SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிகரிக்கும் எலும்புமுறிவு...

2020-03-12@ 15:33:58

நன்றி குங்குமம் தோழி

வராமல் தடுக்க என்ன வழி?

மனித உடலின் வலுவான பாகங்கள் என்றால் அது எலும்புகளும், பற்களும்தான். அதனால் தான் ‘உன் எலும்பை ஒடைப்பேன்’ என்றும், ‘உன் பல்லை ஒடைப்பேன்’ என்றும் அடிக்கடி நம்மில் பலர் கோபத்தின் போதும் சண்டையின் போதும் சொல்கிறோம்.பரிணாம வளர்ச்சியில் மனித உடலானது எலும்புக் கூட்டை மையமாக வைத்தே அமைக்கப்பட்டது. எலும்புகள் வடிவம் தருவதோடு, இரு பக்கமும் மற்ற எலும்புகளோடு சேர்ந்து மூட்டுகளாக உருப்பெறுகிறது. மூட்டுகள் அதனைச் சுற்றியுள்ள தசைகளின் உதவியுடன் அசைவுகளை இயக்குகிறது. இப்படியான இந்த எலும்புகளில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அது மனிதனின் அன்றாட வாழ்வியலை பாதிக்கும். அதனால் தான் மனித இயக்கத்திற்கு எலும்புகள் மிக முக்கியமானவை என்கிறார்கள். அப்படிப்பட்ட எலும்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுவதையே எலும்பு முறிவு என்கிறோம்.

மனித உடலில் உள்ள 206 எலும்புகளில் விரிசல் ஏற்படுவது, பாதியாக உடைவது, முழுமையாக முறிவது அல்லது சிறிய துகள்களாக உடைதல் என பல வகையான எலும்பு முறிவுகள் உள்ளன. ஒருவரது வாழ்வில் குறைந்தது ஒரு முறையேனும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படும் என்கிறார்கள். அத்தோடு குடும்பத்தில் ஒருவருக்காவது எலும்பு முறிவுக்காக சிகிச்சை எடுத்திருப்போம் என்றும் சொல்கிறார்கள். எலும்பு முறிவானது சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை யாவருக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட எலும்பு முறிவுகள் ஏற்பட்டால் அது என்னென்ன அறிகுறிகளை வெளிப்படுத்தும், பிரச்சனைகளை விளைவிக்கும், அதன் தீர்வுகள் என்னென்ன என்று அறிந்து கொள்வோம்.  காரணங்களும் தீர்வுகளும்...காரணங்கள் பல வகை இருக்கும் இந்த எலும்பு முறிவுகளுக்கு, தீர்வுகளிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் கை கால்களில் உள்ள எலும்புகளின் முறிவே அதிக எண்ணிக்கையில் வரும். அதற்கு அடுத்த நிலையில் தண்டுவட எலும்புகள் முறிவு வரும்.  

* குழந்தைகளுக்கு எலும்பு முறிவு ஏற்படக் காரணம் அவர்களின் எலும்பின் வளர்ச்சி நிலைகள். எலும்பு முழுதும் வளர்ந்து அடர்த்தியாக இருக்காது. அதனால் சுலபமாக முறிவு ஏற்படும். பெரும்பாலும் குழந்தைகள் விளையாடும் போது ஏற்படும் எலும்பு முறிவுகள் தான் அதிகம்.

* பெரியவர்களுக்கு வரும் எலும்பு முறிவுக்கு காரணம் அவர்களின் வயது. வயது முதிர்ந்தால் எலும்புகள் வலுவிழக்கும். அதாவது எலும்பின் திண்மம் குறைந்து போகும். இதனை எலும்பு புரை என்று கூறுவோம். இது மட்டுமின்றி வயதாவதால் வரும் தள்ளாட்டம், திடதன்மையை இழப்பது போன்றவை எளிதில் வயதானவர்களை கீழே விழச் செய்வதினால் ஏற்படும் எலும்பு முறிவுகளின் எண்ணிக்கை நம் இந்தியாவில் இப்போது அதிகமாகி வருகிறது.

* பெண்களுக்கு பொதுவாக மெனோபாஸ் கடந்த பிறகு எலும்புகள் பலவீனம் அடையும். எனவே அதன் காரணமாக முறிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம்
உள்ளது.

