SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆரோக்கிய வாழ்விற்கு முட்டை

2020-01-02@ 13:15:14

நன்றி குங்குமம் தோழி

இன்றைய அவசர உலகில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல், அலுவலகம் செல்லும் பெரியவர்கள் வரை, எல்லோருமே காலைச் சிற்றுண்டியை தவிர்ப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வேலையில் செயல்திறன் குறையும்; மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாது என காலைச் சிற்றுண்டியின் முக்கியத்துவத்தை மருத்துவர்கள் எடுத்துக் கூறியும், அரைகுறையாகத்தான் காலையில் சாப்பிடுகிறார்கள். இதற்குத் தீர்வாக, ஒரு முழுமையான உணவு என்று பார்த்தால் அது முட்டைதான். உலகளவில் பல நூறு ஆண்டுகளாக மனிதர்கள் சாப்பிடும் சத்தான உணவுகளில் ஒன்று முட்டை.நிறைய பேருக்குப் பிடித்த உணவும்கூட.

முட்டையில்,  உடலுக்குத் தேவையான அனைத்து தாதுப்பொருட்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது என்பதோடு, உயர்ந்த செரிமானத்தன்மையும், சாதாரண மக்களுக்கும் எளிதில் கிடைக்கக்கூடியது என்ற வகையில் ஒரு ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. மேலும் முட்டையின் புரதத்தில் இருக்கும் ஆன்டிஹைப்பர்டென்சிவ் (Antihypertensive), ஆன்டிமைக்ரோபியல் (Antimicrobial), ஆன்டிஆக்ஸிடென்ட் (Antioxidant), ஆன்டிகார்சினோஜெனிக் (Anticarcinogenic), இன்யூனோமோடூலேட்டிங் (Immunomodulating) செயல்பாடுகள் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் தன்மை போன்ற ஆரோக்கிய விளைவுகளைக் கொடுப்பவை.

முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன?

முட்டையின் மஞ்சள் மற்றும் வெள்ளைப்பகுதி இரண்டுமே சரிசமமான புரதச்சத்தைக் கொடுக்கின்றன. அதேநேரத்தில், முட்டையின் மஞ்சள் கருவில் லிப்பிடுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஏராளமாக குவிந்துள்ளன. முட்டை அதிகமான நீர்ச்சத்து கொண்டிருப்பதும், நார்ச்சத்துக்கள் இல்லாமல் இருப்பதும் முக்கியமானதாகும்.

முட்டையின் ஊட்டச்சத்து அட்டவணைபெரிய ஊட்டச்சத்துக்கள் (Mactro Nutritients)

புரதம் : முட்டையின் வெள்ளை, மஞ்சள் இரண்டு பகுதிகளிலுமே புரதம் நிறைந்துள்ளது. வெள்ளைக்கருவில் 88 சதவீதம் நீர் நிறைந்து கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து கட்டமைப்புள்ள புரதம் (Ovomucins), கிளைகோ புரோட்டீன்கள் மற்றும் பாக்டீரியா தடுப்பு புரதங்கள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் அபோலிபோபுரோட்டீன் பி (Apolipoprotein B), அபோவிடெல்லெனின் -1(Apovitellenin-1), விட்டெல்லோஜெனின்கள் (Vitellogenins), சீரம் அல்புமின், இம்யூனோகுளோபுலின்ஸ் (immunoglobulins), ஓவல்புமின் (Ovalbumin) மற்றும் ஓவோட்ரான்ஸ்ஃபெரின் (Ovotransferrin) போன்ற ஏராளமான புரதங்களும் உள்ளன. முட்டையின் வெள்ளைக்கருவில் இருக்கும் ஓவல்புமின் (Ovalabumin) புரதம்தான் முட்டையிலிருந்து கோழியாக வளரும் கரு வளர்ச்சிக்கு அத்தியாவசிய அமினோ அமிலங்களை வழங்குகிறது. இதுவே, இது மனிதனுக்குத் தேவையான  அமினோ அமிலங்கள் ஊட்டச்சத்துக்கு  ஆதாரமாகவும் இருக்கிறது.

லிபிட்ஸ் (Lipids) :

மஞ்சள் கருவில் உள்ள லிபோபுரோட்டீன்களின் (Lipoproteins) ஒரு பகுதியே லிப்பிட்கள் ஆகும். குறிப்பாக விலங்குகளில் இருந்து பெறப்பட்ட உணவு மூலங்களுடன் ஒப்பிடும் போது மஞ்சள் கரு  நிறைவுற்ற மற்றும் நிறைவுறாத கொழுப்பு அமிலங்களின் (MUFA and PUFA) வளமான ஆதாரமாக இருக்கிறது. லினோலிக் அமிலம் (ஒமேகா - 6 ) போன்ற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் மூலமாகவும் மஞ்சள் கரு இருக்கிறது. இந்த தரவுகள்,  மஞ்சள் கரு கொழுப்பு நிறைந்தது;

அது இதயநோயாளிகளுக்கு எதிரானது என்பது தவறான கருத்து என்பதை நிரூபிக்கின்றன. இருந்தாலும் பிளாஸ்மா லிப்பிட் சோதனையில், ஹைப்பர் கொழுப்பு உள்ளவர்கள் முட்டை அதிகமாக எடுத்துக் கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், இவர்களுக்கு ஹைப்போ- கொழுப்பு உள்ளவர்களைக் காட்டிலும் முட்டை அதிகம் எடுத்துக் கொள்வதால் அதிகம் பாதிப்பு ஏற்படுகிறது.

