SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மூளை தண்டுவட நீரின் முக்கியத்துவம் தெரியுமா?!

2019-12-02@ 15:13:38

நன்றி குங்குமம் டாக்டர்

*நரம்புகள் நலமாக இருக்கட்டும்


பெருமூளையின் அரைக்கோளங்களில் இருக்கும் குழிகளுக்கு வென்ட்ரிகிள்(Ventricle) என்று பெயர். நிறமற்ற தெளிவான திரவம் இக்குழிகளில் நிரம்பியிருக்கும். இதனை மூளைத் தண்டுவடத் திரவம்(Cerebro Spinal Fluid) என்று சொல்வோம். இக்குழிகளில் மட்டுமல்லாமல் தண்டுவடத்தின் மையப்பகுதி நெடுகிலும் மூளை தண்டுவடநீர் நிறைந்திருக்கும். மூளையின் வென்ட்ரிகிள்களில் இருக்கும் சுரப்பிகளான கோராட் ப்ளக்ஸஸில்(Choroid Plexus) இருந்து மூளைத்தண்டுவட திரவம் சுரக்கிறது. சராசரியாக ஒரு நாளுக்கு 550 மில்லி லிட்டர் திரவம் சுரக்கிறது. இந்த திரவமானது தலை அசையும்போது அல்லது மத்திய நரம்பு மண்டலம் அதிர்ச்சிக்குள்ளாகும்போது ஒரு அதிர்வு தாங்கியாக செயல்படுகிறது.

மேலும் மூளை மற்றும் தண்டுவடத்தில் தேவையான ஹார்மோன்களையும் உணவுப்பொருட்களையும் சேமித்து வைக்கும் வேலையையும் செய்கிறது. இத்திரவம் மத்திய நரம்பு மண்டலத்தின் உள்ளும் புறமும் அமைந்து மூளையின் அழுத்தத்தை சரி செய்யும் ஒரு மெக்கானிக்கல் பஃபராக(Buffer) விளங்குகிறது. மூளை தண்டுவட நீரின் அழுத்தம் 8-15mm of Hg. இந்நீரில் புரதச்சத்து குறைவாக இருக்கும். இந்நீர் மூளைக்கு ஒரு
மிதவையாக செயல்படுகிறது.

மனித மூளை சராசரியாக 1400 கிராம் எடையுடையது. மூளை தண்டுவட நீரின் அடர்த்தி மூளையின் அடர்த்திக்கு சமமாக உள்ளதால் மூளையின் அடிப்பாகம் வெறும் 25 கிராம் எடையையே அனுபவிக்கும். இதனால் மூளையின் கீழே படர்ந்திருக்கும் ரத்தக்குழாய்கள் நசுக்கப்படாமல் குருதி ஓட்டம் பராமரிக்கப்படுகிறது.எப்படி இந்த மூளைத் தண்டுவட நீர் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அனுபவரீதியாக பார்ப்போம்?ஒருமுறை 10 மாத பெண் குழந்தையை அவரது தாயார் தூக்கி வருகிறார்.

குழந்தை சரியாக பால் குடிக்க மறுப்பதாகவும், எந்நேரமும் அழுதுகொண்டே இருப்பதாகவும், ஒரு முறை வலிப்பு போல் வந்ததாகவும் கூறுகிறார். அக்குழந்தையை பார்த்தபோது, அதற்கு தலையின் சுற்றளவு சற்று பெரிதாக இருப்பது தெரிய வந்தது. பொதுவாக குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 சென்டிமீட்டர் இருக்கும். குழந்தை வளர வளர ஒரு மாதத்தில் 38 சென்டிமீட்டராகவும், ஆறு மாதத்தில் 42 சென்டிமீட்டராகவும், 1 வயதில் 45 சென்டிமீட்டராகவும் படிப்படியாக அதிகரிக்கும்.

இந்த குழந்தைக்கோ தலையின் சுற்றளவு அறுபது சென்டிமீட்டர் இருந்தது. இதுபோன்ற பெரிய தலைக்கு மருத்துவரீதியாக மேக்ரோசெபாலி (Macrocephaly) என்று பெயர். குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தபோது அக்குழந்தையின் மூளை தண்டுவட நீர் அதிகமாகி மூளையில் உள்ள குழிகள்(Ventricle) பெருத்து இருப்பதே, அப்பெரிய தலைக்கான காரணம் என்று தெரிய வந்தது. மூளையில் உள்ள குழிகளுக்கு இடையேயான பாதையில் சிறு அடைப்பு ஏற்பட்டதால் நீர்த்தேக்கம் ஏற்பட்டு தலைப் பெருத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்த அடைப்பு நரம்பியல் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது‌. அக்குழந்தையின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டு தலையின் சுற்றளவு சுருங்கி சில மாதங்கள் கழித்து பார்க்கும்போது ஒரு சராசரி குழந்தைபோல் மாறி இருந்தாள். இதுபோன்று குழந்தையுடைய தலையின் அமைப்பில் சிறு மாறுபாடு தெரிந்தால், பெற்றோர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.

