SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இருப்பது ஒன்றுதான் ...

2020-01-20@ 16:13:18

நன்றி குங்குமம் டாக்டர்

தேவை அதிக கவனம்


‘‘இதய நல ஆரோக்கியத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்கள் தற்போது அதிகரித்து வருகிறது. நீரிழிவு, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால்,கொழுப்புள்ள உணவுகள், தைராய்டு நோய், மன அழுத்தம், குறைவான உடல் செயல்பாடுகள், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், மரபியல் காரணி மற்றும்சமூகத் தொடர்பின்மை போன்றவையே இதய நோய்களை அதிகரிக்கக் கூடிய முக்கியமான ஆபத்துக் காரணிகளாக உள்ளன.

இருப்பது ஓர் இதயம்தான் என்பதால் அதனை கவனமாக பார்த்துக்கொள்வது அவசியம்'' என் கிறார் இதய சிகிச்சைசிறப்பு மருத்துவர் சுரேஷ்குமார்.

நமது ரத்த ஓட்ட மண்டலத்தின் மையமாக இருக்கும் ஒரு தசையாலான உறுப்பே இதயம். இது தமனி, சிரை மற்றும் ரத்த நுண்குழாய்களைக் கொண்ட ஒரு வலைப்பின்னல் அமைப்பில் அமைந்திருக்கிறது. நமது உடலிலிருந்து ரத்தத்தை இதயத்துக்கும், இதயத்திலிருந்து பிற உடல் பாகங்களுக்கும் எடுத்துச் செல்லும் பணியை இந்த ரத்தக் குழாய்கள் செய்கின்றன. இப்படி மூளை, நுரையீரல், சிறுநீரகம் மற்றும் உடலின் பிற பாகங்களுக்கு ரத்தத்தை வழங்கும் இதயம் மற்றும் அதற்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதிக்கப்படுவதால் இதய நோய் ஏற்படுகிறது. இதுபோன்ற இதய நோய்களே ஆண்கள் மற்றும் பெண்களின் இறப்புக்கு ஒரு முக்கியக் காரணியாக உள்ளது.

இதய நோய்களால் உலகளவில் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் மரணமடைகின்றனர். 2030-ல் இதுவே 2.3 கோடியை எட்டக்கூடும். இந்தியாவில் Non-communicable disease என்கிற வகையில் இதய நோயால் மட்டும் 26 சதவிகிதம் பேர் இறக்கின்றனர் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஒரு புள்ளி விவரம்.

இதய நோய்களைக் கண்டுபிடித்து சரியான நேரத்தில் அதற்கு ஆஞ்சியோபிளாஸ்டி, ஸ்டென்ட்டிங், பைபாஸ் சர்ஜரி என்று உடனடியாக தேவைப்படுகிற சிகிச்சைகளை சரியான முறையில் செய்வதால் அந்த நோய்களைக் குணப்படுத்தலாம். ஆனால், இதய நோய்கள் என்னவோ குறையப் போவதில்லை. எனவே, இதுபோன்ற நோய்கள் அதிகமாகாமல் குறைக்க அரசும், மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதே மிகவும் முக்கியம்.

அறிகுறிகள், பரிசோதனைகள்


 பொதுவாக மார்புவலிதான் மாரடைப்பு நோய்க்கான அறிகுறி. மார்புவலி ஏற்படுகிறபோது ECG (Electro cardiography) எடுக்கச் சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. ஆனால், மார்புவலி இல்லாமல்கூட மாரடைப்பு நோய் வரலாம். என்ன காரணம் என்று விவரிக்க முடியாத திடீர் சோர்வு, மூச்சு விடுவதில் சிரமம், திடீர் மயக்கம், இரண்டு நாட்களுக்கும் மேலாக அதிக இருமல், சளி இருந்தால் ECG பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

காய்ச்சல் இருந்து இருமல், சளி பிரச்னை இருந்தால் அது நுரையீரல் பிரச்னையாக இருக்கும். அதுவே காய்ச்சல் இல்லாமல் இருமல், சளி மட்டும் இரவு நேரங்களில் அதிகமானால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும். ஏனென்றால் இதயம் ரத்தத்தை வெளியேற்றத் தேவையான அழுத்தம் குறைகிறபோதும் இருமல் ஏற்படலாம். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்படுகிறபோது ஒரு ECG எடுப்பதன் மூலம் ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பைக் கண்டறியலாம். அதன் பிறகு அதற்குரிய சிகிச்சையளிக்க வேண்டும். மிகவும் பழமை வாய்ந்த இந்த அடிப்படையான பரிசோதனை செய்கிற வசதி தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முதல் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளது.

