SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நலம் பல தரும் பெருங்காயம்!

2020-09-14@ 16:52:46

நன்றி குங்குமம் டாக்டர்

பெருங்காயத்திற்கு இந்திய சமையல் கலையில் ஒரு தனிப்பட்ட இடம் உண்டு. மற்ற மசாலா பொருட்களுடன் சேர்த்து சமைக்கும்போது வரும் பெருங்காயத்தின் நறுமணம் அந்த உணவுக்கு ஒரு புதிய சுவையை அளிக்கிறது. இதனை பெரும்பாலும் பருப்பு வகைகள், சாம்பார் மற்றும் பல தரப்பட்ட காரமான சைவ உணவுகளுடன் சேர்க்கும் வழக்கம் இருக்கிறது. மேலும் பெருங்காயமானது தாளிக்கும்போதும், ஊறுகாய் தயாரிப்பின்போதும் பயன்படுத்தப்படுகிறது. வித்தியாச மணமும், சுவையும் கொண்டதாக உணவை மாற்றும் பெருங்காயத்துக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு...

பெருங்காயம் எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கலாம். Ferula asafoetida என்கிற மூலிகைத்தாவரத்திலிருந்தே பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது. இந்த ஃபெருலா மற்றும் பல வகை மரபணு மூலிகைகளின் வேரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பசை போன்ற பொருள்தான் பெருங்காயம் ஆகும். இந்த ஃபெருலா தாவரம் மத்திய தரைக்கடல் பகுதி, கிழக்கு மற்றும் மத்திய ஆசியாவில் அதிகம் காணப்படுகிறது. ஃபெருலாவில் சுமார் 170 இனங்கள் உள்ளன. இதில் மூன்று வகை தாவரங்கள் மட்டும் இந்தியாவில் வளர்கின்றன. முக்கியமாக காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இது அதிகமாக காணப்படுகிறது.

ஃபெருலா மூலிகை 4 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வாழக் கூடியது. இந்த தாவரத்தின் தண்டு மற்றும் சதைப்பற்று நீரை சேமித்து வைக்கக்கூடிய திறன் கொண்டது ஆகும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். வேர்கள் மற்றும் வேர்த்தண்டுக் கிழங்கு(வேர்களின் கிடைமட்டமாக பருமன்) என்பது இந்த தாவரத்தின் மிக மதிப்புள்ள பகுதியாகும். அதிலிருந்துதான் மரப்பால் உலர வைக்கப்பட்டு பெருங்காயம் தயாரிக்கப்படுகிறது.
பெருங்காயமானது உணவுக் குழாய் வாயுநிலைத் தடுப்பானாகவும், உணர்ச்சியைக் கிளறிவிடுவதாகவும், நுண்ணுயிர்க் கொல்லியாகவும், சளி நீக்கியாகவும், தூக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இயற்கை மருத்துவத்தில் பெருங்காயம் ஒரு மலமிளக்கியாக, செரிமானத்தில் பயன்படுகிறது. வாயுவை வெளியேற்றவும், மற்றும் வயிறு உப்புசத்தைக் குறைக்கவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

மாதவிடாய் பிரச்னை

மாதவிடாய்க்காக காத்திருக்கும் பெண்கள், பெருங்காயத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் மாதவிடாய் உடனே தொடங்கிவிடும். மாதவிடாயினால் ஏற்படும் பிரச்னைகளான வயிற்றுவலி, சதைப்பிடிப்பு, ஒழுங்கற்ற மாதவிலக்கு காலம் ஆகியவற்றிலிருந்தும் பெருங்காயத்தினால் நிவாரணம் கிடைக்கும். பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்களுக்கும், வெண் கசிவுகளுக்கும் இது சிறந்த மருந்தாக விளங்குகிறது. மேலும் பால்வினை நோய்களுக்கும், பூஞ்சைத்தொற்று மற்றும் மன அழுத்தத்தை சீர் செய்யவும் ெபருங்காயம் அருமருந்தாகிறது.

நரம்பு கோளாறுகள்

இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே, இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.