அடுத்து 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் தலைவலி காரணமாக ஆலோசனைக்கு வருகிறார். அவர் தனது ‘தலைவலி’ தலையின் முன்பகுதியில் அதிகமாக இருப்பதாகவும், காலையில் எழும்போது தலை மிகவும் பாரமாக இருப்பதாகவும், தலைகுனியும்போது வலி அதிகரிப்பதாகவும், உட்கார்ந்து எழும்போது கண்களில் பொறி பறப்பதைப் போன்ற உணர்வுகள் ஏற்படுவதாகவும், வலதுபுறம் பார்க்கும்போது பார்வை இரண்டாக தெரிவதாகவும், சமயத்தில் தலைவலி அதிகமாகும்போது வாந்தி வருவதாகவும் கூறுகிறார். அவரை சோதித்து பார்த்தபோது அவரது வலது கண் வெளிப்புறமாக நகர மறுக்கிறது.

கண்களில் உள்ள பாப்பாவின் வழியாக கண்களை ஊடுருவி பார்க்க உதவும் கருவி(ஆப்தால்மாஸ்கோப்) வழியாக பார்க்கும்போது விழித்திரையில் உள்ள பார்வைக்கான நரம்பான ஆப்டிக் நரம்பின் தலைப்பகுதி வீக்கமாக இருப்பது தெரிந்தது. இதன் மூலம் அவரது மூளை நீரின் அழுத்தம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை மருத்துவரீதியாக மூளை நீர் அழுத்த நோய்(Benign intracranial hypertension) என்று கூறுவோம்.

உடனடியாக அவரின் தலையை எம்.ஆர்.ஐ ஸ்கேன் பரிசோதனையும், ஒரு கண் மருத்துவரின் ஆலோசனையும் பெறப்பட்டது. அதன் பின்னர் மூளையில் உள்ள அழுத்தத்தை குறைப்பதற்கான மருந்துகள் தரப்பட்டன. இம்மருந்துகள், மூளை தண்டுவட நீர் சுரப்பதை தடுப்பதால், மிக முக்கியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் மூளையின் அழுத்தத்தை குறைக்க முடியும். இம்மருந்துகளுக்கு கட்டுப்படாத தலைவலி உள்ளவர்களுக்கு முதுகு தண்டுவடத்தில் இருந்து சிறிது தண்டுவட நீரை வெளியேற்றுவதன் மூலம் மூளையின் அழுத்தத்தை குறைக்க முடியும்.

இப்படி உடனடியாக மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுக்காமல் தாமதித்தால், பார்வைக்கான நரம்பான ஆப்டிக் நரம்பின் மீது அழுத்தம் அதிகமாகி பார்வை பறிபோகும் நிலைமை ஏற்படும். அப்பெண்ணிடம் விசாரித்ததில் தனது மாதவிடாய் சீராக வருவதற்கு ஹார்மோன் மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது. ஹார்மோன் மாத்திரைகள் மூளையில் உள்ள திரவத்தை அதிகமாக சுரக்கும்படி செய்யக் கூடியவை. எனவே, அப்பெண்மணிக்கு ஹார்மோன் மாத்திரைகள் நிறுத்தப்பட்டு மூளை அழுத்தத்தை குறைக்கும் மாத்திரைகள் கொடுக்கப்பட்டது. கொஞ்சம்கொஞ்சமாக அவரது தலைவலி குணமானது.

ஐடி கம்பெனி ஒன்றில் மேனேஜராக வேலை பார்த்த 40 வயதுள்ள நண்பர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைக் கேட்டால் மூளை தண்டுவட நீரின் முக்கியத்துவத்தை இன்னும் நாம் எளிதாக உணர முடியும். அவருக்கு காலை முதல் மாலை வரை தொடர்ந்து வேலை. கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் சர்க்கரை நோய் இருப்பது தெரிய வந்தது. ஒரு மாத காலமாக மாலை நேரங்களில் ஜுரம் வருவதைப் போன்றும், தலை சற்று பாரமாக இருப்பது போன்றும் உணர்கிறார். தானாகவே ஜுரம் தலைவலிக்காக கடைகளில் கிடைக்கும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் தலைவலி சற்று அதிகமாகிறது.

தொடர்ந்து காய்ச்சலுடன் வாந்தியும் ஏற்படுகிறது. இப்போது அவரது நடத்தைகளில் சற்று மாற்றம் தெரிகிறது. மயக்க நிலைக்குச் செல்கிறார். அவரது உறவினர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு வருகின்றனர். அந்நோயாளியை பார்த்தவுடனே அவருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை கண்டறிந்தோம். உடனடியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு, மூளையிலும் மூளையைச் சுற்றியுள்ள தடுப்பு சுவர்களிலும் நோய்க்கிருமி தாக்கியுள்ளது ஸ்கேனில் தெரிந்தது.

