SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

என் சிகிச்சை... என் உரிமை...

2019-12-23@ 17:04:36

நன்றி குங்குமம் டாக்டர்

மருத்துவம் என்பது உன்னதமான ஒரு சேவை. ஆனால், இந்த சூழ்நிலை மாறி சில மருத்துவமனைகளில் வியாபாரமாகிப் போனதால் ஏற்பட்டிருக்கும் பின்விளைவுகள் கவலைகொள்ளத் தக்கவையாக இருக்கின்றன. நோயாளிகளை அச்சுறுத்துவதும், அவர்களிடம் தேவையற்ற பரிசோதனைகளை செய்யச் சொல்வதும், கட்டணம் என்ற பெயரில் கூடுதல் பணம் வசூல் செய்வதாகவும் அவ்வப்போது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. அதை உறுதி செய்யும் விதமாக சமீபத்தில் நம் அலுவலக பெண் பத்திரிகையாளர் ஒருவருக்கு நடந்த நிகழ்வு இது.

டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த பெருமழை காரணமாக சென்னையின் சாலை குண்டும், குழியுமாக மாறியிருந்தது. இரு சக்கர வாகனத்தில் சென்ற நம் தோழி, அந்த குழியைத் தவிர்ப்பதற்காக சற்றே பக்கவாட்டில் வண்டியைத் திருப்ப பின்னால் வந்த மாநகர பேருந்து தோழியின் வண்டியில் இடித்து விட கீழே விழுந்துவிட்டார். பலத்த அடி எதுவும் இல்லை. ஒருவாறு சமாளித்து வீட்டிற்கு வந்துவிட்டார். இரவில் லேசாக இடுப்பில் வலி ஆரம்பித்ததால் மறுநாள் காலை அவர் வசித்து வரும் மயிலாப்பூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த பொது மருத்துவர் எப்படி அடிபட்டது என்று கேட்டு தெரிந்துகொண்டு, ‘எக்ஸ்ரே எடுக்க வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

பின்பு எக்ஸ்ரே-வை பார்த்துவிட்டு ‘உங்களுக்கு முதுகுத் தண்டுவடத்தில் சின்னதாக பிளவு ஏற்பட்டிருக்கிறது. எலும்பு முறிவு நிபுணர்தான் பார்க்க வேண்டும். சிறிது நேரம் வெயிட் பண்ணுங்கள்’ என்று சொல்லியிருக்கிறார். சிறிது நேரத்திற்குப் பிறகு, ‘நீங்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக அட்மிட் ஆக வேண்டும் என்றும் உங்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்துவிடுவீர்கள் என்றும் கூறியிருக்கிறார்கள். உங்களுக்கு சிறுநீர் அடங்காமைத்தன்மை ஏற்பட்டுவிடும். உடனே அட்மிட் ஆகிவிடுங்கள்’ என்றெல்லாம் கூறி எப்படியாவது அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வைத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்துள்ளார்கள்.

தோழி கொஞ்சம் சமாளித்துக் கொண்டு ‘நான் வீட்டிற்குப் போய்விட்டு, மாலை வருகிறேன்’ சொல்லி அங்கிருந்து வந்துவிட்டார். மறுபடி அந்த மருத்துவமனைக்கு போகவே இல்லை. அடுத்ததாக வேறு ஒரு நண்பரின் உதவியோடு, மற்றொரு எலும்புநல மருத்துவரிடம் ஆலோசனைக்கு சென்றிருக்கிறார். அவர் தோழியின் எக்ஸ்ரேவைப் பார்த்துவிட்டு, இதில் எதுவும் தெளிவாகவே இல்லையே இதை வைத்து எப்படி உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு, ஒரு டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து வாருங்கள் என்று சொல்லியுள்ளார். இவரும் டிஜிட்டல் எக்ஸ்ரே எடுத்து அதை அந்த மருத்துவரிடம் காண்பித்துள்ளார்.

டிஜிட்டல் எக்ஸ்ரேவைப் பார்த்துவிட்டு அந்த மருத்துவர், ‘உங்களுக்கு முதுகுத் தண்டுவடத்தில் எல்லாம் எந்த முறிவும் ஏற்படவில்லை. தண்டுவடத்தில் இருக்கும் D4-ம், D5-ம் கம்ப்ரஸ் ஆகியிருக்கிறது. உங்களுக்கு உடனே வலி சரியாக வேண்டும் என்றால் இரண்டு வழி இருக்கிறது. ஒன்று 6 மாதத்திற்கு இடுப்பில் பெல்ட் போட்டுக் கொண்டு அசையாமல் படுத்திருக்க வேண்டும் அல்லது  ஊசி மூலமாக ஒரு ஜெல் போன்ற திரவத்தை அந்த இடத்தில் செலுத்துவோம். உடனே உங்கள் வலி சரியாகிவிடும். அதற்கு 1 லட்சம் வரை செலவாகும். உங்களது அலுவலகத்தில் ஏதாவது மெடிக்கல் இன்சூரன்ஸ் வைத்துள்ளீர்களா? எனக்கு தெரிந்த மருத்துவமனை இருக்கிறது, அங்கு இந்த சிகிச்சையை செய்தால் 1 லட்சத்த்துக்குள் முடித்துவிடலாம்.

