SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேன்ஸரை பார்சலில் வாங்காதீர்கள்...

2020-01-07@ 16:50:12

நன்றி குங்குமம் டாக்டர்

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்


ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்திருக்கிறது. ஆனாலும், அதன் முக்கியத்துவத்தை இன்னும் பலர் உணரவில்லை. இன்னும் கடைகளுக்கு வெறுங்கைகளை வீசிக் கொண்டு செல்வதும் பார்சலில் உணவுப்பொருட்களை வாங்குவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

காலையில் எழுந்ததும் பால் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி? வெறுங்கைகளை வீசிக்கொண்டு! காலை டிபனுக்கு இட்லி வாங்கப் போகிறோம். கையில் பாத்திரமோ, துணிப் பையோ, கூடையோ கிடையாது. கடைக்காரர் பால் பாக்கெட் தருகிறார். அது பிளாஸ்டிக் பாக்கெட். இட்லி பொட்டலம் இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக் போர்த்தப்பட்டுள்ளது. சாம்பாருக்குப் பிளாஸ்டிக் கவர். இந்த இரண்டையும் கொண்டுவர ஒரு பிளாஸ்டிக் கேரி பேக்.

இப்படி உணவு மட்டுமல்லாமல், எந்தவொரு நுகர்வோர் பொருளுக்கும் பிளாஸ்டிக் இல்லாமல் இல்லை எனும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். பிளாஸ்டிக் மண்ணுக்கு மட்டுமல்ல; மனிதனுக்கும் கேடு என்பது தெரிந்தும் இந்தத் தவறுகளை நாம் செய்கிறோம். பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பட்டியலிட்டால் பதறிப்போவோம். அத்தனை கொடுமை!

உணவுப் பொருட்களை அடைத்து வைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், உறைகள், தண்ணீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள், பிளாஸ்டிக் பைகள் எல்லாமே பிஸ்பினால்-ஏ (Bisphenol A) எனும் ரசாயனத்தை வெளிப்படுத்துகிறது. இது உணவில் கலந்து பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் கொண்டு வருகிறது. இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு ரத்தப் புற்றுநோயிலிருந்து அனைத்து வகை புற்றுநோய்களும் வருவதற்கு வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் அதிரவைக்கின்றன. பிளாஸ்டிக்குளில் உள்ள வினைல் குளோரைடு(Vinyl chloride) எனும் ரசாயனம் கல்லீரல் புற்றுநோயைத் தூண்டும் இயல்புடையது. முக்கியமாக சூடான பொருட்களை பிளாஸ்டிக் கவர்களிலோ, பிளாஸ்டிக் பாத்திரங்களிலோ வைத்துப் பயன்படுத்துவோருக்கு இந்தப் பாதிப்புகள் அதிகம் என்று தெரிய வந்துள்ளது.

எனவே பால் பாக்கெட், பால் புட்டியில் தொடங்கி பிளாஸ்டிக் கப்கள், பைகள், பிளாஸ்டிக் பேப்பர்கள், கவர்கள், பாட்டில்கள், குடங்கள், தட்டுகள், பொம்மைகள், சமையல் எண்ணெய் பாட்டில்கள், விளையாட்டுப் பொருட்கள், சோப்பு டப்பாக்கள், சமையலறையில் உணவுப் பொருட்கள் சேர்த்துவைக்கப்படும் டப்பாக்கள் வரை எல்லா பிளாஸ்டிக் பொருட்களையும் தவிருங்கள்.

முடிந்தவரை கண்ணாடி, பீங்கான், சில்வர், மண் பாத்திரங்களைப் பயன்படுத்துங்கள். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அனைத்து உணவுகளையும் தவிர்க்கப் பாருங்கள். பொருட்களை எடுத்துச் செல்ல பிளாஸ்டிக் கேரி பேக்குகளுக்குப் பதிலாக துணிப் பைகளையோ, நார்க் கூடைகளையோ பயன்படுத்துங்கள். இன்று நாம் அனுபவிக்கும் வசதிகளைவிட நாளைய ஆரோக்கியம் நமக்கு முக்கியம்!