ECG பரிசோதனை மூலம் 50 சதவிகித அளவில் ரத்தக்குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பைக் கண்டறிய முடியாது. எனவே, இதைக் கண்டறிய TMT (Treadmill test) பரிசோதனை செய்யப்படுகிறது. ஜிம்மில் Treadmill கருவி மூலம் உடற்பயிற்சி செய்வதைப் பார்த்திருப்போம். இந்தக் கருவியிலே உடலில் பெல்ட்டைக் கட்டிக்கொண்டு, இதயத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவில் அழுத்தம் கொடுத்து ECG எடுக்கிறபொழுது இந்த 50 சதவிகித ரத்தக்குழாய் அடைப்பைக் கண்டறியலாம். எனவே, இதய நோய்க்குரிய ஆபத்துக் காரணிகளை உடையவர்களும், 40 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை இந்த TMT பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

சிகிச்சை முறைகள்

நான் பணிபுரிகிற ஒரு மருத்துவமனையில் மட்டும் ஒரு மாதத்திற்கு 200 பேருக்கு மேல் மாரடைப்பு நோய்க்கான சிகிச்சை அளிக்கிறோம். ஒரு மாதத்திற்கு 250 பேர் வரை ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்கிறோம். இவர்களில் இதயத்திற்கு செல்லும் ரத்தக்குழாயில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டிருப்பவர்களுக்கு, கை மணிக்கட்டு வழியாக ஒரு சிறிய குழாயை செலுத்தி ஆஞ்சியோபிளாஸ்டி முறை மூலம் அந்த இடத்தில் பலூன் போன்ற அமைப்பை ஏற்படுத்தி, அந்த அடைப்பை நீக்கி சுத்தம் செய்து அந்த இடத்தில் ஸ்டென்ட் என்கிற கருவியைப் பொருத்தி ரத்த ஓட்டம் சீராக செல்ல வழி செய்யப்படுகிறது. இதை Balloon Angioplasty stent என்று சொல்கிறோம்.

மாரடைப்பு ஏற்பட்ட 90 நிமிடங்களுக்குள் இந்த Balloon Angioplasty stent சிகிச்சை கொடுத்தால் நல்ல தீர்வு கிடைக்கும். அதிகபட்சம் மாரடைப்பு ஏற்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திற்குள் வருபவர்களுக்கு இந்த சிகிச்சையளித்து அப்பிரச்னையை சரி செய்யலாம். இந்த சிகிச்சைக்கான மருத்துவ செலவை அரசு மற்றும் தனியார் காப்பீடுகள் மூலம் நாம் பெற முடியும். அதுகுறித்த தகவல்களை அறிந்து சரியான நேரத்திற்குள் சிகிச்சையளிப்பதன் மூலம் நோயாளியைக் காப்பாற்ற முடியும்.    

இதயத்திற்கு செல்லும் ஒரு ரத்தக்குழாயில் ஒரு இடத்தில் ரத்த அடைப்பு இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி முறை மூலம் ஸ்டென்ட் பொருத்தி சிகிச்சை அளிக்கலாம். ஆனால், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நோயாளி மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தால், கால் பகுதியிலிருந்து ரத்தக்குழாய் எடுத்து அதை இதயத்தில் பொருத்தி இந்த மாற்று வழி மூலமாக ரத்த ஓட்டம் சீராக செல்லும்படி இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் இதை Heart bypass surgery என்று சொல்கிறோம்.

தய நோய்களுக்கு காரணமான மனநல பாதிப்புகள்

இதய நோய்கள் அதிகமாகாமல் குறைப்பது சற்று கடினமே. ஏனென்றால் இந்நோய் இதனால்தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. இந்நோய் மேற்சொன்ன ஆபத்துக் காரணிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டுக் காரணிகளாலும் ஏற்படுகிறது. உடல்நலம் மட்டுமின்றி மனநலம் சார்ந்த பாதிப்புகளும் இதய நோய்கள் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது.

