SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குழந்தைகளின் கண்நலத்தை உறுதிப்படுத்துங்கள்!

2019-12-23@ 17:01:56

நன்றி குங்குமம் டாக்டர்

குழந்தைகளின் வளர்ச்சியில் 2 வயது முதல் 12 வயது வரை உள்ள காலம் மிக முக்கிய பருவம். இந்த காலகட்டத்தில் உருவாகும் பழக்கவழக்கங்கள், உண்ணும் உணவுகள் ஆயுள் முழுமைக்கும் ஆரோக்கியத்தில் கூட வருபவை. கண்களைப் பொறுத்த வரை கண்வலி, தலைவலி, கண் எரிச்சல், அரிப்பு இது போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் அதைத் தெளிவாகச் சொல்லத் தெரியாத பருவமும் கூட இது.  இவற்றை சரியான முறையில் கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம்.

சிறுவயதில் கண்களைச் சில குழந்தைகள் அடிக்கடி தேய்த்துக் கொண்டே இருப்பார்கள். கண்களில் சிவப்பு மற்றும் நீர் வடிதல் இவையும் இருக்கும். இதற்கு முக்கிய காரணம் அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை. டெடி பியர் போன்ற மென் பஞ்சு இழைகளாலான பொம்மைகள், தலையணை, மெத்தையில் இருந்து வரும் தூசி, நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளின் சிறிய ரோமங்கள் இவையே இத்தகைய ஒவ்வாமையை உருவாக்கக் கூடிய காரணிகள்.

இதுபோக ஜன்னல், மின்விசிறி, ஏசியில் ஒட்டியிருக்கும் தூசுகளும் ஒவ்வாமையை ஏற்படுத்துகின்றன. குடற்புழுக்கள், நகக்கண்களில் தேங்கியிருக்கும் அழுக்குகள், வீட்டைச் சுற்றி இருக்கும் பார்த்தீனியம் செடியின் மகரந்தத்தூள் இவையும் அலர்ஜியை ஏற்படுத்தும். நாள்பட்ட ஒவ்வாமையால் கண்ணின் மேற்படலம்(Conjunctiva) வெண்மை நிறத்திலிருந்து சாம்பல் கலந்த பிரவுன் நிறமாக மாறிவிடும். கண்ணின் வெளிப்புறத்தில் இருக்கும் கொழுப்பு(Orbital fat) கரைந்து கண்கள் குழிக்குள் இருப்பதைப் போல் ஒரு தோற்றம் இருக்கும். கருவிழியின் மேற்பரப்பு நிரந்தரமாக பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிய வேண்டிய நிலையும் வரலாம்.

பொதுவாக பெரும்பான்மையான ஒவ்வாமைகள் 14 வயது ஆகும்போது தானாகவே குறையக் கூடியவை. இதற்குக் காரணம் என்ன?
இயற்கையிலேயே நோயை ஏற்படுத்தும் காரணிகளுக்கு எதிராக எதிர்ப்பாற்றலை வளர்க்க 14 வயது வரை தைமஸ் எனப்படும் சுரப்பி(Thymus gland), டான்சில், அடினாய்டு ஆகிய நிணநீர் திசுக்கள் அனைத்தும் அதிகமாக வேலை செய்யும். சுற்றுப்புறத்தில் உள்ள பெரும்பான்மையான அயல் பொருட்களுக்கு இந்த வயதிற்குள் எதிர்ப்பாற்றல் ஏற்பட்டுவிடுவதால் படிப்படியாக நிணநீர் திசுக்கள் சுருங்கத் துவங்குகின்றன.

ஒவ்வாமையும் அத்துடன் குறையும். Spring catarrh என்னும் ஒவ்வாமை நிறைய செடி கொடிகளுக்கு மத்தியில் வாழும் குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும். குழந்தை வளர்ந்தபின் இது பெருமளவு குறைந்துவிடும். இடமாற்றமும் கூட அதிக பலனளிக்கும்.  பொதுவாக அனைத்து வகை ஒவ்வாமைகளுக்குமே ஒவ்வாமை ஏற்படும் காரணியை கண்டறிந்து அதிலிருந்து ஒதுங்கி இருப்பதே மிகச் சிறந்த தீர்வு. ஒவ்வாமையின் அறிகுறிகள் தோன்றினால் ஆரம்பத்திலேயே இலகுவான சிகிச்சைகள் மூலம் சரி செய்ய முடியும். வீண் அச்சம் தேவையில்லை. வளர் பருவத்தில் ஏற்படும் அடுத்த முக்கியப் பிரச்னையைப் பற்றிப் பேச எண்ணும் போது 15 வருடத்திற்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும்போது ஒவ்வொரு வியாழன் அன்றும் ஒவ்வொரு அரசு பள்ளிக்கு மாணவர்களை பரிசோதிக்கச் செல்வதுண்டு. ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு உடல் பரிசோதனை அட்டை இருக்கும். வருடா வருடம் அதில் எடை, உயரம் போன்றவற்றை நிரப்பி பரிசோதனை குறிப்புகளையும் எழுதியிருப்பார்கள்.  எல்லா மாணவர்களையும் பார்த்த நிலையில் ஒரு அட்டை மட்டும் மீதம் இருந்தது. அதில் அந்த குழந்தைக்கு கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு முறையும் வைட்டமின் ஏ குறைபாடு இருப்பதாகக் குறிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்கு அறிவுறுத்தி இருந்தனர்.