* இவற்றோடு சில தொற்று நோய்கள் நம் எலும்புகளை மிக எளிதில் பாதிக்கும். அதனால் எலும்பு அரிப்பு ஏற்பட்டு திண்மம் குறைந்து உடைவதற்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது. எலும்பு புற்றுநோயிலும் இதே நிலை தான்.

* மேலும் எலும்பு உறுதியாக இருக்கத் தேவைப்படும் வைட்டமின் டி மற்றும் சுண்ணாம்பு சத்து குறைவினால் மற்ற வயதினருக்கும் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புண்டு.

* இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எலும்பு முறிவுக்கு முதல் முக்கியக் காரணமாக இருப்பது விபத்துகள். அதிலும் முதல் பங்கு சாலை வழி விபத்துக்கள்.

கண்டறிவது எப்படி?

* எலும்பு முறிந்த இடத்தில் கடுமையான வலி இருக்கும்.

* முறிந்த இடத்தின் அருகே உள்ள மூட்டுகளை அசைக்க முடியாது.

* முறிந்த இடம் உடனடியாக வீக்கம் ஏற்பட்டு சிவந்து போகும்.

*  எலும்பு முற்றிலும் முறிந்தால் பக்கத்தில் உள்ள உறுப்புகளுக்கு உராய்வு ஏற்படுத்தி அதன் திசுக்களை சேதப்படுத்தும். உதாரணமாக நெஞ்சு எலும்பு முற்றிலும் உடைந்தால் அது நுரையீரலை உராய்ந்து சேதப்படுத்தி சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும்.

* எலும்பு முறிந்து வெளியே பிதுங்கினால் அது காயமாக மாறி ரத்தம் வெளியேறும். முகத்தில் உள்ள எலும்புகள் உடைந்தால் கண்களில் உள்ள வெண்படலத்தில் ரத்தக் கசிவு, மூக்கில் ரத்தக் கசிவு போன்றவை ஏற்படும்.

* கால்களில் எங்கேனும் முறிவு ஏற்பட்டால் நடக்க முடியாது. அதாவது அந்த காலால் ஊன்ற முடியாது.

* கைகளில் எங்கேனும் முறிவு ஏற்பட்டால் பொருட்களை எடுத்துக் கையாள சிரமம் ஏற்படும்.

* முதுகெலும்பு முறிவு இருந்தால் முதுகு வலி வருவதுடன் நடப்பதில் சிரமம் ஏற்படும்.

* எலும்பில் வெறும் கீறல் மட்டும் ஏற்பட்டால் வலி மற்றும் வீக்கம் உண்டாகி, சிறிய அளவிலான சிரமம் ஏற்படும். அதனால் அது சாதாரண சுளுக்கு என்று எண்ணி அலட்சியமாய் இருக்கக் கூடாது.  

என்ன செய்ய வேண்டும்?

மேற்கண்ட அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனே பொதுநல மருத்துவர் அல்லது இயன்முறை மருத்துவர் அறிவுரையோடு ‘எக்ஸ்-ரே’ எடுத்து எலும்பு முறிவுதானா என்று உறுதி செய்து கொள்ளலாம். மேலும் எலும்பு முறிந்து மற்ற திசுக்களை பாதித்தால் CT மற்றும் MRI எடுக்க வேண்டியிருக்கும்.  

எலும்புக் கூடலும் படிநிலையும்..

முதலில், உடைந்த இரு முனைகளுக்கு இடையில் புதிய ரத்த நாளங்கள் தோன்றும். பின்பு, மிருதுவான எலும்பு செல்கள் திசு படலங்களாக படர ஆரம்பிக்கும். அதன்பிறகு அது அடர்த்தியடைந்து இரு முனைகளையும் இணைக்கும். கடைசியாக, முன்பு இருந்தது போன்ற பழைய நிலையில் உருமாற்றிக் கொள்ளும். இந்த படிநிலைகள் ஒவ்வொரு எலும்புகளுக்கும் ஏற்ப கால அளவில் மாறுபடும். அதனால் அதற்கு ஏற்ப சிகிச்சைக் காலமும் நீட்டிக்கப்படும்.

