SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனிக்காற்றே... பனிக்காற்றே...

2020-01-20@ 16:10:39

நன்றி குங்குமம் டாக்டர்

Health and Beauty


மார்கழி, தை மாதங்களில் சில்லென்ற குளிர்க்காற்று எல்லோருக்கும் பிடிக்கும் என்றாலும், பனிக்காலம் ஆரம்பித்தவுடனேயே சருமம் உலர்ந்து ஆங்காங்கே விரிசல்களும், உதடுகளில் வெடிப்பும், கை, கால்களில் அரிப்பும் ஏற்பட்டு பாடாய் படுத்தும். இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளும்
தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன?

* பொதுவாக வெயில் காலத்தில் மட்டும்தான் சூரிய ஒளியால் நம் சருமம் சேதமடையும் என்று நினைக்கிறோம். குளிர்காலமோ, மழைக்காலமோ எல்லா பருவத்திலுமே சூரியனிலிருந்து புற ஊதாக்கதிர்கள் வெளிப்படும். எனவே, பனிக்காலத்திலும் குறைந்தபட்சம் 30 SPF(Sun Protection Factor) உள்ள சன்ஸ்கிரீன் லோஷனை உபயோகித்தால், சருமத்தை பாதுகாக்கலாம்.

* குளித்து முடித்தவுடன், முற்றிலும் ஈரம்போக துடைக்காமல் பாதி ஈரம் இருக்கும்போதே மாய்சரைஸர், பட்டர் க்ரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டால் சருமம் உலராமல் ஈரப்பதத்துடன் இருக்கும்.

* குளிர்காலத்தில் சூடாக காபி, டீ அதிகமாக குடிக்கும் வழக்கம் நம்மிடம் இருக்கும். சிலர் மது வகைகளையும் இந்த குளிர்காலத்திற்கு பயன்படுத்துவார்கள். மது, டீ, காபியோ எதுவாக இருந்தாலும் உடலில் நீரை வற்றச்செய்துவிடும். இதனால், சருமம் வெகுசீக்கிரத்தில் உலர ஆரம்பிக்கும். இதைத் தவிர்க்க, டீ, காபிக்கு பதில் சூடான காய்கறி சூப் குடிக்கலாம். ஒமேகா 3, வைட்டமின் C, D நிறைந்த காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தை மேலும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* மாய்சரைஸிங் க்ரீம்களை உபயோகித்து எப்போதும் சருமத்தை உலரவிடாமல் வைத்துக் கொள்ள வேண்டும். பொதுவாக குளிர்காலத்தில் வியர்வை இருக்காது. அதனால் தாகமும் ஏற்படாமல் தண்ணீர் குடிக்க மறந்துவிடுவோம். குளிர்காலத்திலும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும். இந்தப்பழக்கமும் சருமத்தை உலரவிடாமல் பாதுகாக்கும்.

* குளிக்கவோ, முகம் கழுவவோ வெந்நீரை உபயோகிக்காதீர்கள். சுடுநீர் உடலில் இயற்கையாக உள்ள ஈரப்பதத்தை  அழித்துவிடும். வெந்நீர் தேவைப்பட்டால் மிதமான சூட்டில் குளிக்கலாம். குளிக்கும் நேரத்தையும் 10 நிமிடத்துக்கு அதிகமில்லாமல் குறைத்துக் கொள்ளலாம்.

* ஒருநாளைக்கு ஒரு முறை குளித்தால் போதுமானது. அதிக காரத்தன்மை உள்ள குளியல் சோப்புகளை தவிர்த்து, மிதமான பாடிவாஷ்களை பயன்படுத்தலாம். மூலிகை சோப்புகள் அல்லது பயத்தமாவு, கடலைமாவு போட்டும் குளிக்கலாம். இதுசருமத்தின் ஈரத்தன்மையை தக்க வைக்கும்.

