SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுரை அரசு மருத்துவமனை

2019-10-29@ 12:32:15

நன்றி குங்குமம் டாக்டர்

ரவுண்ட்ஸ்


மதுரை மாநகருக்கு ‘தூங்கா நகரம்’ என்றொரு பெயர் உண்டு. 24 மணி நேரமும் அங்கு மக்கள் நடமாட்டத்தை பார்க்க முடியும். மல்லிகைப் பூ, சுவையான உணவு, அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் தொடங்கி தற்போது தமிழகத்தின் முதலாவதாக அமையப்போகும் எய்ம்ஸ் மருத்துவமனை வரை மதுரையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

மதுரையின் மருத்துவ வரலாறுவைகை ஆற்றின் வடகரையில் இன்றைய கோரிப்பாளையம் என்ற பகுதியில் 1852-ம் ஆண்டு ‘சுகாதார மையம்’ தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க பிரிட்டிஷ் படை வீரர்களுக்கு ஏற்படும் தொற்று நோய்கள், உடல் உபாதைகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக இது செயல்படத் தொடங்கியது. பின்னாளில் பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. 1872-ம் ஆண்டு முதல் மதுரை உள்ளாட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட மாகாண அரசு அனுமதி வழங்கியது.

1918-ம் ஆண்டு மீண்டும் மதராஸ் அரசின் மாகாண கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்ததால் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அப்போது மதராஸ் மாகாண கவர்னராக இருந்த ‘ஜான் பிரான்சிஸ் ஆஷ்லே எர்ஸ்கின்’ தன்னுடைய ஒரு மாத சம்பளத்தை வழங்கி மருத்துவமனை விரிவாக்கத்துக்கு கை கொடுத்தார். அதன்மூலம் முழுக்க முழுக்க கற்களால் ஆன கட்டிடம் கட்டப்பட்டது.

எர்ஸ்கினின் மக்கள் தொண்டை பாராட்டும் வகையில் இந்த மருத்துமவனைக்கு ‘எர்ஸ்கின் மருத்துவமனை’ என பெயர் மாற்றப்பட்டது. ‘எர்ஸ்கின் மருத்துவமனை 1940-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி அப்போதைய மதராஸ் மாகாண கவர்னர் `சர் ஆர்தர் கோப்’ திறந்து வைத்தார்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு காமராஜர் முதல்வராக இருந்தபோது, வளாகத்தில் மேலும் பல புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 18.93 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டது.

அரசு மருத்துவக்கல்லூரியை 1954-ம் ஆண்டு ஆகஸ்ட் 2-ம் தேதி அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கவுர் திறந்து வைத்தார். நாடு சுதந்திரம் பெறும் வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரல், மதராஸ் மாகாண முதல்வர் உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த ராஜாஜியை கவுரவிக்கும் வகையில் இந்த மருத்துவமனை ‘மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை’ என 1980 ஜனவரியில் பெயர் மாற்றம் செய்தார்.

இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு தினமும் வெளிநோயாளிகளாக 10 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர், 68 தனிப்பிரிவுகள் உள்ளன. 650 மருத்துவர்கள், 520 செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எர்ஸ்கின் மருத்துவமனைப் பணியாளர்கள், வளாகத்திற்குள்ளேயே குடிசைகளை அமைத்து குடியிருந்தனர். இந்தக் குடிசைகள் அகற்றப்பட்டு, அந்த இடத்தில்தான் குழந்தைகள் வார்டு கட்டப்பட்டது. குழந்தைகள் வார்டுக்காக இடம் கொடுத்த பணியாளர்களுக்கு, தலா 2 சென்ட் நிலம் வழங்கப்பட்டது. அப்போதைய மருத்துவமனை தலைவர் கபீர் என்று முயற்சி மேற்கொண்டதால் அவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதால் அப்பகுதி கபீர் நகர் என்றே இப்போது அழைக்கப்படுகிறது.

மருத்துவமனையின் பழைய பெயரான ‘எர்ஸ்கின் ஹாஸ்பிட்டல் மதுரை’ என்கிற ஆங்கில எழுத்துக்கள் பொறித்த வட்ட வடிவிலான ‘ரப்பர் ஸ்டாம்ப்’ பை மருத்துவ கல்லூரி நிர்வாகம் இன்றும் பாதுகாத்து வருகிறது. எளிமைக்குப் பேர் போன முன்னாள் தமிழக அமைச்சர் கக்கன் இம்மருத்துவமனையில் இறுதிக்காலத்தில் சிகிச்சை பெற்றார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மதுரை வந்தபோது, இந்த மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளார். சமீபத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ பொன்னம்மாளும் இம்மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். சென்னை, சேலத்தை தொடர்ந்து, 2004 ஏப்ரல் 1-ம்தேதி மதுரை அரசு மருத்துவமனை செவிலியர் விடுதியில், பிளாரன்ஸ் நைட்டிங்கேலுக்கு வெண்கல சிலை வைக்கப்பட்டது.