சிகிச்சை முறைகள்

நம் உடலில் எங்கு காயம் ஏற்பட்டாலும் நம் உடல் அதனை இயல்பாகவே சீர் செய்யும் வல்லமை பெற்றது. உதாரணமாக கத்தியால் சிறிய காயம் நம் விரலில் ஏற்பட்டால், எந்த மருந்தும் இல்லாமல் அதுவாகவே ஒன்றிரண்டு நாட்களில் சரியாகி விடும். அதேபோலவே முறிந்த எலும்பு முனைகளும் தானாகவே கூடும் ஆற்றல் கொண்டது. ஆனால் அப்படிக் கூடுவதற்கு தகுந்த முறையில் முறிந்த எலும்புகளின் அமைப்பு இருக்க வேண்டும். அதற்காகத்தான் கட்டு கட்டியும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஒரு நிலையான அமைப்பில் எலும்புகளைப் பொருத்தி அது கூடும் வரை அப்பகுதியை அசையாமல் பாதுகாக்கவும் செய்வார்கள்.
 
இயன்முறை மருத்துவம்

முறிந்த எலும்பானது கூடுவதற்காக சுற்றியுள்ள பகுதிகளை நிலையாக அசைவில்லாமல் நாள் கணக்கிலும் மாதக்கணக்கிலும் வைத்து சிகிச்சை அளிப்பார்கள். அதனால் எலும்பு முறிந்த இடத்திலும், அதன் மேலும், கீழும் தசைகளில் இறுக்கம் தோன்றும். அவற்றோடு முறிவுக்கு சுற்றியுள்ள மூட்டுகளையும் அசையாமல் வைத்திருப்பதால், மூட்டுகளிலும் இறுக்கம் ஏற்படும். அதனால், எலும்பு கூடிய பின் இறுக்கம் பெற்றிருக்கும் தசைகளை தளர்ச்சி செய்யவும், மூட்டுகளை மீண்டும் முன்பு போல் இயக்குவதற்கும் இயன்முறை மருத்துவம் அவசியம் தேவையாகிறது.

மேலும் காலில் முறிவு ஏற்பட்டு இருந்தால் எலும்பு முறிந்த காலை ஊன்றி நிற்கவும், நடக்கவும் சில நாட்கள் ஆகும். அதனால் நடப்பதில் சிரமம் ஏற்படும். ஆகவே நடப்பதற்கான பயிற்சிகள் வழங்கப்படும். இவற்றோடு இறுக்கம் குறைந்த பின்பு தசைகள் வலுப்பெற வேறு சில பயிற்சிகளும் வழங்கப்படும். அதனால் இயன்முறை மருத்துவர் துணைக் கொண்டு எந்த அளவு கால் ஊன்றி நிற்க வேண்டும், எவ்வளவு உடல் எடை பாதிக்கப்பட்ட காலில் ஊன்ற வேண்டும் போன்றவற்றை அறிந்து கொண்டு பயிற்சிகள் செய்து வந்தால் மீண்டும் முன்பு போல் தம் வாழ்வை மலரச் செய்யலாம்.

தொகுப்பு: அன்னம் அரசு

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • u.p.lorry-bus-acc

  உ.பி.யில் கோர விபத்து!: பேருந்து மீது லாரி மோதியதில் சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..!!

 • sand-storm-china

  அடுத்தடுத்து தாக்கும் இயற்கை பேரிடர்களால் ஸ்தம்பிக்கும் சீனா!: 350 அடி உயரத்திற்கு வீசிய மணல் புயலால் மக்கள் அவதி..!!

 • plastic-vaste-girl

  கடலில் கொட்டி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை தந்தையின் உதவியுடன் அகற்றும் 4 வயது சிறுமி..!!

 • farmeee112

  "பக்கபலமாக மட்டுமல்ல, களத்திலும் நிற்போம்!" : டெல்லி போராட்டத்தில் பெண் விவசாயிகள்

 • arjennn11

  திடீரென அடர் பிங்க் நிறத்துக்கு மாறிய அர்ஜென்டினா ஏரி .. அதிர்ச்சியூட்டும் படங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்