SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அழகு தரும் கொழுப்பு!

2019-12-16@ 17:16:50

நன்றி குங்குமம் டாக்டர்

Health and Beauty

‘‘கொழுப்பு என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கு பதற்றம் தொற்றிக் கொள்ளும். ஆனால், எல்லா கொழுப்பும் கெடுதல் செய்வதில்லை. நம் உடல் ஆரோக்கியமாக இயங்கவும், சருமம் பொலிவோடு இருக்கவும் கொழுப்பு நிச்சயம் தேவை. நாம் புரிந்துகொள்ள வேண்டியது எது நல்ல கொழுப்பு... எது கெட்ட கொழுப்பு என்பதைத்தான் என்கிறார்’’ சரும நல மருத்துவரான வானதி.

கொழுப்பில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று குறையடர்த்தி லிப்போ புரத கொலஸ்ட்ரால்(LDL), இன்னொன்று மிகை அடர்த்தி லிப்போ புரத கொலஸ்ட்ரால்(HDL). இவற்றில் HDL கொழுப்பு நல்ல கொழுப்பாகவும், LDL கொழுப்பு கெட்ட கொழுப்பாகவும் வரையறுக்கப்படுகிறது.உயர் அடர்த்தி கொழுப்பான HDL கொலஸ்ட்ரால் ஆரோக்கியத்துக்கு நல்லது. இது ரத்தத்திலுள்ள கொழுப்பை கல்லீரலுக்கு கொண்டு சென்று உடலிலிருந்து வெளியேற்றிவிடும். கெட்ட கொழுப்புகளான LDL ரத்தத்தில் கொழுப்பின் அளவை அதிகரித்துவிடும்.

ஆதி காலத்தில் மனிதன் சாப்பிடும் உணவிலிருந்து பெறப்படும் கொழுப்பானது சருமத்தின் அடியில் படிந்து சேமிக்கப்பட்டு, பின்னர் அவன் காடுகளில் விலங்குகளை வேட்டையாடும் நேரத்தில் உணவு கிடைக்காதபோது எரிபொருளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், இன்றோ உடல் உழைப்பற்ற வேலைகளில் ஈடுபடுவதால் சருமத்திற்கு அடியில் சேமிக்கப்படும் கொழுப்பானது எரிக்கப்படுவதில்லை. அவை அப்படியே சருமத்திற்கு அடியில் படியாமல், உடல் உள்ளுறுப்புகளில் லேயர் லேயராக படிந்துவிடுகிறது.

சருமத்திற்கு அடியில் படியும் கொழுப்பான Subcutaneous fat எந்த கெடுதலும் செய்யாது, இன்னும் சொல்லப்போனால் சில வகை நோய்களிலிருந்து நம்மை பாதுகாப்பவை அவை. ஆனால், உடல் உள் உறுப்புகளில் படியும் கொழுப்பான Visceral fat பெரும்பாலும் அடிவயிற்றுப் பகுதிக்கு அருகில் உள்ள கணையம், கல்லீரல் மற்றும் குடல் பகுதிகளில் சேர்ந்துவிடும். இந்த கொழுப்புதான் அழற்சி நோய்கள், டைப் 2 டயாபட்டீஸ் மற்றும் இதயநோய் போன்ற சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.

பொதுவாக ஒருவரின் உடல் அமைப்பை வைத்து அவர்கள் ஆப்பிள் வடிவமா, பேரிக்காய் வடிவமா என்று வரையறுக்கப்படும். பெண்களுக்கு 30 வயதுக்கு மேல் இடுப்பைச் சுற்றித்தான் கொழுப்பு படியும். ஆண்களுக்கு வயிற்றைச் சுற்றி கொழுப்பு படியும். பெண்களுக்கு 35 இன்ச் அளவுக்கு மேல் இடுப்பு சுற்றளவு இருந்தாலோ, ஆண்களுக்கு 40 இன்ச்சுக்கு மேல் வயிறு இருந்தாலோ அவர்களை உடல் பருமன் நோய்வட்டத்துக்குள்  கொண்டு வருவோம். பெண்களுக்கு மெனோபாஸ் காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும்போது அவர்களுக்கும் வயிற்றைச் சுற்றியும் கொழுப்பு சேர ஆரம்பிக்கும்.

கொழுப்பு சருமத்தில் எப்படி பாதிக்கிறது?