சமையல் புகையாலும் புற்றுநோய் வரும்நான் பிறந்து வளர்ந்த கிராமத்தின் நினைவுகளைப் பின்னோக்கி பார்க்கும்போதெல்லாம் போத்திராஜ் என் மனக்கண்ணுக்கு முன்னால் வந்து நிற்பார். எங்கள் பள்ளிக்கு அருகில் அவர் பலகாரக் கடை வைத்திருந்தார். மாணவர்கள் விரும்பிச் சாப்பிடும் குழிப்பணியாரம், அதிரசம், அல்வா, ரவா லட்டு, தேன் மிட்டாய், கடலை மிட்டாய், சாக்கோ மிட்டாய், கல்கோனா என்று நம் பாரம்பரிய இனிப்புகளைக் குறைந்த விலையில் விற்று நிறைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்திருந்த அவரது வியாபார உத்தி எங்கள் கிராமத்துக்கே பிரசித்தம்.
 
வீட்டிற்கு விருந்தாளிகள் திடீரென வந்துவிட்டால் போத்திராஜ் கடையில் பலகாரம் வாங்கி வர என்னை அனுப்புவார்கள். நான்கு பேர் நுழைந்தால் நகர இடம் இல்லாத மிகச் சிறிய அறையில், மண் மேடை விறகடுப்பில், நின்றுகொண்டு அவர் பலகாரம் சுடுவார். ஜன்னல் இல்லாத அந்த அறையில், அரை பனியன் போட்ட உடலில் புழுக்கத்தால் பூக்கும் வியர்வையைத் துடைக்க, சிவப்பு நிறத்தில் ஒரு ‘சீசன்’ துண்டைத் தோளில் போட்டிருப்பார். பல நேரங்களில் அவர் அடுப்பு ஊதும் இரும்பு குழலால் ஊதி ஊதி புகையோடு போராடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது என்
மனதுக்குக் கஷ்டமாகவும் இருக்கும்.

‘இப்படி புகையோடு போராடுவது உங்களுக்கு சிரமமாக இல்லையா?’ என்று கேட்பேன். ‘இந்தப் புழுக்கமும் புகையும்தான் தம்பி என் குடும்பத்தின் வயிற்றை நிரப்புது’ என்பார். ஆனால், அந்தப் புகையே அவருக்குப் பகையாகப் போகிறது என்கிற விஷயம் என் சின்ன வயது மூளைக்கு அப்போது எட்டவில்லை.

நான் மதுரை மருத்துவக் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்தபோது ஒருமுறை என்னைப் பார்க்க விடுதிக்கு வந்திருந்தார் போத்திராஜ். கடுமையான இருமல், உடல் இளைக்கிறது, பசி இல்லை, சாப்பிட முடியவில்லை என்று சொன்னார். எங்கள் கல்லூரியோடு இணைந்திருந்த ராஜாஜி மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றேன். பல பரிசோதனைகளுக்குப் பிறகு அவருக்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் என்பதை உறுதி செய்தார் என் பேராசிரியர்.

அவருக்கு எந்தவொரு கெட்ட பழக்கமும் கிடையாது. ‘தானுண்டு... தன் கடை உண்டு’ என்று எந்த நேரமும் உழைத்துக்கொண்டிருப்பவர். அவருக்கு எப்படி இந்த நோய் வந்தது?’ என்று நான் கேட்க, ‘விறகடுப்பு சுவாசம்தான் அவருக்கு வினையாகிப் போனது’ என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. மற்றவர்களைப்போல் நானும் மாசுபட்ட காற்றால் காசநோய், ஆஸ்துமா, சளி உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகள் வரும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்; அன்றுதான் புற்றுநோயும் வரும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

இதுபோல் வறுமை, அறியாமை காரணமாக கிராமங்களில் நிலைமை இப்படி இருக்கிறது என்றால், கெட்டுப்போன சுற்றுச்சூழல் காரணமாக நகர்ப்புறக் காற்றும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, அங்கு வசிப்பவர்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட பேராபத்துகளைக் கொண்டு வருவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக திரவ எரிபொருள் வாகனங்கள் தரும் புகை முதன்மையானதொரு நோய்க்காரணி.

பெருகிவரும் வாகன நெரிசலில் ஒவ்வொரு நாளும் வாகனங்கள் வெளிவிடும் கார்பன்-டை-ஆக்ஸைடு, கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு, சல்பர்-டை-ஆக்ஸைடு போன்றவை வளிமண்டலத்தை ஆக்கிரமித்து, மோசமான புகைமூட்டத்தை உண்டாக்கி, மக்கள் சுவாசிப்பதே சிரமம் எனும் கொடிய நிலைமைக்குத் தள்ளப்படுவதை இப்போதெல்லாம் அடிக்கடி காண்கிறோம்.