* ஸ்பாஞ்ச், ஸ்க்ரப்பர்களை வைத்து தேய்த்து குளிக்கவும் கூடாது. இது மேலும் சருமத்தில் கீறல்களை உண்டாக்கக்கூடும். சருமத்தின் உள் அடுக்குகளையும் ஈரமாக்க முகத்திற்கு Serum and Hyaluronic acid உள்ள க்ரீம்களை உபயோகிக்கலாம். இது முகத்தை பொலிவாக எடுத்துக் காட்டும்.

* சருமத்துக்கு ஈரப்பதத்தை தரக்கூடிய Ceramide சுரப்பு குளிர்காலத்தில் குறைவதால் நகங்கள் வறண்டு போகும். எனவே, கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய செரமைடு உற்பத்தியை அதிகரிக்கும் நியாசினமைடு(Niacinamide) நிறைந்த ஹேண்ட் க்ரீம்களை கை, கால் மற்றும்
நகங்களிலும் தடவி பாதுகாக்கலாம்.

* பனிக்காற்று கூந்தலை வறட்சி அடையச் செய்துவிடும். எப்போது வெளியில் சென்றாலும் தலைக்கு ஸ்கார்ஃப், குல்லா, மஃப்ளர் கட்டிக் கொள்வது முக்கியம். வாரத்தில் 2 நாள் எண்ணெய் தடவி குளிப்பது, கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போடுவது கூந்தலில் வறட்சி ஏற்பட்டு நுனி பிளவு படாமல் பாதுகாக்கும். ஃப்ரூட் ஹேர் மாஸ்க் கூந்தலை மேலும் ஆரோக்கியமாக்கும்.

* மிக மென்மையான சருமம் கொண்ட உதடுகளில் பனிக்காற்று படும்போது வெடிப்பு ஏற்பட்டு கறுத்துப் போய்விடும். சிலருக்கு அந்த வெடிப்பில் ரத்தக்கசிவுகூட ஏற்படலாம். உதடு வறட்சியைப் போக்க நெய், தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளலாம். கடைகளில் விற்கும் லிப் பாமையும் பயன்படுத்தலாம். எச்சிலால் உதட்டை ஈரப்படுத்துவது ஆரோக்கியமானது அல்ல. உமிழ்நீரில் இருக்கும் அமிலத்தன்மை மேலும் உங்கள் உதட்டை சேதப்படுத்தக் கூடும்.

* வெளியில் செல்லும்போதும், வீட்டுக்குள் இருக்கும்போது மற்றும் உறங்கும்போதும் சாக்ஸ் போட்டுக் கொள்ள வேண்டும். இதன்மூலம் பாதங்களில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். பாடி லோஷன்கள், எண்ணெய்ப்பசை மிகுந்த க்ரீம்கள் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவிக் கொள்வதன் மூலமும் பாத வெடிப்பு வராமல் காத்துக் கொள்ளலாம்.

* சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்வதுதான் இந்த குளிர்காலத்தின் தாரக மந்திரம். இதையெல்லாம் பெண்கள் மட்டும்தான் செய்து கொள்ள வேண்டும் என்பதில்லை. ஆண்களும் தங்கள் சருமத்தை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கலாம்.

- என்.ஹரிஹரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 27-02-2020

  27-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • thodar vanmurai20

  கலவர பூமியாக மாறிய தலைநகர்: வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு...தொடர்ந்து 4வது நாளாக பதற்றம் நீடிப்பு!

 • brezil20

  பிரேசில் கார்னிவல் 2020: ஆடம்பரமான ஆடைகளில் ஆடல் பாடலுடன் மக்கள் கொண்டாட்டம்!

 • vimaanam20

  பாலகோட் ஏர் ஸ்ட்ரைக் நினைவு நாள்: சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் 2.0 க்கு பயன்படுத்தப்படும் மிராஜ் -2000 போர் ஜெட் விமானங்கள் காட்சிக்கு வைப்பு!

 • indonesiya vellam20

  வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இந்தோனேசியா..!கனமழையால் பொதுமக்கள் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்