மருத்துவமனையின் தற்போதைய செயல்பாடுகள் தொடர்பாக டீன் வனிதாவிடம் கேட்டோம்...துறைத்தலைவர்கள், பேராசியர்கள் முதல் பயிற்சி மருத்துவர் வரை அனைவரையும் ஒருங்கிணைத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இங்குள்ள ஆபரேஷன் தியேட்டர் 24 மணி நேரமும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

 விபத்தில் சிக்கி வரும் நோயாளிகளில் ஆபரேஷன் தேவைப்படுபவர்களுக்கு அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டு 6 மணி நேரத்திற்குள் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்கிறோம். எங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளால் எங்கள் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்., இடங்கள் 150-லிருந்து 250-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

நான் எங்கள் நிர்வாக குழுவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால் தற்காலிக பணியாளர்கள் அனைவருக்கும் பி.எப் அக்கவுன்ட் தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தவறுதலாக எச்.ஐ.வி., ரத்தம் ஏற்றப்பட்டு பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணையும் அவரது குழந்தையையும் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்து தாயை காப்பாற்றியது, அவரது குழந்தையை 24 மணி நேர தீவிர சிகிச்சையில் வைத்து பாதுகாத்ததோடு, அக்குழந்தைக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றாமல் காப்பாற்றினோம். மேற்சொன்ன 2 விஷயங்களும் எங்களின் தொடர் முயற்சி, அர்ப்பணிப்புடன் பணியாற்றியதற்கான வெற்றியாகவே கருதுகிறோம்.

நிலைய மருத்துவ அதிகாரி ஸ்ரீலதா

தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக, சிக்கலான பல அறுவை சிகிச்சைகள் எங்கள் மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. லஞ்சம், பணியில் ஊழியர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட சில குறைபாடுகள் இங்கு இருந்திருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்தது உறுதியானால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பாதாள சாக்கடையை விரிவுபடுத்த திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் அரசுக்கு அனுப்பப்பட்டு பாதாள சாக்கடை விரிவுபடுத்தப்பட உள்ளது. மருத்துவமனைக்கு வருபவர்களிடமிருந்து நோயாளிகளுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க ஒருவர் மட்டுமே உடனிருக்க அனுமதிக்கப்படுகிறது.

இதற்கென தனி பாஸ் பெற்றால் மட்டுமே வார்டுக்கு செல்ல முடியும் என்று விதி கடுமையாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக டாக்டர்கள், பிற ஊழியர்களை நியமித்தால் சுகாதார சேவையை மேலும் மேம்படுத்த முடியும்.

மருத்துவ கண்காணிப்பாளர் சங்குமணி

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளிலேயே, முதன்முறையாக மதுரை அரசு மருத்துவ கல்லூரியில்தான் Endocrionology பட்ட மேற்படிப்பு கொண்டுவரப்பட்டுள்ளது. வேறு எந்த அரசு மருத்துவக்கல்லூரியிலும் இந்த படிப்பு இல்லை.

இதுதவிர, மதுரை அரசு மருத்துவமனையிலிருந்து பிரிக்கப்பட்டு, தனிப்பிரிவாக செயல்பட்டுவரும், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்புகளை தடுக்க முடிகிறது. மேலும் அவசர சிகிச்சை பிரிவுகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு கூடுதல் பயிற்சி அளிக்கும் பயிற்சி மையமாக இப்பிரிவு மேம்படுத்தப்பட்டுள்ளது.

செவிலியர் கண்காணிப்பாளர் சரோஜா செங்குட்டுவன்

நான் 1980-ம் ஆண்டு மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி
செவிலியராக இருந்தேன். என்னுடைய பணிக்காலத்தில் ஆயிரக்கணக்கான நோயாளிகளை பார்த்துவிட்டேன். நானும் விரைவில் ஓய்வு பெற உள்ளேன். செவிலியர் பணி என்பது சேவைப்பணி. ஆனால், தற்போது பணிக்கு வருபவர்களிடம் சேவை மனப்பான்மை குறைந்து வருத்தத்திற்கு உரிய விஷயம் செவிலியர்கள் ஒரு மெஷினில் வேலை செய்யவில்லை. உயிருக்கு பேராடுபவரை காப்பாற்றுவதில் நம் பங்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வு செவிலியராக வரும் ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

குழந்தைகள் நலத்துறை தலைவர் பாலசங்கர்

மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை, குழந்தைகள் நல ஆராய்ச்சி மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தினசரி 400 குழந்தைகள் வெளி நோயாளிகளாக சிகிச்சைக்கு வருகின்றனர். மதுரையைச் சுற்றி உள்ள மற்ற மாவட்டங்களிலிருந்தும், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலிருந்தும் சிக்கலான நோய்கள் பாதிக்கப்பட்ட குழந்தைகள், இங்குதான் பரிந்துரைக்கப்படுகின்றனர். குழந்தைகள் வார்டில், 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில், தீவிர சிகிச்சை பிரிவும் உள்ளது. இதில் 8 செயற்கை சுவாசக் கருவிகளும், உயிர் காக்கும் உயர்தர கருவிகளும் இருப்பதால், எண்ணற்ற குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இதய அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ரத்தினவேல்

‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலேயே, 2-வது பெரிய இதய அறுவை சிகிச்சைத்துறை மதுரை அரசு மருத்துவமனையில்தான் உள்ளது. திருச்சி முதல் தென்மாவட்டங்களில் உள்ள 3 கோடி பேரின் இதய, நுரையீரல் சிகிச்சை மையமாக எங்கள் துறை செயல்பட்டு வருகிறது. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 2,800 அறுவை சிகிச்சைகள் செய்துள்ளோம். இதுதவிர, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்  மற்றும் பெங்களூரில் உள்ள தனியார் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இதயம் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன்

அரசு மருத்துவமனையை முழுவதும் சுத்தமாக வைத்திருப்பது எங்கள் பணி. இம்மருத்துவமனையின் கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு காண வேண்டும். இதற்கு மருத்துமனையின் அடிப்படை கட்டமைப்பை மாற்ற வேண்டும். 500 பேருக்கான கட்டமைப்பு வைத்துக்கொண்டு, மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகளை கையாண்டு வருகிறோம். பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பணம் இல்லாதவர்களை அரசு மருத்துவமனையில் கொண்டுவந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைகளில் விட்டுச் செல்கின்றனர். வாரத்தில் 2 பேர் அனாதைகளாக இறந்து கிடப்பது தொடர்கதையாக உள்ளது.

இதுதவிர நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும், அரசு மருத்துவமனையை தங்கள் சொந்த வீடு போல் கருத வேண்டும். அப்போது மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். மருத்துவமனையை நாங்கள் சுகாதாரமாக வைத்திருக்க முயன்றாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அது சாத்தியமாகாது.

மீனாட்சி சுந்தரம், அலங்காநல்லூர்(உள்நோயாளி)

அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்பட்டு வந்தது. பல தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. சில மாதங்களுக்கு முன் திடீரென வீட்டில் மயங்கி விழுந்துவிட்டேன். பேச்சு வரவில்லை. உடனே மதுரை அரசு மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். பக்கவாத பாதிப்பு என்று டாக்டர்கள் தெரிவித்தனர். துரிதமாக டாக்டர்கள் செயல்பட்டு என்னை காப்பாற்றினார்கள்.

மெல்வின்(உள்நோயாளி) அரசரடி, மதுரை

வாகன விபத்து ஏற்பட்டு, தலை உள்பட பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையின், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குக் கொண்டு சென்றனர். இரவு நேரம் என்பதால் சிகிச்சையில் தாமதம் ஏற்படும் என பயந்தேன்.

ஆனால், டாக்டர்கள் துரிதமாக செயல்பட்டனர். தலையில் 28 இடங்களில் தையல் போட்டனர். ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பிய பின்னரே என்னை, அவசர சிகிச்சை பிரிவிலிருந்து வார்டுக்கு மாற்றினர். தனியார் மருத்துவமனைக்கு இணையாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை நேரடியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

- சுந்தர் பார்த்தசாரதி,
பொ.சுந்தரபாண்டியன்.
படங்கள்: டி.ஏ.அருள்ராஜ்


அரசின் கவனத்துக்கு...

காப்பீட்டு அட்டையும் அலைக்கழிப்பும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களிடம் அரசின் காப்பீட்டு திட்ட அட்டை கேட்டு, அட்டை இல்லாதவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். காப்பீட்டு திட்டம் தேவையா இல்லையா என்ற விவாதம் ஒருபுறம் இருந்தாலும் நோயாளிக்கான சிகிச்சையில் தாமதமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

நிறுத்தப்பட்ட சத்துணவு

ராஜாஜி அரசு மருத்துவமனையில் 1970-ம் ஆண்டுக்கு முன்பு வரை காசநோய் உள்ளிட்ட ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே அசைவ உணவு வழங்கப்பட்டது. மருத்துவமனை டயட்டீஷியனிடம் காட்டிய பிறகே, உயிருள்ள மீன்களை காட்டி ஒப்புதல் பெற்றுவிட்டுத்தான் சமையல் கூடத்திற்கு எடுத்து செல்ல வேண்டும், இப்படி எல்லாம் விதிமுறைகள் இருந்தது. ஆனால் 1970-க்குப் பின் கூடுதல் செலவை காரணம் காட்டி, முட்டையும் பழமும் வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் நிறுத்தப்பட்டுவிட்டது.

பாதுகாப்பு குறைபாடு

ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தைகள் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது. தற்போது கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. திருட்டு சம்பவங்களே இல்லாத நிலையை கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பணியாளர் பற்றாக்குறை

மருத்துவமனையின் பல்வேறு விதமான ஸ்வீப்பர், வாட்டர் மேன், சுகாதார பணியாளர்கள், ட்ரைனேஜ் கிளீனர்கள், பார்பர் என 64 வகை பணி
யாளர்கள் இருந்துள்ளனர். ஆனால், தற்போது எல்லா நிலைகளிலும் ஊழியர் பற்றாக்குறை உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • argentina21

  ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!

 • jo-21

  அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்

 • 21-01-2021

  21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • nailssss_SSS

  உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!

 • gujrat-acc20

  குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்