd Immunity) வரும் வரையில் நிற்கப்போவது இல்லை. அதாவது சிகிச்சையும் இல்லை, தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை மற்றும் இந்த வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி எவரிடத்திலும் இல்லை என்கிறபோது 60 முதல் 75 சதவீத மக்களை தாக்காமல் கொரோனா வைரஸ் அழியப்போவது இல்லை. சமூக இடைவெளி மூலம் பரவலை தாமதப்படுத்த முடியுமே தவிர முற்றிலும் தடுக்க முடியாது.

இதற்கு முன் சார்ஸ் வைரஸ் தொற்று ஏற்பட்டபோது அதன் பரவலின் வேகம் குறைவாக இருந்ததாலும், பரவிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதாலும் விரைவில் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால், கொரோனா நோய்த்தொற்றோ உலகம் முழுவதும் பரவி இருக்கிறது. இதனால் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. வர்த்தகத்திற்காக உலகம் முழுவதும் திறந்துவிடும்போது மீண்டும் ஊரடங்கு, கட்டுப்பாடு என்று முதலில் இருந்து ஆரம்பிக்க முடியுமா? தடுப்பூசி கண்டுபிடிக்க குறைந்தபட்சம் பல மாதங்கள் ஆகும் என்கிறார்கள். கண்டுபிடித்து, அதை மனிதனிடத்தில் சோதித்து, அது எந்த அளவிற்கு வேலை செய்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் மந்தை நோயெதிர்ப்பு(Herd Immunity) ஒன்றே சாத்தியம். இனி வரும் காலங்களில் கோவிட் 19 வைரஸ் கூடவே நாம் வாழப் பழகிக் கொள்வதுதான் ஒரே வழி.’’கோவிட் 19 வைரஸின் இரண்டாம் அலை (2nd Wave) என்கிறார்களே..

‘‘இது பொதுவான கணக்கு. இந்த இதழ் வெளிவரும்போது எண்ணிக்கைகள் நிறைய மாறி இருக்கும். இருந்தாலும் நாம் புரிந்துகொள்ள உதாரணத்துக்கு சொல்கிறேன். நியூயார்க் நகரத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 16 ஆயிரம் பேர் கோவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உயிர்ப்பலி ஆனார்கள். ரேபிட் டெஸ்ட் மூலம் ஆன்டிபாடி சோதனையில் 14 சதவீதம் மட்டுமே இந்த தொற்றுக்கு பாதிப்புள்ளதாக சொன்னார்கள். Herd Immunity கணக்கின்படி 70 சதவீதம் பேர் நோய்த்தொற்றுக்குள்ளாக வேண்டும். மீதமுள்ள 56 சதவீதத்தினருக்கு இந்த தொற்று வரவேண்டியிருக்கிறது. 14 சதவீதம் என்பது 5-ல் ஒரு பங்கு. பாதிக்காமல் விடுபட்ட மீதமுள்ள மக்களுக்கு அடுத்த சுற்றில் நோய்த் தொற்று ஏற்படுவதையே இரண்டாம் அலை(2nd Wave) என்கிறோம்.

2-ம் அலை மட்டும் இல்லை, 3-வது, 4-வது என இந்த அலை மீதிப்பேரை தாக்கும் வரை வந்து கொண்டுதான் இருக்கும். நம் இந்திய மக்கள் தொகையில் இந்த சதவீதத்தை கணக்கில் எடுத்தால் எத்தனை லட்சம் மக்கள் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியவில்லை. Herd Immunity கணக்குப்படி 30 சதவீத வளையத்துக்குள் முதியவர்கள், நோயாளிகளை கொண்டுவந்து, அவர்களைக் காப்பாற்றி, மீதமுள்ள 70 சதவீதத்திற்கு 20 முதல் 60 வயதுள்ளவர்களிடத்தில் நோய்த்தொற்றை பரவலாக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களிடத்தில் பரிசோதித்ததில் அதிக அளவு ஆபத்து இல்லை என்பது தெரிய வந்துள்ளது. எனினும் வயது முதிர்ந்தவர்கள், நீரிழிவு நோயாளிகள், கல்லீரல், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதய நோயாளிகள் அனைவரும் கண்டிப்பாக பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.’’

மதுக்கடைகளின் திறப்பு எந்த அளவு தாக்கத்தை உண்டாக்கும்?!

‘‘இந்த நெருக்கடியான சூழலில் மதுக்கடை திறப்பு என்பது கவலை தரக்கூடிய விஷயமாகவே இருக்கிறது. தெளிவான மனநிலையில் இருக்கும்போதே தனிமனித சுகாதாரம், பொது சுகாதாரம், சமூக இடைவெளி என்பதைப்பற்றி எல்லாம் கடைபிடிக்காதவர்கள், போதையில் நிதானம் இல்லாமல் இருக்கும்போது பின்பற்றுவார்களா? மது அருந்திவிட்டு, நோயெதிர்ப்பு தரக்கூடிய மருந்துகளை சாப்பிட்டுக் கொண்டால் நாம் தப்பித்துவிடலாம் என்ற எண்ணமும் தவறானதே. நோயெதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவு முறை, பாரம்பரிய மருத்துவ முறைகள், மேலும், மது அருந்துவதையும் நிறுத்தி வைத்திருந்தது இவையெல்லாம் சேர்ந்து நம் நாட்டில் இறப்பு விகிதம் குறைவாக இருந்ததாக அனைவருமே கருதிக் கொண்டிருந்த நிலையில், மதுவை விட்டு விலகி இருப்பதே நமக்கு பாதுகாப்பு என்பதை உணர வேண்டும்!’’

தொகுப்பு: உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • jaipourelephant20

  ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் கோட்டையில் மீண்டும் யானை சவாரிக்கு அனுமதி!..

 • delhiformer20

  வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரியானா, பஞ்சாப்பில் இருந்து டெல்லி நோக்கி விவசாயிகள் பேரணி - கண்ணீர்புகை, தண்ணீர் பீய்ச்சி விரட்டியடிப்பு

 • nivarpondyvilupuram20

  நிவர் புயல் கரையை கடந்த நிலையில் புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் சேதமடைந்த இடங்கள் ! புகைப்படங்கள்

 • nivarkadaloorcmvisit20

  நிவர் புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்ட மக்களை பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிசாமி!..

 • nivarthirvannamali20

  திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூரில் நிவர் புயலின் தாக்கம் !... புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்