பிரசவ காலத்தில் பெருங்காயம்

மகப்பேறுக்காகக் காத்திருக்கும் பெண்கள் பெருங்காயத்தை அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். குமட்டல் மற்றும் வாந்தி ஏற்படும். சமையலில் அதிகம் உபயோகிப்பதால் உதடு வீங்குதல், ஏப்பம், வாயுத்தொல்லை, தொண்டைத்தொற்று மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். அதேபோல் கர்ப்ப காலத்தில் உயர் ரத்த அழுத்தம் பிரச்னை கொண்டவர்களும் பெருங்காயத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், கருச்சிதைவை ஏற்படுத்தும். பால் கொடுக்கும் தாய்மார்களும் அதிகமாக உட்கொள்வதைத் தவிர்க்கலாம். இதிலிருக்கும் வேதிப்பொருட்களானது தாய்ப்பால் மூலமாக குழந்தையின் உடல்நலத்தை பாதிக்கும். அதனால் பாலூட்டும் தாய்மார்கள் பெருங்காயத்தை தவிர்க்கலாம். மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக்கு இருக்கும்போது பெருங்காயம் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

நரம்பு கோளாறுகள்

இந்த வாசனைப் பொருள் நரம்பு உந்தியாக செயல்படும். எனவே, இதை நரம்பு தளர்ச்சி நோய், தசை வலிப்பு, மயக்க நிலை மற்றும் இதர நரம்பு சீர்குலைவுகளுக்கு பயன்படுத்தலாம்.

செரிமானமின்மை

ஆதிகாலத்திலிருந்து பெருங்காயம் செரிமானமின்மைக்கு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனாலேயே பெருங்காயமானது அன்றாடம் சமைக்கும் உணவில் சேர்க்கப்படுகிறது. ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும் பயன்படுவதால் செரிமானப் பிரச்சனைகளான வயிற்றுவலி, வாயு குடற்புழக்கள், வயிற்றுப்பொருமல், எரிச்சல் ஏற்படுத்தும் குடற்புண்கள் போன்ற சிலவற்றை குணப்படுத்த உதவுகிறது. சிறிது பெருங்காயத்தை அரை டம்ளர் தண்ணீரில் கலந்து பருகினால் செரிமானம் ஆகும்.

ஆண்மைக் குறைவு

சமையல் பொருளான பெருங்காயமானது, ஆண்களின் ஆண்மைக் குறைவை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது  ஆண்மையை தூண்டும் பாலுணர்வூக்கியாக விளங்குகிறது.

வலி

பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து பருகினால், தலைவலி மற்றும் கடுமையான ஒற்றைத் தலைவலி நீங்கும். அதிலும் எலுமிச்சை பானத்துடன் ஒரு சிட்டிகை பெருங்காயம் கலந்து குடித்தால், பல்வலி நீங்கும்.

புற்றுநோய்

பெருங்காயம் மிகச் சிறந்த ஆக்சிஜனேற்றத் தடுப்பானாக செயல்பட்டு, உடலின் அணுக்களைப் பாதுகாக்கும் என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, பெருங்காயமானது புற்றுநோயை உண்டாக்கும் அணுக்கள் வளருவதை தடுக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சரும நோய்கள்

சந்தையில் கிடைக்கும் பல சருமப் பாதுகாப்பு பொருட்களில் பெருங்காயம் கலந்து இருப்பதால், சரும சிகிச்சைக்கு உகந்ததாக விளங்குகிறது. பெருங்காயத்தை சருமத்தின் மேல் நேரடியாகத் தடவினால், தோல் தடிப்பு மற்றும் தோல் காய்ப்பு ஆகியவை நீங்கும்.

சர்க்கரை நோய்

பெருங்காயம் கணையச்சிரை அணுக்களை அதிக இன்சுலின் சுரக்க வைப்பதால் அது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே, பெருங்காயம் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பாகற்காயில் பெருங்காயத்தை சேர்த்து சாப்பிடலாம்.