உடல் பருமனாக ஆக சருமம் நீட்சி அடைகிறது. சுற்றளவு அதிகரிப்பதை மறைக்க சருமத்தின் செல்களும் விரிவடைந்து, சிவப்பு நிற கோடுகளை உருவாக்குகின்றன. குறிப்பாக பெண்களின் தொடைகள், பிட்டம், தொப்பை மற்றும் மார்பகங்கள் போன்ற பகுதிகளில் வரிவரியாய் கோடுகள் போன்று வடுக்கள் ஏற்படுகின்றன. குறிப்பிடத்தக்க அளவு எடையை இழந்து மீண்டும் எடை கூடும். ஒவ்வொருவருக்கும் இந்த ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மிகப்பெரிய பிரச்னையாக இருக்கும். பல ஆண்டுகளாக உடல்பருமனாக இருப்பவர்களுக்கு இது மிகவும் கடுமையான பிரச்னையாக மாறும்.

அடுத்து செல்லுலைட்(Cellulite) என்றழைக்கப்படும் சருமத்திற்கு அடியில் சிறு சிறு முடிச்சுகளாக கொழுப்புத்திசுக்கள் சேரும். பெண்களுக்கு வயதாக வயதாக சருமத்தில் கொலாஜன் குறைந்து, இந்த கொழுப்பு திசுக்கள் தொடை, பிட்டப்பகுதிகளில் படிகிறது. பதின்ம வயதில் இருக்கும் சிலருக்கும் செல்லுலைட் கட்டிகள் இருப்பதுண்டு.

இந்த கொழுப்பை எப்படி கரைக்கலாம்?
தேவையில்லாத அதிக கலோரிகள் உள்ள உணவுகளைக் குறைத்து உடற்பயிற்சிகள் செய்யும்போது, இப்படி சருமத்திற்கு கீழும் உடல் உறுப்புகளின் உள்ளும் இருக்கும் கொழுப்புகள் எரிந்து குறைய ஆரம்பிக்கும். இப்படி சரிவிகித உணவு, உடற்பயிற்சிகளை தொடர்ந்து கடைபிடிக்கும்போது உணவின் மூலமாக கிடைக்கும் கொழுப்பு ஆங்காங்கே படியாமல் அவ்வப்போது எரிக்கப்பட்டுவிடும்.

கொழுப்பு அளவாக இருக்கும்போது லெப்டின் என்ற ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன்தான் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வைத் தரக்கூடியது. ஆனால், உடல் பருமன் உள்ளவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைவதால், அவர்களுக்கு எவ்வளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படாததால் அளவுக்கதிகமாக சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

சருமத்திற்கு சில கொழுப்பும் அவசியம்தான்வயதாகும்போது தோல் வறண்டு சுருங்க ஆரம்பிக்கும். இது வயதான தோற்றத்தை உண்டாக்கும். சருமத்தைப் பராமரிக்கவும், உடல்வடிவத்தை பேணிக்காக்கவும், சில நல்ல கொழுப்பும் அவசியமாகிறது. அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களான(EFA) ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தின் ஆரோக்கியமான உயிரணு சவ்வுகளின் கட்டுமான தொகுதிகளை பாதுகாப்பவை. மேலும் பாலி அன்சேச்சுரேட்டட் கொழுப்புகள் சருமத்தின் இயற்கையான எண்ணெய்ப்பசை வறண்டு போகாமலும், சருமம் உலராமால் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், முகம் பொலிவிழக்காமல் இளமையாக பேணிக்காக்கவும் உதவுகின்றன.

உணவில் காய்கறிகள், பழங்கள் அதிகம் எடுத்துக் கொள்வது, சாப்பிடும்போது டிவி பார்ப்பது, செல்லில் பேசுவது என்றில்லாமல் கவனத்துடன் சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் சருமத்தை பாதுகாப்பவை. சமநிலையான புரதம், கார்போஹைட்ரேட், நல்ல கொழுப்பு நிறைந்த ஒரு சரிவிகித உணவே இளமையான உடலையும், சருமத்தையும் தரும்!

- உஷா நாராயணன்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • accident20

  அவிநாசி அருகே கண்டெய்னர் லாரியும், அரசு பேருதும் மோதி விபத்து: 20 பேர் உயிரிழப்பு....23 பேர் படுகாயம்

 • 20-02-2020

  20-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • poraattam20

  சென்னையில் சட்டசபையை நோக்கி முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காக இஸ்லாமிய அமைப்பினர் திரண்டதால் பரபரப்பு

 • aadi20

  மகாராஷ்டிரா பிஎம்சி வொர்லி சீஃபேஸ் பள்ளியில் நோய்த்தடுப்பு முக்கியத்துவம் பற்றி ஆதித்யா தாக்கரே விளக்கம்

 • iyanman2020

  துபாயில் அயர்ன் மேன் உடையணிந்து 6,000 அடி உயரத்தில் விண்ணில் பறந்த சாகசக்காரர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்