உடனே அவரது உறவினர்களிடம் அவருக்கு ஏற்பட்டுள்ள காய்ச்சலை பற்றி தெளிவாக கூறி, முதுகு தண்டுவடத்தில் இருந்து நீர் எடுத்து பரிசோதனை செய்தால் எந்த கிருமியினால் மூளையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்று தெரிந்துவிடும் என்றும், அக்கிருமிக்கான எதிர்ப்பு மருந்தை கொடுத்தால் அவரை குணப்படுத்தி விடமுடியும் என்று பரிந்துரைத்தோம். நோயாளியின் நெருங்கிய உறவினர்களோ தண்டுவடத்திலிருந்து நீர் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தண்டுவடத்தில் நீர் எடுத்தால் பின்னாளில் தொந்தரவு ஏற்படும், முதுகில் வலி ஏற்படும் நடக்க முடியாமல் போய்விடும் என்று கூறி தமக்குத் தெரிந்த மருத்துவ அறிவை வைத்துக் கொண்டு மருத்துவர்களுக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர்.

 எவ்வளவோ எடுத்துக்கூறியும் ஒத்துக்கொள்ளவில்லை. நோயாளியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு டாக்டர் குழு பாக்டீரியாவிற்கான எதிர்ப்பு மருந்து, வைரஸ்கான எதிர்ப்பு மருந்து, ஃபங்கஸ் (பூஞ்சை)க்கான எதிர்ப்பு மருந்து என இவை அனைத்தையும் நோயாளிக்கு கொடுக்கின்றனர். சர்க்கரைக்கான இன்சுலின் ஊசியை செலுத்தி சர்க்கரையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். ஆனாலும்  நோயாளியின் உடல் நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. நிலைமை மிகவும் மோசமாகிறது. தண்டுவட நீரை சோதித்துப் பார்ப்பதற்கு, டாக்டர் குழு மீண்டும் உறவினர்களிடம் அறிவுறுத்துகிறது. அப்போது நோயாளியின் மனைவி மட்டும் ஒரு முடிவுக்கு வந்தவராக, ‘நீங்கள் தண்டுவட நீரை எடுத்து ஆய்வுக்கு அனுப்புங்கள். என் கணவர் உயிர் பிழைத்தால் போதும்’ என்று கூறுகிறார்.

அன்றே மூளை தண்டுவட நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்படுகிறது. அதில் நோயாளிக்கு Tuberculosis கிருமி இருப்பது தெரிய வந்தது. காசநோய் ஏற்படுத்தும் டிபி கிருமி என்பது நுரையீரலை மட்டும் தாக்குவது அல்ல; உடலின் எந்தப் பகுதியும் தாக்கி வலுவிழக்கச் செய்யும் வீரியத்தன்மை உடையது. ஆனால், எவ்வளவு வீரியமாக இருந்தாலும் டிபி கிருமிக்கான எதிர்ப்பு மருந்தை உடம்பில் செலுத்தினால் அதன் வீரியத்தை முறியடிக்க முடியும். நோயாளிக்கு டிபி கிருமிக்கான மருந்து கொடுக்கப்பட்டு அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படுகிறது. மயக்க நிலையிலிருந்து தெளிவு ஏற்பட்டு தலைவலி குறைகிறது.

அத்துடன் காய்ச்சல் மற்றும் வாந்தியும் குறைகிறது. ஓரிரு நாட்களில் எழுந்து, உட்கார்ந்து, நடக்கவும் ஆரம்பித்துவிட்டார். இரண்டு வாரத்தில் வேலைக்கே செல்ல ஆரம்பித்து விடுகிறார். மூளை தண்டுவட நீரை ஆய்வு செய்ததால்தான் அவர் நோய்க்கான கிருமி கண்டுபிடிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார். டாக்டர்கள் கடவுள்கள் அல்லவே கற்றுக்கொண்ட மற்றும் அவர்களுடைய அனுபவங்களைக் கொண்டே நோய்களை கண்டறிகின்றனர். மருத்துவ ஆய்வுகள் டாக்டர்களின் நோய் அறியும் திறனுக்கு உறுதுணையாக உள்ளன. இதனை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கூகுளிலும், ஊடகங்களிலும் அரைகுறையாக படித்து தெரிந்து கொண்ட விஷயங்களைக் கொண்டு, மருத்துவரோடு ஒத்துழைப்பு தராமல் இருப்பது நல்லதல்ல.
 
தண்டுவட நீரை சிறிது வெளியேற்றுவதன் மூலம் மருந்துகளுக்கு கட்டுப்படாத தலைவலியை குறைக்க முடியும்.

* டாக்டர் வினோத் கண்ணா

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • chile-wildfire18

  சிலியில் வேகமாக பரவும் காட்டுத்தீ!: புகைமூட்டத்துடன் செந்நிறமாக காட்சியளித்த வானம்...புகைப்படங்கள்

 • china-hospital18

  சீனாவில் தீவிரமாக பரவும் கொரோனா வைரஸ்!: 5 நாளில் கட்டப்பட்ட 1,500 அறை கொண்ட மருத்துவமனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்