கலவரப்படுத்தும் காற்று மாசுசமீபத்தில் புது தில்லியில் ஏற்பட்ட மோசமான காற்று மாசு காரணமாக பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டதை இங்கு நினைவு கூறலாம். அங்கு பள்ளிகள் மூடப்பட்டதும், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டுமென கேட்டுகொள்ளப்பட்டதும், மூச்சுத் திணறல் காரணமாக பல நோயாளிகள் மருத்துவமனைகளை நாடியதும் வரலாறு. இப்படி ‘விஷ வாயுக்கூடமாக’ இருப்பது புது தில்லி மட்டுமல்ல, சென்னை, பெங்களூரு போன்ற இந்திய பெருநகரங்கள் பலவும்தான்.

 பெட்ரோல்/டீசலில் இயங்கும் வாகனப் புகையோடு, ரசாயனத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் கக்கும் காரீயம், கந்தகம், காட்மியம், குரோமியம், நிக்கல் போன்றவை அடங்கிய நச்சுப் புகைகள், வாகனத் தயாரிப்பு, இரும்பு, பெயின்ட், ரப்பர், உலோகம், வெல்டிங் மற்றும் கண்ணாடித் தொழிற்துறைகள் கிளப்பும் ரசாயனப் புகைகள், நகர்ப்புற வளர்ச்சிக்கு உரம் போடும் கட்டுமானத் தொழில் வெளியேற்றும் தூசுகள், செங்கல் சூளைகளில் வெளியாகும் செந்தீ புகைகள்.

இப்படி எல்லாமே சேர்ந்து நகர்ப்புறக் காற்று மாசுக்குக் காரணமாகின்றன. இங்கே குறிப்பாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், கலப்பட எரிபொருளில் இயங்கும் வாகனங்கள், பராமரிப்பு குறைந்த வாகனங்கள் மற்றும் டீசல் வாகனங்கள் வெளிவிடும் புகையில் சுமார் 20% நைட்ரஜன்-டை-ஆக்ஸைடு மற்றும் பென்சீன் இருக்கிறது. இவை இரண்டும் மோசமான புற்றுநோய்க் காரணிகள்!
இந்தியாவின் பல பகுதிகளில் காற்று மாசுபட, அறுவடைக்குப் பின் காய்ந்த பயிர்களை எரிப்பது முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

அறுவடைக் காலத்தில் நிலத்தில் விட்டு வைக்கப்படும் காய்ந்த பயிர்களை விவசாயிகள் நிலத்தில் எரிக்கின்றனர்; தானியங்களை எடுத்த பிறகு சாவி பயிர்களைச் சாலையோரங்களில் எரிக்கின்றனர்.

தங்கள் நிலத்தை அடுத்தகட்ட விளைச்சலுக்குத் தயார் செய்ய இதுதான் அவர்களுக்கு எளிய வழி. இதன் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் காற்று மாசு கடுமையாகி வருகிறது. இன்னொன்று, பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயப் பயிர்களின் மீது தெளிக்கும்போது அவை காற்றிலும் கலக்கும். அந்த மருந்துகள் அளவுக்கு அதிகமானால் காற்று மாசுபடும்.

இப்படி பல வழிகளில் காற்று மாசுபடுவதால் நாட்டில் ஆஸ்துமா, நிமோனியா, நாள்பட்ட சுவாசத்தடை நோய்(COPD) உள்ளிட்ட நுரையீரல் நோய்கள், புற்றுநோய்கள், நீரிழிவு, இதய நோய்கள், கல்லீரல் நோய்கள், குறைப்பிரசவம், பக்கவாதம் ஏற்படும் சதவீதம் அதிகரித்துள்ளது.

அடுத்து மாசுபட்ட காற்றில் இருக்கும் நேரடி புற்றுக்காரணிகளில் ஆஸ்பெஸ்டாஸும், சிலிக்கானும் முக்கியமானவை. மேற்கத்திய நாடுகள் பலவற்றில் ஆஸ்பெஸ்டாஸ் பயன்பாட்டுக்குத் தடை உள்ளது. ஆனால், இந்தியாவில் அது இல்லை.

ஆஸ்பெஸ்டாஸ் போட்ட வீடுகளையும் கொட்டகைகளையும் சின்னஞ்சிறிய தொழிற்கூடங்களையும் இங்கே அதிகம் பார்க்க முடியும். இங்கு வசிப்போருக்கும் பணிபுரிவோருக்கும் புற்றுநோய் என்னும் பூதம் தாக்கக் காத்திருக்கிறது. சிமென்ட் தயாரிப்புக்கு மூலப்பொருளாக சிலிக்கான் இருக்கிறது. அதனால் சிமென்ட் தொழிற்சாலைப் பணியாளர்களுக்குப் புற்றுநோய் பாதிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்தியாவின் வட மாநிலங்களில் இரும்பு, நிலக்கரி, அலுமினியம், தாமிரம் போன்றவற்றின் தயாரிப்புக்குச் சுரங்கத் தொழிற்சாலைகள் அதிகம். அங்கு வேலை பார்க்கும் ஏழைத் தொழிலாளிகளுக்குப் புற்றுநோய் ஆபத்தும் அதிகம்.

