SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரும் முன் காப்போம்!

2019-11-18@ 13:02:54

நன்றி குங்குமம் டாக்டர்

உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே கண்களும் காயங்களின் தாக்குதலுக்கு ஆளாகின்றன என்பதைப் பற்றி கடந்த இதழில் பார்த்தோம். அதுகுறித்து இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. விபத்துகளில் பலவிதங்களில் கண்களில் காயம் ஏற்பட நேரிடும். இமைகளின் மேலே அல்லது இமைகளின் அருகில் கன்னத்தில் சிதைந்த, பிளவுபட்ட காயங்கள் ஏற்படும் போது தையல் போட வேண்டியதிருக்கும். இதனை மிகவும் கவனமாகக் கையாள வேண்டியது அவசியம். மிக இறுக்கமாகவோ அல்லது ஒழுங்கில்லாமலோ போடப்படும் தையல்களால் பாதிப்புகள் அதிகம் நிகழ்கின்றன. இவற்றால், காயம் ஆறும்போது(Scarring) இமைகள் கீழ்நோக்கியோ உட்புறமாகவோ நிரந்தரமாகத் திரும்பிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

இதனால் தொடர்ச்சியாகக் கண்களில் நீர் வடிதல், கண்ணில் உறுத்தல், கருவிழி பாதிப்பு போன்றவை ஏற்படும். முதலுதவி மையங்களில் மருத்துவம் சார்ந்த பணியாளர்களால் செய்யப்படும் சிகிச்சைகளால் இத்தகைய பின் விளைவுகள் ஏற்படுவதை அடிக்கடி காண்கிறோம். எனவே, சற்று தாமதிக்க நேர்ந்தாலும் தகுதி பெற்ற மருத்துவரிடம் சென்று தையல் போடுவதே சிறந்தது. கண்ணாடி, கம்பி போன்ற கூர்மையான ஆயுதங்களால் கண்களின் மேற்பரப்பில் காயம் ஏற்படலாம்(Penetrating injury). காயத்தின் தன்மையைப் பொறுத்து பார்வை பாதிப்பு மாறுபடும். லேசான காயங்களைச் சரியாக தையல் போடுவதன் மூலமே சரிசெய்து விடலாம்.

ஆழமான காயங்களுக்குப் பெரிய அளவில் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். உடனடி சிகிச்சை மூலம் கிருமித் தொற்று பரவுவதைத் தடுக்க முடியும். இவ்வாறு கண்களில் ஏற்படும் ஆழமான காயங்களை உடனே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒரு கண்ணில் ஏற்படும் காயத்தால் ரத்த
ஓட்டத்தில் கலக்கும் கண்களின் சில செல்கள் ஒருவகையான எதிர்வினையை மறு கண்ணிலும் தோற்றுவிக்கின்றன. காயம்பட்ட 4 வாரங்கள் முதல் 8 வாரங்கள் கழித்து காயம்பட்ட கண்ணை விடுத்து மற்றொரு கண்ணும் பாதிக்கப்படலாம். இதனால் மறு கண்ணிலும் பார்வை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் சில நேரங்களில் காயம் பட்ட, பார்வை கிடைக்க வாய்ப்பற்ற கண்ணை அகற்றி விடுவார்கள்.

தற்போதைய நிலையில் கண்ணை அகற்றுவதைத் தடுக்கும் விதமாகப் பல கண்டுபிடிப்புகள் வந்துள்ளன.  உதாரணத்துக்கு விபத்துகளில் கை, கால்களில் எலும்பு முறிவே இல்லை. ஆனால், தலைக்காயம் ஏற்பட்ட நோயாளி சுயநினைவின்றி இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இவருக்கு கண்களில் ஏற்படும் காயம் ஆரம்பத்தில் கவனிக்கப்படாமல் இருந்திருக்கலாம். கண்டறிதல் தாமதிக்கும்போது பார்வை இழப்பிற்கான வாய்ப்பு அதிகம். பொதுவான உடல்நிலை சரி செய்யப்பட்டு நோயாளி கண் விழித்த பின் தனக்குப் பார்வை குறைந்திருப்பதாகக் கூறி அதற்குப்பின் சிகிச்சையை துவங்கிய சம்பவங்களும் ஏராளம். எனவே, விபத்தில் பாதிக்கப்பட்ட ஒரு நபருக்கு தலை முதல் கால் வரை முழு பரிசோதனை அவசியம்.

விபத்தில் ஏற்படும் காயங்களால் நேரடியாக மட்டுமின்றி மறைமுகமாகவும் நரம்பில் பாதிப்பு ஏற்படலாம். தலையில் ஏற்படும் அடியினால் மூளையில் அதிர்வு ஏற்பட்டு கண் நரம்பின் ரத்த ஓட்டம் பாதிக்கப் படலாம். விபத்து ஏற்பட்டு இரண்டு மூன்று நாட்கள் கழித்துத்தான் பார்வை இழந்ததையே சிலர்
உணர்வார்கள். கண்களில் நேராகப் படும் ஊமைக் காயத்தால் கிருஷ்ணபடலத்தின் தசைகள் கிழிந்து போய் விட வாய்ப்பு இருக்கிறது. அந்த சூழ்நிலை ஏற்பட்டால் வெளிச்சம் படும்போது கண்மணிகளால் சுருங்கிக் கொள்ள முடியாது. கண்ணின் லென்ஸ் இத்தகைய காயத்தால் அதன் இடத்தில் இருந்து விலகி விட நேரலாம். கண்புரை எளிதில் வளர வாய்ப்புள்ளது. இந்த சூழ்நிலைகளில் அறுவை சிகிச்சை அவசியம்.