மேற்கொண்டு 15 ஆயிரம் மட்டுமே செலவாகும். அங்கில்லாமல் வேறு மருத்துவமனைக்குப் போனால் அங்கு 2 லட்சம் வரைகூட செலவாகலாம். அதனால் எனக்குத் தெரிந்த மருத்துவமனையிலேயே செய்யலாம்’ என்று கூறியுள்ளார். இந்த டாக்டரின் பதிலிலும் தனக்கு சரியான விளக்கம் கிடைக்காததை உணர்ந்தவர், தனக்குத் தெரிந்த பிஸியோதெரபி மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு சென்றிருக்கிறார். அவர் தோழியைப் பரிசோதித்துவிட்டு ‘உங்களுக்கு எலும்பெல்லாம் முறியவில்லை. டிஸ்க் இரண்டும் கம்ப்ரஸ் ஆகியிருப்பது உண்மைதான். எதற்கும் வேறு ஒரு எலும்பு மருத்துவரின் ஆலோசனை பெற்று வாருங்கள். பிஸியோதெரபியில் சரி செய்துவிடலாம்’ என்று சொல்லியிருக்கிறார்.

உடனே வேறொரு எலும்பு மருத்துவரிடம் சென்று டிஜிட்டல் எக்ஸ்ரேவை காண்பித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். அந்த மருத்துவர் இவரது எக்ஸ்ரேவை பார்த்துவிட்டு, ‘உங்களுக்கு எதுவும் இல்லை. 2 வாரங்கள் ரெஸ்ட் எடுத்துவிட்டு பிஸியோ தெரபி பயிற்சிகள் சொல்லித் தருகிறேன். அதை செய்தாலே சரியாகிவிடும்’ என்று சொல்லியிருக்கிறார். அப்போதுதான் அவர் மனதில் இருந்த நம் தோழியின் அச்சம் ஓரளவு நீங்கியிருக்கிறது.
‘நீங்கள் இவ்வளவு எளிமையாக சொல்கிறீர்கள். ஆனால், நான் இதற்கு முன்பு ஆலோசனைக்குச் சென்ற மருத்துவர்கள் எலும்பு முறிந்திருக்கிறது.

அதற்கு ஊசி போட வேண்டும். ஒரு லட்சம் செலவாகும்’ என்று தன் பயத்தை சொல்லியிருக்கிறார். எதுவும் தேவையில்லை. உங்களுக்கு பயமாக இருந்தால், முதுகுக்கு சப்போர்ட்டாக இருக்க ஒரு பெல்ட் மட்டும் போட்டுக்கொண்டு 2 வாரம் ஓய்வெடுங்கள். அதன் பின் பிஸியோதெரபி பயிற்சிகள் செய்தால் போதும்’ என்று சொல்லியிருக்கிறார். இப்போது 2 வார ஓய்வுக்குப் பிறகு குணமாகி தன் பணிகளை தொடங்கிவிட்டார். இப்போது இந்த சம்பவத்தை வைத்து நம் முன்னே பல கேள்விகள் எழுகின்றன.

மருத்துவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக கருத்து சொல்வது ஏன்? ஏற்கெனவே பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வரும் நோயாளியிடம் பீதியைக் கிளப்பும் வகையில் பேசலாமா? ஊடகத்துறையில் இருக்கும், நான்கு பேரை தெரிந்து வைத்திருக்கும் பத்திரிகையாளருக்கே இந்த நிலைமை என்றால் அப்பாவி மக்களின் நிலை என்ன? ஒரு மருத்துவமனை சொல்வதையோ அல்லது மருத்துவர் சொல்வதையோ வேத வாக்காக எடுத்துக் கொள்ளாமல் இரண்டாவது ஆலோசனை(Second Opinion) கேட்க வேண்டும் என்று எத்தனை பொதுமக்களுக்குத் தெரியும்? பணம் பறிக்கும் இதுபோன்ற ஒரு சில தவறான மருத்துவர்களிடம் சாமன்யர்கள் சிக்கிக்கொண்டால் அவர்களின் கதி என்ன?

நம் மனதில் இருந்த கேள்விகளை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளரான டாக்டர் ரவீந்திரநாத்திடம் கேட்டோம்…

‘‘இந்த நிகழ்வில் இருக்கும் முக்கியமான விஷயம்... பாதிக்கப்பட்டவர் தன்னுடைய சிகிச்சையை தானே தேர்ந்தெடுத்திருக்கிறார். பல மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து ‘என் சிகிச்சை... என் உரிமை...’ என்று தெளிவோடு செயல்பட்டிருக்கிறார். செகண்ட் ஒப்பீனியன் கேட்க வேண்டியது அவசியம் என்ற விழிப்புணர்வையும் இந்த சம்பவத்தின் மூலம் பொதுமக்கள் கற்றுக் கொள்ளலாம்.

