SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஃபிட்னஸ் உலகைக் கலக்கும் புதிய உடற்பயிற்சி!

2019-12-26@ 13:07:03

நன்றி குங்குமம் டாக்டர்

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது இன்றைய இளம் தலைமுறையினரின் கனவாக இருந்தாலும், அதற்காக  ஜிம்மில் இருக்கும் அத்தனை உபகரணங்களையும் வைத்து வியர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்வதை எல்லோரும் விரும்புவதில்லை.  மனதிற்கு அமைதியும் வேண்டும்; உடலுக்கு உறுதியும் வேண்டும். இதைத் தாண்டி அந்தப் பயிற்சிகள் வித்தியாசமான  நடனம், இசை, யோகா மற்றும் தற்காப்பு கலைகளின் கலவையாக, விறுவிறுப்பாக இருப்பதை விரும்புகிறவர்களின் சதவிகிதம் அதிகரித்து வருகிறது. இந்த மாடர்ன் சிந்தனையில் உதித்த புதிய முயற்சிதான் Zenga என்கிற உடற்பயிற்சி.  

மேற்கத்திய நாடுகளில் பிரபலமான உடற்பயிற்சி முறையான Zenga, வித்தியாசமான உடல் இயக்கங்களையும் நெகிழ்வுப் பயிற்சிகளையும் கொண்டுள்ளது. எதிர்ப்பு விசையைப் பயன்படுத்தி செய்வதால் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும் இந்தப் பயிற்சி இப்போது மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற பெருநகரவாசிகளிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தசைகளின் சகிப்புத்தன்மை, வலிமை, இயக்கம் மற்றும் ஸ்திரத்தன்மை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் உடற்பயிற்சிக்கு அப்பால் மேம்பட்ட விழிப்புணர்வை உடலினுள் வளர்க்கிறது. யோகா, தற்காப்பு கலைகளைப் போன்று சுவாச நுட்பங்களும் பில்லட்ஸ், ஸ்குவாட்ஸ் போன்ற உடற்பயிற்சிகளின் இயக்கங்களும் மற்றும் நடன அசைவுகள் என எல்லாம் சேர்ந்த கலவையாக இருப்பதால், எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும் உடற்பயிற்சியை விரும்பாதவர்களைக்கூட Zenga ஈர்த்துவிடும். மொத்தத்தில் இந்தப்பயிற்சியை மனம், உடல் இரண்டிற்குமான சிறந்த சிகிச்சையாக உடற்பயிற்சி வல்லுனர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

உடலின் இயற்கையான ரிதங்களோடு இயைந்த ஒரு கவனமான பயிற்சியை Zenga பயிற்சிகள் வழங்குகிறது. தசைகளில், ஓய்வு மற்றும் தளர்ச்சி இரண்டும் ஒரே நேரத்தில் பெறுவதன் மூலம் உடலில் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. உடலில் உள்ள நரம்புத்திசுக்களின் வலைப்பின்னலை தூண்டிவிடுவதன் மூலம், திசுக்களில் ஏற்பட்டுள்ள அழுத்தங்கள் குறைகின்றன.

இந்த Zenga பயிற்சிகளை பெரிய பந்துகளின் மீதோ, ரிஃபார்மர்கள் அல்லது குஷன்கள் மீதும் செய்யலாம்; சம தரையிலும் செய்யலாம். ஒரு மணி நேரம் செய்தாலே அதிகபட்ச கலோரிகளை எரித்துவிட முடியும். முழு உடலுக்குமான உறுதித்தன்மை, ஆரோக்கியமான சுவாசம் மற்றும் தசைகளின் சத்திவாய்ந்த இயக்கங்கள் என முழுமையான பலன் கிடைப்பதால், இந்த பயிற்சியை உற்சாகத்தோடு செய்யும் ஒருவரின் இளமையை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

Zenga பயிற்சிகள், மன அமைதி, உடல்வலிமை மற்றும் நெகிழ்திறன் மூன்றையும் ஒரே நேரத்தில் மேம்படுத்துவதால் மனம், உடல் இரண்டும் சமநிலை பெறுகிறது. அனைத்து அம்சங்களையும் கொண்ட Zenga  பயிற்சிகள் இளைஞர்களை கவர்வது நிச்சயம்.

தொகுப்பு: என்.ஹரிஹரன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • award20

  பஞ்சாபைச் சேர்ந்த சன்னி இந்துஸ்தானி இனிமையான குரல் ஆடிஷனில் இந்தியன் ஐடல் 11ஐ வென்றார்!!

 • 24-02-2020

  24-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • 23-02-2020

  23-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • theepam2020

  மகாசிவராத்திரியை முன்னிட்டு தி.மலை கோவிலில் ஸ்ரீ லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேகம்

 • 22-02-2020

  22-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்