சுவாச பிரச்னை

சுவாச குழாய் புண்களுக்கு பயன்படுத்தப்பட்ட பழமையான மருந்து பெருங்காயம். இது ஒரு சுவாச உந்தியாக, சளியை எடுக்கும் சளி நீக்கியாகவும், நெஞ்சு அடைத்தல் நிவாரணியாகவும் செயல்படுகிறது. பெருங்காயத்தை தேன் மற்றும் இஞ்சியுடன் கலந்து குடித்தால் சுவாசக் கோளாறுகளான வறட்டு இருமல், ஆஸ்துமா, மார்புச்சளி போன்றவைகள் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம்

பெருங்காயத்தில் உள்ள கவ்மரின்(Coumarin) என்ற வேதிப்பொருள் ரத்தத்தை மெலிவூட்டி, ரத்த உறைதலைத் தடுக்கும். இதன் உறைவெதிர்ப்புத் தன்மையானது ரத்தக் கொழுப்பைக் குறைத்து உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும்.

உபயோகிக்கும் முறை

* குடற்புழுக்கள் பிரச்னை கொண்டவர்கள் 2 கிராம் பெருங்காயத் தூளை, 100 மிலி தண்ணீரில் கலந்து எனிமாவாக(Enema) எடுத்துக் கொள்ளலாம்.

* இருமல், சளி சுவாசப் பிரச்னை இருக்கும்போது 2 ஸ்பூன் இஞ்சிச் சாறுடன் கால் ஸ்பூன் பெருங்காயத் தூள், ஒரு சிட்டிகை உப்பு ஆகியவற்றை 200 மிலி தண்ணீரில் கலந்து இரவில் உட்கொள்ளலாம்.  

* தூக்கமின்மை இருந்தால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில், கால் ஸ்பூன் பெருங்காயத்தூளை கலந்து உறங்கப் போவதற்குமுன் உட்கொண்டால் நல்ல மாற்றம் தெரியும்.

* மாதவிடாய் நேரத்தில் வலி இருக்கும்போது சிறிது நெய்யில் பெருங்காயத்தை வறுத்து பவுடர் பண்ணவும். மதிய உணவில் கால் ஸ்பூன் அந்தப் பவுடரை மசித்து சாப்பிடவும். கால் மணி நேரம் கழித்து வெந்நீர் அருந்தவும்.

பெருங்காயம் வாங்கும்போது...

நல்ல தரமான பெருங்காயம் வெளிறிய மஞ்சள் பழுப்பு நிறத்தில் இருக்கும். கறுத்திருந்தால் வாங்கக் கூடாது. கலப்படம் இல்லாத பெருங்காயம் கற்பூரம் மாதிரி எரிய வேண்டும். சில தாவர ரெசின்கள், ஸ்டார்ச் பொருட்கள், சோப்புக்கட்டி போன்றவை சேர்க்கப்பட்டு பெருங்காயம் சந்தையில் விற்கப்படுகிறது. அதனால் மூக்கைத் துளைக்கும் வாசம் வந்தாலும் கவனமாகப் பார்த்துத்தான் வாங்க வேண்டும். பெருங்காயத்தின் மணம் எளிதில் போய்விடும் என்பதால் காற்றுப்புகாத கண்ணாடிக் குவளையில் போட்டு வைத்திருந்தால் அதன் மணத்தையும் மருத்துவக் குணத்தையும் பாதுகாக்கலாம்.

தொகுப்பு: இதயா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 04-12-2020

  04-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • rainpurevi111

  தமிழகத்தை மிரட்டும் புரெவி புயல்... கொட்டும் மழை; கொந்தளிக்கும் கடல் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம்!!

 • radish3

  புவியீர்ப்பு சக்தியில்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா விஞ்ஞானிகள்!: புகைப்படங்கள்

 • farmers_proteeee11

  மத்திய அரசின் சட்டங்களை எதிர்த்து வீறுகொண்டெழுந்த விவசாயிகள்... டெல்லியில் 8வது நாளாக ஆவேச கோஷங்களை எழுப்பி போராட்டம்!!

 • 03-12-2020

  03-12-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்