SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாய் ஜிஞ்சர்!

2020-06-01@ 12:21:47

பாட்டி வைத்தியம்

வெளிப் பிரயோகமாக பொடியாகவும், உள்ளுக்கு கஷாயமாக சமையலில் மணமூட்டியாகவும் பலவாறாக பண்டைய காலம் முதல் அரத்தை பயன்படுத்தபட்டு வருகிறது. நவீன ஆய்வுகளிலும் இதன் எண்ணற்ற செயல் திறனை பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது. இதன் மகத்துவம் உணர்ந்துதான் நம் முன்னோர்கள் இதை அதிகமாகப் பயன்படுத்தி உள்ளனர். ‘தொண்டை கரகரக்கிறதா... அரத்தையை வாயிலடக்கிக்கொள்’ என்று பாட்டிமார்கள் சொல்லக் கேட்டிருப்போம். கேரளாவில் எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது, கபத்தைப் போக்க அரத்தைப் பொடியை உச்சியில் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் உள்ளது. மங்களூர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இதை அன்றாடம் கஷாயமாக அருந்தும் பழக்கமும் உள்ளது. இப்பகுதியில் ஹோட்டல்களில் கூட இக்கஷாயம் வழக்கமாக கிடைக்கும்.

இதுபோன்ற எண்ணற்ற உதாரணங்களால் தென்னிந்தியாவில் அரத்தையை பாரம்பரியமாகவே பயன்படுத்தி வந்தது ஆதாரப்பூர்வமாகவே தெரிகிறது.
நம்மூரில் மட்டுமின்றி தாய்லாந்து மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலும் அரத்தை பெருமளவில் சமையலில் பயன்படுத்தப்படுகிறது. நாம் இஞ்சியை சமையலில் பெருமளவு பயன்படுத்துவதுபோல் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனாலேயே தாய் ஜிஞ்சர்(Thai ginger) என்றொரு பெயரும் அரத்தைக்கு உண்டு. நீண்ட தூர பயணங்களின்போது, குறிப்பாக விமான பயணம் மேற்கொள்ளும் முதியவர்களுக்கு ரத்த சுற்றோட்டம் குறைந்து, நீண்ட நேரம் அமர்ந்தவாறே வேலை பார்க்கும்போதும் சிலருக்கு ரத்த சுற்றோட்ட பாதிப்பினால் காலில் வீக்கம்(Ethrombosis) ஏற்படுவதுண்டு. இதற்கு அரத்தை சுக்கு கஷாயம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

2 கிராம் அரத்தையும் சுக்கும் சேர்த்து, 60 மில்லிலிட்டர் நீரில் தேநீர் போல் கொதிக்க வைத்து, வடிகட்டி இரண்டு வேளை ஒவ்வொரு நாளும் குடிக்க வேண்டும். பயணம் செய்யும் நாட்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே குடிக்க ஆரம்பிக்க வேண்டும். இதற்கு கொழுப்பை கரைக்கும் ஆற்றலும்(Lipotropic), ரத்தம் உறையாமல் இருக்கச் செய்யும் ஆற்றலும்(Anticoagulant), வீக்கமுருக்கி(Anti-inflammatory) செயலும் உள்ளதால் கால் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகவே வேலை செய்கிறது. அரத்தை சுக்கு கஷாயம் சிறந்த அலுப்பு மருந்தாகவும் பயன்படுகிறது. மூட்டுவலி, தசை வலி இருப்பவர்களுக்கும் அரத்தை கஷாயம் நல்மருந்தாகும். மூட்டு வீக்கத்திற்கு அரத்தை சேர்ந்த தைலமும் பசையும் வீக்கத்தை உடனடியாகக் குறைக்கும்.
அரத்தையை வாயிலிட்டு மென்று சுவைக்க ஈறு நோய்கள் தீரும்.

தொண்டை கம்மல் தீரும். மணமூட்டியாக இருப்பதால் வாய் நாற்றம் தீரும். இதற்கு ஆக்சிஜனேற்ற பண்பு உள்ளதாக ஆய்வுகளின் மூலம் அறிய முடிகிறது. அதனால் புற்றுநோய் சிகிச்சையில் பயனளிக்க வல்லது. இதற்கு நுண் உயிர் கொல்லி பண்பும்(Antimicrobial), பூஞ்சை காளான் எதிர்ப்பு சக்தியும்(Anti fungal), நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பண்பும்(Immunomodulant), ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் குணமும் (Hypoglycaemic) உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. சித்தரத்தை என்று பெரும்பாலும் சித்த மருத்துவத்தில் அரத்தையையே சொல்வர். பேரரத்தை சற்று வேறுபட்ட குணமுடையது. மருத்துவத்தில் இரண்டும் பயன்பட்டாலும் சித்தரத்தைதான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சிறிய கிழங்கை தனியே பிரித்து நட்டு வைத்தால் அது தரை முழுவதும் பரவி நன்கு வளரக் கூடியது. இஞ்சி குடும்பத்தை சேர்ந்த இந்த தாவரத்தின் மட்ட நிலத்தண்டு பகுதியே மருந்தாக பயன்படுகிறது. பார்ப்பதற்கும் மிகவும் அழகாக இருக்கும். பாதை ஓரங்களில் இதை நட்டு வைக்கலாம். வேர் நன்றாக பரவி வளர்வதால் மலை சரிவுகளில் மண் அரிப்பை தடுக்கும் ஆற்றல் உள்ளது. எனவே, வெட்டி வேரைப் போல் மண் வளம் காக்கவும் மண் அரிப்பை
தடுக்கவும் இது பயன்படுகிறது.

வாந்தி பித்தம் கரப்பான் ரோகம்
சேர்ந்த கப முத்தோஷங் சீதமொடு - நேர்ந்தகரமும்
சிற்றரத்தை காட்டி வருஇருமலும் தீரும்
சிற்றரத்தை வன் மருந்தால் தேர்  

- இந்த பதார்த்த குணபாடலால் கரப்பான், சுரம், திரி தோஷம் நாட்பட்ட இருமல் ஆகியவற்றை சிற்றரத்தை  தீர்க்கும் என உணர முடிகிறது. எளிதில் வளர்க்கக்கூடிய இந்த செடியை மஞ்சளைப் போல், இஞ்சியைபோல் நாம் இல்லம்தோறும் தரையிலோ பெரிய பைகளில் வளர்த்து பயன்படுத்த வேண்டும். தரையில் நடும்போது நன்றாக படர்ந்து வளர்ந்து எப்போதும் பசுமையாக காட்சி தரும்.

தொகுப்பு: விஜயகுமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்