அந்த குழந்தையின் பெயரை குறிப்பிட்டு எங்கே என்று கேட்டதற்கு எனக்கு கிடைத்த பதில் இன்றளவும் மறக்க முடியாதது. அந்தக் குழந்தை பார்வையை முற்றிலும் இழந்து பார்வையற்றோர் பள்ளியில் படிப்பதாகக் கூறினர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இது போல வைட்டமின் ஏ குறைபாட்டால் பார்வை இழக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம். கல்வியறிவு மற்றும் அரசு திட்டங்கள் மூலம் இப்பொழுது இது பெருமளவு குறைக்கப்பட்டு விட்டது. எனினும் அவ்வப்போது மிகவும் சத்து குறைபாடு உள்ள குழந்தைகளிடம் வைட்டமின் ஏ குறைபாட்டை பார்க்க முடிகிறது.

இதைத் தடுக்க என்ன செய்யலாம்?

6 மாதத்திலிருந்து 5 வயது வரையிலான உள்ள சிறார்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரசு வைட்டமின் ஏ திரவத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அங்கன்வாடியின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதைத் தவறாமல் குழந்தைக்கு அளிக்க வேண்டும். கேரட், கீரை, பப்பாளி, மீன் போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளைக் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டும். இவை தடுப்பு நடவடிக்கைகள்.

வைட்டமின் ஏ குறைபாடு கண்டறியப்பட்ட பின் என்ன செய்யலாம்?

மருத்துவர் ஆலோசனைப்படி ஊசி அல்லது மாத்திரை மூலமாக வைட்டமின் ஏ சத்தினை போதுமான அளவு எடுக்க வேண்டும். இதனால் கண்கள் உலர்வது முதல் கருவிழி பாதிப்பால் பார்வை இழப்பது வரை வைட்டமின் ஏ குறைபாட்டின் நிலைகள் பலவற்றைத் தடுக்கலாம். மருத்துவர் பரிந்துரையின்றி தானாக வைட்டமின்-ஏ மாத்திரைகளையோ மீன் எண்ணெய் மாத்திரை என்று கூறப்படுபவையையோ(Cod liver capsules) வாங்கி உண்ணுதல் தவறு.

நம் நாட்டில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் சந்திக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை பேன் மற்றும் பொடுகுத் தொல்லை. அதுபோக என்னைப் பார்க்க வரும் அனைத்து குழந்தைகளிடமும் நான் முதலில் வலியுறுத்துவது கை விரல் நகங்களை சீராக வெட்டி சுத்தமாக வைத்திருப்பது.
நகத்துக்கு பேனுக்கும் கண்ணோடு என்ன தொடர்பு? மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகிறீர்களே.. என்கிறீர்களா? நிச்சயம் இவற்றுக்குத் தொடர்பிருக்கிறது.

தலையில் பொடுகு, பேன் வந்தால் கண் இமைகளிலும் அதன் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. இதனால் கண்களில் அரிப்பு, இமைகளில் புண் ஏற்படும். கண்களை கைகளால் அடிக்கடி தேய்க்க நேரிடும். அப்போது கைவிரலில் உள்ள நகமும் அதில் சேர்ந்திருக்கும் அழுக்கும் நிலைமையை மேலும் மோசமாக்கிவிடும். எனவே தன் சுத்தம்(Personal Hygiene) மிக மிக முக்கியம். அது மட்டுமல்ல நகத்தில் அழுக்கு இருப்பதால் குடற்புழுக்கள் வரவும் வாய்ப்பு அதிகம்.

குடற்புழுக்களால் ஏற்படும் ரத்தசோகை, அது விளைவிக்கும் கிருமித் தொற்றும் ஒவ்வாமையும் என்று பிரச்னைகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். வளர் பருவத்தில் இவை ஏற்படுத்தும் பாதிப்புகளால் குழந்தையின் வளர்ச்சி, படிப்பு மற்றும் விளையாட்டில் ஒருமுகத் தன்மை அனைத்தும் பாதிக்கப்படும். குழந்தைகளைக் கை பிடித்து நடக்க கற்றுத்தரும்போதே சுகாதாரத்தையும் சேர்த்துக் கற்றுத் தரலாம். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதல்லவா?!

(தரிசனம் தொடரும் !)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 29-05-2021

  29-05-2120 இன்றைய சிறப்பு படங்கள்

 • 27-05-2021

  27-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 15-05-2021

  15-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-05-2021

  13-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 11-05-2021

  11-05-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்