விழித்திரை மற்றும் விழிப்படிம நீர்மத்தில் ரத்தக் கசிவுகள், நரம்புகள் போன்றவை ஏற்படலாம். சிறு ரத்தக்கசிவுகளை மருந்துகள் மூலமாகவும் அதிகபட்ச கசிவுகளை அறுவை சிகிச்சை மூலமாகவும் குணப்படுத்தலாம். வேதிப்பொருட்களால் கண்களில் ஏற்படும் காயங்களும் இன்றைய அவசர யுகத்தில் பெருகிவிட்டன. பினாயில் பாட்டில் திறக்கும்போது கண்களில் தெறித்து விட்டது, பெயின்ட் டப்பாவைத் திறந்தேன், கண்களில் பட்டு விட்டது, வயலுக்கு பூச்சி மருந்து தெளிக்கையில் கண்களில் பட்டுவிட்டது என்று கூறி அனேக நோயாளிகள் சிகிச்சைக்காக வருவார்கள். ஆய்வகங்களிலும் வேதிப் பொருட்கள் கண்களில் பட வாய்ப்புக்கள் அதிகம்.

அமிலம், காரம் இரண்டுமே அதிக அளவில் கண்களை பாதிக்கக்கூடிய தன்மை உடையவை. இவை இரண்டுமே செல்களை முற்றிலுமாக பாதித்து சுருங்கச் செய்கின்றன. வேதிப் பொருட்களால் உருவாகும் காயங்களில் தழும்புகளும் வேகமாக உருவாவதால் நீண்ட நாட்கள் வரையில் பல கட்ட சிகிச்சை தேவைப்படும். இத்தகைய வேதிப்பொருட்களால் ஏற்படும் காயங்களை உடனடியாக அதிகப்படியான தண்ணீர் அல்லது சலைனால் கழுவ வேண்டும். வேதிப் பொருளின் தன்மையை அறிந்திருந்தால் அதற்கு மாற்றான வேதிப்பொருளால் கண்ணை சுத்தம் செய்யலாம். உதாரணமாக,
அமிலத்திற்கு இலகுவான காரக் கரைசலும் காரத்தால் ஏற்படும் காயத்திற்கு அதிக கனமற்ற அமிலக் கரைசலையும் பயன்படுத்தலாம்.

வேதிப் பொருட்களின் சிறு துகள்கள் மிச்சம் இருந்தால் அவற்றை கவனமாக அகற்ற வேண்டும். போதிய இடைவெளியில் மருந்துகள் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தழும்பு அதிவேகமாக உருவாகி இமைகளுடன் ஒட்டிக் கொள்வதைத் தடுப்பதற்கும் சிகிச்சைகளை விரைந்து மேற்கொள்வது அவசியம். இவை மட்டுமல்ல தீக்காயங்கள், மின்சார அதிர்ச்சி (electric shock) மற்றும் கதிர்வீச்சுகளால்(Radiation) கண்களில் நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்த முடியும். வேறு எந்த உறுப்பை விடவும் கண்களில் ஏற்படும் காயங்களால் உடனடியாக மட்டுமன்றி நீண்ட காலம் கழித்தும் உணரக்கூடிய விளைவுகளை உருவாக்க முடியும்.

விபத்துக்கள் அல்லது சண்டைகளின்போது கண்களில் உட்பகுதிக்கு செல்லும் சில கனிம பொருட்கள் கண்களுக்குள் ஏற்படுத்தும் வேதியியல் மாற்றங்கள் மிக மெதுவாகவே நிகழும். அவை வெகு நாட்கள் கழித்து சில அறிகுறிகளை ஏற்படுத்தும். அதைப்போலவே கண்ணில் சுரக்கும் நீர் வெளியேறும் பாதைகளில் ஏற்பட்டிருக்கும் காயத்தால் பிற்காலத்தில் கண் அழுத்த நோய் வரவும் வாய்ப்பு இருக்கிறது. வேறு ஏதாவது கண் பிரச்சனைக்கான பரிசோதனை செய்யும் பொழுதோ அல்லது கண் அறுவை சிகிச்சையின் போதோ கூட இவை கண்டறியப்படலாம். எத்தனை சிகிச்சை முறைகள் வந்தாலும் இயற்கையான பார்வைக்கு எதுவும் நிகரில்லை.

எனவே, வருமுன் காப்பதே சாலச் சிறந்தது. ஹெல்மெட் அணிந்தால் விபத்தின்போது ஏற்படும் பல கண் காயங்களைத் தவிர்க்கலாம். லேப் கெமிக்கல்கள், பினாயில், வயலில் பூச்சி மருந்து அடிப்பவர்கள் போன்றவற்றை அடிக்கடிக் கையாள்பவர்கள் பொருத்தமான உறைகளை (goggles) அணிய வேண்டும். நேரடியாக சூரிய ஒளியையோ கதிர்வீச்சினையோ கண்களால் எதிர்கொள்ளக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் சுய மருத்துவம் கூடவே கூடாது.

( தரிசனம் தொடரும் !)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 30-09-2020

  30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • formars29

  வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

 • coronadeath29

  கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

 • thee29

  பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

 • vadothara29

  குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்