கார்போஹைட்ரேட்:

முட்டையின் மஞ்சள், வெள்ளை இரண்டு கருக்களிலுமே கார்போஹைட்ரேட் அளவு மிக குறைவாகவே இருக்கிறது.

நுண்ணூட்டச்சத்துக்கள் (Micro Nutritrients)வைட்டமின்கள் மற்றும் கோலைன் (Vitamins and Choline) :

‘C’வைட்டமின் தவிர மற்ற அனைத்து வைட்டமின்களும் முட்டையில் இருக்கிறது, முட்டையில் வைட்டமின் ‘C’ இல்லாவிட்டாலும் கூட, குளுக்கோஸிலிருந்து டி நோவா சின்தசிஸ் (De Novo Synthesis)  மூலம் பறவைகள் தங்கள் சொந்த வைட்டமின் C தேவைகளை பூர்த்தி செய்யும் திறன் கொண்டவை. முட்டையின் மஞ்சள் கரு வைட்டமின் A, D, E, K, B1, B2, B5, B6, B9 and மற்றும் B12 ஆகியவற்றின் ஆதாரமாகும். முட்டையின் வெள்ளை கருவில் குறைந்த அளவு B வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

முட்டையில் இருக்கும் லுடீன் மற்றும் ஜீயாக்சாண்டின் (Lutein and Zeaxanthin) போன்ற கரோட்டினாய்டுகள் (Carotenoids) மனித உடலில் பல பாதுகாப்பு செயல்பாடுகளை கொடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது எலக்ட்ரானிக் கேஜட்டு களிலிருந்து வெளிப்படும் ப்ளூரேஸ்களினால் கண்ணில் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாப்பதோடு, இவை பார்வைக் கூர்மையை மேம்படுத்துகின்றன. மேலும், கண்பார்வைக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எதிர்வினை ஆக்ஸிஜன் இனங்களை அழிக்கின்றன.

இந்த கரோட்டினாய்டுகள் வயது தொடர்பாக வரக்கூடிய கண்தசைச்சிதைவு, கண்புரைநோய், இதய நோய்கள், அல்சைமர் மற்றும் பல்வேறுபட்ட புற்றுநோய்கள் ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றன். இவற்றோடு கூட, முட்டையில், குறிப்பாக மஞ்சள் கருவில் குவிந்துள்ள  கோலின் (Choline) ஒரு மனிதனின் அனைத்து வயது படிநிலைகளிலும், வளர்ச்சி மற்றும் செல்கள் பராமரிப்பு ஆகிய இரண்டிலும் மாறுபட்ட செல்பாடுகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக மனித உடலில், நரம்பியல் கடத்தல், மூளை வளர்ச்சி, எலும்பு கட்டமைப்பு ஆகியவற்றில் கோலின் ஒரு முக்கியமான பங்களிப்பை கொண்டுள்ளது.

தாதுக்கூறுகள்:

முட்டையில் பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தாதுக்கூறுகளும் உள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் துத்தநாகமும், செலினியமும் அதிக அளவில் உள்ளன. துத்தநாகம், செலினியம் மற்றும் மெக்னீசிய குறைபாடுள்ளவர்களின், மனச்சோர்வு, உடல் சோர்வு மற்றும் நோயியல் நோய்களுக்கு (Pathalogical diseases) காரணமாகிவிடும்.

ஊட்டச்சத்து எதிர்ப்பு காரணிகள்

முட்டையை சமைக்கும் போது வெளிப்படும் வெப்பமானது, முட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய புரதத்தை பெறவிடாமல் தடுக்கிறது. இதனால், முட்டையில் இருக்கும் பெப்சின் (Pepsin), டிரிப்சின் (Trypsin) மற்றும் சைமோட்ரிப்சின்   (Chymotrypsin) போன்ற புரோட்டீன் தடுப்பான்கள் உடலின் செரிமான என்சைம்களை தடுப்பதன் மூலம், உடல் புரதங்களை உட்கிரகித்துக் கொள்வதை தாமதப்படுத்துகின்றன.

நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் (Antimicrobial Properties)

முட்டையின் வெள்ளை மற்றும் வைட்டலின் எனப்படும் சவ்வுகளில் நுண்ணுயிர் எதிர்ப்பு கூறுகள் குவிந்துள்ளன. மற்ற எல்லாவற்றையும் விட, முட்டையிலிருந்து கிடைக்கும் புரதத்தில், பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, பூஞ்சை காளான்களுக்கு எதிராக செயல்படக்கூடிய லைசோசைம் (Lysozyme), ஓவோமுசின் (Ovomucin) , ஓவோட்ரான்ஸ்ஃபெரின்(Ovotrnsferrin) போன்ற நுண்ணுயிர் எதிர்ப்புக் கூறுகளை கொண்டிருக்கின்றன.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (Antioxidant Properties)

ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் உடலிலுள்ள செல்களை சேதப்படுத்தி புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்களுக்கு வழிவகுக்கும். முட்டையின் வெள்ளைக்கருவில் உள்ள புரதங்கள் கரோட்டினாய்டுகள் (Carotenoids), தாதுப்பொருட்கள் (Minerals), வைட்டமின்கள் மற்றும்  மஞ்சள் கருவில் உள்ள புரதங்கள் போன்றவை மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடென்டுகளாக செயல்பட்டு புற்றுநோயிலிருந்து நம்மை பாதுகாப்பவை.

புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் (Anto-Carcinogenic properties)

முட்டையின் வெள்ளைக் கருவில் இருக்கும் லைசோசைமின் (Lysozyme) புற்றுநோய்க்கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கக்கூடியது. இதில் இருக்கும் ஓவோமுசின் (Ovomucin) மற்றும் ஓவோட்ரான்ஃபெரின் (Ovotransferrin) மூலக்கூறுகள், நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க்கட்டிகளுக்கு எதிராக செயல்படக்கூடியவை.  

நோயெதிர்ப்பு பண்புகள்

முட்டையில் உள்ள பல்வேறு புரதங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலம் மிக்கதாக மாற்றுகின்றன.

உயர் ரத்த அழுத்த எதிர்ப்பு பண்புகள்  
 
முட்டையிலிருந்து கிடைக்கக்கூடிய ஓவோட்ரான்ஃபெரின் போன்ற  சிலவகை பெப்டைடுகள் (Peptides) உயர் ரத்த அழுத்த எதிர்ப்பிகளாக செயல்பட்டு இதயநோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்கின்றன.

ஒருநாளைக்கு எத்தனை முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம்?  
 
தினசரி முட்டை எடுத்துக் கொள்வது என்பது அவரவரின் தனிப்பட்ட தன்மையைப் பொறுத்தது. ஒவ்வொருவரும் தினமும் முட்டையை சாப்பிடலாமா? வாரத்திற்கு எத்தனை முட்டை சாப்பிடுவது? என்பது, அவரவர்களின் உடல்நிலை, செய்யும் வேலையின் தன்மை, முன்பே இருக்கும் நோய்கள், ஒருவருக்கு இருக்கும் லிப்பிட் ப்ரொஃபைல், கொலஸ்ட்ரால், எல்.டி.எல் கொழுப்பு ஆகியவற்றைப் பொறுத்து வேறுபடும்.

யாரெல்லாம் முட்டை சாப்பிடக்கூடாது? எப்படி சாப்பிடக்கூடாது?

சிலருக்கு முட்டையின் வெள்ளைக்கரு ஒத்துக் கொள்ளாமல் போகலாம். அதனால் குழந்தையின் 10 மாதங்களுக்குப் பிறகு, முட்டையின் வெள்ளைக்கருவைக் கொடுக்க ஆரம்பிக்கலாம். முட்டையை அதிக நேரம் வேகவைப்பது, வேகவைத்து எடுத்த உடனே சாப்பிடுவது போன்றவற்றால் கடுமையான இரைப்பை, குடல் தொற்றுநோய்களைத் தவிர்க்கலாம். கடையில் விற்கப்படும் முட்டை பக்கோடா, முட்டை பப்ஸ் போன்றவை எவ்வளவு நேரத்திற்கு முன் தயாரிக்கப்பட்டவை என்பது நமக்குத் தெரியாது.

முட்டையை சமைத்தவுடன் எவ்வளவு சீக்கிரமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவு நல்லது. சமைத்தபின் வெகுநேரம் வைத்திருக்கும் முட்டையிலும், பச்சை முட்டையிலும், டைபாய்டு நோய்க்குக் காரணமான டைஃபி சல்மோனெல்லா எனப்படும் ஏஜன்டுகள் இருக்கக்கூடும். அதனால் பச்சை முட்டையை உடைத்து அப்படியே வாயில் ஊற்றிக் கொள்வதும் தவறான செயல். மைதா, சீஸ், வெண்ணெய் போன்றவை உபயோகித்து தயாரிக்கப்படும் எக் சாண்ட்விச்கள் ஆரோக்கியமற்றவை.

ஒரு முட்டையின் முழு மருத்துவ பயன்களையும் பெறுவது, அதை சமைக்கும் முறை, சமைக்க எடுத்துக் கொள்ளும் நேரம், வெப்பத்தின் அளவு, சாப்பிடும் முறை எல்லாவற்றிலும் இருக்கிறது. முட்டையை கீறல் விழாமல், புதியதாக பார்த்து வாங்க வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டும். குறைந்த தணலில் மிருதுவாக வேகவைத்த முட்டையை சாப்பிடுவதே நல்லது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்