தொழில்நுட்பத்துக்கு அடிமையாகும் நிலைதற்போது இளம் வயதினர் செல்போன், கணினி ஆகிய திரைகளிலும், முதியவர்கள் தொலைக்காட்சி திரைகளிலும் தங்களின் நேரத்தை அதிகமாக செலவிடுகின்றனர். இதனால் தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாகும்(Screen addiction) நிலை அதிகரித்து வருகிறது. இதுபோல செல்போன், இணையம் போன்ற தொழில்நுட்ப சாதனங்களின் திரைகளுக்கு அடிமையாவதால் நமது மூளையின் சிந்தனைத்திறன், செயல்பாடுகள் பாதிக்கப்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் தேவை அறிந்து சரியான அளவில் பயன்படுத்துவதன் மூலம் இப்பிரச்னைகளை நாம் தவிர்க்கலாம். அது இதயம் காக்கவும் பெரிதாக உதவும்.  

நடக்கும் பழக்கம் அவசியம்

அந்த காலத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம், கோவில் போன்ற இடங்களுக்கு வீட்டிலிருந்து நடந்து சென்று அதன் பிறகு பேருந்து ஏறி செல்லும் பழக்கம் இருந்தது. மேலும் நடைப்பயிற்சி என்பது நமது பல்வேறு வாழ்வியல் தேவைகளோடு இணைந்து இருந்தது. ஆனால் தற்போது அந்த நடக்கும் பழக்கம் காணாமல் போய்விட்டது.

எங்கு சென்றாலும் வீட்டிலிருந்தே ஆட்டோ, பைக்குகளில் செல்வது, அருகிலிருக்கும் இடங்களுக்குக்கூட வாகனங்களில் செல்வது என்று நம்மிடையே நடக்கும் பழக்கம் மிகவும் குறைந்து வருகிறது. இந்நிலையை மாற்றி நடக்கும் பழக்கத்தை அதிகரிக்க வேண்டும். லிஃப்ட்களில் ஏறிச் செல்வதைச் தவிர்த்து, படிக்கட்டுகளில் ஏறிச் செல்லலாம். நேரம் கிடைக்கிற பொழுதும், நடப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறபோதும் கண்டிப்பாக
நடக்க வேண்டும்.

இதயநலம் காக்க நாம் செய்ய வேண்டிவை

நம் வீட்டிலுள்ள சைக்கிள், பைக், கார் போன்ற வாகனங்களை அதிக நாட்கள் பயன்படுத்தாமல் ஒரே இடத்தில் வைத்துவிட்டால் அது தூசி அடைந்து, அதிலுள்ள ஆயில்கள் உறைந்து போவதால் அதன் இயக்கம் தடைபடுகிறது. அதுபோல நமது உடல் செயல்பாடுகள் மற்றும் இயக்கங்கள் குறைகிறபோது இதயத்தின் செயல்பாடுகள் குறைந்து அதுவே நாளடைவில் மாரடைப்பு போன்ற பிற இதய நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

தினசரி உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, யோகா பயிற்சி செய்வது அல்லது மைதானங்களில் விளையாடும் விளையாட்டுக்களில் ஈடுபடுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உடல் எடையை சரியாக பராமரிக்கலாம். அதேபோல சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் அதிக காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

மீன், முட்டை போன்ற புரதச் சத்துள்ள உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். அதிக கொழுப்பு மற்றும் அதிக எண்ணெய் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். புகை, மது மற்றும் போதைப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாரடைப்பு நோய்க்கான ஆபத்துக் காரணிகளை அதிகமாக உடையவர்களும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பரிசோதனைகள் செய்து, மருத்துவர் ஆலோசனைப்படி முன்னெச்சரிக்கையோடு நடந்து கொள்வதன் மூலம் இதய நோய் ஆபத்துகளைத் தவிர்க்க முடியும்.

- க.கதிரவன்

படம் : ஜி.சிவக்குமார்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 18-09-2020

  18-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • birthdayceleb17

  இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: நாடு முழுவதும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டியும், இனிப்பு வழங்கியும் உற்சாக கொண்டாட்டம்..!!

 • guinness17

  2021 உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் புகைப்படங்கள்..!!

 • amavasai17

  மஹாளய அமாவாசை!: மறைந்த நம் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்க உகந்த நாள்...பித்ரு வழிபாடு செய்வது சிறப்பு..!!

 • modiji17

  பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்தநாள்!: பிரதமரின் அரசியல் பயண புகைப்பட தொகுப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்