முதன்முதலில் பார்த்த மருத்துவமனையினர் அச்சமூட்டும்விதமாகப் பேசியதும் செயல்பட்டதும் முழுத் தவறு. ஆன்டிபயாட்டிக் மருந்து விஷயத்திலேயே, தற்போதுதான் அரசு ஒரு நெறிமுறையை (Protocol) வகுத்துள்ளது. அதாவது முதலில் எளிமையான ஆன்டிபயாட்டிக் மருந்தில் தொடங்கி, படிப்படியாக அதிகரித்து, கனமான அளவுகளில் கொடுக்க வேண்டும் என்று நெறிமுறைப்படுத்தியுள்ளது. இதுபோல் மருத்துவத்தின் ஒவ்வொரு துறையிலும், அரசு தேசிய அளவில் சிகிச்சையை நெறிமுறைப்படுத்த வேண்டும்.
 
அரசு தெளிவான நெறிமுறையை வரையறுக்காதபோது, ஒவ்வொரு மருத்துவரும் ஒவ்வொரு முறையை தேர்ந்தெடுப்பார்கள். தேசிய அளவில் அரசு அந்தந்த துறை சங்கங்களுடனும், நிபுணர்களுடனும் கலந்தாலோசித்து நெறிமுறையை வகுக்க வேண்டும். எடுத்துக்காட்டாக தொண்டை தொற்று பிரச்னைக்காக வரும் ஒரு நோயாளிக்கு, ஒவ்வொரு வகையான ஆன்டிபயாட்டிக்  மருந்துகளை கொடுப்பார்கள். அப்படி இல்லாமல் Culture. Density போன்றவற்றை ரத்தப்பரிசோதனையின் மூலம் தெரிந்துகொண்டு அதற்கேற்ற ஆன்டிபயாட்டிக் மருந்துகளை பரிந்துரைக்க வேண்டும் என்ற நெறிமுறையை அரசு வகுக்கும்போது அதிக அளவிலான(High dosage) ஆன்டிபயாடிக் மருந்துகள் கொடுப்பதை தடுக்கலாம்.

இதுபோலத்தான் ஒவ்வொரு நோய்க்கு கொடுக்கும் சிகிச்சையிலும் அந்தந்த துறைக்கு தகுந்தாற்போல நெறிமுறைகளை வகுத்தால் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கும். இது இல்லாததால்தான் இன்று மருத்துவம் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது. மருத்துவ ஊழியர்களின் அலட்சியப்போக்கும் அதிகரித்து வருகிறது. காசுக்காக எதையும் செய்யலாம் என்ற போக்கில் ஒரு சில மருத்துவமனைகள் செயல்படுகின்றன. மகப்பேறு மருத்துவம், இதய மருத்துவம் என ஒவ்வொரு துறைக்கும் தேசிய அளவிலான ஆய்வாளர்கள், நிபுணர்கள் குழுக்கள் இணைந்த சங்கம் இருக்கிறது. இவர்களோடு இணைந்து அரசு ஒவ்வொரு துறைக்கும் நெறிமுறைகளை வகுக்கலாம்.

வளர்ந்த மேலைநாடுகளில் மருத்துவத்துறைக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளும், நெறிமுறைகளும் இருக்கின்றன. அதை மீறி அந்நாட்டு மருத்துவர்கள்
சிகிச்சையைத் தொடர முடியாது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் மற்றும் வளராத நாடுகளில்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன.
இப்போதெல்லாம் படித்தவர்கள் இணையதளங்களில் தேடி, தன் நோயைப்பற்றி அதிகம் தெரிந்துகொண்டுதான் மருத்துவரிடமே ஆலோசனைக்கு வருகிறார்கள்.

படிப்பறிவில்லாத பாமர மக்கள்தான் ஏமாற்றப்படுகிறார்கள். பல மருத்துவமனைகளில் நோயாளிக்கு அவருக்கு ஏற்பட்டுள்ள நோயைப்பற்றி தெளிவாக விளக்குவது கூட இல்லை. அதிலும் கார்ப்பரேட் மருத்துவமனைகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர்களை எதுவுமே கேட்க முடியாது. வியாபார நோக்கில், அந்த டெஸ்ட் எடுக்க வேண்டும், இந்த டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று எளியவர்களிடம் காசை கறந்து விடுகிறார்கள்.
பலரும் தன் நோய் சரியானால் போதும் என்ற எண்ணத்தில் ஏமாறுகிறார்கள். தனியார் மருத்துவமனைகள், கார்ப்பரேட் மருத்துவமனைகளை  கட்டுப்படுத்த அரசு கண்டிப்பாக ஒரு நெறிமுறை விதிகளை கொண்டு வரத்தான் வேண்டும். அது நடக்காதபோது இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க
முடியாது’’ என்கிறார்.       

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

 • bogi13

  பழையன கழிதலும் புதியன புகுதலும்!: தமிழகத்தில் போகி பண்டிகையை உற்சாகத்துடன் வரவேற்ற மக்கள்..!!

 • 13-01-2021

  13-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்