காற்றின் தரம் என்பது...

காற்றில் மிதக்கும் துகள்களைக் கொண்டே(Particulate matter) அந்தக் காற்றின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு கன மீட்டருக்கு 10 மைக்ரோ கிராம் துகள்கள் என்பது உலக சுகாதார நிறுவனம் வரையறுத்துள்ள சராசரி அளவு. என்றாலும், அதிகபட்சமாக இது ஒரு கன மீட்டருக்கு 40 மைக்ரோகிராம் வரை இருக்கலாம் என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

ஆனால், இந்திய அரசு அறிவித்துள்ள ‘தேசிய காற்றுத் தரக் குறியீட்டு’(AQI) எண்படி இந்தியாவில் இதைவிட 10 மடங்கு அதிகமாகவே மாசுத் துகள்கள் காணப்படுவதாகத் தெரிகிறது. இவற்றில் புற்றுநோயை ஊக்கப்படுத்தும் காரணிகள் அதிகம் என்பதை இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

முகத்திரை பாதுகாப்பு தருமா?

அடுத்து மாசடைந்த காற்றைச் சுவாசிப்பதைத் தவிர்க்க முகத்திரை அணிந்துகொள்ளும் வழிமுறை நம்மிடம் உள்ளது. காற்றில் கலந்து வரும் ஒவ்வாமைக் காரணிகளை வேண்டுமானால் முகத்திரை தடுக்கலாம்; அது புற்றுநோய்க் காரணிக்கு முழுமையான பாதுகாப்பு தரும் என்று சொல்ல முடியாது என்கிறது ஓர் ஆய்வு.

எடுத்துக்காட்டாக, பெங்களூருவில் 197 ஏக்கர் பரப்பளவு கொண்ட கப்பன் பார்க்கில் நடைப்பயிற்சி, மெல்லோட்டம் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வருபவர்களில் பெரும்பாலானோர் முகத்திரை அணிந்து கொண்டுதான் வருகின்றனர். தற்போது சென்னை கடற்கரைச் சாலையிலும் இந்தக் காட்சிகளைக் காண முடிகிறது. மற்ற பெருநகரங்களிலும் இதே நிலைமைதான்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் முகத்திரை அணிந்துகொள்வதன் மூலம் காற்று மாசுக்கள் உடலுக்குள் புகுவதை முழுவதுமாகத் தடுத்துவிட முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. எனவே வீட்டுக்குள் உண்டாகும் காற்று மாசினைக் கட்டுப்படுத்த விறகடுப்புக்குப் பதிலாக நாம் அனைவரும் காஸ் அடுப்புக்கு மாற வேண்டியது முக்கியம்.

அடுத்து வெளிக்காற்று மாசுபடுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கும் வாகன எண்ணிக்கையைக் குறைப்பது, டீசல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது, மின்சார/பேட்டரி வாகனங்களை அதிகப்படுத்துவது, சாலையோரங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பதை ஒழிப்பது, கட்டுமானப் பணிகள் வழியாக வரும் மாசுக்களைத் தவிர்ப்பது, மரங்களை நடுவது, வனங்களைக் காப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து புதிய சட்டதிட்டங்களை வகுத்துத் துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் அவற்றைச் செயல்படுத்தினால் மட்டுமே நாட்டில் கோடிக்கணக்கான பேரின் ஆரோக்கியத்தைக் காக்க முடியும்; புற்றுநோய் இல்லாத புதிய உலகம் படைக்க முடியும்.

(படைப்போம்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • siva5

  1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரம்மாண்ட மணற்கல் சிவலிங்கம் வியட்நாம் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிப்பு!

 • death5

  கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில்: ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான சடலங்களை கல்லறையில் புதைக்கும் மக்கள்!!!

 • coronaa5

  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதால் கிராமபுறங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: புகைப்படங்கள்

 • locust4

  ராஜஸ்தான் உட்பட வடமாநிலங்களில் வெட்டுக்கிளிகள் தொடர் படையெடுப்பு!: பயிர்களை நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனை!!!

 • ingland4

  இங்கிலாந்தில் 5000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினத்தின் கொம்பு கண்டுபிடிப்பு: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்